Mittwoch, Juli 25, 2012

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் [8] - நூல் விமர்சனம்-8

அன்பார்ந்தோரே,இனியொரு தமிழரங்கத் தேசிய மாயை நமக்குள் மலர்ந்தாக வேண்டுமா?"தேசிய விடுதலை"ப் போராட்டமென வரிந்து கட்டும் அனைத்து வாதங்களும் எந்த மக்களுக்காகக் குரல் கொடுத்ததோ அஃது,அந்த மக்களை வேட்டையாடிச் செல்வத்தைக் குவித்திருக்கிறது.இத்தகைய செல்வச் சேர்ப் பாளர்கள் பெருந்தொகையான மக்களைக் கொன்று போட்டுத் தம்மால் சேகரிக்கப்பட்ட மக்களது செல்வத்தைத் தொடர்ந்து தமதாக்கித் தமது வாரீசுகளுக்கு விட்டுச் செல்வதற்காகத் தொடர்ந்து,தொடர்ந்து "தமிழீழம்-தேசியமெனப் புனைவது" ஒரு கேடான காலத்தைத் தொடர்ந்து மறைப்பதற்கானது.

இந்த எட்டாவது பகுதி "ஈழப்போராட்டத்தின் எனது சாட்சியம்" எனும் புஸ்பராசுவின் நூலுக்கான விமர்சனத்தின் -கட்டுடைப்பின்-இறுதிப் பகுதியாகும்.இதன் அடுத்த பகுதிகள் புஸ்பராசுவின் சகோதரி புஸ்பராணியினது சாட்சியமான "அகாலத்தின்"கட்டுடைப்பாகவே விரியும்.

அதன்பொருட்டு,உண்மைகளையும்,வரலாற்று ஆவணங்களையும் தேடுவதும்,இவர்கள் காலத்தில் வாழ்ந்தும் நேரடியாகப் போராடியவர்களது அநுபவங்கள்-சாட்சிகள்,அன்றைய பத்திரிகைகள்-செய்தித் தாள்களெனப் பலதரப்பட்ட ஆவணங்களைக் கற்றும் கூடவே அப்பகுதி மக்களோடு மக்களாக வாழ்ந்து -போராடியவர்களது போராட்டத் தியாகங்களின் வழியிலான உண்மைகளையே அநுபவமாகப் பெற்றதை நாம் பலமாகக் கருதுகிறோம்.

இன்று, "தமிழ்தேசிய வாதமானது" விதேசியப் பரப்பின் அறுவடையாச்சு! அஃது,வரலாற்றில் ஆற்றிக்கொண்ட அனைத்து மக்கள் விரோத அரசியல் நகர்வும் அதன் குணவியல்பான வர்க்க நிலையின் காரணமானதாகவும்,அந்த வர்க்கவியல்ப்புக்கேற்பத் "தமிழ்த் தேசியமானது" தனது வர்க்கத்தோடு உலகு தழுவிக் கரங்கோர்த்துக்கொண்டது.அஃது, தனது வர்க்கத்துக்கான வேட்டை நாயாக வளர்ந்தபோது தமிழ்பேசும் மக்களது "சிங்களவின வொடுக்குமுறைக்கெதிரான" எதிர்ப்புப் போராட்டமானதை தமது எஜமானருக்கேற்பக் கையகப் படுத்தியது.அதற்காக அது, நடாத்திய கொலைகளும்,சர்வதகார ஆதிக்கமும் அதற்கானவொரு பாசிசப் படையை நிறுவிக்கொள்ளும் தகவமையை அந்நிய சக்திகள் வழங்கிக்கொண்டன.அதன் அதியுயர்ந்த ஒடுக்குமுறை வடிவமே புலிகள் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறதல்லவா?

இன்று,தமிழ்பேசும் உழைக்கும் வர்க்கத்துக்கெதிரான இந்தக் கொடுரமான வர்க்க எதிரிகள் நேரடியாகவே இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தோடு இனம்,மொழி,மதம் கடந்து ஒன்றுபட்டுள்ளனர்-நம்மை ஒடுக்குவதற்கு.

[உரிமைப்போராட்ட முன்னோடி டோவிட் ஐயாயாவைத் தரிசிக்கும் இளைய தலைமுறை]

இலங்கையின் தொழிலாள வர்க்கமானது தன்னை இனம்,மதம்,மொழி கடந்து ஒன்றிணைக்கும் சூழலுக்கு வந்தாகவேண்டும். ஒடுக்குமுறையாளர்கள் எப்பவுமே தமது வர்க்கத்தோடு இணைந்தபடிதாம் தமது எதிரி வர்க்கமான பெரும்பகுதி உழைக்கும் மக்களை ஒடுக்கி வருகின்றனர்.இஃது வரலாறு பூராகவும் தேசங்கடந்து வினையாற்றுவதை நாம் அறிந்தோமல்லவா?

இருந்தும்...

நமது கண்களைப் பாழாய்ப்போன தமிழ்த் தேசிய வாதக் கயர்வகள் மூலமாகக் குருடாக்குஞ் சந்தர்ப்பத்துக்காக நாம் இடதுசாரிய போராட்ட முன்னோடிகளைப் பிழையாகக் கையாண்டோம்.அவர்களை, ஆதிக்க வாதிகளுக்காகக் காட்டிக்கொடுத்தோம்.பாசிஸ்டுக்கள் கொன்று குவிக்கும்போது பாராமுகமாகப் பாசித்தின்முன் ஒப்புதல் கொடுத்தோம்.இறுதியில், பாசிசமானது புலி வடிவில் மக்களனைவரையும் காயடித்துக் கொன்று குவித்துச் செல்வத்தைக் குவித்துக்கொண்டிருந்தபோது , குத்துது-குடையுதென்று ஒப்பாரி செய்தோம்.இந்த வரலாற்றுவுண்மைகளைக் கற்றுக்கொள்வதென்பது இத்தகைய எதிர்க் கருத்தாடல்-வரலாற்று வினைகளுக்கூடானதென்பதை நாம் புரிந்தாகவேண்டும்.

தமிழ்த் தேசியத்தால் கரி பூசப்பட்ட தமிழ்பேசும் மக்களது விடுதலையின் புரட்சிகரமான வரலாற்றுப் பக்கங்களை நாம் இடதுசாரிகளது குருதியீனூடாகவே கழுவி உண்மைகளைக் கண்டடைய வேண்டிய துர்ப்பாக்கிய வரலாறு கடந்த காலமாகட்டும்.

இனியாவது, ஆதிக்க வாதிகளது அதிகாரத்துக்குப் பக்கப் பலமாகத் "தேசியக் கோசம்" போட்டொப்புதல் கொடுக்காது, நமது தலைவிதியை நாமே தீர்மானிக்க நமது வர்க்கஞ்சார்ந்து உணர்வு பெறுவோம்.அந்த வர்க்கவுணர்வினது வினையூக்கமானது இலங்கையில் ஒரு தொழிலாள வர்க்க ஐக்கியத்தைத் தரட்டும்!.அதன் பலாபலன்கள் இந்தப் பாசிச அராஜகவாதிகளது "தமிழ்த் தேசிய"க் குருதியாறாக நிச்சியம் இருக்காது. மக்களது வாழ்வையும்,வளத்தையும் சிதைத்துப் "போராட்டம்-விடுதலை" யென்பதெல்லாம் அதிகார வர்க்கத்தின் பாசிசக் குரூரத் தேவைகளோடு சம்பந்தப்பட்டதென்பதை முள்ளி வாய்க்காலில் அநுபவமாக-வரலாறாக "இன்று" நாம் தரிசிக்கின்றோம்.

இந்தவுண்மையின் வழியாக நாம் வரலாற்றில் ஆற்றவேண்டிய பணியானது நமது வர்க்கவுணர்வைக் கண்டடைதலே!அதிலிருந்து பெறப்படும் சமூகவுணர்வும்,சமுதாய ஆவேசமும் நமது விலங்கை நாமேயொடிக்கும் வலுவை இலங்கை-உலகு தழுவிய வர்க்க ஐயக்கியத்தினூடாக நமக்கு ஏற்படுத்தும்-இது கதை கட்டலல்ல-கனவுமல்ல.வரலாற்றில் நடந்த வர்க்கப் போர்களது பெறுமானம்.

அதைத் தவிர்த்துத் "தேசிய வாதம்" பேசும் உடமை வர்க்கத்தின் இனவாதக் கருத்துக்குள் மாட்டப்பட்ட எந்தவினமும் இதுவரை இழப்பையும்,அடிமைத்தனத்தையும் பெற்றதென்பதைத் தவிர விடுதலை பெற்றதாகச் சரித்திரமில்லை.

போராளிகள்,புரட்சி வாதிகள் தமது வர்க்கவுணர்வை விட்டு,மிதமான நடுத்தரவர்க்கவுணர்வுந்துதலால் உந்தப்பட்டால் அவர்கள் பிழையான பாதையில் பயணிப்பரென்பதை நாம் பேர்ளின் ஜோர்ஜ்ஜின் மூலமாக அறியக் கூடியதாகிறது ."தமிழீழ"ப்   போராட்டத்தில் இப்படி ஆயிரம் ஜேர்ஜ்'சுகள் வழி தவறிய கதைகளும்-வரலாறுமாக  நாம் அநுபவப்பட்டோம்.

இளையவர்கள்,இன்று நீங்கள் "தமிழீழ"ப் போராட்டத்தின் விளைவை மக்களது குவியல் குவியலான சடலங்களுக்கூடாகத் தரிசித்திருக்கிறீர்கள்! இதுவொரு சில அரசுகளது தப்பான செயலல்ல. மாறாக, நமக்குள் இருக்கும் உடமை வர்க்கத்தின் நலனோடு அந்நிய நலன்கள் பிணைவுப்பட்ட வர்க்க நலனிலிருந்து நமது மேட்டுக்குடிகளே நம்மைத் தமது கூட்டோடு-நட்போடு அடிமையாக்கி அழித்துள்ளது.இது வரலாறாக முள்ளிவாய்க்காலில் முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை!

தொடர்ந்து தமது வர்க்க எதிர்ப்பபை அவர்கள் இலங்கை-உலகு தழுவித் தொழிலாள மக்கள்மீது கட்டவிழ்த்தபடியேதாம் அரசியலைச் செய்கின்றனர்.இதற்காகத் தொடர்ந்து நம்மெல்லோரையும், இனம், மதம்,மொழி வழி கூறு பிரித்து, இனவாதத் தீயை மீள,மீள மூட்டியே நமது வர்க்க ஐயக்கியத்தை மிக இலகுவாக உடைத்தெறிகின்றனர்.இது ஒரு புள்ளி.தொடர்ந்து கேள்விகள் நம் முன் எழுகிறது.அதைத் தொடர்வது நீங்கள் கொள்ளும்உண்மைகளிலிருந்துதாம்.

இன்று, உலகு தழுவி "இருப்பவர்களுக்கும் இல்லாதவருக்குமான போர்" சமூக மானிய வெட்டுக்களிலிருந்து அரசுக்கும் மக்களுக்குமானதெனக் காட்டப்பட்டாலும் அஃது, உடமை வர்க்கத்துக்கும்,உழைப்பாளி வர்க்கத்துக்குமானதென்பதை நீங்கள் மிக இலகுவாக அறியும் நிலை ஐரோப்பியவொன்றியத்தின் "யுரோவைப் பலப்படுத்தும் பொறி முறை "[Der Europäische Stabilitätsmechanismus ] யென்ற ஒடுக்குமுறை-சர்வதிகாரப் போக்குகளிலிருந்து அறியமுடியும்.

தொழிலாளர்களுக்கெதிரான பொலிஸ்-இராணுவ ஒடுக்குமுறையோடு அதன் கருத்தியல் வன்முறையான சட்டம் மக்களது அனைத்துவுரிமைகளையும் அகண்ட ஐரோப்பா-உலகமென இல்லாதாக்கிறது. பணக்காரருக்கும், ஏழைகளுக்குமான கத்தரிக்கோல் தொடர்ந்து விரிகிறது.அதன் வினை எப்படி-எங்ஙனம் அமையுமென்பது நாம் பெறும் வர்க்கவுணர்விலிருந்தே இலங்கையில் மக்களுக்கான விடுதலையைச் சாதிக்கும் வரலாற்றை இழுத்துவரும்.அதுவரை,உண்மைகளைக் கண்டடைவோம்.அதுவே,எதன் பெயராலும் நாம் கொட்டும் குருதியை நிறுத்தி, நமது விடுதலைக்காகக் குருதியைக் காத்துக்கொள்ளும்.

தமிழரசனது இந்த விமர்சனமானது குருதிதோய்ந்த தமிழ்த் தேசிய வாததத்தின் இருண்ட பக்கங்களை அறியும் ஒரு வரலாற்றுக் கையேடு. "தமிழ் தேசிய" வாதத்தின் கோர முகத்தை இன்று பலர் பல்கலைக் கழகத்துக்குள் ஆய்ந்து வருகின்றனர்.அவர்கள் தமது தொழில் முறையான வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்துகின்றனர்.

நாமோ நமது விடுதலைக்கான ஒரு கையேடாக இது மாறவேண்டுமென்றே அவாவுறுகிறோம்.

நாளைய தலைமுறையானது தமது மூதாததையர்களால் விடுவிக்கப்பட்ட சுதந்திர மனிதர்களென்று வரலாறு உரைக்கவேண்டும்.

அதுவே,எமது அவா.அதற்காக, நாம் கைகோர்ப்போம்.கோர்பதற்கு முதல் "யார்-எவர்"எந்த வர்க்கத்தின் சாயலோடு எவருக்காக இயங்குகிறாரென்பதைக் கண்டடைந்தாகவேண்டும்.

எல்லோருக்குமானவொரு வர்க்கங் கடந்த வாழ்வு வந்தாக வேண்டுமெனக் கூறித் தொடர்வோம்- நட்பார்ந்த தோழமைகொள்ள!

நட்போடு,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
25.07.2012

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் [8] - நூல் விமர்சனம்-8

8:

புஸ்பராசாவின் இடதுசாரி வெறுப்பு தமிழரசுக்கட்சிக் காலத்திய தொடக்கத்தைக் கொண்டது. 1970 இல் நடந்த தேர்தலில் வட்டுக்கோட்டை, உடுப்பிட்டி தொகுதிகளில் அமிர்தலிஙகம், சிவசிதரம்பரம் தோற்றமைக்கான காரணம் இடதுசாரிகளின் செல்வாக்குட்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் இவர்களை ஆதரிக்காமையே.

வட்டுககோட்டையில் இடதுசாரி வேட்பாளர் அ.வைத்திலிங்கம் ஒருமுறை மிகவும் சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே அமிர்தலிங்கத்திடம் தோல்வியடைந்தார். யாழ்ப்பாணத்தில் ஜி.ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்து த.கார்த்திகேயன், சமசமாஜக்கட்சி அ.விசுவானந்தன், காங்கேசன்துறையில் செல்வநாயகத்தை எதிர்த்து வி.பொன்னம்பலம், சமசமாஜக்கட்சி பி.நாகலிங்கம் போன்ற இடதுசாரிகள் போட்டியிட்டனர். சுன்னாகம், உடுப்பிட்டி, சங்கானை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை உட்பட பல பட்டின சபைகளை இடதுசாரிகள் கைப்பற்றியிருந்தனார்.


பொன்.கந்தையா, கார்த்திகேயன், சண்முகதாசன், அ.வைத்தியலிங்கம், தர்மகுலசிங்கம், சு. தர்மரத்தினம், சீனிவாசகம் போன்ற வடபகுதியைச் சேர்ந்த இடதுசாரிகளைப் பற்றி புஸ்பராசா எதுவும், எழுதாமல்விட்டமையும் தற்செயல் விளைவல்ல.

உலகத்தொழிலாளர் தினமான மேதினத்தில் கூட ஈழவேந்தன் போன்ற தீவிர தமிழின வெறியர்கள் எங்கள் தமிழ் மண்ணில் இராவணனார் பொன்மண்ணில் அங்குலமும் இனி நாங்கள் அயல் வெறியர் ஆள விடமாட்டோம் என்று இனவாதம் பேசினர். "தேர்தல் பாதை திருடர்பாதை, தேர்தலில் தமிழீழம் எடுக்க முடியாது" என்ற ஈழவேந்தன் இப்போ புலிகளின் பினாமி அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் எம்பியாகிவிட்டார்.

கூட்டணியின் அகிம்சையின் வெறுமையை புஸ்பராசா ஆராயவில்லை:


செல்வநாயகம் முன்பாகவே மேடையில் காசி ஆனந்தன் புதிய அரசியலமைப்பை ஆதரித்த அரசு சார்பு துரையப்பா, அருளம்பலம், தியாகராசா ஆனந்தசங்கரி, சுப்பிரமணியம் போன்றோர் நோய் நொடி வந்து சாகக்கூடாது, இயற்கை மரணம் எய்தக் கூடாது என்று பேசினார்.


துரையப்பா சுடப்பட்ட போது கூட செல்வநாயகம் வன்முறையை எதிர்த்து அரசியல் படுகொலைகளை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பகிரங்கமாய்ப் பேசவில்லை. ஆயுத மேந்திய இளைஞர்களைக் கண்டிக்கவில்லை. அமிர்தலிங்கம் ஐயாயிரம் கட்டுப்பாடுள்ள இளைஞர்களைத் திரட்டினால் ஆயுதப்போராட்டத்தின் மூலம் தமிழீழ இலட்சியத்தை அடைய முடியும் என்று பேசத் தொடங்கினார். ஒரு முறை யாழ்ப்பாணத்தில் வின்சர் தியேட்டர் அருகே அமிர்தலிங்கம் மேல் நோட்டீசை எறிந்த தமிழ்க்காங்கிரசைச் சேர்ந்த இளைஞனை அமிர்தலிங்கம் தனது வாகனத்திலிருந்து இறங்கிப் போய் தானே கன்னத்தில் அறைந்தார். ஆனால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அமிர்தலிங்கத்தின் பிடரியில் அடித்த ஒரு பொலிஸ்காரனுக்கு எமது தமிழர் தளபதி திருப்பி ஒரு அடி கூட அடிக்கவில்லை. எனவே கூட்டணியின் அகிம்சை, ஆயுதப் பேச்சுக்கள் யாவுமே சந்தர்ப்பவாத அரசியலின் வடிவமாகும். தம்மை விட இளைத்தவர்கட்கு எதிராக கூட்டணியின் வன்முறையும், பலமிக்கவர்கட்கு எதிராக அகிம்சையும் பேசப்பட்டது.


காந்தி முதல் தமிழரசுக்கட்சி வரை அகிம்சை என்பது முரண்பாட்டுக் குவியலின் முதலாளிய கருத்துப் படையலாக இருந்தது. முசோலினி எத்தியோப்பியாவைக் கைப்பற்றிய போது "உங்களை கொன்று குவிக்க அனுமதியுங்கள்" என்று எத்தியோப்பிய மக்களை நோக்கி காந்தி வேண்டுகோள் விடுத்தமை, இத்தாலிய பாசிசத்திற்கு சாதகமாகவே இருந்தது.


[அகாலத்துள் மூழ்கிய சிறார்கள்]

ஐரோப்பிய நாடுகளில் நாசிகளின் சித்திரவதைக் கூடங்களில் யூதர்கள் அழிந்து கொண்டிருந்தபோது, யூதர்கள் மேல் இன அழிப்பு நடந்து கொண்டிருந்தபோது யூதர்கள் சுயஅழிப்பு, சுயதியானம், ஆகியவை ஊடாக நாசிகளை மாற்ற முடியும் என்று மடத்தனமாய் நம்பியவர் காந்தி. ஜேர்மனி மேல் பிரிட்டன் யுத்தம் தொடங்கிய போது அதை ஆதரித்த காந்தி இந்தியாவில் பிரிட்டன் இராணுவத்திற்கு ஆள் திரட்ட உதவியதுடன் அவரது அகிம்சை ஒத்துப்போனது.

காந்தி நவீன தொழில் துறை சார்ந்த உற்பத்தி முறையை எதிர்த்தவர். அதுவே சகல கேடுகட்கும் காரணம் என்று நம்பியவர். எனவே விஞ்ஞானம் தொழிநுட்பம் இல்லாத இந்தியாவை-கிராம மக்களின்-விவசாய சமூகத்தை நம்பியவர்.

பாலும், நெய்யும், சாணமும், தானியவகையும் நிரம்பிய பழங்கால இந்தியாவை அவர் கனவு கண்டார். காந்தியின் இத்தகைய கற்பனைகள் காந்தியத்துடன் சேர்ந்து இன்று தூர வீசப்பட்டு விட்டது. அவரது ராட்டை நூதனசாலைக்கு போய்விட இந்தியாவில் பிரமாண்டமான துணித் தொழிற்சாலைகள் எழத் தொடங்கிவிட்டன. விஞ்ஞானத்தை நிராகரித்த காந்தி கடிகாரத்தையும், ஒலி பெருக்கியையும், மூக்கு கண்ணாடியையும், கப்பல், ரெயில், கார் பயணங்களையும் நிராகரிக்க முடியவில்லை.


தொழிநுட்பம் விஞ்ஞானரீதியிலான வளர்ச்சி, அதுசார்ந்த சமூக பொருளியல் முன்னேற்றம், இந்தியப்பழைமைவாத, இந்திய மதவாத விவசாயக் கருத்துக்கள் தடையாக இருந்தன. காந்தி இறந்த போது 'காந்தியார்' என்ற தலைப்பில் கொல்வின் ஆர்.டி சில்வா நிகழ்த்திய உரை இதை எதிர்வு கூறியது. இந்தியாவின் வறுமை, அறியாமை, அசுத்தம், மனிதக்கேடுகட்கு இந்திய விவசாய சமூக அமைப்பும் அதை நியாயப்படுத்தும் காந்தியுமே காரணங்களாகும்.


ஜோர்ஜ் - வில்சன் :

பெர்லினில் வாழ்ந்து பின்பு EPRLF இல் இணைந்து இலங்கை சென்று புலிகளால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் என அழைக்கப்படும் ஜோர்ஜ் தவராசா மற்றும் வில்சன் பற்றி புஸ்பராசா பல குறிப்புரைகள் தந்துள்ளார். இவர்கள் இருவரும் தனது தலைமையின் கீழ் செயற்பட்டவர்கள், ஜெர்மனியில் தன்னால் நிர்வகிக்கப்பட்டவர்கள் என்ற தோற்றத்தையே புஸ்பராசாவின் எழுத்து எம்மிடம் தோற்றுவிக்கின்றது.


EPRLF ற்கு வானொலிநிலையம் நிறுவுவதற்காக வானொலிக்கருவிகள் வாங்க பணத்துடன் வந்து பெர்லினில் ஜோர்ஜை சந்தித்தமை, நிக்கரக்குவா புரட்சியின் 6வது வருடக்கொண்டாட்டத்திற்கு உமாகாந்தனுடன் ஜெர்மனியில் இருந்து வில்சனையும் அனுப்பி வைத்தமை என்று பல செயற்பாடுகளை தனதென்று உரிமை கோருகின்றார், புஸ்பராசா.


பெர்லின் வந்து வானொலி நிலையம் நிறுவுவதற்கான வேலை சம்பந்தமாக ஜோர்ஜை சந்தித்தமை தவிர, மற்றையவை நம்பிக்கையான நேர்மையான தகவல்களல்ல.


ஜோர்ஜ், வில்சன் பற்றியும் அவர்களது அரசியல் செயற்பாடுகள் பற்றியும் சாட்சியம் சொல்ல அவர்களோடு வாழ்ந்த பல தமிழ், ஜெர்மனிய தோழர்கள் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள். இங்கு புஸ்பராசா தன்னை முதன்மைப்படுத்தும்போக்குகளை கண்டபாட்டிற்கு எழுதிவிட முடியாது!.


ஜோர்ஜ் 1981 முதல் பெர்லினில் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சமூக நடவடிக்கைகட்காக அறியப்பட்டவர். தமிழ் தேசியப்பிரச்சனை, அகதிகள், சர்வதேசியம் என்று பலவகை செய்றபாடுகளைக் கொண்டிருந்தவர். ஜோர்ஜ், வில்சன் இருவரும் பிற்காலத்திலேயே EPRLF இற்கு ஆதரவாய் செய்றபடத் தொடங்கினார்.


ஜோர்ஜ், தொடர்பு கொண்டிராத எந்த அமைப்பும் பெர்லினில் இல்லை என்று கூடச் சொல்லாம். கியூபா, நிக்கரக்குவா நட்புறவு அமைப்புக்கள், லத்தீன் அமெரிக்க விடுதலை அமைப்புக்கள், பாலஸ்தீன, தென்ஆபிரிக்க அமைப்புக்கள், துருக்கிய இடதுசாரிகள் ஜெர்மனிய இடதுசாரிக்குழுக்கள், கிழக்கு ஜெர்மனியுடன் தொடர்புடைய SAW எனப்படும் இடதுசாரி அமைப்பு எனப்பல தொகை அமைப்புக்களோடு தொடர்பு கொண்டு இருந்தார்.


கியூபா நட்புறவுக்குழுவினால் வருடாவருடம் ஏற்பாடு செய்யப்பட்டு கியூபா செல்லும் தொண்டர் அணியில் ஜோர்ஜ் இணைந்து கியூபா சென்று மூன்று மாதங்கள் வரை அங்கு பண்ணைகள், தொழிற்சாலைகளில் உழைத்தார். பின்பு அவர் நிக்கரக்குவா சென்று இராணுவப்பயிற்சி பெற்று இலங்கைக்கு திரும்பி சென்றார். நிக்கரக்குவா செல்ல முன்பு அவர் பெர்லினில் ஸ்பானிய மொழியைக் கற்றார். இங்கு EPRLF க்கு சாண்டினிஸ்டு புரட்சியாளர்களுடன் ஏற்பட்ட உறவு ஜோர்ஜ், வில்சன் போன்ற பெர்லினில் இருந்து உழைத்த தோழர்களினூடாகவே பெறப்பட்டது. இதற்கு லண்டனில் இருந்த அல்லது பாரிசில் இருந்த EPRLF இனரோ காரணமாக இருக்கவில்லை என்பது கலப்படமற்ற உண்மையாகும். இங்கு நிக்கரக்குவா உறவுக்கு புஸ்பராசா உரிமை கோருவது, அவருக்கு உரிமையற்ற பகுதிகளில் பலவந்தமாய் நுழைவதாகும்.


புஸ்பராசா வானொலி நிலையம் அமைப்பதற்கான கருவிகளை எடுத்துச் சென்றது சம்பவத்தை மட்டும் குறிப்பிடுவது மட்டும் ஓரளவு சாத்தியமானதொன்று. எனினும், இந்தியாவில் EPRLF க்கான வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட போது அது சார்ந்த தொழிநுட்ப பணிகட்காக இரண்டு ஜெர்மனிய இடதுசாரித் தோழர்கள் இந்தியாவிற்கு ஜெர்மனியிலிருந்தே சென்றனர். முன்பு எல்சல்வடோர் புரட்சியாளர்களின் வானொலி நிலையம் அமைக்கபட்டபோது இந்த இரண்டு ஜெர்மனிய தோழர்களே அங்கும் சென்று வானொலி நிலையம் தொடங்க உதவியவர்களாவர்.


நிக்கரகுவாவிற்கு வில்சனை தான் அனுப்பி வைத்ததாய் சொல்லும் புஸ்பராசாவிற்கு பாரிஸ் நகரில் எந்த இடதுசாரி அமைப்புக்களுடனோ, நிக்கரக்குவா நட்புறவுக்குழுக்களுடனோ, சாண்டினிஸ்டு இடதுசாரி அரசுடனோ எந்தத் தொடர்பும் இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை. புஸ்பராசா இடதுசாரிப்பக்கம் திரும்பியும் படுக்கக்கூட சம்மதிக்காத மனிதர். இன்னமும் அழுத்திச் சொல்லப்போனால் அந்த திசையில் எந்தப் புலமையுமே இல்லாத மனிதர்.


உண்மையில் மேற்கண்ட நடவடிக்கைகளில் புஸ்பராசாவுக்கு பங்கும் பதவியும் இல்லை. ஜோர்ஜ், வில்சன் போன்றவர்களின் அரசியல் உழைப்பை அவர்கள் அப்போது கொண்டிருந்த சர்வதேசிய உறவை அதனூடாக சம்பாதித்தவற்றை புஸ்பராசா நோகாமல் கொள்ளாமல் அபகரிக்க முயல்கிறார். பிறரின் பங்களிப்பை திருடிக் கொள்வதும் தனது சாதனையாய் காட்ட முயல்வதும் தமிழ் தேசியத்திலும் அது சார்ந்த வலது சாரி அரசியலுக்கும் பழக்கப்பட்ட புஸ்பராசவிற்கு சாத்தியமான ஒன்றாகி விடுகிறது.


ஜோர்ஜ் ,அர்பணிப்புடன் நாளும் பொழுதும் செய்த அரசியல் முயற்சிகளுடன் புஸ்பராசாவை எச்சமயத்திலும் ஒப்பிட முடியாது. ஜோர்ஜ் போன்றவர்கள் ஜெர்மனியின் நகர்புற கொரில்லா அமைப்பான செம்படை ஆ.ஏ.எப் உடன் கூட தொடர்பு கொண்டிருந்தனர். இந்த செம்படை அமைப்பின் உறுப்பினரான பிரிக்கேட்டா என்ற பெண் போராளி சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் ஒன்றான PFLP யில் ஆயுதப்பயிற்சி பெற்றபோது அங்கு உமா மகேஸ்வரனை சந்தித்து இருந்தார். அவர் பயிற்சி முடிந்து பெர்லின் திரும்பிய பின்பு சர்வதேச அரசியல் தொடர்புகளில் நாட்டம் கொண்டிருந்த ஜோர்ஜ், கண்ணன் (பரமதாசன்) உட்பட பல தமிழ் இடதுசாரிப்போக்குக் கொண்டவர்களோடு தொடர்புகள் கொண்டு இருந்தார். இந்த விமர்சனத்தை எழுதுவதற்கு முன்பு பிரிக்கேட்டாவை சந்தித்து ஜோர்ஜ் பற்றிய கால பழைய நினைவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, அவர் ஜோர்ஜைப் பற்றி பின்வருமாறு குறிப்பட்டார். "தமிழர்களில் நான் பெர்லினில் முதன் முதலில் சந்தித்த சர்வதேசவாதி ஜோர்ஜ் தான், அவர் தீவிரமும் வேகமும் கொண்டவர்" என்று நினைவு கூர்ந்தார்.


ஜோர்ஜ் பெர்லினில் இயங்கிய BAZ எனப்படும் மூன்றாம் உலக நாடுகட்கான பயிற்சி மற்றும் நடவடிக்கைக்கான அமைப்புடன் முதலாவது தொடர்பு ஏற்படுத்திய தமிழராக இருந்தனர். 1982 இல் முதல் முதலில் பெர்லினில் ஜோர்ஜ் மற்றும் அவர் சார்ந்த தோழர்களும் ஏற்பாடு செய்த தமிழர்கள் முதல் முதலில் கலந்து கொண்ட மேதின ஊர்வலம் நடைபெற்றது. 1983 இல் பெர்லினில் சமஸ்டி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுக் கொண்டு இருந்த துருக்கிய அரசியல் கைதியான Cemel Altun விசாரணை நடந்த கட்டிடத்தின் 4 ஆம் மாடியில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்த கொண்ட நிகழ்ச்சியை அடுத்து அரசுக்கு எதிராக பல பத்தாயிரம் மக்கள் கலந்து கொண்ட ஊர்வலத்தில் பலநூறு தமிழர்கள் பங்கெடுத்தனர். 1983 டீசம்பர் மாதம் 31 ஆம் திகதி பெர்லினில் உள்ள Ogustaplatz இல் உள்ள அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான தடுப்பு முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உட்பட பல அகதிகள் எரிந்து மாண்டனர். இந்த சம்பவங்களின் பின்பு நடந்த பெரும் ஊhவலங்களில் பெருந்தொகையான தமிழர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜோர்ஜ்ஜின் உழைப்பு முக்கியமானது.

[இலங்கைத் தமிழர்கள்]

அக்காலமானது பல பத்தாயிரம் இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக கிழக்கு பெர்லின் விமான நிலையம் ஊடாக மேற்கு ஐரோப்யிய நாடுகளுள் நுழைந்து கொண்டிருந்த சமயமாகும். இச்சமயத்தலேயே ஜோர்ஜ் மற்றம் தமிழ் இடதுசாரிப்போக்குடையவர்கள் தொடர்பு கொண்ட ஜேர்மனியத் தோழர்கள் அகதிகளின் நலன்கட்காய் போராடும் Asyl.e.V என்ற அமைப்பை 1984 தை மாதத்தில் தொடங்கினார். இந்த அமைப்பு பத்து வருடங்களிற்கும் மேலாக மருத்துவ, சட்ட- சமூக சேவைப்பகுதி, பொலிஸ், மொழிபெயர்ப்பு, ஜெர்மன் மொழிக்கல்வி போன்ற உதவிகளை இலவசமாக அகதிகட்கு வழங்கியது. பல ஆயிரக்கணக்கான தமிழர்களும் இந்த அமைப்பினூடு பலனடைந்தனர்.

1972 ஆண்டுகளில் பெர்லின் வந்து அரசியல் தஞ்சம் மற்றும் மாணவர்களாக வாழ்ந்த  JVP யின் சிங்கள இளைஞர்களுடனும் ஜோர்ஜிற்கு தொடர்பு இருந்தது. பெர்லினில் முதன் முதலில் தமிழ் பள்ளி குழந்தைகட்காக ஜோர்ஜினாலும் அவர்களது தோழர்களாலும் தொடங்கப்பட்டது.


பெருந்தொகையாய் புதிதாக வந்து கொண்டிருந்த தமிழர்கள் மத்தியில் அரசியல் வேலைகள் செய்யப்பட்டது. புதிய அகதிகட்கு ஆரம்ப வாக்குமூலம் எழுதி தருவது, சட்டத்தரணி தேடித்தருவது, பொலிஸ் மற்றும் சமூக சேவைப்பகுதிக்கு அழைத்துச் செல்வது போன்ற நடவடிக்கை ஜோர்ஜினால் ஆரம்பத்தில் செயய்ப்பட்டது. பிரதிபலன் கருதாமல் அதற்காக அவர் நேர்மையாய் உழைத்தார். இன்று இருபது வருடம் கழிந்த பின்பும் ஜோர்ஜை நினைவு கூரும் அவரது சேவையை ஞாபகப்படுத்தும் தமிழர்கள் மட்டுமல்ல, ஜெர்மனியத் தோழர்களும் உள்ளனர். அது அவரது அன்றைய வாழ்நிலைக்கான சான்றாகும்.

பெர்லினில் நடைபெறும் எந்த சர்வதேச ஊர்வலத்திலும் அரசியல் நிகழ்விலும் அவரைக் காணமுடியும். தமிழர்கள் அதிகளவில் இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட காலமாக அது இருந்தது. முதன் முதலில் EPRLF தலைமையில் இருந்து வந்து பெர்லினில் ஜோர்ஜை சந்தித்தவர்கள் ஜோர்ஜ் அதிகமான சர்வதேசிய உணர்வுகளை கொண்டவராகவும் தமது தேசிய விடுதலைக்கு பெருமளவு பொருத்தமற்றவராகவும் இருப்பதாய் கருதினர். அந்த மட்டத்திற்கு இடதூரிகளுடன் அவர் கரைந்து இருந்தார். மேற்கு ஜெர்மனியின் Stuttgart நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஜெர்மனியின் முதல் அரசியல் சஞ்சிகையான "எண்ணம்" இதழுடன் ஜோர்ஜிற்கு நெருக்கமான உறவு இருந்தது. அதன் முக்கிய தோழரான அழகலிங்கத்துடன் இணைந்து பல அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டவர்.

1984 செப்ரெம்பர் மாதம் பெர்லினில் EPRLF-EROS பிரநிதிகள் ஜெர்மனிய தோழர்களுடன் இணைந்து Elam Solidaritaet Komittee (ஈழம் நட்புறவுக்கழகம்) ஆரம்பிக்கப்பட்ட போது கடந்த காலத்தில் ஜோர்ஜ் உடன் இணைந்து பணிபுரிந்த பல ஜெர்மனியத் தோழர்கள் அதன் மூலமாக இருந்தனர். புஸ்பராசா பெர்லினில் ஜோஜ்ஜை சந்தித்தபோது அவர் பல விடுதலை அமைப்பை சேர்ந்தவர்களுடன் வாழ்ந்தவர் என்று புஸ்பராசா ஞாபகப்படுத்துகின்றார். ஜோர்ஜ் உடன் இடதுசாரிகள், அனார்கிஸ்ட்டுப் போக்குடையோரைக் கொண்ட ஆண்-பெணகள் குழுவொன்று கொம்யூன் மாதிரியிலான கூட்டில் வாழ்ந்தனர். வீட்டுக் கடமைகள், உணவு தயாரிப்பு என்பன பங்கிடப்பட்டுச் செய்யப்பட்டது. ஜோர்ஜ் தாறுமாறாக ஒழுங்கற்ற உடை அணிபவராகவும்,தமிழ் போக்குகளை கடந்தவராகவும் இருந்தார்.


பெர்லினில் இருந்த "புலிப்பிராணிகள்" அவரை மோசமாய் எதிர்த்தனர். வெறுப்பும் பொறாமையும் தமிழ் வெறியும் அரசியலுக்கு மாற்றாக அவர்களால் வைக்கப்பட்டது. தமது காற்சட்டைகளில் 'தமிழ் ஈழம்' என்று எழுதி திரிவதும் 'புலிகளை எதிர்ப்பவர்களை எல்லாம் வம்பில் பிறந்தவர்~ என்று மொழிவதுமே' அவர்களது அன்றைய உச்ச அரசியலாக இருந்தது.


பின்பு, இலங்கையில் EPRLF காலத்தில் ஜோர்ஜ் செய்த அரசியலானது தயவு தாட்சண்யம் காட்டமுடியாதளவிலான விமர்சனத்திற்குரியதாகும்.


புலிகளின் அரசியல் இராணுவபயங்கரவாதம், ஜோர்ஜின் நடுத்தர வர்க்கத்தின் பொறுமையற்ற அரசியல், EPRLF இன் நடுத்தர வர்க்க அரசியல் சீரழிவுகள் சகலதும் இணைந்து ஜோர்ஜின் முற்போக்கு அரசியல் கனவுகளை சிதறடித்துவிட்டது.


அவர் இலங்கை அரசியல் பரப்பில் தோல்வியடைந்ததுடன் புலிகளின் பயங்கரவாத்திற்குப் பலியாகிப் போனார்.


ஜோர்ஜின் அவசரப்புத்தி, மனித நல்வாழ்வு மேலான நடப்பு மீறிய வெறி, புலிகளை அழிக்க எந்த சக்தியுடனும் சேரலாம், எந்த மனித அறத்தையும் அரசியலையும் மீறலாம் என்ற துணிவைத் தந்தது.


இந்திய இராணுவம், தமிழ், சிங்கள, இனவாதம், முதலாளியப் பொருளாதார இயக்கம் என்ற பல்வகைப்போக்குகளின் முன்னே ஜோர்ஜ் நிர்ணயமாகத் தோற்றகடிக்கப்பட்டார்.


வில்சன் ,முதலில் சோவியத்யூனியனிலும் பின்பு கிழக்கு ஜெர்மனியிலும் கல்வி கற்றவர். பல வருடங்களாக மேற்கு ஜெர்மனியின் பெர்லினில் பல ஆயிரம் தமிழ் அகதிகட்கு மொழி பெயர்ப்பாளராக கடமை புரிந்தவர். இடதுசாரி அமைப்புக்களுடன் தீவிரமான உறவு கொண்டு இருந்தவர்.


இத்தகையவர்களையெல்லாம் தானே கட்டிவிட்டதாய் புஸ்பராசா புனைவதை, தான்மட்டுமே வருத்தப்பட்டுப் பாரம் சுமந்தவராக அபிநயிப்பதை சகிக்க எமக்கு திட சிந்தை வேண்டும். "ஜோர்ஜ், வில்சன் போன்றவர்களது அரசியல் உழைப்பின் விளை பயன்கள் புஸ்பராசா போன்றவர்கட்கும் ஆங்கே பொசிந்தது" என்பதே உண்மையாகும்.



தமிழரசன்
பெர்லின்












 





Keine Kommentare: