Dienstag, Juli 24, 2012

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்[7] - நூல் விமர்சனம்-7

இந்த ஏழாவது பகுதியானது புஸ்பராசாவின் "சாட்சியம்" உரைக்கும் பொய்யான வரலாற்றைக் குறித்து நிறையப் பேசுகிறது.வரலாற்றில் தமிழ்த் தேசியம் பேசிய தமிழ் மேட்டுக் குடிகளது அரசியலானது எங்ஙனம் தமக்கான கட்சிகளை உருவாக்கி ஏழை மக்களை ஒட்ட மொட்டையடித்தனவெனவும் பேசப்படுகிறது.இவைகளின் விருத்தியான புலிகள் ஒரு இனத்தையே அடிமையாக்கிக் கொள்ளையிட்டுத் தமது எஜமானர்களைச் செல்வந்தராக்கி மக்களைக் கொன்றழிந்தனர்.

ஏகாதிபத்தியங்களுக்குத் தயவானதும்,அவர்களது ஏஜென்டுகளுமாகவே தமிழ்த் தேசியவாதிகளும்,அவர்களது எஜமானத் தமிழ் மேட்டுக்குடிகளும் செயற்பட்டனர்.அதைப் பல வடிவச் சேர்க்கையிலும்,இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் நாம் இனம் காணமுடியும்.இதன் தொடரான புலிவழித் தேசியப் போராட்டத்தை நாம் சரியாக வரலாற்றில் வைத்து நோக்கும்போது, அத்தகைய தொடர்ச்சியில் ஏகாதிபத்தியங்களால் ஆயுதமயப்படுத்தபட்ட தமிழ்த் தேசிய வாதிகளது மேற்குலக அடியாட்படையாவும்,இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினது செல்வாக்குக்குட்பட்டதுமான இயக்கமாகவே அந்த அமைப்பு உருவாகிறது.இதை,இலங்கை மக்களது வரலாற்று இயக்கப்பாட்டிலிருந்தும்,சமூக வளர்ச்சிக் கட்டத்திலிருந்தும் அணுகும்போது,இலங்கையில் இனங்களுக்கிடையிலான இனத்துவ முரண்பாடு மிகச் சாதுரியமாகத் தகவமைப்பட்டு வளர்தெடுகப்படுகிறதென்றவுண்மை தெளிவாகப் புரிகிறது.இதுள் தமிழரசு,கூட்டணி போன்ற மேட்டுக்குடிகளதும்,மேற்குலக ஏகாதிபத்தியத்தின் கைக் குழந்தைக் கட்சிகள் தமது எஜமானருக்கேற்பத் தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடிப்பதைத் தமிழரசன் மிக நேர்த்தியாகப் பேசுகிறார்.தமிழரசன் தரும் வரலாற்று விளக்கம் வெறும் விமர்சனமில்லை-வரலாற்றுண்மைகள்,ஒரு இனத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட துரோக அரசியலது வாலாறு.

இந்தியத் துணைக்கண்டத்தில் ஏகாதிபத்தியங்களது தேவைக்கமையவே அரசியற் கட்சிகள் கட்டப்பட்டன,அவைகளுக்கு ஏகாதிபத்தியங்களால் நிதிகள் வழங்கப்பட்டன.மேற்குலகில் கல்வி பயின்ற தமிழ் மேட்டுக்குடிகளது வாரீசுகளே தலைமையில் இருத்தப்பட்டன.இத்தகைய தேவை இந்த அமைப்பு முறைக்கு அவசியமாக இருக்கிறது.இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இந்தத் தேவையினது ஒரு வெளிப்பாடாகவே புலிகள் தமிழ் மக்களின் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில்திடீரென உருவாகின்றனர்.


தமிழரசுக்கட்சி,கூட்டணிபோன்றே புலிகளும் சாரம்சத்தில் ஒரு விடுதலை அமைப்பல்ல.அஃது, எப்போதும் மக்களைப் பலியிட்டுத் தமது அதிகாரத்தைத் தக்கவைக்கும் ஒரு சமூக விரோத அந்நிய அடியாட்படைக்கும்பல்.அந்த இயக்கம் மக்கள் இயக்கமாக இருந்திருந்தால் தமிழ் மக்களின் உண்மையான விடுதலைக் கூறுகளைத் தமது இயக்கத்துக்குள் கடைப்பிடித்து அந்த இயகத்தை மக்கள் சார்ந்து கட்டியிருக்கும்.ஆனால், அந்த அமைப்பு அத்தகையவொரு வளர்ச்சியை எட்ட முடியாத நிலைக்கு அதைப் பின் தள்ளிய சக்திகள் இந்திய-அமெரிக்கக் கூட்டுச் சக்திகளாக இருந்தபோது,இவற்றின் தொடர்ச்சியைக் கூட்டணி,தமிழரசுக் கட்சிகளது வரலாற்று வெளிக்குள் தேடுவதன் அவசியம் வரலாற்றில் தவிர்க்க முடியாதென்பதை இந்த விமசனத்தை உள்வாங்கும்போது புரிகிறது.


முள்ளி வாய்க்கால்வரை அந்நியச் சக்திகள் புலிகளுடாகவே தமிழ் மக்களின் பிள்ளைகளை நாசியக் கட்சியைப் போன்றே இனவாதத் தீயில் வாட்டியெடுத்துப் போருக்குத் தயாராக்கினார்கள்.இதையே அதன் தாய்க் கட்சியும், அரசியல் தலைமையான கூட்டணியும் செய்தது.இனவாதத் தீயின்றி இவைகள் நிலைத்திருக்க முடியாதென்பதில் தமிழ் தேசியம் நன்றாகவே மக்களைக் கூறுபோட்டுக் கொன்றிருக்கிறது.இதன் உச்சக் கட்டம் புலிப்பாசிசத்தைத் தமிழ்ச் சமுதாயத்துள் தோற்றிக்கொண்டது.


இலங்கையின் இன்றைய முதலாளிய வளர்ச்சியானது கோரி நிற்கும் சமூகப் பொருள் உற்பத்தியானது இலங்கைத் தேசத்தின் தேசிய உற்பத்தியைச் சிதைத்த இறக்குமதிப் பொருளாதாரத் தரகு நிலையே.இந்தத் தெரிவில் அந்தத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தைத் தகவமைத்த அந்நியச் சக்திகள் மென்மேலும் இலங்கையின் இனப்பிரச்சனையில் தமது ஆர்வங்களைப் பிணைத்துக்கொண்டு,தமிழ் பேசும் மக்களின் நிலையிலிருந்து,அவர்களின் சார்பாக எந்தப் பிரச்சனைiயுயும் அணுகவில்லை.மாறாக, மீள "தமிழீழப் போரை" முன்னெடுப்பதாக மார்பு தட்டும் புலம்பெயர் பினாமிப் புலிகளைத் தமது ஆர்வங்களுக்கமையவே பேசவும்-இயங்கவும் தூண்டுகிறது.அந்த ஆர்வங்களானது பினாமிப் புலிகளுக்கான குறைந்தபட்ச இருப்பையும்,அதன் அரசியல் ஆதிக்கத்தையும் தமது முதலாளிய நலன்களுக்கிசைவாகவே வழங்கிக் கொள்கிறது.இந்த இலக்கில் தமது சொத்துக்கான உறுதியான அரசியல்-சட்ட நியாயங்களைப் பினாமிப் புலி மூலதனவாதிகள் பெற்றும் விடுகின்றனர். இந்தப் புள்ளியில் இலங்கையில் இடதுசாரிகள் எங்ஙனம் செயற்பட்டனர்-அவர்கள் குறித்தைவை ஈழப்போராட்ட வரலாற்றில்,இன்று அறுவடையான பயன் வினையூடாகவுண்மையாவதைத் தமிழரசன் வரலாற்றில் வைத்துரைக்கிறார்.


கொள்ளையிலும் கொள்ளையாக மக்களது உயிரைக் கொள்ளையடித்த தமிழ் தேசியமானது இறுதியில் மக்களது வரலாற்று மண்ணையே அந்நியச் சக்திகளுக்குத் தாரவார்த்துத் தமது பிழைப்பை உறுதிப்படுதியுள்ளனர்.இதைத் தொடர்ந்து ஆய்வதும்-அறிவதும் அவசியமானது, உண்மைகள்சார்ந்து அண்மித்து வாருங்கள் நண்பர்களே!


அன்போடு,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
24.07.12


ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்[7] - நூல் விமர்சனம்-7
 
7:

தமிழாராய்ச்சி மாநாட்டின் மரணங்களிற்கு துரையப்பாதான் காரணம் என்ற வெறியூட்டுதலையடுத்து கூட்டணியின் தீவிரவாத இளைஞர்கள் துரையப்பாவைக் கொல்லச் சபதமெடுத்தனார். சத்தியசீலன், சிவகுமாரான், ஆனந்தகுமார், காண்டீபன், கிருபாகரன், பிரபாகரன், நடேசானந்தம், பிரான்சிஸ் போன்றோர் குழுக்களாக இதற்கு [கொல்ல] முயன்றனர்.

பொலிஸ் உதவியட்சராக இருந்த சந்திரசேகரா மீது கொலை முயற்சிகள் நடைபெற்றது. இளைஞர்கள் கொலைப்பட்டியல் தயாரிக்கத் தூண்டிய கூட்டணியினேரே பின்பு கொலைப்பட்டியலில் இடம் பெற்றனர் என்பது வரலாறாகும். தமிழ் - சிங்கள முரண்பாடுகள் இரு பகுதி முதலாளிய சக்திகளாலும் தூண்டப்பட்டதன் மூலம், ஒன்றிணைந்த தமிழ் சிங்கள மக்களின் எழுச்சி, சோசலிசப்புரட்சி என்பன சிதைக்கப்பட்டன.

தமிழ் தேசியவாதத்தை சிங்கள இனவாதத்திற்கு பதிலீடாக்கியவர்கள் சொந்தத தமிழ்க் குறுந்தேசியவாத்தினாலேயே தின்னப்பட்ட காட்சி இன்று தீர்ப்புக்கு விடப்பட்டுள்ளது. இதிலிருந்தும் கற்க புஸ்பராசவிற்கு அரசியல் சேமிப்பு உதவிக்குவரவில்லை. அவர் இன்னமும் புலிப்பாசிசத்திற்கு காவல் சேவை செய்து வருகின்றார்.

ஈழவிடுதலை இயக்கம்:

ஈழவிடுதலை இயக்கம் ஏன் எப்படித் தோன்றியது?;எந்தக் காலத்தில் தமிழர் இளைஞர் பேரவையிலிருந்து வேறுபட்டது? அதன் மரணம் எப்படி நிகழ்ந்தது? என்று எந்தவொரு அறிவித்தலையும் புஸ்பராசா எமக்கு தரவில்லை.

த.இ.பேரவை போன்று ஈழவிடுதலை இயக்கத்திலும் இவரே பிரதான தலைமைக் கர்த்தராக மிளிர்ந்தார் என்ற செய்தி மட்டுமே எமக்கு விடப்பட்டுள்ளது.

ஒரு வரலாறு பதிவு செய்யப்படுகின்றது, ஆவணமாகின்றது என்ற வரலாற்றுணர்வு, புஸ்பராசாவிடம் இல்லை. தனது சொந்த தனிமனித ஆசைகட்கு முதன்மை தருவதினூடு அவர் வாசிப்பவரை தவறாக நம்ப வைக்கிறார்.

ஈழவிடுதலை இயக்கம் 1975 இல் கூட்டணி நடாத்திய சட்ட மறுப்புப் போராட்ட ஊர்வலத்தில் எழுந்த முரண்பாட்டில் இருந்தே பிறந்தது. நீண்ட காலமாய் கூட்டணியின் வீர வசனங்களில் அலுததுப் போன இளைஞர்கள் இந்தச் சட்ட மறுப்பு நடவடிக்கையில் பொலிசார் ஏற்படுத்திய வீதித்தடையை உடைத்துக் கொண்டு போக வேண்டும் என்றனர். ஆனால் மேடைப்பேச்சுக்களில் வீரகாவியம் புனைந்து இளைஞர்களை சூடேற்றிய கூட்டணியோ தலைமை, கட்டுப்பாடு, அகிம்சை என்று கூறி தனது ஓட்டுக்குள் சுருங்கிக் கொண்டது.

செல்வநாயகம் பொலிஸ் ஏற்படுத்திய தடைக்கு முன்பாக கதிரை போட்டு உட்கார வைக்கப்பட்டார். இளைஞர்களோ பொலிஸ் ஏற்படுத்திய தடையை உடைத்துக் கொண்டு போக வேண்டும் என்றனர். கூட்டணி வழக்கமான தனது அகிம்சை போராட்டங்களின் பொலிஸ் விதித்த தடைகள் என்ற வேளைகளிலெல்லம் வாழ்ந்து பழக்கப்பட்ட கட்சி. எனவே, அண்ணன் அமிர் இளைஞர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்ற போது இளைஞர்களோடு முரண்பாடு ஏற்பட்டது. சட்டத்திற்குட்பட்ட சட்டத்தரணிகளின் கட்சியான கூட்டணியால் போராட்டப்பாதையில் எந்த வழிகாட்டலையும் ,வேலைத்திட்டத்தையும் முன்வைக்க முடியவில்லை. தொடர்ச்சியான அரசியலும் செயற்பாடும் இருக்கவில்லை. கூட்டணியின் அரசியல் வெறுமையை உணர்ந்த இளைஞர்கள் மாற்றுக்களைத் தேட முயன்றனர்.


இந்த இளைஞர்கள் உண்மையில் பெருந்தொகையானவர்களாகவோ, பரந்த மக்கள் போராட்டத்தில் பங்கேற்கும் அவசியத்தை உணர்ந்தவர்களாகவோ இருக்கவில்லை. தமிழ் தேசியம் சார்ந்த அரசியல் எத்தகையது என்ற மதிப்பீடுகளோ, போராட்டம் குறித்த ஞானம் கொண்டவர்களாகவோ இருக்கவில்லை. எனினும் தொடர்ந்து கூட்டணியை நம்பிப் பிரயோசனம் இல்லையெனவும் த.இ.பேரவை என்பது இளைஞர்களை தமக்குள் கட்டி வைத்திருக்கக கூட்டணி ஏற்படுத்திய அமைப்பு என்று இவர்கள் கருதினர். எனவே த.இ.பேரவையிலிருந்து பிரிந்த இந்த இளைஞர்கள் தேர்தலில் நம்பிக்கை கொண்ட கூட்டணிக்கு மாறக உள்ளேயும், வெளியேயும் தேர்தல் இல்லை என்ற கோசத்துடன், ஈழவிடுதலை இயக்கத்தை ஆரம்பித்தனர்.


"எவ்வழி நல்வழியோ அவ்வழியே எம்வழி" என்று அறிவித்துக் கொண்டனர்.


இவர்கள் போராட்டம் என்றால் மக்களிடம் செல்வது அவர்களிடம் அரசியலை தொடக்குவது என்ற புரிதலுக்கு பதிலாக இவர்கள் இளைஞர்களைமட்டும் திரட்ட முயன்றனார். முத்துக்குமாரசுவாமி, வரதராசா, புஸ்பராசா, பாலகுமார், பிரான்சிஸ் (கி.பி. அரவிந்தன்), குமரன் மாஸ்டர், பத்மநாபா, சந்திரமோகன், தங்கமகேந்திரன் போன்றோர் இதில் முக்கியமாக இருந்தனர். இவர்கள் மூன்று பேர்களைக் கொண்ட முதன்மைக் குழுவையும் 5 பேர்களைக் கொண்ட பொதுக்குழுவையும் தெரிவு செய்து கொண்டதோடு, ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் 3 பேர்களையும் நியமித்தனர். அமைப்பின் செயலாளராக சந்திரமோகனும் பொருளாராக தங்கமகேந்திரனும் இருந்தனர். தங்கமகேந்திரன் தவிர இவர்கட்கு யாழ் குடாநாட்டிற்கு வெளியே எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.

த.இ.பே.போன்று இதுவும் யாழ் குடாநாட்டு இயக்கமாகவேயிருந்தது. 1975 இல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தொடங்கிய சில மாதங்களிலேயே துரையப்பா கொலை வழக்கில் முக்கியமானவர்கள் பிடிக்கப்பட்டு விட்டனர். இவர்கள் 'எரிமலை' [கவனிக்க:எரிமலையின் இயக்கப்பாடு-குறியீடு புலியினது பிரச்சாரப் பீரங்கியாக இறுதியில் டிஜிக்டல் பிரிடிங்காக வெளி வந்தது.அதற்காகப் புலிகள் மக்களிடம் சரண்டிய பணமோ கோடி-கோடி.]என்ற பத்திரிகையை ஆரம்பித்து சில இதழ்கள் வெளியிட்டு ஓய்ந்தனர்.

1977 இல் கூட்டணி தேர்தலில் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு 'தமிழீழத்திற்கான அங்கீகாரம்' என்று குரல் கொடுக்கத் தொடங்கியிருந்தது. உள்முரண்பாடுகளினால் திணறி பலவீனமடைந்திருந்த ஈழவிடுதலை இயக்கம் இப்போக்கினுள் இழுபடத் தொடங்கியது. கூட்டணி அமிர் ஆதரவாளரான புஸ்பராசா மற்றும் முத்துக்குமாரசுவாமி போன்றோர் கூட்டணியை இத்தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்றனர். வரதராசா, குமரன் மாஸ்டர், பத்மநாபா, பாலகுமார் போன்றவர்கள் கூட்டணி, தேர்தல், இவைகட்கு அப்பால் தனிநாட்டு இலட்சியத்தை முதன்மைப்படுத்தி போராட வேணடும் என்றனர். ஏற்கனவே, அரசியல் தத்துவார்த்த ஒன்றிணைப்போ, ஒழுங்கான இயக்கக்கட்டமைப்போ இல்லாதிருந்த இந்த அமைப்பு இத்தோடு உடைந்து சிதறியது.

புஸ்பராசா, முத்துக்குமாரசுவாமி யைத் தவிர கிட்டதட்ட மற்றவர்கள் இயக்கத்தைவிட்டு வெளியேறிச் சென்றனர். புஸ்பராசா அமிர்தலிங்கத்திடம் மீண்டும் சரண் புகுந்தார்.

இயக்கதிலிருந்து வெளியேறியவர்கட்கு பத்மநாபா போன்றவர்கள் ஊடாக EROS இரத்தினசபாபதியின் தொடர்பும் தேசியம், சோசலிசம் என்பவை பற்றிய தொடக்க நிலைக் கருத்துக்களும் ஏற்பட்டு இருந்தனர். இவர்களில் பலர் பின்பு EROS,EPRLF இயக்கங்களாக மாறினர். புஸ்பராசா தனது நூலில் EROS  இரத்தினசபாபதியை ஒவ்வாதவராக காணுவது இத் தொடர்புகளின் பின்புலத்தில் தான். இடதுசாரிப்போக்குள்ளவர்கள் மேலான வெறுப்பு புஸ்பராசவிடம் எல்லா இடமும் நிறைந்த நிற்கின்றது. கூட்டணி அமிர்தலிங்கம் மேலான நேசமோ சகல திசைகளிலும் முகம் காட்டுகின்றது.


மீணடும் கூட்டணியில் சேர்ந்த புஸ்பராசாவிற்கு த.இ.பே இல் பதவி கிடைத்தது, கூட்டணி மேடைகள் கிடைத்தன:


புலோலி வங்கிக் கொள்ளையில் தனக்கு தொடர்பில்லை என்று புஸ்பராசா தனது நூலில் எழுதியுள்ளார். இக் கொள்ளை இவர் சார்ந்த ஈழவிடுதலை இயக்கம் தான் நடாத்தியது. அப்போது புஸ்பராசா சிறையில் இருந்த போதும் இவரது குடும்பத்தினரும் இவரது இயக்கமும் இதில் பங்கு கொண்டிருந்தனர். புலோலி வங்கிக் கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களும் ஈழவிடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள். தண்டனை விதிக்கப்பட்ட தங்கமகேந்திரன், ஜெயக்கொடி, நல்லையா, கோவை நந்தன் போன்றோரும் இதில் அடங்குவர்.

புஸ்பராசாவின் தாயார், தங்கை போன்றோரும் கைது செய்ய்ப்பட்டனர்.

கல்யாணி, தெய்வேந்திரராணி, புஸ்பராணி போன்ற பெண்கள் கொள்ளைச் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைததாகி சித்திரவதைக்கும் பலவகை அவமானங்கட்கும் உட்படுத்தப்பட்டனர். அப்போ யாழில் இயங்கிய 4ஆம் மாடியின் பிரிவான DCDB க்கு பொறுப்பாகப் பத்மநாதன் இருந்தார். இவரே புலோலி வங்கிக்கொள்ளையை கண்டு பிடித்தவர். இவருடன் விசாரணை சித்திரவதைகளில் ஈடுபட்ட சண்முகநாதன், கருணாநிதி போன்றர் சிஐடி பொலிசாரும் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


புலோலி வங்கிக் கொள்ளையில் கிட்டத்தட்ட எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டது. இந்த நகைகளின் ஒரு பகுதி புஸ்பராசா வீட்டில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாய் சொல்லப்படுகின்றது.


புலோலி வங்கி ஒரு கூட்டுறவுக் கிராமிய வங்கியாகும். இதில் ஏழை விவசாயிகளே தம் நகைகளை அடைவுவைத்து இருந்தனர். இதில் கொள்ளையிடப்பட்ட நகைகள் பலரால் தாறுமாறாய் செலவு செய்யப்பட்டது. தம் சொந்த உல்லாசங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாய் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இக் கொள்ளையில் முக்கிய பங்கு வகித்த சந்திரமோகன் பின்பு அரசியலில் இருந்து ஒதுங்கி, ஒரு வியாபார நிலையத்தை தொடங்கினார். சந்திரமோகனின் தந்தையார் பொலிசில் செல்வாக்கு கொண்டு இருந்தமையால் முக்கிய குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார். கொள்ளையை நடத்தியவர்கள் பொலிசார் கண்காணிக்க கூடிய கூட்டணிசார்ந்த நபர்களின் வீடுகளிலேயே சென்று ஒழிந்தமையால் இலகுவாகப் பிடிபட்டனர்.


கொள்ளைப்பணத்தில் வெளிப்படையாக கார், மோட்டார்சைக்கிள் என்பன வாங்கி ஓட்டப்பட்டமை இயக்கக் கட்டுக்கோப்பு, தலைமறைவாழ்வு சார்ந்த கவனமின்மை என்பன கொள்ளை பிடிபட முக்கிய காரணமாகும். மக்களில் நம்பிக்கையற்ற இந்தச் நபர்கள் சிவகுமாரன் வழியில் வங்கிகளை கொள்ளையிட்டு, ஆயதம் வாங்கி கொஞ்ச இளைஞர்களைத் திரட்டி போராட முடியும் என்று நம்பி தோல்வி கண்டனர். இங்கு புஸ்பராசா சொற்பமாக எழுதி பெருந்தொகை செய்திகளை மறைத்து விட்டார். மறைக்கப்பட்டவை, தவிர்க்கப்பட்டவை, திட்டமிட்டே இருளில் தள்ளப்ட்டவை என்பன எதிர்காலத்தில் கிண்டப்படும், கிளறப்படும் என்பதை மறந்து விட விரும்புகிறார்.


தமிழ் இளைஞர் பேரவையும் தமிழ் மாணவர் பேரவையும்:


தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் மாணவர் பேரவை போன்றவை பற்றிய புஸ்பராசாவின் வரைவுகள் கூட்டணியினரின் வரலாற்று எழுதலுக்குட்பட்டதாகும்.

த.இ.பே. தோற்றத்தை தமிழ் மாணவர் பேரவையின் உருவாக்கத்தினூடுதான் காண வேண்டும். புஸ்பராசா இரண்டையும்; வெவ்வேறாகக் காட்ட முயல்கின்றார். தமிழர் மாணவர் பேரவை கூட்டணிக்கு வெளியே சுதந்திரமாய் பிறந்தது. சத்தியசீலன், சிவகுமாரன், அரியரட்ணம் போன்ற நடுத்தரவர்க்கம் சார்ந்த உத்தியோத்தரின் பிள்ளைகளே இதைத் தொடங்கினார்கள். இவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக உதித்தெழுந்தாய் சொல்லப்பட்ட போதும் வெகுவிரைவாகக் கூட்டணியின் அரசியல் சுலோகங்களை தமதாக்கிக் கொண்டனர்.

இந்த மக்கள் அடிப்படையற்ற பொறுமை கெட்ட தீவிரவாத சக்திகள் துரோகிப்பட்டியல்களை முதன் முதலில் தயாரிக்கத் தொடங்கினர். ஒரு சில ஆயுதங்கள், வெடிகுண்டு நடவடிக்கைளில் இறங்கினர். இவர்களது ஆயுதக்கவர்ச்சி, துரோகி ஒழிப்பு முயற்சிகள் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்திற்கு வீரதீர காட்சியாக விளங்கியது. இளைஞர்களின் அரசியல் முயற்சிகள் வளருவதையும், தன்கட்டுகடங்காமல் போவதையும் கண்ட அமிர்தலிங்கம் சுதந்திரன் பத்திரிகையில் தமிழரசு வாலிப முன்னணி தொடங்கப்படுவதற்கான அழைப்பை வெளியிட்டார். தமிழரசுக் கட்சியில் முன்பே தமிழரசு வாலிப முன்னணி என்ற பத்து, இருபது பேர்களைக் கொண்ட அமைப்பொன்று இருந்தது. இந்த அமைப்பு கட்சிக்கு கொடி கட்டும், மண்கிண்டி மேடைபோடும் அமைப்பாக இருந்தது.


தமிழரசு வாலிப முன்னணி தொடக்கம் பற்றிய செய்தி சுதந்திரனில் வெளிவந்ததும் தமிழர் மாணவர் பேரவை ஒரு சுதந்திரமான அமைப்பு எனச் சொல்லி வந்த சத்தியசீலன், அமிர்தலிங்கத்தை ஓடோடிச் சென்று சந்தித்து நாம் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்க மாட்டோம் என்று உறுதி தந்தார். எனினும் ஆயுத சாகசம் செய்த இளைஞர்கட்கு வெளியே தமது கட்சிக்கு அடங்கக்கூடிய இளைஞர் அமைப்பை தொடங்குவதன் மூலம் தமிழ் மாணவர் பேரவையை வலுவிழக்கச் செய்ய அமிர்தலிங்கம் முயன்றார்.


அமிர்தலிங்கம் இக்காலத்தில் அடிக்கடி இளைஞர்களின் கட்டுப்பாடு பற்றி பேசியதுடன் தமது தலைமையை ஞாபகமூட்டும் பேச்சுக்களை நிகழ்த்தினார்.

தி.மு.கவிற்கு தமிழ்நாட்டில் ஒரு தமிழ் இளைஞர் பேரவை இருந்தது போலவே இங்கும் கூட்ணிக்கும் ஒரு தமிழர் இளைஞர் பேரவை தொடங்கப்பட்டது. தலைவராக தமிழரசு வாலிப முன்னணியைச் சேர்ந்த மாவை சேனாதிராசா போன்றவர்களுடன் கூட்டணி ஆதரவு இளைஞர்கள் அதில் நிரப்பட்டனர்.

1974 இல் நடந்த கூட்டணியின் வட்டுக்கோட்டை மாநாட்டில் இந்த அமைப்பு கூட்டணியின் இளைஞர் அமைப்பாக உத்தியோகபூர்வமாக ஏற்கப்பட்டது. கனகமனோகரன், எஸ்.கே.மகேந்திரன், மதிமுகராசா, சிவமகராசா, காங்கேசன்துறை கணேசமூர்த்தி, திருமலை சிறீஸ்கந்தராசா, மண்டூர் மகேந்திரன், ரகுபதிபால சிறீதரன், குணாளன், பீற்றர் பொன்கலன், புஸ்பராசா, சேயோன் மற்றும் கூட்டணி ஆதரவுச்சக்திகள் இளைஞர் பேராவையினுள் அணி கட்டப்பட்டனர். இளைஞர் பேரவை கூட்டணியின் செல்வாக்கு பலம் ஊடாக விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அது மிகவும் சிறுபகுதி இளைஞர்களையே உட்கொண்டு இருந்தது. தமிழ் மாணவர் பேரவையானது சிவகுமாரனின் மரணம், சத்தியசீலன் கைதுடன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.

தமிழ் இளைஞர் பேரவை கூட்டணியின் தொடர்பற்று சுதந்திரமாக இயங்கியது என புஸ்பராசா எழுவதுவது உண்மையல்ல.

த.இ.பே கூட்டணியின் இளைஞர் அமைப்பு என்று அமிர்தலிங்கம் பல தடவைகள் திரும்பத் திரும்ப கூறியிருக்கின்றார். கூட்டணியிலிருந்து த.இ.பேரவையிலிருந்து உடைத்துக் கொண்டு போக முயற்சித்தமைக்காகவே சந்ததியார் காலத்து த.இ.பேரவை - கூட்டணி நபர்ளால் சகல திக்குகளிலிமிருந்து தூசிக்கப்பட்டார்.

த.இ.பே உண்மையில் கூட்டணியின் கட்டளைக்குட்பட்டே இயங்கியது. மாவை சேனாதிராசா, கனகமனோகரன், புஸ்பராசா, சிவமகராசா போன்றவர்கள் கூட்டணித்தலைமையின் விசுவாசிகளாக, அண்ணன் அமிர்தலிங்கத்திற்கு எதிர்வார்த்தை பேசாத அன்புத்தம்பியராக இருந்தனர்.

த.இ.பே அலுவலகம் யாழ் மெயின் வீதியில் உள்ள கூட்டணியின் கட்சி அலுவலகத்தின் ஒரு பகுதியிலேயே இயங்கியது, கூட்டங்களை நடாத்தியது. தனது கடிதத் தொடர்புகட்கு அது கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட அரசபணி இலவச தபாற் சேவைகளைப் பயன்படுத்தினர். எம்பிமாரின் பஸ், புகைவண்டிப் பாஸ்களையும் பாவித்தனர். புஸ்பராசாவின் வர்ணனை போல் ஒருபோதும் கூட்டடணியின் செல்வாக்குக்கு வெளியே சுயமாக இயங்கியது கிடையாது.

த.இ.பேரவையில் இருந்து உடைந்து ஈழவிடுதலை இயக்கம் பிறந்த போது ஒரு குறுகிய காலம் மட்டும் தான் புஸ்பராசா த.இ.பேரவைக்கு வெளியே இருந்தார். பின்பு அவர் அதற்கே விரைவாகத் திரும்பி விட்டார்.

ஈழவிடுதலை இயக்க உருவாக்கத்தில் வரதராசா, சந்திரமோகன், முத்துக்குமாரசுவாமி போன்றவர்களையே முக்கியமாய் குறிப்பிட வேண்டும்;
இதில் புஸ்பராசாவின் பங்கு சிறியதும் ஊசலாட்டம் நிறைந்ததுமாகும்.

த.இ.பேரவையில் கூட புஸ்பராசா முக்கியமாக இருந்த காலம் மிகவும் சொற்ப காலகட்டமாகும்!;த.இ.பேரவையிலிருந்து கூட்டணியின் மிதவாதத்திற்கு எதிராக முதலில் கலவரம் செய்தவர் சந்ததியார்தான். 1975 இல் த.இ.பேரவையில் இணைந்த சந்ததியார் த.இ.பேரவையின் மூத்த முதியவர்களை எல்லாம் தாண்டி விரைவாக முன்னேறி வந்தார். அவர் புஸ்பராசா போன்றவர்களை மாதிரி அமிர்தலிங்கத்தின் ஆளுமைக்கும் முகத்திற்கும் அஞ்சிப் பணிந்தவரல்ல. முதல் முறையாக அரசியலை முற்போக்குத்திசையில் எதிரொலிக்க முனைந்தார். த.இ.பே தனிவழி செல்லும் கூட்டணியின் அரசியல் சர்வாதிகாரத்திலிருந்து விடுபடும் என்று அவர் அறிவித்தார்.ஆங்கிலப் புலமை, சட்டதரணிகள், எம்பிமார் என்ற தராதரம், மேடைப் பேச்சுத்திறன் கொண்ட கூட்டணிக்கு எதிராக முதலாளித்துவம், சோசலிசம் என்று சிந்திக்க கூடிய இளைஞர் அணியொன்றை உருவாக்கினார். யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் வளைய வந்து கொண்டிருந்த த.இ.பே வன்னிக்கும், மன்னாருக்கும், கிழக்குமாகாணத்திற்கும் சென்றது. வன்னிப்பிரதேசத்தில் பீற்றர் பொன்கலன் போன்ற கூட்டணி ஆதரவு த.இ.பே நபர்களின் தனிமைப்போக்கிலிருந்து விடுபட்டு வன்னி எங்கும் கூட்டங்களை நடத்தினார். வவுனியா, முல்லைத்தீவு, மாங்குளம், புளியங்குளம், கனகராயன்குளம், முள்ளியவளை, வவுனிக்குளம் என்ற சகல இடமும் த.இ.பே கிளைகள் நிறுவப்பட்டன. இரவில் பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் மரங்களின் கீழே கூடக் கூட்டங்கள் நடாத்தப்பட்டன.

தமிழர் விடுதலைக்கூட்டணி எம்பிமார்கள் தமது தொகுதிகளில் முடிந்தளவுக்கு சந்ததியார் காலத்தைய த.இ.பே அமைப்புக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினர். இளைஞர்களைப் பிளவு படுத்தினர். முல்லைத்தீவு எம்பி செல்லத்தம்பு தனது தொகுதியில் த.இ.பே கூட்டங்கள் எதுவும் வைக்க கூடாது என்று கட்டளையிட்டார். சந்ததியார் காலத்தில் கிழக்கில் த.இ.பே வளர்ந்தது. அமைப்பின் செயலாளராக முதன்முதலாக மட்டக்களப்பைச் சேர்ந்த வாசுதேவா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1978 டிசம்பரில் கிழக்கில் புயல் வீசிய போது சந்ததியார் தலைமையிலான த.இ.பே மட்டக்களப்பு சென்று நிவாரண வேலைகளில் ஈடுபட்டது. அப்பிராந்திய மக்களின் நன்மதிப்பைப் பெற்றது. வடக்கு கிழக்கு இளைஞர்கள் இணைந்து பணியாற்றினர். த.இ.பே தமிழ் பகுதி எங்கும் பகிரங்கப் பொதுக் கூட்டங்களை முதன் முதலாக தனியே நடத்தியது. யாழ் முற்றவெளியில் நடத்திய பொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர் [இவை மக்களை நம்பிய சந்ததியாரால் மக்களிடம் கையளிக்கும் அமைப்பாண்மையைக் குறித்துப் புரிவதற்கான வரலாறு].மட்டக்களப்பு, வவுனியா உட்பட பல இடங்களில் இத்தகைய பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கூட்டணியும் அமிர்தலிங்கமும் வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டனர்.




கூட்டணியும், அமிர்தலிங்கமும் சந்தியார் அணியைத் தொலைக்க வழி தேடினர். அமிர்தலிஙகம் அடாத்தாக த.இ.பே. நிர்வாகத்துள் தலையிட்டு தானே கையெழுத்திட்டு த.இ.பே பொதுச்சபை உறுப்பினர்கட்கு பொதுச்சபை கூடவுள்ளதாய் அறிவித்தல் அனுப்பினார். உண்மையில் த.இ.பேரவை பொதுச்சபையைக் கூட்ட சந்ததியார் தலைமையிலான நிர்வாக அணிக்கு உரிமை இருந்தது. ஆனால், அமிர்தலிஙகம் த.இ.பே கூட்டணியின் இளைஞர்அணி பிரிந்து போக உரிமையில்லை, வேண்டுமானால் இவர்கள் போய் தனியான அமைப்பை உருவாக்கட்டும் என்று நியாயம் பேசினார்.

இதன் முன்பு கூட்டணியின் ஆட்கள் என்று கருதப்பட்ட மாவை சேனாதிராசா, எஸ்.கே. மகேந்திரன், வண்ணை ஆனந்தன், கனகமனோகரன் போன்றவர்களை சந்ததியார் அணி பெரும்பான்மையோரின் விருப்பபடி வெளியேற்றியிருந்தது. இவர்கள் த.இ.பேரவையில் இருந்தபடி உள்விவகாரங்களை அமிர்தலிங்கத்துக்கு உளவு சொல்லிவந்தனர்.

த.இ.பே அலுவலகமும் யாழ்ப்பாணாம் ஸ்ரான்லி வீதிக்கு மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில் புஸ்பராசா த.இ.பே செயற்பாட்டிலோ எப் பதவியிலோ இருக்கவில்லை. இவர் ஒதுங்கியிருந்ததுடன் பெரும்பாலும் கூட்டணி மேடைகளிலேயே தோன்றுபவராக இருந்து வந்தார்.

அமிர்தலிங்கம் த.இ.பே உடைக்கும் நோக்குடன் சேனாதிராசா, கனகமனோகரன், எஸ்.கே மகேந்திரன், பீற்றர் பொன்கலன், ரகுபதிபாலசிறிதரன், திசைவீரசிங்கம் உட்பட பல கூட்டணி ஆதரவாளர்களை திரட்டி ஒரு போட்டி த.இ.பே தொடங்கப்பட்டது. கூட்டம் கூட்டப்பட்ட அன்று எல்லோருக்கும் விசேடமாக 'பிரியாணி' வழங்கப்பட்டது. புதிய அமைப்பின் தலைவராக மாவை சேனாதிராசாவும் இடைக்கால அமைப்பாளர்களாக எஸ்.கே மகேந்திரன், பீற்றர் பொன்கலன், ரகுபதி பாலசிறிதரன் போன்றோர் நியமிக்கப்பட்டனர். அதன் பின்பு தமிழர் விடுதலைக்கூட்டணி இளைஞர்களைத் திருப்திப்படுத்த அமைத்த கூட்டணியின் 9 பேர் கொண்ட போராட்டக் குழுவில் இரண்டு இடங்களில் த.இ.பே உறுப்பினர்கட்கு பதவி வழங்கப் பட்டது. இப்படியாகத்தான் தளபதி அமிர் கூட்டணிக்கு எதிரான முற்போக்கு திசையில் வளர்ந்த இளைஞர்களை சிதறடித்தார் என்ற போதிலும் கூட்டணியின் மிதவாதப்போக்குக்கு எதிரான தீவிரவாதம் இளைஞர்களில் இருந்து வளர்வதை தடுக்க முடியவில்லை.

அமிர்தலிங்கம் முதல் மாவை சேனாதிராசா வரை சந்ததியாரை வெறுத்தமையுடன் தமது எதிரியாய் கருதியமையின் போக்கு இங்குதான் மூலம் கொண்டிருந்தது. இடதுசாரிகளின் செல்வாக்கிற்குப் சந்ததியார் பலியாகிவிட்டதாய் அமிர்தலிங்கம் குற்றம் சொன்னார். புஸ்பராசா அரசியல் ரீதியாக சந்ததியாருடன் எந்த வகையிலும் ஒப்பிடப்படக் கூடியவரல்ல. கடின உழைப்பிலும் அரசியல் நேர்மையிலும் சந்ததியார் வேறு எவரையும் விட உயர்வாக இருந்தார். வடக்கு, கிழக்கு இணைந்த அரசியல் போக்கொன்றை இளைஞர்கள் மத்தியில் ஊன்ற முயன்றார். வன்னி, மட்டக்களப்பு கிராமப் பகுதிகட்கும் அமைப்புக்களை பரவலாக்கினார்.

புஸ்பராசா போன்றவர்கள் இப்பகுதிகட்கு ஒரு போதும் சென்றதோ கண்டறிந்தோ கிடையாது. வன்னிப்பகுதிகளின் முக்கியமானவர்களில், சிறையிருந்தவர்களில் ஒருவரைக் கூட புஸ்பரசா குறிப்பிட்டது கிடையாது. பொன் பத்மநாதன், இராஜரட்ணம், தவராசா, பரமநாதன், இராஜராஜேஸ்வரன் போன்ற தமிழ் இளைஞர் பேரவையின் வன்னிப்பகுதியின் முக்கியமானவர்களையோ, முல்லைத்தீவு தமிழ் இளைஞர் பேரவைத் தலைவராக இருந்த பறங்கி இனத்தைச் சேர்ந்த டேவிட் எலோய் என்பவரையோ புஸ்பராசா அறியாதவராக இருந்தார் என்று கட்டாயமாக நம்ப முடியும்.

த.இ.பே இருந்து கொண்டே த.வி கூட்டணி தலைமைக்கும் அமிர்தலிங்கத்திற்கும் அமைப்புத் தகவல்களை கொடுத்து வந்ததாய் குற்றம் சாட்டப்பட்டே மாவை சேனாதிராசா, எஸ்.கே மகேந்திரன், கனகமனோகரன் போன்றவர்கள் த.இ.பே இல் இருந்து வெளியேற்றபட்டதை புஸ்பராச அறியாமல் இருந்தார் என்று நம்பமுயாது. கூட்டணி சார்பு ஆட்களைப் பாதுகாக்கும் பொருட்டே அமிர்தலிஙம் போல் புஸ்பராசாவும் சந்தியாரை தாக்குகின்றார். உண்மைப் பிரச்சனைகளைப் பேசாது ஒதுங்கி நின்றுவிடுகின்றார். இடதுசாரிப்போக்குள்ள சந்ததியாரை பிசாசாகக் காட்டுவதன் மூலம் கூட்டணி சார்பு நபர்களையும் தன்னையும பாதுகாத்துக் கொள்கிறார்.

அண்ணன் அமிர்தலிங்கம் சார்பான அன்புத் தம்பிமாரான புஸ்பராசா, சேயோன், நடேசானந்தம், இறைகுமாரன் உட்பட பலருக்கு விவசாய உத்தியோகத்தர் உத்தியோகம் கிடைத்தது. சத்தியசீலன், முத்துக்குமாரசுவாமி, திசைவீரசிங்கம் போன்றவர்கள் தமிழீழத்திற்காய் போராடிக் களைத்து அண்ணன் அமிரின் சிபாரிசுக் கடிதங்களுடன் ஐரோப்பிய அகதி வாழ்விற்கு தம்மை ஒப்படைந்தனர். ஆனால், சந்ததியார் தன் மண்ணை விட்டுப போகாது நேர்மையாய் அரசியல் செய்தமைக்காக தலையறுக்கட்ட மனிதராவர்.

தலைமையை விட்டு வெளியேறி எதையும் சாதிக்க முடியாது 'வடலி வளர்த்துக் கள்ளுக் குடிக்க முடியாது' என்று வாதிட்ட அமிர்தலிங்கத்தின் விசுவாசி கனகமனோகரனும் தமிழீழத்தை துறந்து வெளிநாட்டில் வாழ்கின்றார். த.இ.பேரவையில் இல்லாமல் இருந்து கொண்டே த.இ.பே சார்பில் அறிக்கை விட்டு சந்ததியார் காலத்து இளைஞர் பேரவையில் இருந்து வெளியேற்றபட்ட வண்ணை ஆனந்தனும் அமிர் அண்ணாவுக்காக சந்ததியாரை எதிர்த்தவர், பின்பு வெளிநாட்டு அகதி வாழ்வில் அமிர் அண்ணாவின் எதிரியாய் மாறுண்டு போனார்.


தமிழர் விடுதலைக்கூட்டணி:


தமிழரசு, கூட்டணி மரபுப்படி புஸ்பராசா செல்வநாயகத்தை தந்தை செல்வநாயகம் என விழிப்பது அவர் இன்னமும் அக் கட்சிகளின் தனையனாக வாழ்ந்து கொண்டிருப்பதை இது புலப்படுத்துகின்றது. புஸ்பராசா தமிழ்தேசியம் சார்ந்த பல கதம்பவாதப்போக்குளில் சிக்கி உருக்குலைந்த அரசியலை பேசிக் கொண்டிருந்த போதும் அவர் அடிப்படையில் இப்போதும் கூட்டணியின் சிந்தனை முறைமைக்கு இணக்கமானவரே.

இந்த வகையில் அவர் கடந்த காலத்தின் மனிதனாக கூட்டணியின் சுத்தமான யாழ்ப்பாண மனிதராக வாழையடி வாழையாக சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வருகின்றார். இலக்கிய சந்திப்பு மேடைகளில் அவர் பல வர்ணச் சிந்தனைகளை உடையவராக காலம், இடம், பொருள் ஏவலைப் பொறுத்த கட்டுடைப்புகளை ஆதரித்து கலகம் செய்பவராக தோன்றுவது அவரின் அரசியல் பலவீனத்தின் சந்தர்ப்பவாத வெளியீடுதான். நிலையற்ற அடிப்படையிலான புத்தியற்றவர்கள் சகல போக்குகளோடும் தாம் இணங்கிப்போவதாய் சுத்த சுதந்திர நடைமுயைகளை அனுட்டிப்பதாய் காண்பிக்க முயல்கின்றார்.

அடுத்து, புஸ்பராசாவின் அரசியல் பாசறையான தமிழரசு - கூட்டணி கட்சிகளின் அரசியல் அருகதையென்ன?

தமிழீழத் தந்தையாகிய செல்வநாயகம் காந்திய முறையிலான அறவழிப் போராட்டமே தமது அரசியலுக்கான வழியென்று நீண்ட காலமாய் உரைத்து வந்ததார். அவர் ஈழத்துக்காந்தி மூதறிஞர், தந்தை, தழிழீழ முதல்வர் என்று பல தொகைப் பட்டங்களைச் சூடிக் கொண்ட "புகழ் விரும்பாத" மனிதர். காந்தியைப் போன்று ஆச்சிரமங்கள், பாலியல் வாழ்வைத்துறப்பு, பந்தபாசம் அறுப்பு, உண்ணாநோன்பு, எளிய ஆடை மரக்கறி உணவு, இயற்கை வைத்தியம் தனக்கென்று பொருள் சேர்ககாமை போன்ற பண்புகள் பெற்று துறவிபோல் வாழ்நதவரல்ல, செல்வநாயகம். நமது ஈழத்துக் காந்தியோ ஐரோப்பிய ஆடை புனைந்து வீட்டில் கூட ஆங்கிலம் பேசும் மனிதர்.


செல்வநாயகம் ,கொழும்பு, யாழ்ப்பாணத்தில் வீடுகள், சொத்துக்கள், பெருந்தோட்டங்கள் என்று வாழ்ந்த முதலாளி அவர். தனது தோட்டத்தில் உள்ள ஏழைத் தொழிலாளர்கட்கு நியாயமான கூலி தராத புண்ணியவான். தமிழனப் பெருமை பேசிய தந்தை ஒரு போதும் ஏழை மனிதர்களின் வறுமையை அது சார்ந்த வாழ்வுத் துயரத்தை பேசியறியாத மனிதர். இவர் மட்டுமல்ல தமிழரசு, தமிழீழம் கேட்ட பலருக்கு கொழும்பில் சொந்த வீடுகள் இருந்தன. இவர்கட்கு யாழ்ப்பாணத்தின் கொழுத்தும் வெய்யில், பனைமரக் கலாச்சாரம் ஒத்துக் கொள்வதில்லை என்பதால் இவர்கள் பெரும்பகுதி கொழும்பிலேயே வாழ்ந்தனர். திருச்செல்வம், சிவசிதம்பரம், ஈழவேந்தன், நாகநாதன் எனப்பலரை இதற்கு உதாரணமாக் குறிப்பிட முடியும்.

'அறவழிப் போராட்டத்தின் தந்தை' செல்வநாயகத்தின் காந்தியம் பற்றிய புரிதல் எத்தகையது?

காந்தியின் குரு எனப்பட்ட டோல்ஸ்டோய் பற்றிக் கூட செல்வநாயகம் பேசியதில்லை. அரைநாள், ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்துடன் தான் அறவழிப் போராட்டத்தின் முதல்வராக அவர் ஆகிக் கொண்டார்.காந்தியைக் கூட உண்மையாக அவதானித்தவராக, பின்பற்றியவராக செல்வ நாயகத்தைக் கொள்ள முடியாது. அவர் அகிம்சைவாதி, அறவழிப்போராட்ட நம்பிக்கையாளர், காந்தியவாதி என்று அவரது கட்சி நபர்களால் தொடர்ந்து புனையப்பட்டு வந்தார். அவர் காந்தியைப்போல் கந்தை உடுத்தியவரோ, எளிமையாய் ராட்டையில் நூல் நூற்று சொத்து சுகம் சேர்க்காமல் வாழ்ந்தவரோ அல்ல.

செல்வநாயகத்தின் அரசியல் இயலாமை கட்சியின் மிதவாதக் கோழைத்தனமே இங்கு அறவழிப்போராட்டம் என்ற சுலோகத்தை முன்வைக்க காரணமாயிற்று "தீமையானாலும் வன்முறையினால் எதிர்க்காதே" என்பது தான் காந்தியின் கொள்கையாகும். ஆனால் செல்வநாயகத்தை மேடையில் வைத்துக் கொண்டே அமிர்தலிங்கம்
புறநானூற்றிலே முலையறுத்த தமிழிச்சியின் வீரம் புகழ்வார். ஆயுதப்போராட்டத்தின் மூலமேனும் தமிழீழ இலட்சியத்தை அடைவோம் என்று முழங்குவார். மங்கையற்கரசி அமிர்தலிங்கம் துவக்கு போரை "துவக்கு போதை என்று சொன்னவனை சிவக்குமாரை சிவக்குமாரை மறக்குமா நெஞ்சம்?" என்று ஆயதப்போராடட்டத்தை தேர்ந்து கொண்ட சிவகுமாரனை மேடைகள் தோறும் போற்றுவார், கலங்கிக் கண்ணீர் விடுவார்.

ஆக அறவழிப்போராட்டம் அகிம்சை பற்றி கூட்டணி பலவித கோளாறான தன்னைத்தானே மறுக்கும் கருத்துக்களைக் கொண்டிருந்தது. தமிழரசு, கூட்டணிக் கூட்டங்களில் கேள்வி கேட்கும் சாதாரண உரிமை கூட கிடையாது. கேள்வி கேட்பவர்கள் கூட்டத்தைக் குழப்ப முற்படுவர்களாக காட்டப்பட்டு அடித்து வெளியேற்றப் படுவது அடிக்கடி நடைபெறும் சம்பவமாகும்.

கேள்வி கேட்டமைக்காக இடதுசாரிகள் அடிக்கபட்டனர். ஆனால் தமிழரசு, கூட்டணி நபர்கள் ஏனைய கட்சிகளின் கூட்டங்களில் கேள்வி கேட்டு கூட்டம் குழப்பும் உரிமையை தம்மிடம் வைத்திருந்தனர். இத்தகைய போக்குகளை தந்தை செல்வநாயகம் கண்டித்ததாய் சரித்திரம் கிடையாது.

தமது கட்சியினர் அடிதடிகளை துறந்து அகிம்சையைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று அவர் போதித்ததில்லை. 'தீப்பொறி' என்ற பத்திரிகையை நடாத்திய அந்தனிசில் செல்வநாயகத்தை 'காற்சட்டைக்காந்தி' 'கோழிசூப் காந்தி' என்று நக்கல் விட்டு அப்போது தனது பத்திரிகையில் எழுதினார். செல்வநாயகம் நல்ல மனிதர் என்ற பெயர் அவர் முதலாளிய அமைப்பை அதன் அநீதிகளை எதிர்க்காத பண்புக்காகத் தரப்பட்டதாகும். அவர் சாதாரண மனிதர்களோடு உறவு வைத்துக் கொள்ளவாதவர். கட்சியில் எம்.பிமாராக சட்டம் படித்தவர்களையே தேர்ந்தடுப்பார். படித்தவர்கள் என்று சொல்லப்பட்ட உயர் வர்க்கத்தைச் சேர்ந்த ஆங்கிலம் பேசும் நபர்களையே கட்சியின் முக்கிய இடத்தில் வைத்திருந்தார். கட்சிக்காக உழைத்த அடிமட்ட தொண்டர்களை கல்வியறிவு குறைந்த கட்சி நபர்களையோ அவர் கட்சியின் முக்கிய இடத்தில் அமர்த்தியது கிடையாது. புதுமைலோலன், ஈழவேந்தன் போன்றவர்கள் எம்.பி பதவிக்கு இலக்கு வைத்து பிரச்சனைப்பட்ட கதைகள் உள்ளன. செல்வநாயகத்தை 'தந்தை- தந்தை' என்ற ஈழவேந்தன் செல்வநாயகத்துடன் முரண்பட்டுக் கொண்டு செல்வநாயகத்தை செவிடன் என்று பழித்து திரிந்த காலமொன்று இருந்தது.

செல்வநாயகம் தன் உயர் வர்க்கம் சார்ந்த உணர்வுடன் சிந்தித்த மனிதர். சாதாரணமானவர்களை கட்சியின் முக்கிய இடங்கட்கு நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டவர். மட்டக்களப்பு இராசதுரை சிறந்த மேடைப்பேச்சாளாராக இருந்த நிலையிலும், கட்சிக்கு போட்டியிட ஆள் இல்லாத நிலையிலுமே விதிவிலக்காக கட்சியுள் சேர்க்கப்பட்டு வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

மட்டக்களப்பு இராசதுரைக்கு ஆங்கிலம் தெரியாமையால் கட்சியுள் அடிக்கடி ஓரம் தள்ளப்பட்டார். பாராளுமன்றத்திலும் பொதுவாழ்விலும் இராசதுரையால் ஏனைய தமிழரசு கூட்டணி எம்.பிமார் போல் செயற்பட ஆங்கில மொழியறிவற்ற அவரது நிலை பெருந்தடையாக இருந்தது. மட்டக்களப்பில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது அவர்களைப்பற்றி விசாரிக்க ஆங்கில மொழியறிவு இன்மையால் பொலிஸ் நிலையம் செல்வதை இராசதுரை தவிர்த்துக்கொண்டார். அமிர்தலிங்கம் போன்றவர்கள் இதனை மிகவும் சாதுர்யமாக இராசதுரைக்கு எதிராகப் பயன்படுத்தினர். செல்லத்தம்பு எம்.பி முதல் சிலரை கட்சியுள் Sir என்று அழைக்குமளவு நிலையிலேயே இராசதுரை இருந்தார்.

படித்தவர் என்ற கோதாவில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களாக இருந்த மாட்டின், இராஜலிங்கம் போன்றவகள் கூடக் கட்சியினுள் உள்வாங்கப்பட்டு எம்பிகள் ஆக்கப்பட்டனர். சாதாரண கட்சியின் ஏழைத் தொண்டனுக்கு கட்சியில் எந்தச் செல்வாக்கும் இருக்கவில்லை. சட்டத்தரணிகளே கட்சியை ஆண்டனர். தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தவரும் அண்ணன் அமிர்தலிங்கம், தந்தை செலவ்நாயகம் போன்றவர்களை ஒன்று சேரப் போற்றியவருமான நெடுங்கேணியைச் சேர்ந்த பீற்றர் பொன் கலன் எம்.பி பதவி கேட்டு நிராகரிக்கபட்டார். தானும் ஒரு கோட்டுப் போட்டிருந்தால் தனக்கும் சீற் தந்திருப்பார்கள் என்று வெளிப்படையாகவே இவர் பேசித்திரிந்தார். சாதி காரணமாக கரிகாலன் கட்சியில் உயர முடியவில்லை, தேர்தலிலும் அவருக்கு வாய்ப்புக்கிட்டவில்லை.

தமிழரசு, கூட்டணியின் அகிம்சையை எப்படி புரிந்து கொள்வது?:

இந்தச் சிந்தனை அடிப்படையில் ஒரு முதலாளிய கற்பனைவாதக் கருத்தியல்தான்.

காந்தியின் அகிம்சை இனத்தை கடந்ததாய் மதத்தை தாண்ட முயற்சிப்பதாய் கூறிக் கொண்டது. தன்னை மனிதம் தழுவியதாய் காட்டிக் கொண்டது. ஆனால், நமது ஈழத்துக் காந்தியின் அகிம்சையோ சிங்களவர், தமிழர் என்ற இனவாதத்துள் பிறந்தது. தமிழகர்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தியது. சாதாரண இலங்கை மக்களுக்காக தமிழரல்லாதவர்களுக்காக செல்வநாயகம் ஒருபோதும் பேசியது கிடையாது.


மலையகத்தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை குடியுரிமை பறிப்பின் போது கூட இன்று இவர்கட்கு நாளை எமக்கு என்று சொன்னாரே தவிர அவர்களை தமிழ்சாதியின் ஒரு பிரிவாய் கூட பார்க்க அவருக்கு சம்மதம் இருக்கவில்லை. எனவே, செல்வநாயகத்தின் அகிம்சை தமிழ் தேசியத்துள் அதாவது யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்துள் மட்டுமே குறுகிக் கிடந்த ஒன்று. மனிதம் என்ற கருத்தியல் செல்வநாயகம் அறியாத ஒன்று. அகிம்சை என்ற சிந்தனை அது கற்பனாவாதக் கருத்தியல் என்ற போதும் பரந்த மனிதம் தழுவிய போக்கு என்பது செல்வநாயகம் போன்ற பழைமைவாதிகட்கு எட்டாத விடயமாகும். செல்வநாயகத்தின் அகிம்சையானது சிங்கள வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. அவரின் சொந்த பத்திரிகை சுதந்திரன் சிங்கள மக்கள் முழுப்பேரையும் இனவாதிகளாய் கண்டது.

சிங்களமொழியை நண்டெழுத்து என்ற எழுதி திருப்தி கண்டது. 'சிறி'யை அழிப்போம் சிறையை நிறைப்போம்' என்றவர்கள் 'சிறி' என்பது தமிழ் எழுத்தல்ல என்று கூடப் புரிந்து கொள்ளவில்லை. எப்படிக் காந்தியின் சொந்தக் கோழைத்தனம் சமயவாதக் கற்பனையும் அகிம்சையை தேடித்தந்ததோ, பிரிட்டிஷ் ஆட்சியுடன் சமரசத்திற்கு சாதகமான அரசியலுக்கு இட்டுச் சென்றதோ அதையே செல்வநாயகமும் இலங்கையில் வேறு வடிவில் அரசியலாக்கினார்.

செல்வநாயகம் சிங்கள மக்களை எதிர்த்த மட்டத்திற்கு பிரிட்டிஷ்காரரை எதிர்த்தவரல்ல. எதிரியாய் கருதியவரல்ல. மாறாக, அவர் ஒரு பிரிட்டிஷ் விசுவாசி. மற்றப்பக்கத்தில் இலங்கை வரலாற்றிலேயே ஆகப் பெரிய இனவாதக் கட்சியான UNP யுடன் அவர் உறவாக இருந்தார். வலதுசாரியாக இருக்க செல்வநாயகம் ஒரு போதும் வெட்கப்படாதவர். தமிழ் உயர்வர்க்கத்தின் பெரிய மனிதர் அவர். செல்வநாயகத்திற்கு மூதறிஞர் என்ற பட்டம் கூட்டணியினால் சூட்டப்பட்டது. செல்வநாயகம் N.M பேரேரா, கெல்வின், பீற்றர் கெனமன், சண்முகதாசன் போன்றவர்களைப் போல் சிந்தனை விருத்தி கொண்டவரல்ல. ஒரு சிறந்த மேடைப் பேச்சை நிகழ்த்தக் கூட அவர் தகுதி போதாதவர். ஒரு சிறு நூலைக்கூட எழுதி வெளியிடுமளவிற்கு சிந்தனை பரப்புடையவரல்ல. தமிழீழம் கேட்ட செல்வநாயகம் பாராளுமன்றத்தில் "தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று தனது அரசியல் கையறு நிலைமையை வெளியிட்டார்.


செல்வநாயகம் அரசியல் தொலை நோக்கோ தமது தமிழீழம் எத்தகைய சமூக, அரசியல் போக்குகளை கொண்டு வரும் என்று எதிர்வுகூறும் ஞானமோ அற்ற மனிதராகவே இருந்தார். யாவற்றையும் தன்னிச்சைப் போக்கிற்கு விட்டு அதற்கேற்ப செயலாற்ற முனைந்தார். தமிழ் மக்களின் பிரச்சனை என்பது அவரைப் பொறுத்து சட்டப்பிரச்சனை, அரசியலமைப்பு சார்ந்த பிரச்சனை. தமிழ் மக்களின் சமூக அரசியல் பொருளாதாரம் சார்ந்து அவர் சிந்திக்கத் தெரியாதவர். அவரது சட்டத்தரணி மூளையானது சட்டவியல் நோக்கில் மட்டுமே சிந்திக்கக் கடமைப்பட்டதாகும். அவரது கடைசிப் பத்தாண்டுகள் புலன்கள் கூர்மையாய் செய்றபட முடியாத நரம்பு சம்பந்தமான வியாதியால் பாதிக்கப்பட்ட மனிதராக இருந்தார். மிகவும் குறைந்த உடல் சார்ந்த அசைவியக்கம் உடையவராக இருந்தார். அடுத்தவர் உதவியின்றி நடக்கக் கூடச் சிரமப்படும் மனிதராக இருந்தார். தன்னைச் சூழ என்ன நடக்கிறது என்பதை பூரணமாய் உணரும் நிலையில் அவர் செயற்பட்டார் என்று சொல்ல முடியாது. எனவே, கூட்டணி அவரை ஒரு கட்டத்திற்குப் பின்னர் வெறும் பொம்மையாக்கிப் பயன்படுத்த தொடங்கியது. தந்தை செல்வா கூறியதாய் சொல்லி பல தகவல்கள் தமிழ் மக்களுக்கு சொல்லப்பட்டது. அவர் மிகவும் மெல்லிய குரலில் பேசும் போது அதை அருகில் இருந்து கேட்டு அமிர்தலிங்கமோ, ஈழவேந்தனோ, ஆலாலசுந்தரமோ மீண்டும் உரத்துச் சொல்லும் பழக்கம் நிலவியது.


செல்வநாயகம் இடதுசாரிகளுடன் ஒருபோதும் உடன்பாட்டிற்குப் போனது கிடையாது. திரும்பத் திரும்ப UNP யுடன் தான் அரசியல் கொடுக்கல் வாங்கல் கொண்டாட்டங்கள் வைத்துக் கொண்டார். கிட்டத்தட்ட எல்லாத தேர்தல்களிலும் வடக்கு, கிழக்கிற்கு வெளியே உள்ள தமிழ் மக்களை UNP க்கு வாக்களிக்கும்படி சுதந்திரன் தூண்டுவது வழக்கம்.

தமிழரசுக்கட்சி UNP யுடன் சேர்ந்து திருச்செல்வத்தையும் அமைச்சராக்கியது. அவர் உள்ளுராட்சி அமைச்சாராக இருந்தபோது தமக்கு எதிரான யாழ் நகரசபையைக் கலைத்து பெரும் அட்டகாசம் பண்ணினார். இவர்கள் அரசுடன் இணைந்திருந்தபோது தான் பெளத்த போயா தினங்கள் விடுமுறையாக்கபட்டது. இக்காலத்தில் வெசாக்க தினமும் மேதினமும் ஒரு முறை தற்செயலாக ஒரே தினத்தில் வந்தபோது வெசாக் தினத்தின் முக்கியத்துத்தைப் பாதுகாக்க மேதின ஊர்வலங்கட்கு தடை விதிக்கப்பட்டது. இக்காலத்தில் தமிழரசு UNP இரண்டும் தமிழ் சிங்கள் வேற்றுமைகளைக் கடந்து ஒன்றாய் செயற்பட்டன. 1965 இல் டட்லி சேனநாயக்காவிற்கு தமிழரசுக்கட்சி பிரமாண்டமான வரவேற்பை யாழ்ப்பாணத்தில் கொடுத்தது. UNP தலைவர்களுக்கு சந்திதோறும் சிகரம் கட்டி அலங்கார வளைவுகளை வைத்து வரவேற்ற தமிழரசுக் காலத்தை செல்வநாயகம் வழி நடத்தியவர்.


செல்வநாயகம் காலத்து தமிரசுக்கட்சி தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் உள்ள ஏழைச்சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் செய்த துரோகங்கள் கொஞ்சமல்ல.

இலவசக் கல்வியூட்டும் திட்டத்தை கொண்டு வந்து தனியார் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்ற போது தமிழரசுகட்சி அதை எதிர்த்தது. இலவசக்கல்வியை எதிர்த்தமை காசு கட்டிப்படிக்கும் உயர்வர்க்கம் சார்ந்த செயலாக இருந்தது. என்பதோடு பரந்த கல்வியூடாக பெருந்தொகையானவர்கள் படித்து முன்னேறி தம் தொழிலுக்கு போட்டியாளராகி விடுவர் என்று தமிழரசுக்கட்சி பிரதிநிதித்துவப்படுத்திய நடுத்தர வர்க்கம் அஞ்சியது. இதை மறைத்து தனியார் பாடசாலைகளை அரசு எடுத்தால் அதனூடாக சிங்களம் புகுந்து விடும், தமிழ் அழிந்துவிடும் என்று தமிழரசுக்கட்சி விளக்கம் தந்தது.

ஆங்கிலக் கல்வியூடாக தமிழ் அழியாதா? என்ற கேள்விக்கு இவர்களிடம் பதிலில்லை.

வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் தமிழில் செயலாற்றம் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆங்கிலத்தில் பேசி, எழுதி, சிந்தித்து, வாதிட்டு வாழந்த கூட்டணி சட்டத்தரணிகளின் கட்சி அதைக் கடுமையாக எதிர்த்தது. ஆங்கிலத்தின் இடத்தை நீதிமன்றத்தில் தமிழுக்கு வழங்க மறுத்தது. பண்டாராநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தத்தில் செல்வநாயகம் தனிச்சிங்கள சட்டத்தை ஒத்துக் கொண்டே உடன்படிக்கைக்கு சென்றார்.

மேலும் புதிய நெற்காணி சட்டத்தின் மூலம் நிலத்தில் உழைக்கும்; விவசாயிகட்கு உதவும் சட்ட மூலம்கள் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்து காணி உடமையாளர்கள் சார்பில் சிறு விவசாயிகள், குத்தகை விவசாயிகட்கு எதிராக தந்தையின் கட்சி செயலாற்றியது. 1961 இல் அந்நிய பெற்றோலிய கம்பனிகளை தேசியமயமாக்கும் சட்டம் தமிழரசுக் கட்சியினால் எதிர்க்கப்பட்டது. செல் [Shell ] போன்ற ஏகாதிபத்திய எண்ணை நிறுவனங்கட்கு இதன் மூலம் தனது மறைமுக ஆதரவைத் தந்தது. தொட்டதெற்கெல்லாம் அந்நிய தூதரங்கட்கு சென்று நீதி கேட்டு மனுக் கொடுக்கும் தமிழரசுக்கட்சி வேறெவ்வாறாகவும் ஒரு போதும் செயற்பட முடியாது. 1980 இல் இலங்கை முழுவதும் நடந்த தொழிற்சங்க போராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மாணவர் அமைப்புக்கள் என்பன கலந்து கொண்ட போது கூட்டணியோ இது தென்னிலங்கை சிங்களவரின் பிரச்சனை என்று தன் தமிழ் இனவாதத்தின் கூட்டுக்குள் சுருங்கிக் கொண்டது.

கைலாசபதிக்கு எதிராக UNP ஆதரவுடன் கூட்டணி தமது ஆளான வித்தியானந்தனை யாழ்பல்கலைக்கழக துணைவேந்தராக்கியது. கைலாசபதியையும், கலைப்பீடத்திற்கு பொறுப்பாய் இருந்த இந்திரபாலாவையும் கூட்டணி முடிந்த மட்டும் இழிவு படுத்தியது. தென்னிலங்கையில் பல ஆயிரம் தமிழ் மாணவர்கள் பல்கலைகழகங்களில் தங்கயிருந்து படித்துக் கொண்டிருந்தபோது யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் சில நூறு சிங்கள மாணவர்கள் தங்கி கல்வி கற்பதை எதிர்த்து கூட்டணி பிரச்சாரம் செய்தது. சுதந்திரன் சிங்கள மாணவர்கட்கு யாழ்ப்பாணத்தில் தங்க இடம் கொடுக்கக் கூடாது என்று இன வெறிப்பிரச்சாரத்தில் நின்றது.

காங்கேசன்துறை இடைத்தேர்தலில் செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட வி.பொன்னம்பலத்தை ஆதரித்து அறிக்கை விட்ட யாழ்ப்பல்கலைக்கழக விரிவுரையாளர்கட்கு கொலைப்பயமுறுத்தல் கூட்டணியின் உற்பத்திகளால் விடப்பட்டது. பின்னர் வி.பொன்னம்பலத்தின் வீட்டுக்கும் குண்டு வீசப்பட்டது. தந்தை செல்வநாயகத்தின் இத்தகைய அகிம்சை அரசியல் வளர்ந்து ஆ. சுப்பிரமணியம், கே.ஏ சுப்பிரமணியம் போன்ற இடது சாரிகளைக் கொல்ல முயற்சித்தது. பிற்காலத்திய தந்தையின் வழித்தோன்றல்கள் எஸ். விஜயானந்தன், சி.துரைசிங்கம் அண்ணாமலை போன்றவர்களைக் கொலை செய்தனர். தமிழரசுக் கட்சிக்கு இடதுசாரிகளுடன் பழைய பகைமைகளை இருந்தது என்பதுடன் தமிழீழம் கோரியவர்கட்கு எதிராக இடதுசாரிகள் மட்டுமே அரசியல் செய்ய முற்பட்டனர். சண்முகதாசன் தமிழர் கூட்டணியைச் சேர்ந்த ஈழவேந்தன், தருமலிஙகம் போன்றோருடன் பகிரங்கமான தமிழீழம் பற்றிய விவாதத்தை நடத்தினார்.

யாழ்பல்கலைக்கழகத்தில் 'குற்றவாளிக் கூண்டிலே தமிழீழப் பிரிவினைவாதிகள்' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் த.இ.பே சேர்ந்த சிவதாசனுக்கு எதிராக இடதுசாரிப்போக்கை எடுத்திருந்த புதுமை லோலன் வாதிட்டார். தமீழழம் சாத்தியமா? என்ற தலைப்பில் சி.கா செந்தில்வேல், ஈழவேந்தனுடன் விவாதம் நடத்தினார். இத்தகைய பகிரங்க விவாதங்களை கூட்டணி தடை செய்யத் தொடங்கியது. தமது நபர்களை கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதை நிறுத்தியது. இடதுசாரிகள் தேசிய இனப்பிரச்சனையில் போதிய கவனம் எடுகக்கவில்லை என்பது புஸ்பராசாவின் மட்டுமல்ல முழுத்தமிழ் தேசியவாதிகளினதும் தொடர்ச்சியான குற்றச்சாட்டு.

இடதுசாரிகள் காரிய சாத்தியமான வழியில்தான் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வைத் தேடினார்கள். யாழ்ப்பாண நடுத்தர வர்க்க கொதிப்புகட்கு ஏற்ப அவர்கள் ஆயதமேந்திய கூத்துக்களை இடதுசாரிகள் ஏற்கவில்லை. 1978 இல் சீனச்சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டமைக்கான முக்கிய காரணம் தேசிய பிரச்சனை சம்பந்தமாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடாகும்.

1970 நடுப்பகுதியில் தமிழ் இளைஞர்கள் இடதுசாரி திசையில் சிந்திக்க தொடங்கிய போது நீங்கள் சீனச்சார்பு பொதுவுடைமைக் கட்சியால் திசை திருப்ப பட்டுவிட்டீர்கள் என்றும் பீக்கிங் கட்சி தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவி விட்டது. என்று அமிர்தலிங்கம் கூறினார்.

1984 இல் இடதுசாரிகளால் தொடக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான வெகுஜன அமைப்புத்தலைவர் T .இராஜசுந்தரம் ஆயுதாரிகளால் கடத்திக் கொல்லப்பட்டார்.

1987 இல் இந்தியவிமானங்கள் இலங்கையில் ஊடுருவி உணவுப் பொதிகளை வீசிய போது இது இந்திய இராணுவத் தலையீட்டிற்கான தொடக்கம் என்று இடதுசாரிகள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவத்தனர். ஆனால் தமிழ் இயக்கங்கள் போட்டி போட்டுகொண்டு இந்தியத் தலையீட்டையும் இராணுவத்தலையீட்டையும் வரவேற்றன.



தொடரும்...

தமிழரசன்
பெர்லின்



Keine Kommentare: