Donnerstag, Juli 19, 2012

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்

அன்பார்ந்தோரே!,
இன்று, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களது சமூக-அரசியல் வாழ்வு மிக மோசமாக அந்நியச் சக்திகளிடம் அடிமைப்பட்டுக்கிடக்கிறது.

முள்ளிவாய்க்கால்வரை "தமிழீழம்" காணும் யுத்தம்புரிந்த புலிகள், தமது போராட்டச் செல்நெறியின்வழியாக இந்த அரசியல் வாழ்ழ்வைத் தமிழ் பேசும் மக்களது தலையில் சுமத்திவிட்டுத் தமிழ்பேசும் மக்களது செல்வத்தோடு கோடிக்கணக்கில் வியாபாரஞ் செய்யவும்,சிங்கள-இந்திய அரசுகளுக்குத் தமிழ்பேசும் மக்களைக் காட்டிக்கொடுக்கவுமென அரசியல் செய்யும்போது, அவர்களது இராணுவப் படையணி அவர்களாலேயே அழிக்கப்பட்டும் விட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் பல பத்துப் புலி வேடாதாரிகளும்,முன்னாள் அராஜ இயக்கங்களும் மீளவும் தமிழ்பேசும் மக்களிடம் ஜனநாயகம்பேசி வேட்டைக்குத் தயாராகும்போது,அந்த இயக்களிலிருந்து இந்தியாவுக்கும் உலக ஏகாதிபத்தியங்களுக்கும் துணைபோனவர்கள் நூல்கள் வெளியிடுவதும்,அதனூடாகப் போராட்ட வாழ்வின் வரலாற்றைச் சொல்வதெனும்போர்வையில் ஆதிக்கச் சக்திகளுக்குத் துணைபோய், அவர்களது ஏஜென்டுகளாக இயங்கும் இன்றைய தருணத்தில் இத்தகையவர்களது நூல்கள்மீது விசாரிப்பும்-விமர்சனமும் அவசியமாகிறது.

இந்நோக்கில், காலஞ்சென்ற புஷ்பராஜாவின்"ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்"எனும் நூல் விமர்சனத்துக்குள் உட்படுகிறது.இந்த நூலை விமர்சிப்பவர் தமிழ்ச் சமூகத்துள் இருக்கும் ஒருசில முன்னோடிகளுக்குள் ஒருவரான தமிழரசன்.

நீண்ட அநுபவமும்,ஆழ்ந்த புலமையும் உடைய அவரது விமர்சனமானது 13 அத்தியாயமாக விரியும்.தொடர்ந்து இணைந்திருங்கள்-நன்றி!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
18.07.2012





ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்

- நூல் விமர்சனம்-
  
1:

தமிழ்த்தேசிய எழுச்சியானது மிருகத்தனமான புலிப்பாசிச சர்வாதிகாரமாக அது சார்ந்த அரசியல் இராணுவ ஒழுங்காக மாறி அழிந்துபடும் திசையைத் தேடத் தொடங்கி விட்டது. முழுத்தமிழ் பரப்பும் புலி ஊடகபயங்கரவாதிகளாலும் அது சார்ந்த பிரச்சார எழுத்துக்களாலும் ஆட்சி செய்யப்படும் நிலையில் மனித விசுவாசத்தை அரசியல்ப்பண்பாட்டை விமர்சன உணர்வை வெளியிடக்கூடிய சக்திகள் மிகமிக அரிதாகவே உள்ளன. சந்தர்ப்பவாதம், கோழைத்தனம், தேசிய வாதம் சார்ந்த பிழைப்புவாத அரசியல் போக்கே எங்கும் நிரம்பி வழிகின்றது. புலிப்பாசிசத்தை தேசியவிடுதலையென என்று அழகுபடுத்த முயலும் தனிநபர்களும் குழுக்களும் ஆய்வாளர்களும் எங்கும் முளை விட்டு துளிர்காட்டுகின்றனர். நடுநிலைமை, பக்கம்சாராத நீதி அறம் என்ற குறிப்புக்களுடனும் புலியதிகாரத்திற்கு தொண்டாற்றும் சக்திகள் முன்னெப்பொழுதையும் விட திறமையாக தம்மை வெளியிடுகின்றன. இக்காலத்தேதான் ஈழப்போராட்டத்தில் 'கொட்டை போட்டு பழம் தின்றவராக' 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலினூடாக புஸ்பராசா தோன்றியுள்ளார். புஸ்பராசா தன்னை ஈழப்போராட்டத்தின் ஆதி முதல்வனாக இளைஞர்தம் ஒப்பாரும் மிக்காரும் மற்ற வழி காட்சியாக தன்னைத்தானே சுயநியமனம் செய்து கொள்வதுடன் அவரது 600 பக்கநூல் தொடங்குகிறது. தமிழரசு கூட்டணி தமிழ் இளைஞர் பேரவை, EPRLF புலிகள் போன்ற தமிழ் தேசியவாதப்போக்குகளின் திரனையாக ஒன்றுக்கொன்று முரண்பட பல்திரட்டல் வாதத்தின் குவியலாக அவர் அமைகின்றனர். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையை குறைந்த பட்சம் சராசரி ஜனநாயக அடிப்படையில் கூட அவரால் அணுகவும் பதிவு செய்யவும் முடியவில்லை.

செல்வநாயகம், அமிர்தலிங்கம் பத்மநாபா, பிரபாகரன் போன்ற சில மனிதர்களே ஈழப்போராட்டத்தின் பிரதான நபர்களாக புஸ்பராசாவிற்கு தென்படுகிறனர். மக்களின் பாத்திரம், அர்ப்பணிப்பு, துயரங்கள் சார்ந்து அவர் எதையும் தொடவில்லை. தமிழ் மக்களின் சமூகநிலை, அரசியல் பெருளாதார அடிப்படையில் இருந்து விபரிப்பை தொடங்கவிலை. வழக்கமீறா யாழ்பாண மத்தியதர வர்க்க அரசியல் விளக்கமான தரப்படுத்தல் இருந்தே புஸ்பராசாவும் அரசியலை ஆரம்பிக்கிறார். தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முதலாளித்துவ அரசியல் எழுதல் முறைக்கு அவர் சிறந்த உதாரணமாகவிடுகிறார். யாழ்ப்பாண நடுத்தரவர்க்க உத்தியோகவம்சத்தினருக்கு தரப்படுத்தல் தடையாக இருந்த அதேசமயம், வன்னி, கிழக்குமாகாணம், மலையகத்திலிருந்து முதல் முதலில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு தரப்படுத்தலின் பின்பே ஏனைய தமிழ் மக்கட்கு கிடைத்தது என்பதை தமிழீழ ஒற்றை சிந்தனையாளர்கள் சிந்திப்பது கூடக் கிடையாது. 1970 தொடக்கத்தில் தமிழ் மாணவர்பேரவை எழுந்த போது உலகம் முழுவதும் மாணவர் இயக்கங்கள் எழுந்தன. இவை சோசலிசம், பெண்விடுதலை, அணுவாயுத எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு என்று தம்மை அறிவித்துக் கொண்டன. ஹிப்பீக்கள், ஹரேகிருஷ்ணா, அமைப்பியல்வாதம், பீற்றில்ஸ் என்று முதலாளிய கலாச்சாரத்துடன் சச்சரவுகளை வெளிப்படுத்தின. ஆனால் இலங்கையில் தோன்றிய தமிழ் மாணவர் பேரவைக்கு அத்தகைய அரசியல் பண்புகள் எதுவும் இருக்கவில்லை. அது வெறுமனே சிங்கள, முஸ்லீம் வெறுப்புக்களை சூடிக் கொண்டதாகவே இருந்தது. ஆனால் இக்காலத்துக்குரிய தென்னிலங்கை JVP அமைப்பானது குறிப்பிடத்தக்க சமூக அக்கறைகளை, சர்வதேச அரசியலை, ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவுகளில் சில தேவைகளை வெளியிட்டது. ஆயுத எழுச்சி மூலம் இலங்கை அரசை நிர்மூலமாக்கி அரசு இயந்திரத்தைக் கைப்பற்ற முடியும் என்ற துணிவை வெளியிட்டது.

ஆனால் தமிழ் மாணவர் பேரவை யாழ் குடா நாட்டிற்கு வெளியேயுள்ள தமிழ் மாணவர்களைக் கூட உள்ளடக்காத தரப்படுத்தலால் பாதிப்புற்ற சுத்தமான யாழ்ப்பாணிகளின் அமைப்பாக இருந்தது. இவர்கள் சிங்கள, முஸ்லீம் மாணவர்களுடன் கூட்டுறவு, இணைந்து போராடுதல் என்ற நிலையையே பஞ்சமாபாதகம் என்று கருதக் கூடியளவு அதீத தமிழ் வெறியால் பீடிக்கப்பட்டு இருந்தனர். இந்த அமைப்பின் தலைவரான சத்தியசீலன் தீவிரமான இடதுசாரி எதிர்பாளராகவும் ஒரு சில நாட்டு எறிகுண்டுகளுடனும் கைத்துப்பாக்கிகளுடனும் தமிழீழக்கனவு காண்பவராகவும் இருந்தார். இத்தகைய மூலங்களை கொண்ட தமிழ் மாணவர் பேரவையின் நிழலாகவே பிற்காலத்திய தமிழ் இளைஞர் பேரவை தோற்றம் பெற்றது. புஸ்பராசா போன்ற உதிரியான சக்திகள் பிறந்து தேசியவாத வழியில் வளர்ந்தனர். இவர்கள் செல்வநாயகம், அமிர்தலிங்கம் போதித்த அற்பமான தியாகி, துரோகி அரசியலுக்கு அப்பால் எதையும் கற்றுத் தேறவில்லை. இடதுசாரிகளை எதிர்க்கும் வலதுசாரி தமிழ் அரசியல் கலாச்சாரத்தை தொடர்ந்து பாதுகாத்தனர். அகிம்சை பேசிய செல்வநாயகத்திற்கும், அமிர்தலிங்கத்திற்கும் கையைக் கீறி இரத்தத்திலகமிடும் அரசியலற்ற இளைஞர் கும்பல்கள் தீவிரமாய் வளர்ந்தன. இவர்களே பிற்காலத்தில் தம் சொந்த மிதவாத தலைமைகளை கொலை செய்வதன் மூலம் தம் பரப்பிலிருந்து அகற்றினர். அமிர்தலிங்கத்தை 'என் தலைவன்! என் தலைவன்!!' என்று பாடிப்பாடி பரவசமெய்திய காசி ஆனந்தன் 1987 இல் வல்வெட்டித்துறையில் TELO அழிப்போடு நடந்த புலிகளின் கூட்டமொன்றில் பேசியபோது அமிர்தலிங்கமே! நீ ரோசமுள்ள மனிதன் என்றால்ஸ அமிர்தலிங்கமே! நீ இனப்பற்றுள்ள மனிதன் என்றால்ஸ அமிர்தலிங்கமே! நீ உண்மையான தமிழன் என்றால்... உனது கட்சியைக் கலைத்து விட்டு வந்து எனது தலைவன் பிரபாகரனை உனது தலைவனாக எற்றுக் கொள் என்று பேசுமளவு நிலை மாறியது. காசிஆனந்தன் திருமணத்திற்கு மட்டுமல்ல வீடு வாங்க, அச்சகம் போட என்று அமிர்தலிங்கம் நிதி தரட்டி தந்தவர். அப்போதெல்லாம் அமிர்தலிங்கம் காசிஆனந்தனால் 'தமிழீழத்தின் ஆபிரகாம்லிங்கன்' என்று உளமுருகிக் கவிதைகளால் பாமாலை சூடப்பட்டவர். காசி ஆனந்தன் முதல் புஸ்பராசா வரை திரு.அமிர்தலிங்கம் உட்பட கூட்டணித் தலைவர்களிடம் செஞ்சோற்றுக் கடன் பட்டவர்களாகவே இருந்தனர். ஆனால் வலதுசாரிகட்கு நட்பு, தனிப்பட்ட உறவுகள் சார்ந்த கடந்த காலம் எத்தகைய மனநெகிழ்வையும் மனித மதிப்பையும் விட்டுச் செல்வதில்லை. அவர்கள் நிகழ்கால கடுமைக்கும் கொடூரத்திற்கும் விரைவாக ஆட்பட்டுவிடுவார்கள். புஸ்பராசா தமிழ் இயக்கங்கள் உச்ச வளர்ச்சி பெறுமுன்பே நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் வாழ்ந்தமையால் அவரது கருத்தோட்டங்கள், அமிர்தலிங்கம் மேலான பக்தி என்பன ஓரளவுக்கு சுத்தமான வடிவில் பாதுகாக்கப்பட்டன.

அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவை ஆதரிப்பதாக எமது பிராந்தியத்தின் பாதுகாப்பு, பொருளாதாரம் இவை அவசியமென இடதுசாரிகளே மூர்ச்சித்து விழுமளவு புஸ்பராசா ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசுகிறார். இங்கு புஸ்பராசா பேசவது அவர் கொஞ்சக் காலம் EPRLF இல் வாசம் செய்த காலத்தில் பெற்றுக்கொண்ட சிந்தனைத் திரவியமாகும். இந்திய ஸ்டாலினிசவாதக்கட்சிகளின் சீர்திருத்தவாத நியாயத்தைத்தான் இந்திய ஆயதப்பயிற்சிக்குப் போன காலத்தில் EPRLF தமது தத்துவமாய் சொல்லித் திரிந்தார்கள். அது புஸ்பராசாவிற்கு கூட எட்டியுள்ளது என்பது அதிசயம்தான். சகல தமிழ் இயக்கங்களும் இந்தியாவின் இராணுவ அரசியல் விருப்பங்கட்கு கருவியாய் போன போது இப்படித்தான் சொல்லிச் சொல்லி நாசமாய்ப் போனார்கள். இறுதியாக இந்திய உளவுத்துறையின் வேலைக்காரர்களாகிப் போயினர். ஆனால் இந்தியாவை நம்பியதற்கு அதன் பின்னே போனதற்கு படிப்பினை கிடைத்த பின்னரும் புஸ்பராசா பழைய கோசத்தை, பட்டுக் கெட்டுக் கைவிட்ட குரல்களை புனருத்தானம் செய்கிறார். இன்றைய உலகமயமாதல் காலத்தில் இந்தியாவின் தேசிய பொருளாதாரத்திற்குள்ளேயே அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் புகுந்து விட்டன. அவர்களது மூலதனமும் நிதி நிறுவனங்களும் இந்தியாவைக் கண்காணித்து கட்டுப்படுத்துகின்றன. சோவியத்யூனியன் காலத்தில் இந்திராகாந்தி ஆண்ட போது சில வருட காலம் உண்மை போல தோன்றிய இந்தியாவின் முற்போக்கு முகம் பற்றிய அரசியல் கற்பனைகள் கலைந்து வெகுநாளாகிவிட்டதை விளங்குமளவிற்கு வலிமையான அரசியல் மனிதராக புஸ்பராசா இல்லை.

இன்று இந்தியாவை மீறி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளிலும் இப்போது சுனாமியைக் காட்டி அமெரிக்கா இலங்கையிலும் நுழைகின்றது. தடுக்க யாரும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நுழைந்த போது இந்தியா அதை ஆதரிக்க வேண்டிய பரிதாபக் கட்டத்தில் இருந்தது. சீனாவின் பிரமாண்டமான வளர்ச்சி, ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதார பலம் இவைகளினூடு இந்தியாவும் இந் நாடுகளைச் சார்ந்து தன்னை ஆசியரீதியில் நாட்டிக் கொள்ள இன்று முயன்ற போதும் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு என்ற கருத்து இன்று உயிருடன் இல்லை. கடந்த காலத்தில் வாழ்க்கை நடத்தும் புஸ்பராசாவிற்கு இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு எதிராக இலங்கையரசு மட்டுமல்ல சர்வதேச சமூகம் பற்றிய உளறல்களில் ஈடுபட்டிருக்கும் புலிகள் முதல் கூட்டணிவரை செயற்படுவது புலப்படவில்லை. இந்திய துணைக்கண்டத்தின் தனித்துவம் மட்டுமல்ல இலங்கையின் தமிழ் சிங்கள தேசியங்கள் கூட உலகளாவிய ஏகாதிபத்திய பொருளாதார ஓட்டத்தாலும் அது சார்ந்த நுகர்வுக்கலச்சாரத்தாலும் கரையத் தொடங்கிவிட்டன. இங்கு இந்திய துணைக்கண்டம் இனியொருபோதும் தனித்தீவாக இயங்க முடியாது.




தமிழர் இளைஞர் பேரவைக்கு தான் தலைமை தந்ததாய் புஸ்பராசா எழுவது இவர் தீவிரவாத இளைஞர்கள் கூட்டணிக்கு எதிராக முறுகியடித்த காலத்தில் திரு.அமிர்தலிங்கத்திற்கு காட்டிய விசுவாசத்திற்காக சிறிது காலம் தரப்பட்ட பரிசாகும். மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன், காசிஆனந்தன் போன்ற இளைஞர்கள் வரிசையில் சேர்க்கப்பட்ட முடியாத முத்தல்களையே கூட்டணித்தலைமை த.இ.பே தலைவர்களாக நீண்ட நாட்களாக காட்டி வந்தது. இவர்களே பேச்சுத்திறமை கொண்டவர்களாகவும் மக்களால் அறியப்பட்டவர்ளாகவும் இருந்தனர். இடதுசாரித் திசையில் பயணிக்க முயன்ற சந்ததியார் போன்றவர்களே முதன் முதலாக இந்தக் கூட்டணி வாரிசுகளை அசைத்தனர். கூட்டணி தலைமையோடும் திரு.அமிர்தலிங்கத்துடனும் புஸ்பராசா விட்ட சிறு சிறு குழப்படிகள் தனது முக்கியத்துவத்தை அதிகரிக்கவும் கவனத்தையும் ஈர்க்கவும் செய்தவை என்பதே அவரது காலத்து நண்பர்களது அபிப்பிராயமாகும். புஸ்பராசா கதை காவித்திரிபவராகவும், நிலையற்றவராகவும் கருதப்பட்டார். ஆனால் இப்பேது புஸ்பராசாவின் எழுத்து தன்னைக் கதாநாயகனாக்க பலரை வில்லன்களாக உருவாக்கிவிட்டது.

புலோலி வங்கிக் கொள்ளையில் தனக்கு தொடர்பு இல்லை, தான் அப்போது சிறையில் இருந்தேன் என்கிறார் புஸ்பராசா. இந்த வங்கிக் கொள்ளையை இவர் சார்ந்த ஈழ விடுதலை இயக்கமே நடத்தியது. இவரது குடும்பத்தவர்கள் தொடர்பு என்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான சித்திரவதை, அவமானப்படுத்தல்கள் எங்கும் அறியப்பட்ட விடயமாக இருந்தது. மயிலிட்டியில் பெற்றோல் செட், நகைக்கடைக் கொள்ளையுடன் புஸ்பராசாவுக்கு தொடர்பு இருந்தன என்ற செய்திகள் இருந்த போதும் புஸ்பராணியும் புஸ்பராசாவும் கூட்டணியினரின் மேடைப்பேச்சிற் கூடாகவும் அன்று அறியப்பட்டிருந்தனர். புஸ்பராசா, பொதுவாக ஆயதம் ஏந்திய கிளர்ச்சியாளராக அதன் தொடர்புடையவராக அறியப்பட்டதில்லை. இவர் கூட்டணி சார்பான அரசியலுக்கு உருத்துடையவராகவே பொதுவாக அப்போது கணிக்கப்பட்டார். துரையப்பா கொலை வழக்கின் சந்தேகத்தின் பெயரிலேயே புஸ்பராசா கைது செய்யப்பட்டார். அதாவது கூட்டணியினர் மூலமாக பொலிசில் சரணடைந்தார். மற்றப் பக்கத்தால் புஸ்பராசா ஒரு பொலிஸ்காரனுக்கு அடித்து யுனிபோம் கிழித்து தொப்பி பறித்த கதையை ஒரு சண்டியனின் உற்சாகத்தோடு எழுதுகின்றார். இன்று 50 வயதை தாண்டிய மனிதராகிவிட்ட புஸ்பராசா தனது கடந்த காலத்திய வாழ்வு மீது சிறு சுயவிமர்சனம் கூட இல்லாமல் தனது வீரவாழ்வு பற்றி கதையாடல்களில் ஈடுபடுவது வாசிப்பவர்களின் மதிப்பை பெற்றுத்தராது.

EPRLF உடன் பிரான்சில் புஸ்பராசாவின் தொடர்பு கொண்டு இயங்கியமைக்கான அரசியல் ரீதியில் ஆழமான காரணங்களை அவர் தரவில்லை. தனது அடையாளத்தைக் காக்கும் பொருட்டே EPRLF ஐச் சார்ந்து இயங்கினார் என்று அவரது பிரான்சு நண்பர்களே கருத்துக் கூறுகின்றனர். ஒரு காலத்தில் திரு.அமிர்தலிங்கத்துடன் சேர்ந்து கொண்டு பத்மநாபா, வரதராஜப்பெருமாள் போன்றவர்களை சோசலிசப் போக்கு கொண்டவர்கள் என்று வெறுத்து விலத்திய புஸ்பராசா, பின்பு அதே நபர்களின் EPRLF இல் இணையும் போது அவரது அரசியல் பார்வை மாறியமைக்கான எந்த தடயமும் தென்படவில்லை. EPRLF இன் கட்டாய ஆள்பிடிப்பு, மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்ச்சிக்;க வேண்டிய தருணம் வரும் போது புஸ்பராசா ஏதோ தான் மூன்றாவது ஆள் இவைகளோடு தொடர்பற்ற வெளி ஆள் என்பதாக மாறி EPRLF பற்றி சிறிது விமர்சனம் சொல்ல முயல்கிறார். இத்தகைய தனது பொறுப்புக்களிலிருந்து தப்பிக்கும் போக்கு எங்கும் பரந்து வெளிப் படுகின்றது. இந்திய இராணுவத்துடனான EPRLF இன் உறவு பற்றி கிட்டதட்ட எதுவும் இவர் கூறாதொழித்தார்.

தொடரும்...

தமிழரசன்
பெர்லின்




Keine Kommentare: