Freitag, April 28, 2006

அன்பார்ந்த ஊடக நண்பர்களே

அன்பார்ந்த ஊடக நண்பர்களே

இந்த ஆக்கமானது மக்களின் நலன் கொண்டு எழுதப்பட்டது. எழுதியதின் நோக்கம் கருத்து மக்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதே. இந்தக் கருத்துடன் எல்லோரும் உடன்பட வேண்டும் என்பதல்ல. மாறாக உங்களுக்கும் இந்த ஆக்கத்தின் வர்க்க நிலைப்பாட்டிற்கும் உடன்பாடு இருப்பின் இதனை மாற்றம் செய்யாது, உடன்பாடற்றவற்றிற்கு கருத்துக் கூறி இதனை உங்கள் ஊடகங்களில் வெளியிடலாம்.

இன்றைய காலமானது எழுத்தாளனின் பாதுகாப்பு என்பது முக்கியமானதாகும். எழுத்தாளனின் அடையாளம் என்பது இன்றைய காலத்தில் தவிக்கப்பட வேண்டியது என்பது என் கருத்து. எழுதியது யார் என்பதை விட அதில் உள்ள கருத்துக்கள், உள்ளடக்கம் முக்கியம் எனக் கருதுகின்றோம். அதேபோல எழுத்துக்கள், இலக்கியங்கள் மக்கள் நலன் கொண்டதாக இருக்க வேண்டும் என நம்புகின்றோம். இதனால் எழுத்துக்கள் எழுத்தாளனுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கத் தேவையில்லை. மாறாக அவை மக்களின் மேன்மைக்கான பயன்படுவதே மேன்மையான நோக்கமாக கருதுகின்றோம்.

1985களைப் போல் பன்முக அரசியல் இயக்கங்களைக் கொண்ட காலம் அல்ல. மாறாக குழிபறிப்பு, கொலை, மிரட்டல், அவமானப்படுத்தல், அன்னியப்படுத்தல் இடம் பெறும் காலம். இந்த நிலையில் சுதந்திர ஊடகங்களாக செயற்படும் செயல் வீரர்கள் இருக்கின்றனர். இவ்வேளை இந்த ஆக்கம் அவ்வகையான ஊடகங்கள் மூலம் மக்களுக்கு கிடைக்கும் படி செய்வீர்களானால் வரலாறு உங்கள் பணியை நினைவில் வைத்துக் கொள்ளும்.
அனைத்து படைப்புக்களும் மக்களுக்கே!


தனித் தேசியம் என்ற ஒரு கோட்பாடு மட்டும் தான் உள்ளதா?



இன்றைய நிலையில் விடுதலைப்புலிகளே ஏக பிரதிநிதிகள் என்றும் அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு தவறுகள் ஒன்றும் செய்யவில்லை என்பதுடன் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களாக சார்பு நிலை கொண்ட ஊடகங்களால் வெளிப்படுத்தப்படுகின்றனர்.

இன்னெரு பகுதியினர் புலிகள் எது செய்தாலும் பிழை என்பது மட்டுமே இவர்களின் வாதம். இத்துடன் இச்சக்திகள் அரசின் அடக்குமுறையை தொடர்வதையும், அவர்கள் செய்யும் சிறு சலுகையையும் தேசிய இனத்தின் மீதுள்ள பற்றினால் செய்பவர்களாக காட்டுகின்றனர். இவர்கள் ஒரு அரசாங்கம் என்ற நிலையில் இருந்து கட்டாயம் செய்ய வேண்டிய நிர்வாகக் கடமைகள் என்று பாராது, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலைப்பாடு. இவை ஒரு மோசமான நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கின்றன.


விடுதலைப்புலிகளை விமர்சிப்பதுடன், அவர்களின் குழுநலன்கள் மக்களின் நலன்களுடன் ஒன்றுபட்டுச் செல்கின்றன. இந்த வேளையில் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். குறிப்பாக இனஅழிவில் இருந்து எம்மையும், விடுதலைப்புலிகளின் தலைமையையும் காப்பாற்றுவது ஏதுமற்ற உழைக்கும் வர்க்கத்தின் புதல்வியர், புதல்வர்களே. ஏழைக் குடும்பங்களில் இருந்து விடுதலைக்காக போராடப்புறப்பட்ட போராளிகளை தலைமையை விமர்சிப்பது போல் அவர்களை விமர்சிக்க முடியாது. விமர்சனம் என்பது தலைமைக்கு எவ்விதத்திலும் அழுத்தத்தைக் கொடுக்கப் போவதில்லை. மாறாக போராளிகளை எவ்வாறு வென்றெடுப்பது என்பதிலே மாற்றுத் தந்திரோபாயம் அடங்கியிருக்கின்றது.

கடந்த காலத்தில் எதிரிக்கு எதிரி நண்பர் என்ற கோட்பாட்டில் செயற்பட்ட அமைப்புகள், தனிநபர்கள் என்பன. புலிகளின் தலைவரையோ, அல்லது அதிகார வர்க்கமான இரண்டாம் நிலையில் உள்ளவர்களையோ, அல்லது அவர்களின் அதிகார வட்டத்தையோ அசைக்க மற்றைய இயக்கங்களால் முடிந்ததா என்பதே கேள்வி?


மாறாக படைகளுடன் சேர்ந்து மோகன், ராசிக்குழு போன்றவர்களும், (இவர்கள் இன்று புலியுடன் கூடிக் குலாவுவது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடியது அல்ல. ஏனெனில் மக்கள் சக்தியை மாத்திரம் நம்பி அரசியல் நடத்தாத சக்திகளின் நிலை இதுவே) E.P.R.LF(S), TELO, PLOT, EPDP, E.P.R.LF(V) செயற்பட்டனர். இதனால் அவதிக்குள்ளாகியது தலைமைப்பீடமா? அல்லது சாதாரண மக்களா? அதேவேளை இவர்களின் இந்தச் செயற்பாட்டினால் கீழ்மட்டப் போராளிகளின் நம்பகத்தினை விடுதலைப் புலிகளின் தலைமை பயன்படுத்தினர்.


இதேபோல வர்க்க சக்திகளின் தந்திரோபாயங்களை அவதானத்தில் கொள்ளாது. E.P.R.L.F(S), TELO, PLOT, EPDP, E.P.R.L.F (V or Naba) போன்ற இயக்கங்கள் வெறுமனே புலி எதிர்ப்பு வாதத்தின் சகதிக்குள் சிக்குண்டு போயினர். இத்துடன் இவர்களின் கருத்தை நம்பி வந்த உறுப்பினர்களின் தியாகங்கள், இவர்களின் அரசியல் வறுமையால் கொச்சைப்படுத்தப்பட்டது, தியாகமும், சக்தியும் வீண்விரயமாகியது. இதனால் இவர்கள் தொடர்ந்தும் எதிரிகளுடன் கூடிக் குலாவும் அரசியல் பாதை சரிதான என இவர்களும் தமது பாதையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கை அரசினால் ஏற்படும் நெருக்கடிகளை வெற்றியுடன் கொண்டாடினர். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது புலித் தலைமையை விட அடிமட்டப் போராளிகளும், மக்களும் என்பதில் கவனத்தில் கொள்ளாது புலிகளின் இக்கட்டான நிலையை எண்ணி மகிழ்ந்தனர், மகிழ்கின்றனர்.


இன்றைய நிலையில் தமிழ் தேசியக் குரல் ஒன்றுதான் அடிப்படையானது என்பது இன்றைய நிலையாக உள்ளது. இதனைத் தவிர மற்றைய நிலையில் இருந்து கருத்துக் கூறுமிடத்தில் துரோகிகளாக நிர்ணயம் செய்யப்படுகின்றனர்.


இலங்கை மக்களை எடுத்துக் கொண்டால் பல பிரச்சனைகளை அனைத்துச் சமூகத்தவர்களும் எதிர்நோக்கிக் கொள்கின்றனர். இவ்வேளையில் அவர்களுக்கான போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தக் கூடிய ஒரு சூழ்நிலை என்பது அனைத்து தேசிய இனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளின் சிந்து விளையாட்டின் மூலம் பின்னடைவிற்கு உள்ளாகியிருக்கின்றது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் இனவாத, பதவியைக் காப்பாற்றும் அரசியலும் அவர்களின் பின்னால் அணிதிரண்டிருக்கும் மக்களும் அரசியல்வாதிகளின் வளமையாக பசப்பு வார்த்தைகளுக்கும், வாக்குறுதிகளுக்கும் ஏமாந்து கொண்டிருக்கும் மக்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

இவ்வாறே பதவியில் இருக்கின்ற போது உழைப்பாளிகளின் உரிமையையும், மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் செய்தும் தனியார் மயப்படுத்தலில் வேகத்தை செயற்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியினர் தற்பொழுது மக்களின் உரிமைக்காக போராடுவதாகவும், தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் பேச்சுவார்த்தையை தொடரவேண்டும் என்று கோரிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகள் ஒன்றையொன்று விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் பொதுவான பிரதிநிதிகளை தமிழ்பேசும் முஸ்லீம்கள் சார்பாக நியாயத்தை முன்வைக்க தவறுவதுடன், தொழிலாளர், கூலிகள், வறுமையில் வாடுவோர் நிலையை கவனத்தில் கொள்ளாது மந்திரி சபையில் இடம்பிடிக்கவும், தமது உற்றார் நலன் மீது கவனம் செலுத்தவும் சக்தியைப் பாவிப்பதாக அவர்களே ஒருவரை ஒருவர் விமர்சிக்கின்றனர். (இந்த நிலை அனைத்து இனத்தின் பிரதிநிதிகளும் இதனைத் தான் செய்கின்றனர்)

குறுந்தேசியவாதம்


இன்று வரைக்கும் தமிழ்ப் பேசும் இஸ்லாமிய மக்களின் சுயநிர்ணயத்தை தமிழ் தேசியம் ஏற்றுக் கொண்டுள்ளதாக எந்தவித உறுதிப்பாடும் ஏகபிரதிநிதிகளிடம் இருந்து வரவில்லை. அதாவது இவர்களின் அரசியல் உரிமைகளுக்கு உத்தரவாதம் வளங்கவில்லை. அதேவேளை வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் பேசும் இஸ்லாமியர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கு எந்தவித ஆக்கபூர்வமான எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. ஆம் வாருங்கள் வந்து குடியேறுங்கள் என்று வெறும் சம்பிரதாயத்திற்கு கூறுகின்றரேயன்றி மனச்சுத்தியுடன் செயற்படலில்லை. இவைமாத்திரம் அன்றி அவர்களின் நம்பிக்கையை, நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமாக எந்தவித செயற்பாடுகளிலும் இறங்கவில்லை. குறிப்பாக மன்னாரில் ஏற்பட்ட கலகத்தின் பின்னர் சமாதானப் பேச்சுக்கு சென்றிருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கிஸோர் அவர்களின் பேச்சு (வெக்ரோன் செய்தியின் பகுதியில் காட்டப்பட்ட சிறு காட்சியில் உங்கள் பகுதியினர் என விழித்து காட்டிய நிகழ்ச்சி என்பது சமாதான முயற்சிக்கான ஒரு அணுகுமுறை அல்ல. மாறாக ஒரு பக்கம் சார்ந்திருப்பதைக் காட்டியது. இது ஒன்றும் ஆச்சரியமில்லை.

இரண்டு பகுதிகள் முன்னைய காலத்தில் சச்சரவுகள் ஏற்பட்ட போது சாதியக் குழுக்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுப் பண்புகளைக் கொண்டிருந்தது. இந்தச் சண்டைகள் வெட்டுக் கொத்து, வஞ்சம் தீர்ப்பது, மறைந்திருந்து தாக்குவது, பிரதேசங்களுக்கு நகரமுடியாத பண்புகளைக் கொண்டிருந்தது. இவைகள் இரத்த உறவுகளை மையமாகக் கொண்ட, சாதிய, குலச்சமுதாய (இனக்குழும) எச்சங்களைக் கொண்ட ஒரு சமூகத்தில் இருப்பது போன்ற பண்பைக் கொண்டிருந்தது. (இது பின்னாளில் ஆயுத இயக்கங்களின் முஸ்லீம்கள் மீதான தாக்குதலின் பின்னர் இதன் பண்பு வடிவம் மாறுபட்டது.) அந்தக் காலத்தில் எவ்வகையான அணுமுறைகளைக் கையாண்டார்கள் என்று தெரியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து கொண்டு ஏகப்பிரதிநிதித்துவத்துக்கும், தமிழ் மக்களுக்கும் குரல் கொடுக்கப்போவதாக இவர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்ற அவல நிலைக்கு ஏக கோட்பாடுதான் என்ற கருக்கோளே காரணம். இவர்களுக்கு இனங்களுக்கிடையே இருக்கின்ற கசப்புணர்வுகளைப் போக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை. மாறாக தமது இனத்தின் ஒரு பகுதியினரின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றதாக என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன.

தமிழ்ப் பேசும் முஸ்;லிம் மக்களின் இறைமையை, அவர்கள் வாழும் நிலத்தை இன்று வரைக்கும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்ப் பேசும் சிறுபான்மை தேசிய இஸ்லாமிய மக்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்காது, அவர்களை தமிழ் தரப்புக்குள் இருந்துதான் அணுக வேண்டும் என்பதோ, அல்லது தமிழ் தேசியத்திற்கு உட்பட்டுத் தான் இருக்க வேண்டும் என்பது மேலான்மையைத் தான் குறித்து நிற்கின்றது.

பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு மற்றைய பாதிக்கப்பட்ட தரப்புக்களை ஒன்று சேர்த்தே போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மாறாக இவ்வாறான தரப்புக்களை ஒன்றிணைக்காமல் அவர்களை புறம் தள்ளிவிட்டும், மற்றையவர்களின் நலன் தம்மிலும் கீழ் அல்லது மற்றவர்கள் கீழ் இருக்க வேண்டும் என்ற நடைமுறை சொந்த இனத்திற்கு பாதுகாப்பல்ல.
இன்றைக்கு ஏகாதிபத்தியங்களைப் பாருங்கள் நாடுகளை பங்கிடும் போது தனித்துச் செல்வதில்லை. கூட்டாளிகளை கூட்டிக் கொண்டுதான் செல்கின்றனர்.

இரண்டாம் உலகப் போரின் போது சோவியத்தை அழிக்க நினைத்தவர்கள், சோவியத் தலைமையை உள்ளடக்கியே இரண்டாம் உலகப்போரை வெற்றி கண்டனர்.

ஏன் இந்திய இராணுவத்துடனான மோதலின் போது இலங்கைப் படைகள் புலிகளுக்கு (பிரேமதாசா) உதவினர். புலிகள் உதவியும் பெற்றனர். இது தவறல்ல, மாறாக ஒடுக்கப்படும் மக்களை இணைத்துக் கொள்வதில் ஒரு விடுதலை அமைப்பு தவறுமானால் அந்த விடுதலை அமைப்பின் கொள்கையில் தான் தவறிருக்கின்றது. இதனை அதன் ஆரவாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதேன். பிரச்சார மேலாதிக்கத்தினால் புலிகள் பிழையாப் பெருமை கொண்டதை தொடர்ந்தும் மக்களிடம் ஊட்டப்பட்டிருப்பதும் காரணம் எனலாம்.
மக்கள் புத்திசாலிகள் அதனால் தான் தேசியத்தை போற்றி நிற்கின்றனர் எனப் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சோவியத் தாக்கும் என்ற மனப்பயத்தை ஊட்டியது. அதே போல இன்று இஸ்லாமியமத 'தேசிய' வாதிகள்' தாக்குவார்கள் என்ற மனப்பயத்தை குறிப்பாக வெள்ளையர் தேசங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி ஏற்படுத்தியுள்ளனர். இதிலிருந்து பெரும் எதிரி இருப்பதாக உழைக்கும் மக்களை திசைதிருப்புவதில் வெற்றி கொண்டது. இன்றைய காலத்தில் ஐரோப்பிய மக்களை பீடித்திருக்கும் மனப்பயம். ஏகாதிபத்தியத்தின் பிரச்சாரத்துடனும், அவர்களுக்கு ஏற்படும் அனுபவமும் ஒன்றித்துப் போகின்றது. ஏனெனில் இஸ்லாமியமத 'தேசிய'வாதிகள்' பொதுமக்கள் மீதுதல்லவா தாக்குதலையும் நடத்துகின்றனர்.
இவ்வாறே எமது மத்தியில் இருந்து புறப்பட்ட இயக்கங்களும் மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதினால் அவர்களாவது போராடுகின்றார்கள் என்ற மனவுணர்வை ஏற்டுத்தியது.

உண்டான மனப்போக்கு

தமிழ் மக்களிடம் உண்டான மனப்போக்கிற்கு வரலாற்றுக் காலங்களைக் கடந்து வந்துள்ளது. இங்கு பணம்படைத்தவர்களின் வர்க்க நலனும், குழுநலனும் சேர்ந்த நிலையில் மக்களிடையே மனப்போக்கு வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்தப் போக்கிற்கு ஈழவிடுதலையின் ஆயுதக் கலாச்சாரத்தின் தாக்கம் முக்கிய அம்சமாகும்.
முதலாவது கட்டம்

கண்ணாடி பத்மநாதன், மைக்கல், செட்டி, இடையிடையே சுழிபுரக் கொலை, சுந்தரம், உமா, இறைகுமாரன் போன்றவர்களுடன், ரெலிஜெகன், ரெலாதேவன், மனோ மாஸ்ரர், அமீர், றீகன் (EPRLF) இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டது, சுழிபுரக் கொலைகள், தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் கொலகளைத் தொடர்ந்து, பாசையூர் மக்களின் போராட்டம், விஜிதரன் தொடர்பான போராட்டத்தின் பின்னர் 1986 மார்கழி மாதம் அளவில் அனைத்து (ஈரோஸ் நீங்கலாக) இயக்கங்களும் செயற்பாடு தடைசெய்யப்படுகின்றன.
இந்தக் காலத்தில் விசுவானந்த தேவா (1986- 88) காணாமல் போய்விட்டதாக தேடுகின்றனர்.


இரண்டாம் கட்டம்

இந்தக் காலத்தில் தான் ஈரோஸ், தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவையின் ஸ்தாபகர் நெப்போலியனை கொண்றனர்.


இந்தியப் படைகளுடன் கூடி வரதராஜபெருமாள், சுரோஸ் தலைமையில் அமைந்த இ.பி.ஆர்.எல்.எவ், இ.என்.டி. எல்.எவ் மக்களை பழிவாங்கத் தொடங்கியதும், சிறுவர்களை கட்டாயப் படைக்கு ஆட்பிடித்தது. இது முக்கிய வரலாற்றுக் கட்டமாகும்.
இந்தக் காலத்தில் புலிகள் மற்றைய இயக்கத்தினரை கொண்ற வேளையில் பலரை கொண்று விட்டு E.P.R.L.F, E.N.D.L.F மேல் பழிபோட்டனர். மக்களும் உண்மையில் இதனை E.P.R.L.F, E.N.D.L.F தான் செய்திருக்க முடியும் என்று நம்பினர்.
இந்தக் காலத்தில் அனைத்து இயக்கங்களினதும் பண்பு என்பது ஒரே மாதிரியாக இருந்திருக்கின்றன. சமூகத்தில் இருந்த முரண்பாடுகள் இயக்கங்களின் முகமூடி அணிந்த நபர்களினால் செயற்படுத்தப்பட்ட நிலையை ஒரு முழுமையான ஒரு ஆய்வினை நடாத்துகின்ற போது வெளிக் கொண்டுவர முடியும். அதாவது முன்னைய காலத்தில் சச்சரவுகள் ஏற்பட்ட போது சாதியக் குழுக்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுப் பண்புகளைக் கொண்டிருந்தது. இந்தச் சண்டைகள் வெட்டுக் கொத்து, வஞ்சம் தீர்ப்பது, மறைந்திருந்து தாக்குவது என்ற பண்புகளை கொண்டதாகும். இந்தக் காலத்தில் EP பள்ளன், EN நளவன் என்ற சாதி ஆதிக்க நிலை புலிகளால் கூட தடுக்கப்படாமல் சமூக படிமுறையின் இருந்த ஏற்றத் தாழ்வுகளின் மூலமும் அரசியல் தளத்தில் இருந்து மற்றைய இயக்கங்களை அன்னியப்படுத்துவதற்குப் பயன்படுத்தினர். (இயக்க உறுப்பினர்கள் சாதிய அம்சங்களை பயன்படுத்திக் கொண்ட வேளையில், இயக்கமும் சாதிய அம்சங்களை பயன்படுத்திக் கொண்டன) இவற்றில் இருந்து நோக்குகின்ற போது பலவேளைகளில் சமூக முரண்பாடுகள் இயக்கத்தின் போர்வையின் கீழ் பயன்படுத்தப்பட்டது என்பதைத் தான் இவைகள் கடந்த காலத்தில் இருந்து அறிய முடிகின்றது.


அன்னிய சக்திகளுடன் சேர்ந்து மக்களையும் வதைத்ததன் காரணமாக புலிகள் மேல் மக்கள் அனுதாபம் கொள்ளக் காரணமாகியது. முன்னர் சமூக விரோதிகள் என்ற காரணத்தினால் தடைசெய்தோம் என்ற கூற்று மற்றைய இயக்கங்களின் நடவடிக்கையினால் இலகுவாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இலகுவாக இருந்தது. மற்றைய இயக்கங்களை மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படக் காரணமாக இருந்தது.


1990 மார்கழிக்குப் பின்னர் விசர்நாய் விரட்டி வர நிற்பதற்கு நான் என்ன விசரனா என்று கூறிவிட்டு, வரதராஜபெருமாள் எத்தனையோ நூற்றுக் கணக்கான தமிழ் தேசிய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர்களை அநாதரவாக விட்டுவிட்டு கப்பல் ஏறிச் சென்றுவிட்டார்.
இந்தக் காலகட்டத்தில் பல தமிழ் தேசிய இராணுவத்தில் (வுNயு) இணைந்த சிறுவர்கள் கிழக்கில் கொல்லப்பட்டனர், அத்துடன் வவுனியாவில் சங்கிலி மட்டக்களப்பில் வாசுதேவா, கண்ணன் போன்றவர்களுடன் நூற்றுக் கணக்காணவர்கள் கொல்லப்படுகின்றனர்.
பத்மநாபா உட்பட (இந்த வேளையில் சுரோஸ், வரதன் ஆகியோர் அந்த இடத்தில் இருக்க வேண்டியவர்கள் அந்த வேளை அவர்கள் மட்டும் அங்கு இருக்காது, கொலைத் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இதன் மர்மம் அவர்களுக்கே வெளிச்சம்)
உமா மகேஸ்வரன் தனது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார்.


இங்கு மற்றைய இயக்கங்களின் பழியுணர்ச்சி அதிகரிக்கின்றது.


மூன்றாம் கட்டம்


இலங்கை அரசினால் (பிரேமதாசா) மக்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டனர், துன்புறுத்தப்பட்டனர், பலகுடிமனைகள் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது, தேவாலயங்கள் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது, பெரும் பொருளாதாரத்தடை உருவாக்கப்பட்டது, கொழும்பு மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் பாஸ்முறை அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் மிகுந்த தொல்லைக்கு உட்பட்ட காலத்தில் தான்
PLOTE மோகன்
ராசிக் குழு(EPRLF)
TELO
PLOTE
EPRLF
EPDPஆகிய பிரிவினரால்

மக்கள் கொல்லப்பட்டும், அரசிற்கு காட்டிக் கொடுக்கப்பட்டும், ஆயுதப்படையினருடன் சேர்ந்தும் வேலை செய்தனர். இதன் காரணமாக மக்கள் வெறுக்கத் தொடங்கினர்.
சொந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அன்னியருடன் சேர்ந்து கொலைகளைச் செய்யும் போது சொந்த இனத்திடம், இரத்த உறவிடம் செல்வாக்கு இல்லாமல் போகும். இதை அறியாத தலைமைத்துவங்கள் தான் அனைத்து இயக்கங்களிடமும் இருந்திருக்கின்றன.


இதன் விளைவுகள் தான் முழுத் தமிழ் இனமும் ஏக பிரிநிதித்துவம் என்ற போர்வையில் ஆயுதக் கலாச்சாரத்தில் மூழ்கித் தவிக்கின்றனர்.
இங்கு எல்லோரும் செய்யும் தவறு என்னவெனில் குழு நலன் மற்றையது மக்கள் நலன் அல்லது அழிவு. இந்த நிலையில் மக்களின் நலன் புலிகளின் நலனுடன் ஒன்றித்துப் போகையில் புலிகள் நலன் அடங்கியிருக்கின்றது. ஆனால் மற்றயை இயக்கங்கள் மக்கள் நலனை கவனம் செய்யாது எதிரியுடன் செயற்பட்ட நிலைதான் இன்றைய மோசமான நிலைக்குக் காரணம்.
இந்த நிலையினையிட்டு,
TELO, EPRLF (S) (தற்பொழுது புலியுடன் சேர்ந்துள்ளனர் எனவே இவர்களை தவிர்ப்போம்)
PLOT
EPRLF(வரதர்) அணி
EPDP
EROSஇந்தப் பிரிவினர் தம்மை சுயவிமர்சனம் செய்தே ஆக வேண்டும்.


அத்துடன் இலங்கை அரசுடன் எவ்வித தொடர்பும் அற்ற நிலையில் இருந்து தமது செயற்பாட்டை தொடங்கத் தயாரா?

இந்த மூன்று கட்டத்தை கடந்து வரலாறு மாறியிருக்கின்றன. ஆனால் புலிகளுடன் முரண்படும் சக்திகள் இன்றைக்கு 15 வருட காலத்தில் எதிரியுடன் கூடி செயற்படாத சக்திகள் இன்று இருக்கின்றனவா? இதுவேதான் இன்றைய பிரச்சனை. மக்கள் உங்களை நம்புவதற்கு முதலில் எதிரியுடன் கூட்டுச் சேர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு நடைமுறை ரீதியாக செயற்படுத்தும் போதுதான் மக்கள் உங்கள் பக்கம் சாய்வர்.

இன்றைக்கு உருவாகியுள்ள தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அல்லது தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி ஆகட்டும் சொந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அன்னியருடன் சேர்ந்து கொலைகளைச் செய்யும் போது சொந்த இனத்திடம், இரத்த உறவிடம் செல்வாக்கு இல்லாமல் போகும் என்பதை கவனத்தில் கொள்ளாது அரசியல் நடத்துவார்களாயின் அவர்கள் மக்களிடத்தில் இருந்து அன்னியப்பட்டே போவர்.

இவ்வாறு TELO, PLOT, EPRLF (N) or (V) அணி, EPDP, EROS(சங்கர்ராஜி) சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து புலிகளை அழிப்பதனால் மக்களை தங்கள் பக்கம் வென்று விட்டார்களா? இல்லை. மாறாக துப்பாக்கி கலாச்சாரத்தை தொடவே இச்சக்திகள் தொடர்ந்தும் வழியமைத்துக் கொடுத்துள்ளன. இவர்கள் அன்னியருடன் சேர்ந்து தம்மை வதைக்கின்ற வேளை புலிகளாவது போராடுகின்றார்கள் என்ற எண்ணப்பாடு மக்களிடத்தில் ஆழமாக வேர் ஊன்றியது.

மக்களை எவ்வாறு மாற்று இயக்கங்கள் தம்பக்கம் வென்றெடுக்க முடியும் என்று சிந்திக்காமல் செயற்படாமல் விட்டது யாரிருடைய தவறு?

அவர்கள் போராடுகின்றார்கள் என்ற மனவுணர்வை வெற்றி கொள்ள வேண்டும் என்றால், மக்களுக்கு நம்பிக்கையான செயற்பாட்டின் மூலமாகத் தான் முடியுமேயன்றி புலிகளை வெல்வதில் அது அடங்கி விடவில்லை.
புலிகளை ஆயுதரீதியாக வெற்றி கொள்வது நிலைக்கப் போவதில்லை. மாறாக மக்களை புலிகள் பக்கம் சாரவே செய்யும். இதற்கு புலிக்குப் பின்னால் உள்ள பொருளாதாரத்தின் வலுவுடைய பகுதியினர் அணிவகுத்துள்ளனர். எனவே இந்த நிலையில் மக்களை அணிதிரட்ட வேண்டும். மக்கள் என்றும் போது கூலிவிவசாயிகள், தொழிலாளர்கள், கடல்தொழிலாளர்கள் மற்றும் அனைத்து நேச சக்திகளை அணிதிரட்ட வேண்டும்.

மக்கள் உங்களை நம்புவதற்கு முதலில் எதிரியுடன் கூட்டுச் சேர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த காலத்திEPRLF, ENDLFசெய்த தவறை மீளவும் செய்யக்கூடாது. இதிலிருந்து கருணா அணி பின்வாங்குமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. அவர்கள் புதிய அமைப்பை உருவாக்கியுள்ள வேளையில் அவர்களிடம் அரசியல் கோட்பாடு, அமைப்பு வடிவம் பற்றிய கோட்பாடு, எதிர்கால செயற்திட்டங்கள் எவையும் வெளியிடப்பட வில்லை. அதேவேளை வன்னித் தலைமையை பழிவாங்கும் நடவடிக்கையில் கொல்லப்படுவது சாதாரண உழைப்பாளிகளின் பிள்ளைகளே என்பதை தெரிந்தும், சாதாரன தர போராளிகள் மீதான தாக்குதல்களினால் வெல்லப் போவது எதுவும் அல்ல.
இங்கு தான் கருணா ஈழவிடுதலைப் போராட்டத்தில் உருவாகிய (1984களில்) 32 இயங்கங்களில் அவரின் அமைப்பும் ஒன்றாம் என்ற நிலைக்கு செல்லாமல் இருப்பது கருணாவின் பொறுப்பு.


ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளத்தை தெரிவு செய்து, அமைப்பை உருவாக்கப் பாடுபட்டு கொல்லப்பட்ட மனிதர்களின் அனுபவத்தை நாம் இன்றைய நேரத்தில் நினைவு கூருவது அவசியமாகின்றது. உட்கட்சி ஜனநாயகத்திற்காக அனைத்து இயக்கங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது.

1985களில் நித்தியானந்தன், சின்னராசா, நேசன், ராகவன், நிர்மலா போன்றவர்கள் வெளிநாடு பயணம் செய்தார்கள்.
அதே காலத்தில் பலர் முரண்பட்டு வெளியேறி வந்திருக்கின்றனர். குறிப்பாக அரியாலை அம்மான் என்பவர் சைனைற் வில்லை வலுக்கட்டாயமாக வாய்க்குள் திணிக்கப்பட்டு கிட்டுவால் கொல்லப்பட்ட வேளை பலர் வெளியேறி வந்தனர்.
மட்டக்களப்பில் பிரான்சிஸ், (காக்கா) கடவுள் என்பவர்கள் வெளியேறிதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
இவர்கள் எவரும் மக்களுக்கான அரசியலை வெளியில் வந்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் வெளிநாடு சென்றனர், அத்துடன் இவர்களிடம் மக்களுக்கான அரசியல் என்பது இருக்க வில்லை. காரணம் மக்களுக்கான அரசியல் இருந்திருக்குமேயானால் மக்களுக்கான அரசியலை மேற்கொண்டிப்பர். ஆனால் இன்று சிலர் அவர்களின் தேவையான சமூக அந்தஸ்து, சமூகத்தில் ஒரு இடம் தேவை என்பதினால் (புதுவை இரத்தினதுரை கூறுவது போல்) புலிகளின் இன்று பிரமுகர்களாக வலம் வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை ஏனெனில், அவர்களின் வர்க்க நலன் ஒன்றித்துப் போகையில் எதிர்ப்பு என்பது அவசியம் அவற்றதாகின்றது.


மனோ மாஸ்ரர் ரொலோவில் இருந்து பிரிந்து சென்றார். ரெலோ தாஸ் பொபி (சிறி கொல்லப்பட்ட வேளையில் அவர் அதே முகாமில் இருந்து எவ்வாறு காயம் இல்லாது தப்பிச் சென்றார் என பல முன்னைய போராளிகள் சந்தேகிக்கின்றனர்) என்ற பிரச்சனையில் தாஸ் குழுவினர் சிலர் கொல்லப்பட்டனர்.


மரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தனர்.


பிளொட் யாழ் நெல்லியடியில் உண்ணாவிதரம் இருந்தனர், தளமாநாடு கூட்டினர், புதியதோர் உலகம் என்ற வரலாற்று பெருமைமிக்க இலக்கியம் வெளிவந்தது.

EPRLF 1985களில் முதல் உடைவு ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறியவர்கள் பலர் வெளிநாடு சென்றனர். அடுத்த 1986 உடைவு டக்கிளஸ் வெளியேற்றம், இந்த நேரத்தில் டக்கிளஸ் உடன் சென்றவர்கள் போக மற்றவர்கள் தனியாக சென்று மௌனியானார்கள். தமது கீழ்மட்டத் தோழர்களை நம்பத் தயாராக இருக்க வில்லை. இவர்களில் பெரும் பகுதியினர் வெளிநாடு சென்றார்கள்.
இதில் தான் வரலாற்று பெருமைமிக்க நடவடிக்கை பற்றிக் குறிப்பிடப்பட வேண்டும். அதுதான் தீப்பொறியினர், இவர்களில் கேசவன் என்றவர் தலைமையில் பலர் புதிய நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் இடத்தில் இருந்தே புதிய பாதையை நோக்கிப் போராடினர். அவர்கள் தெரிவு செய்த தளம் காலப் பொருத்தமற்ற நிலை காரணமாக புலிகளால் கொல்லப்பட்டது துரதிஸ்டம்.
நாம் கூற வருவது என்னவெனில் தளம் என்பது முக்கியமானதாகும், அத்துடன் எந்த சக்தியை முதலில் நம்புவது, தப்பியோடுவது முற்போக்கல்ல என்பதை அவர்களின் தியாகத்தில் இருந்து பெறக் கூடிய பெரும் பாடமாகும். அவர்கள் தம்முயிரைக் கொடுத்துதான் எதிர் காலத்திற்கு தமது அனுபவத்தை படிப்பினையாக கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.

இவர்களின் இந்த உதாரணத்தை எந்த மார்க்சீயம் பேசிய எவரும் நடைமுறையில் செயற்படுத்தவில்லை. இவர்களே சொல்லிலும் செயலிலும் காட்டியவர்கள். மீன் எவ்வாறு தண்ணீரில் கலந்துள்ளதே அதே போலதான் மக்களுடன் போராளிகள் கலந்து இருக்க வேண்டும் என ஒரு போராட்டத்தில் வெற்றி கண்ட தளபதி கூறியதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும்.
போராட்ட ஐக்கியம் என்பது வெறும் வார்த்தையில் அல்ல, தெரிவு செய்யப்படும் போராட்ட வடிவத்திலேயே தங்கியிருக்கின்றது.


பொதுவான பிரச்சினைகள் என்ன?

ஏகம் என்பது ஒரு தேசியம் என்ற மட்டத்தில் மாத்திரம் வரையறுத்துக் கொள்வதில் உண்மை இருக்கின்றதா? ஏனெனில் ஒரு தேசிய இனத்தில் பல வர்க்கக் கூறுகளாக மக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான அளவில் பொருளாதார வாழ்வியல் சக்திகளைக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதாரத்தில் வாங்கும் சக்தியை அதிகம் கொண்டிராதவர்களாகவே இருக்கின்றனர். அதாவது, ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்வோம், அந்தக் கிராமத்தில் எந்தனைபேர் பெரும் பணக்காரராக இருக்கின்றனர். எத்தனை பேர் நிலச்சொந்தக் காரர்களாக இருக்கின்றனர்? எத்தனைபேர் பெரும் கடல் தொழில் படகுகளைக் கொண்டிருக்கின்றனர். (இன்றைய நிலையில் வெளிநாட்டுப் பணத்தின் மூலம் வலுவில் இருப்பவர்களை கவனத்தில் கொள்ள வேண்டாம்).

இதில் அதிமானவர்கள் தினமும் தமது உழைப்பை விற்றே தமது குடும்பங்களை வாழ வைப்பவர்களாக இருக்கின்றனர். இவர்களின் நலன் என்பது மற்றையவர்களின் நலனிலும் மாறுபடுகின்றது. இவர்கள் தமது நிச்சயம் அற்ற பொருளாதார நிலையில் எந்தவகையாக வேலையைக் கூட செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர். மாறுபாடா பொருளாதார வளத்தை கொண்டிருக்காவிடின் தமிழ் தேசத்தின் பகுதிகளில் உதவி நிறுவனங்கள் எதற்கு, உதவிப் பணம்தான் எதற்கு?


தமிழ் தேசியக் கோட்பாடு என்பது நாசிசம், இந்துத்துவவாதம், இனவாதம், மதவாதம், பிரதேசவாதம், நிறவாதம் ஆகிய போன்று ஒரு கோட்பாடே. இத் தேசியக் கோட்பாடு என்பது தனது கடமைகளை முடித்த பின்னர் இல்லாது போய்விடக் கூடிய ஒன்றே. தேசியம் என்பது எந்தக் காலத்திலும் நிலையான ஒன்றல்ல. மாறாக ஆழுமையில் இருப்பவர்களின் நிலைமாற்றங் கொண்ட பின்னர் தேசியம் என்ற நிலை மாறிவிடுகின்றது.

ஆனால் எந்த மொழியைப் பேசினாலும், எந்த நிற, இனம் என்றாலும் இவர்களிடையே இருக்கின்ற பொதுவான பிரச்சனைகளை இனம் கண்டு அவர்களின் பிரச்சனைகளையும், அவர்களிடத்தில் ஒற்றுமையை பேனக் கூடிய அணுகுமுறைகளையும் கொண்ட ஒரு சிந்தனை அவசியமாகின்றது. அதாவது சில சம்பவங்களை இங்கு கூறிய பின்னர் விடயத்தை மீளவும் தொடுகின்றேன்.
'வவுனியாவில் இருந்து சில மணிதூரத்தில் ரொட்டி போடுகின்ற ஒரு 50 மதிக்கத்தக்வர் மகன் போன்ற ஒருவரின் அதிகார பேச்சுக் பயப்பிடும் காட்சி, இவர் ஏன் இவ்வாறு சுயமரியாதை இழந்து வேலை செய்ய வேண்டும்? இவர் யாழில் இருந்து துரத்தப்பட்ட காரணம் ஒன்றே போதுமா? பாடசாலைக்கு செல்ல வேண்டிய வயதில் செல்லாது இடையில் விட்டுவிட்டு மடுயாத்திரைக்கு வருபவர்களிடம் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டதற்கு அச்சிறுவனின் நிலைக்கு இனப்பிரச்சனை ஒன்றே காரணம் ஆகுமா? இளம் வயது பெண்மணி தனது பிள்ளைகளுடன் யாழ் போக்குவரத்து நிலையத்தின் பகுதியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு என்ன காரணம்? மன்னாரில் வசிக்கும் 13 வயதுடைய் சிறுமி அவரது வீட்டில் கழுத்தில் தூக்கு மாட்டியவாறு கொலையுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது இதற்கு என்ன காரணம்?

சிறு தோணியை வைத்தே கடல்தொழில் செய்யும் அந்தோனியும், சிவனடியானும், தெற்கே பெர்னாண்டோவும், பெரேராவும், இரவில் கடலில் சுழியோடும் (புத்தளத்தில் இருந்து மன்னார் சென்று தொழில் செய்கின்றனர்) றகீமும் பருவகாலத்தை நம்பியே தமது வாழ்க்கைக்கான பிழைப்பை நடத்துகின்றனர்.

விவசாய நிலத்தில் கூலிக்காக வேலை செய்யும் பொண்ணையாவும், சிவக்கொழுந்தும் அதேபோல தெற்கில் பண்டாரியும், மகிந்தவும் தினக் கூலியாகவே வேலை செய்கின்றனர். அப்துல்லாவும் பருவ மழை பொய்த்துப் போய் என்ன செய்வது எனத் தெரியாது திண்டாடுகின்றான். இவர்கள் எல்லாம் பருவத்தை நம்பியே பிழைப்பு நடத்தும் கூட்டமாக இருக்கின்றது.
மலையகத் தோட்டத்திலே சிறு குடிசையில் வாழும் மலையக தொழிலாளியான முனியம்மாளும், பெரியசாமியும், காதரும் பெறும் சிறு கூலியை வைத்தே அடிப்படை வசதிகளை போக்கிக் கொள்கின்றனர்.'

இவர்களிடையே இருக்கின்ற பொதுவான பிரச்சனை என்ன? இவற்றிற்கான தீர்வு என்ன?

இவர்களின் அடிப்படை உரிமையை வெற்றி கொள்ள வேண்டியதே இவர்களுக்குள்ள பிரச்சனையாகும்.
இன்று பிரச்சனைகளை பொத்தாம் பொதுவாக அடக்கிக் கொள்கின்ற நிலை உள்ளது. இது இனவாத அரசும் சரி, ஏகாபதிபத்தியங்களும் சரி இனப்பிரச்சினைகளை திசைதிருப்புவது, அல்லது இனமுரண்பாட்டை அதிகப்படுத்துவது, அல்லது பயங்கரவாதம் என்ற போர்வையில் போராட்டத்தை திசைதிருப்புவது, நசுக்குவது என்ற நிலையில் செயப்படும் நிலைக்கு ஒத்ததாகும்.

ஆனால் இனத்துவ மோதல் என்பது இனங்களுக்கிடையில் பகை ஊட்டப்பட்டுள்ளது. இரத்தம் சம்பந்தப்பட்டுள்ள காரணத்தினால் உணர்ச்சி அதிகம் கொண்டதாகவும் இருக்கின்றது. இதற்கு தூபமிட்ட வர்க்கச் சக்திகள் பகையை தணிக்க எந்த முயற்சியும் எடுக்காது. அரசியல் சதிராட்டம் தொடர்வதால் பொதுவான பிரச்சனை பின்தள்ளப்பட்டுக் கொண்டு போகின்றது. இதனால் தான் இனங்களின் தேசிய உரிமையை அங்கீகரித்துக் கொண்டு இலங்கைக் கான புதிய ஜனநாயகப் போராட்டம் என்பது கட்டியெழுப்பப் படவேண்டும்.

மற்றவர்கள் உரிமையை அங்கீகரிப்பது

'தமிழீழ மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை.'
இங்கு சண் சிங்களத் தேசியத்திடம் தமிழ் தேசியத்தைப் பற்றி முன்வைக்கின்ற கருத்து தமிழ் தேசியத்திற்கும் பொருத்தமானதாகும். 'தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தான், அந்த மக்களிடம் முற்போக்கான சிங்கள சக்திகள், தனிநாட்டை அமைப்பதற்கான அச்சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள முடியும் ' என்று கோரிக்கை விடுகின்றார்.
அப்படியாயின் தமிழ் தேசியத் தலைமைகள் தமிழ்ப் பேசும் இஸ்லாமிய மக்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்காத நிலையை என்னவென்பது. ஆனால் நாம் சிங்களவரிடம் எமது உரிமையை அங்கீகரித்து விட்டீர்களா என கேள்வியும் கேட்கின்றோம்.


தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை என்ற கூற்று எவ்வளவு உண்மை என்பதை நேர்மையாக வரலாற்றை ஆய்வு செய்தால் இதன் உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு விடுதலை அமைப்பு தமிழ் மக்களின் நியாயத்தை தெளிவு படுத்த என்ன செயற்திட்டத்தை முன்வைத்துள்ளது.
சிங்கள மக்களை தமிழர் பக்கம் திருப்புவதற்கு செய்த நடவடிக்கைகள் என்ன?

நாம் சிங்கள மக்களை எப்பொழுதாவது நட்பு சக்தி என எண்ணிப் பார்த்ததுண்டா?

மாறாக கென்பார்ம், டொலர்பார்ம், அநுராதபுர படுகொலை, திருகோணமலை கொழும்பு வீதியில் படுகொலை எல்லைக்கிராமங்கள் மீதான தாக்குதல், யாழ்பாணத்தில் இருந்து சிங்களவர்களை வெளியேற்ற மௌனத்துடன் இருந்தது.

ஆனால் வரலாற்றைப் பார்ப்போமானால் 1977, 1983 பெரும் கலவரங்களில் சிங்கள சகோதரர்களின் உதவியுடனே தான் எத்தனையே தமிழ் மக்கள் தமது உயிரைக் காப்பாற்றி வந்திருக்கின்றனர். ('நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் நிராகரிக்கவில்லை') மாறாக விடுதலைப்புலிகள் நம்பிக்கை கொள்ளும் ரணில் போன்றவர்களால் அல்ல.

சிங்களத் தேசியத்தின் முற்போக்குப் பிரிவினர் தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரித்துத் தான் இருக்கின்றனர். குறிப்பாக காலம் சென்ற சரத் முத்தேகட்டுக்கம, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் இனம், மொழிகடந்து 1983களில் இருந்து குரல் கொடுத்து வந்திருக்கின்றனர்.

இந்த வேளையில் இச்சிங்கள முற்போக்குச் சக்திகளின் சரியான இடது பிரிவுகளை பலப்படுத்த வேண்டியது போராடும் அமைப்பிற்குரிய கடமையல்லவா? இதனை தமிழ் தேசியம் செய்ததா?
கடந்த பத்தாண்டு கால தேர்தல் வரலாற்றில் தமிழ் தேசியத்தின் தலைமை முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளையே தேர்தல் காலத்தில் மறைமுகமாக ஆதரித்து வந்துள்ளது. இவை கூட குறிகிய கால நலன்கொண்ட நடவடிக்கைகளே. ஆனால் நீண்ட காலச் செயற்பாட்டில் அமைந்து கொண்ட சிந்தனையல்ல.

கடந்த தேர்தலில் கூட அனைத்து தேசிய இனத்தின் ஐக்கியத்தை நோக்கிய ரீதியில் தமிழ் தேசியத் தலைமை நடந்து கொண்டதா?
குறிப்பாக மலைய மக்கள், மேல்மாகாண மக்களை ஒன்றிணைந்த தேர்தல் கூட்டணி பற்றி தமிழ் தேசியக் கூட்டமைபில் உள்ளவர்களிடமும், சந்திரசேகரன் போன்றவர்களிடமும் கருத்து இருந்தது. இதனை உடைத்தது யார்?


வரலாற்றில் அரசியல் நகர்வுகளை ஒட்டி நட்புசக்திகள் பற்றிய கூட்டுப்பற்றி உரைக்கின்ற போது அவை வெறும் சந்தர்ப்பவாத அரசியலே. ஆனால் மக்களிடையேயான உண்மையான கூட்டு என்பது வர்க்க நலன் சார்ந்தாக இருக்க வேண்டும். இவைகள் எப்பொழுதும் மாற்றம் ஏற்படுவதில்லை. இந்த நிலை சுரண்டிக் கொழுக்கும் வர்க்கத்தின், இனத்தின் தலைமையில் இருந்து மாற்றம் பெறுகின்றது. சிங்கள் இயக்கங்கள் என்கின்ற போது அவை எண்ணிக்கை வலுவைக் கொண்டு தீர்மானிப்பதில்லை. மாறாக அவர்கள் கொள்ளும் கருத்தைக் கொண்டே முக்கியத்துவம் பெறுகின்றது.

தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரித்த சக்திகள் இருக்கின்ற வேளையில் தமிழ்தேசியவாதிகள் மற்றைய மக்களின் பிரச்சனைகளை இட்டு எவ்வித கரிசனையும் காட்டியதாக இன்றுவரைக்கும் இல்லை எனலாம். பேச்சுவார்த்தை நிகழ்ச்சியில் மலையக மக்கள், தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் பிரச்சனை மாத்திரம் அல்ல. வடக்கு கிழக்கில் குடிகொண்டுள்ள சிங்கள மக்களின் பிரச்சனை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தமிழ் தேசத்தின் ஏகபிரதிநிதிகள் என்போர்கள் இவற்றை செய்வதற்கு தயாராக இல்லை. இவ்வாறாயின் மக்களிடத்தில் தோன்றியுள்ள பகைமுரண்பாட்டை எவ்வாறு போக்க முடியும்?


ஜே.வி. பியினர்

இலங்கையில் சிங்களச் சக்திகள் மட்டும் தான் தேசியவாதம் உசுப்பி விடப்பட்டுள்ளதா? தமிழ் தேசியம் தன்னிடத்தில் இருந்து பெருந்தேசியவாதக் கண்ணோட்டத்தை விட்டுவிட்டுள்ளதா? அதேபோல தனித் தேசியத்தை தவிர வேறு கோட்பாடுகள் இருக்கின்றனது என தமிழ் தேசியத் தலைமை ஏற்றுக் கொள்கின்றதா?

இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போராட்டத்தின் போது பிரேமதாசாவின் உதவி பெறப்பட்டது. இன்று இயக்கங்கள் உறவு வைத்திருந்ததை ஒப்பிட முடியாது. ஏனெனில் எதிரியின் நிலையில் மாற்றம் உருவாகியிருந்தது. இவை கூட தப்பிக் கொள்ளும் தந்திரோபாயம் என்பதில் தவறில்லை. ஆனால் அதே வேளை சிங்கள மக்களுடனான உறவை மேலும் பலப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னர்JVP இனர் இந்தியாவை எதிர்த்தனர். ஆனால் இன்று நேரடியான (இராணுவ பிரசன்னம்) ஆக்கிரமிப்பு இல்லாத காரணத்தினால் இரண்டாம் நிலைக்கு சென்று விட்டனர். இன்று அந்த இடத்தை மேற்கு தேசங்கள் பெற்றுள்ளது. இந்த நிலையில் முதல் நிலை எதிரியாக வரையறுக்கப்பட்ட மேற்கு தேசங்களை எதிர்ப்பதற்கு இந்தியாவை நாடுகின்றது.


ஜே.வி.பியினர் மலையக, இஸ்லாமிய மக்களின், தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டு, இவர்களை இணைத்துக் கொண்ட (புதிய ஜனநாயக புரட்சிக்கான) ஒரு ஏகாதிபத்திய போராட்டத்தை முன்னெடுக்காது தவறு விடுகின்றனர். இங்கு அவர்களின் மார்க்சீயம் பற்றிய புரிதலில் உள்ள குறைபாடே காரணமாகும். இதனால் மார்க்சீயர்கள் என்ற நிலையில் இருந்து ஏற்கனவே தவறியதை மீண்டும் நிரூபிக்கின்றனர். ஆனால் இன்றும் தொடர்ந்து தமிழ் தேசியத் தலைமை இவர்களை மார்க்சீயர்கள் என்றே அழைக்கின்றனர். இவை அவர்கள் சார்ந்த வர்க்கத்தின் வெளிப்பாடாகி விடுகின்றன. ஏனெனில் மார்க்சீயம் மீதான தமது வெறுப்பைக் காட்ட ஒரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.


இவை கூட மற்றைய இயக்கங்கள் சொந்த இனத்தின் மக்கள் துன்பம்படும் போதும், அரசுடன் கூடி நின்றன வேளை இவர்களை மக்களின் பக்கம் திருப்ப வில்லை. மாறாக துஏPயின் அணுகுமுறையானது தமிழ் மக்களை அவர்களிடம் இருந்து அன்னியப்பட முக்கிய காரணமாகின்றது. இதனை அவதானத்தில் கொள்ளாத ஒரு அமைப்பு மார்க்சீய அமைப்பு அல்ல என்பதை நிரூபிக்கின்றது.
JVPயானது இராணுவ பிரசன்னம் இல்லாத நிலை காரணமாக இன்று இந்திய எதிர்ப்பு நிலையை விட்டுள்ளனர் என்றே கொள்ள வேண்டும். ஆனால் இன்று மேற்கு எதிர்ப்பு நிலையை கவனத்தில் கொள்ளாது, விடுதலைப்புலிகளின் தலைவர் 'மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாகக் கண்டித்தது.' என தாம் உங்களை வரவேற்கின்றோம், நிதிமூலதனத்தை எதிர்க்கவில்லை என உரைக்கின்ற நிலையில் இந்த மேற்கு விசுவாசத்தை எதிர்க்கும் எவரும் துரோகிகள் என்பது எந்த வகையில் அரசியல் நியாயம் பெறுகின்றது. இதனை தான் பொது மக்கள் விழிப்புணர்வு கொண்டு கேட்கவேண்டும்.

தற்பொழுது தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்படுகின்றது மாத்திரம் அல்ல. அவர்களை அழிப்பதற்காக கண்காணிப்புக் குழுவினர் பார்த்தும் பாராமல் இருந்தனர்.
இந்நிலையை நோக்குகின்ற போது சிங்கள இனவாதிகளுடன் கூட்டுச் சேர்வது என்ற நிலைகெட்ட அரசியல் தொடர்கின்றதை நாம் பார்க்கக் கூடியதாகவுள்ளது.

தற்பொழுது சிறிலங்கா அரசின் வாகனங்களில் பயணம்; செய்வது, முரண்பாடில்லையா? வன்னியில் இருந்து நேரிடையாக பேச்சுவார்த்தைக்கு கலந்து கொள்ள வசதி செய்துதரும்படி கோரியிருந்தனர். கலந்து கொள்வதில் சிக்கல் இருக்கும், வசதி செய்து தராவிடின் பேச்சுவார்த்தையே நடைபெறாது என்று முன்னர் ஆரூடம் கூறியவர்கள்; பின்னர் அவர்களின் கடவுச் சீட்டுக்கள் பெற்றே வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர். "According to the Air Force estimate, it cost Rs. 115,000 per hour to keep the helicopter airborne. Since February 2002 over Rs. 150 million has been spent for ferrying the LTTErs and their special visitors and sponsors, according to a source.
It is learnt that according to instruction by the previous United Front Government, this expenses has been entered by the Air Force as Flying Training Cost.
It is said that even after Chandrika Bandaranaiake Kumaratuna taking over the Defence portfolio after 03 November 2003, Air Force helicopters are continuously ferrying the Tamil militants on the request channelled through the Sri Lanka Governments Peace Secretariat and the flying expenses are continued to be entered as Flying Training Cost.(Colombo, 20 October, [Asiantribune.com]:)


இவர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் பொதுமக்களின் தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய பணம் அல்லவா? இவை கூட அரசாங்கத்தால் பாதுகாப்புக் கென ஒதுக்கப்படும் நிதியில் இருந்து தானே இவர்களின் பயணச் செலவும் உள்ளடக்கப்படுகின்றது.
ஆனால் 17. மாசி 1994 அன்று பாலசிங்கம் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியைப் பார்த்தீர்களானால் இவர்கள் எவ்வகையாக தேசியத்தை விட்டுக் கொடுக்க வந்திருப்பதை வரலாற்று ரீதியாக அறிந்து கொள்ள முடியும். 1994 களில் பல கிறிஸ்தவ சபையினர் சமாதானம் வேண்டி வடக்கிற்கு சென்று வந்தனர். அவர்களைச் சந்தித்தது தொடர்பாக கொடுத்த பேட்டியில்
'ஆனால் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை எதுவும் விதிக்க வில்லை. நாம் கேட்பவை இரண்டு கோரிக்கையாகும். எங்களது இக்கோரிக்கைகளை சிங்கள அரசாங்கம் முன் நிபந்தனையாகக் கொள்ளக் கூடாது. இந்த விடயங்களைத் தான் நாம் கிறிஸ்தவ சமாதானக் குழுக்களிடம் வலியுறுத்திக் கூறினோம்.

அடுத்து முக்கிய விடயமென்னவென்றால்-

போர்நடந்து கொண்டிருக்கும் போது, மக்கள் சாவையும், அழிவையும் சதா சந்தித்துக் கொண்டிருக்கும் போது, பேச்சுக்கள் நடத்துவது நடைமுறைச் சாத்தியமல்ல. ஆகவே, அரசாங்கம் முதல்படியாக போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விடுதலைப்புலிகள் போர்நிறுத்தத்துக்கு தயார்.

அடுத்த கட்டமாக மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் பொருளாதார தடையை நீக்கி சகஜநிலையை தோற்றுவிக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நாம் விடுவிப்பது ஏனென்றல் இராணுவ, பொருளாதார அழுத்தங்களின் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்காது.

இராணுவ பொருளாதார அழுத்தங்களின் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்காது என்பது மட்டுமன்றி அது சுதந்திரமாகவும் இருக்காது.

ஆகவே அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இப்படியான நல்லெண்ணத்தை முதற்படியாகச் செய்து காட்ட வேண்டும். நல்ல சமிக்கையை காட்ட வேண்டும். தமிழ் மக்களுக்கு நம்பிக்யை ஏற்படுத்த வேண்டும்.


யாழ்ப்பாணத்தில் பேசலாம்

அப்படியான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் - சமாதானச் சூழ்நிலை உருவானால் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு தயார்.

ஆரம்ப பேச்சுக்களை யாழ்ப்பாணத்தில் நடத்தலாம் என்று நாம் சொல்கின்றோம். இந்த சூழ்நிலை ஏற்பட்டால் யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம்'... .. . (வீரகேசரி 20.2.1994) முன்னர் ஆரூடம் கூறியவர்கள் வரலாற்றின் பக்கங்களை பார்க்கத் தவறிவிடுகின்றனர். வரலாற்றில் நிகழ்வுகள் எப்பொழுதும் மக்கள் மத்தியில் இருப்பதில்லை. மாறாக கொடிய நிகழ்வுகளின் கோப்புகள் நிகழ்காலத்தை நோக்கிய தேவையை சிந்திக்க வைக்கின்றது. இதனால் இனமுதன்மை அரசியல் பயணங்களை மேற்கொள்ள இலகுவாக இருக்கின்றது.


இன்று தேசிய எல்லையை விட்டு வெளிப்பயணங்கள் செய்வதிலும், அவர்களின் ஆசியுடன் முதலாளித்துவ நாடுகளில் இருக்கின்ற அரசமைப்பு முறைகள் பற்றியும் ஆராய்வதாக மக்களின் பணத்தில் பணம் செய்கின்றனர். ஆனால் உண்மையான நிலையை கருணா வெளிப்படுத்தியிருக்கின்றார். அதுவேதான் உண்மையாகும். 'கடந்த இரண்டரையாண்டுகளாக நான் நோர்வே குழுவினருடன் பழகியதிலிருந்து இவர்களை உண்மையான விடுதலைப்போராளிகள் என்று அவர்கள் ஏற்றுக் கொண்டதில்லை. பயங்கரவாதிகளுடன் எப்படிப் பழகுவார்களோ அப்படித்தான் பழகி வருகின்றனர்.' இன்று மென்மையான முறையில் தம் வசம் கொள்வதே நோர்வேயின் அணுகுமுறையாகும்.

ஆனால் தமிழ் தலைமைகள் சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாடுகள் ஒத்துக் கொண்ட உதவித் தொகையை பெற்றுக் கொள்ளும் பொருட்டே காய்நகர்த்துவதில் கண்ணும் கருத்துமாக இருப்பதாக விமர்சிக்கின்றன. இவைகள் உண்மையே என்ற போதிலும் சுயஉற்பத்தி, சுயமூலதனத்தைப் பெருக்குவது என்பதை விட்டு யப்பானிடம் புனரமைப்புச் செய்வதற்கு தற்பொழுது கோரிக்கை விட்டிருக்கின்றனர். இவர்கள் வழங்கும் உதவிகளை கொண்டு எமது தேசத்தை புனர்நிர்மானம் செய்கின்றோம் என வைத்துக் கொண்டால் இவர்கள் எந்தவொரு பலாபலனும் இல்லாமல் கடனைக் கொடுக்கின்றார்களா என்பதை நாம்;; அலசியாராய வேண்டும். எந்த பணக்காரனும் எவ்வித பிரதிஉபகாரம் இல்லாது உதவி செய்வதில்லை என்பது தெரிந்த விடயம். இது சிறிய அலகில் நடைபெறுகின்ற போது சர்வதேச அரசியல் உலகில் இவ்வாறு உதவி செய்வது எந்த நோக்கம் என கேள்வி கேட்டக் கூடாவா ஒரு விடுதலை இயக்கத்திற்கோ அல்லது, அதன் விசுவாசிகளுக்கு தோன்றவில்லை. வெறும் பிரச்சார யுக்திகள் என்பது ஒரு புறமிருக்க உதவி என்பது தமிழர்களாக இருந்தால் என்ன, சிங்களவர்கள் ஆக இருந்தால் என்ன இரண்டும் தத்தம் இறைமையை இழக்கும் நிலைக்குத் தான் கொண்டு செல்லும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஆனால் தமிழர் பக்கத்தை எடுத்துக் கொண்டால் இந்தியாவை ஜே.வி. பியினர் நாடுவதை இட்டு அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இங்கு தமிழ் தேசிய இந்திய எதிர்ப்புவாதம் என்பதற்கு அப்பால், மேற்குதேசத்தின் தேவையை முன்வைத்து இந்திய எதிர்பிரச்சாரத்தை உருவாக்குகின்றனர். இவை ஒரு திட்டமிட்ட ஒரு அரசியல் பாதை என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. இந்திய நலன் எமது மக்களின் நலனைப் பாதிக்கும் என்பது உண்மை, அதேவேளை இந்தியாவை பாதிக்கும் நலன் எம்மையும் பாதிக்கும். ஆனால் மேற்கு தேசங்களின் நலன் இந்திய நலனுக்கு மாத்திரம் தான் பாதிக்கும் என்றும், தமிழ் மக்களின் நலன் பாதிக்கப்படாது என்றும் மாயை உருவாக்கப்படுகின்றது.


இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தேசியவாதத்தை உசுப்பி உள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இனவாதம், தேசியவாதம் எந்த எல்லையைத் தாண்ட முடியுமோ. அவ்வளவுக் அவ்வளவு கேடுகெட்ட நிலையில் இலங்கையில் இனவாதம் 1977 இருந்து 2004 காலப்பகுதியில் வெளியே காணப்பட்டது. இவை ஒன்றும் தேர்தலில் காலத்தில் தான் வந்ததாக கூற முடியாது. ஏனெனில் துஏPஇ ஹெலஉறுமய வற்றின் எழுச்சி என்பது வெறுமனே இனவாத்தின் தோற்றம் எனக் கொள்ள முடியாது. இரண்டு வகைப் போக்கை காணலாம்.

இன்றைக்கு உலகமயமாதலினால் ஏற்படுகின்ற சமூக கட்டுமான மாற்றம். இவற்றின் மூலம் கலாச்சார சிதைவு, பொருளாதார சிதைவு என்பவற்றில் இருந்து முன்னைய சக்திகளை நம்பிக் கொள்ளாது புதிய சக்திகள் மீது தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
பொருளாதார காரணங்களுக்காக ஜெ.வி.பியையும், கலாச்சார சீரழிவிற்கான மாற்றீடாக ஹெல உறுமயவும் பிரிதிநிதித்துவப்படுத்தப் பட்டிருக்கின்றனர் எனக் கொள்ள முடிகின்றது.


ஏனெனில் மதவாத சக்தியான ஹெலஉறுமயவின் எழுச்சிக்குப் பின்னால் ஜாதிக கெலமுன இருந்தால் கூட இவர்களின் இந்தச் எழுச்சிக்குப் பின்னால் மதவாதம் என்பது பின்னால் இருந்திருக்கின்றது கொள்ளமுடிகின்றது. மக்களிடம் இருக்கின்ற பழமை பற்றிய கருத்து, மதத்தின் மேல் கொண்ட நம்பிக்கையில் பெரும் மாற்றம் எற்படவில்லை. இன்றையக் காலத்தில் மதக்குழுக்களின் ஆதிக்கம் அனைத்துப் பிரிவினரிடமும் இருக்கின்றன.


கடந்த காலத்தில் மகேஸ்வரன் (இந்தக் காலத்தில் மகேஸ்வரனின் மதநடவடிக்கை குறித்து விடுதலைப் புலிகள் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை) அமைச்சராக இருந்த போது இந்து மாநாடு நடத்தியிருந்தார். அந்த மாநாட்டு வேளையில் நந்தி கொடி அலுவலகங்களில் படக்கவிடவேண்டும் என தீர்மானமும் கொண்டு வந்து செயற்பட்டனர். இங்கு இந்துத்துவத்திற்கும் சைவர்களின் வழிபாட்டு தெய்வத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது சுயமுரண்பாடு கொண்ட நிலையிலும் இலங்கையைப் பொறுத்த வரை இதனை முன்னிறுத்தியிருந்தனர். இவ்வாறே மாதம் தோறும் காஞ்சி சென்று மத தலைவர் ஜெயேந்திரரை சந்தித்தார். இவரின் ஆலோசனையின் பெயரில் மதமாற்றுச் சட்டம் கூட கொண்டு வர முன்னின்றார். இந்த வேளையில் தமிழ் பகுதியில் சில இடங்களில் மாட்டிறைச்சிக் கடை வைத்திருக்கக் கூடாது என்ற நிலைப்பாடுகளினால் மற்றைய மக்களிடையே கசப்புணர்வும் ஏற்பட்டது. மகேஸ்வரன் மூலமாக இந்துத்துவம் விதைக்கப்பட்டது.


கிறிஸ்தவ மதப்பிரிவுகள் மும்முரமாக மதமாற்றும் செயற்பாட்டில் தீவிரம் காட்டினர். குறிப்பாக கத்தோலிக்க மதப்பிரிவை விட மற்றைய மதக்குழுக்கள் மதவாதத்தை விதைத்துக் கொண்டு தான் வருகின்றனர்.
ஆக பொதுவாக இலங்கை முழுவதுமான சமூகப் போக்கில் ஒரு ஒற்றுமையைக் காணமுடியும். அதாவது இரண்டு பகுதியிலும் மதவாதம் முன்னரிலும் வேகமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையை புலம்பெயர் நாடுகளிலும் இன்றும் அதிமாக காணமுடிகின்றது.

இதேவேளை பௌத்த மதகுருமார் இந்திய சினிமாத்துறையினரின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதை அவதானித்தில் கொள்தல் அவசியமாகின்றது.

ஆக தமிழ் தேசியமையவாத நிலையில் இருந்து தேர்தலில் முடிவைப் பார்க்கின்ற போது தமிழ் எதிர்ப்புவாதம் என்று கூறுகின்றனர். ஆனால் தனியே தமிழ் எதிர்ப்புணர்வு என்று மாத்திரம் கொள்வது சமூக இயக்க நிலையை அறியும் போக்காக கருதமுடியாது.
இங்குதான் தமிழ் தரப்புக்கும் சிங்கள தரப்பிற்கும் இடையே வித்தியாசம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
தமிழ் தரப்பை; பொறுத்தவரை சிங்கள இனவாதம் ஆனால் மேற்குலக ஆதிக்கம் பற்றியோ உலகமயமாதல் பற்றிய பிரச்சனை பற்றி பெரிதும் அக்கறையின்மையை காணமுடிகின்றது.


சிங்கள தரப்பை எடுத்துக் கொண்டால் தமிழர்கள் தமது ஒரே தாயகத்தை பிரிக்கப்பார்க்கின்றனர் என்பதுடன், தமது கலாச்சாரம் பண்பாடு என்பதை சிதைந்து போவதை இட்டு சிந்திக்கின்றார்.

இவர்களின் சிந்திக்கும் சிந்தனை சரியாக இருப்பினும் அவர்கள் தெரிவு செய்யும் பாதை என்பது தவறானதாகும். இதனால் அவர்கள் சிந்தனை கூட இனவாதம் என்ற சகதிக்குள் உள்ளடங்கப்பட்டுப் போகின்றது.
சிங்கள சக்திகளிடம் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை தமிழ் மக்களின் முற்போக்குப் பிரிவினர் தவறாது ஆதரிக்க வேண்டும். அத்துடன் அவர்களை சரியான பாதையில் வழி செல்ல எம்மால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும். இதுவேதான் மனித இனத்தின் முற்போக்கான பாத்திரமும்; அடங்கியிருக்கின்றன.


எமக்குத் தேவையான மேற்கத்தை, இந்திய ஆதிக்கத்தை தகர்ப்பதற்கான பாதையே. ஆனால் எதிரிக்கு எதிரி நண்பர் என்றோ, நிதிமூலதனத்திற்கு பாய்விரிக்கும் அரசியல் பாதையல்ல.
இத்துடன் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளை வென்றெடுக்கும் அரசியலை ஒரு பொறுப்புள்ள விடுதலை இயக்கம் செய்;;;யும், அத்துடன் நட்;பு ரீதியாக அணுகி அவர்களின் தவறான அரசியலை திருத்தி ஒன்றிணைத்துச் செல்லும். ஆனால் இங்கு நடப்பதே இனமையவாதமும், நாம் (மேற்;;;கு) உங்களை எதிர்க்க வில்லை. அவர்கள் தான் எதிர்க்கின்றனர் என காட்டிக் கொடுப்பும் செய்யப்படுகின்றது.



அடிப்படை உரிமைகள்


மக்களுக்கான அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க வேண்டியது முக்கியமானதாகும். மனித உரிமை மீறல்களின் ஆரம்பகாலத்தில் பல்கலைக்கழகத்தின் முன்னால் மாணவனால் முன்வைக்கப்பட்ட கருத்தைப் பார்ப்போம். 'ஒருவனை கைது செய்தால், ஸ்ரீலங்கா அரசாங்கத்திலேயே உடனடியாக இராணுவமோ பொலிஸ்சோ இருபத்தி நாலு மணித்தியாலத்தில் அறிவிக்க வேண்டுமென்று சட்டம் இருக்கின்றது. அது எவ்வளவுக்கு நடைமுறைப் படுத்தினார்கள் என்பது வேறு. ஆனால் கைது செய்தால் அது தெரியக் கூடியதாக இருந்தது. ஆனால் என்னுடைய பிரச்சனை வெளியே தெரிய முடியாத அளவுக்கு எண்பது நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். என்னை கைது செய்திருந்தால் அல்லது கடத்தியிருந்தால் தாம் உயிரோடு விடுவதாக சொல்லியிருந்தால், இந்த 80 நாட்களிற்குள்ளும் ஏன் விடாமல் விட்டார்கள் என்பது முதலாவது கேள்வி.' (ஆதாரம் www.tamilcircle.com)

இவ்வாறான ஆட்கடத்தல் என்பது 1986களில் ஏற்பட்டது. இவைகள் மக்களின் எழுச்சியால் பல போராட்டங்கள் பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் உண்டு. ஆனால் இந்த நிலை ஓர் இயக்கம் என்ற நிலைக்கு வந்தபின்னர். இன்னும் மோசமாக மக்கள் உரிமை பாதிக்கப்பட்டது. இன்றைய சமூகம் பயத்தால் ஒடுங்கியுள்ள நிலையில் காணாமல் போவது, வெள்ளை வாகனத்தில் கடத்தப்படுவது இரண்டு இனத்தின் பிரிவுகளாலும் நடத்தப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக ஆட்கள் கைது செய்யப்படுவது, விசாரணை இன்றி சிறையில் வாடுவது, கொல்லப்படுவது தொடர்வதினால் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு என்பது முக்கியமான அம்சமாகும். இன்று வரைக்கும் கைது செய்யப்பட்டவர்களின் நிலைபற்றி அறிந்து கொள்வதற்கு, ஏன் தமது குற்றத்தை நிரூபிப்பதற்கு, அல்லது தமது நியாயத்தை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்பதைத் தான் இன்றுவரை காணமுடிகின்றது.

மக்களுக்கான அரசியல் உரிமை என்பதை எவ்வாறு வகுத்துக் கொண்டார்கள் என்பது முக்கியமானதாகும். காரணம் அரசியல் உரிமைகள் போராடும் காலத்தில் வழக்கப்பட முடியாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. போராடும் காலத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியதாக கொல்லப்படுகின்ற போது அங்கு வெளிப்படையாக செயற்படுத்த முடியும் தானே. வெளிப்படையாக சிவில் நிர்வாக செயற்பாட்டை கொண்டு நடத்த முடியாத நிலையில், எவ்வாறு சிவில் நிர்வாகம் சிறப்பாக இயங்குகின்றது, என்பதை வெளியுலகிற்கு எடுத்துக் கூற முடிகின்றது. இதனை வெளியுலத்தார் தம்மை கண்ணை மூடிக் கொண்டு நம்புவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டாமையை வெளிப்படுத்துகின்றது.


போராட்டம் நடைபெறும் காலத்தில் ஜனநாயகத்தின் படிநடக்க முடியாது என்று கூறப்படுகின்றது. ஆனால் முடிந்த வரை எவ்வளவுக் எவ்வளவு ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியுமே பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு இயக்கத்தின் கடமையாகும். ஆனால் அந்தக் கடமையை செய்யாமைக்கு போராட்டத்தை மாத்திரம் சாட்டாக வைத்துக் கொண்டு உரிமைகளை அங்கீகரிக்காமை ஒரு பொறுப்புள்ள இயக்கமாக கருதமுடியாது. முன்னர் கூறிய படி சிவில் நிர்வாகம், தனி அரசாங்கம் நடத்துவதாக கூறப்படுகின்ற வேளை தமிழர் பகுதியில் இருந்து ஆட்கள் காணாமல் போவது, கொல்லப்படல் என்பது அடிமைத்தனமான வாழ்க்கையை மக்கள் மீது திணிக்கப்படுவதே இங்கு நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.


இவ்வாறாக கொல்லப்படுதல் மூலம் ஒரு சமூகத்தின் இருப்பை அச்சத்துக்குள்ளாக்கியது. இன்பம், செல்வம் போன்றவர்களை கொண்றதினால் விட்டு இலங்கை அரசாங்கம் எந்த நோக்கத்தை அடைந்தது என்பது நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். தனிநபர்களை கைது செய்து, கடத்துவது, கொல்வது, பெண்களை மானபங்கப்படுத்துவது, சொத்துக்களை அழிப்பது, திடீர் சோதனை நடத்துவது போன்றவை என்ன நோக்கத்திற்காக பயன்படுத்தினர். இவைகள் மூலம் ஒரு சமூகத்தை பயம் கொள்ள வைப்பது. இதன் மூலம் தனது ஆட்சியை மேற் கொள்வதேயாகும். இவ்வாறு பயத்தின் மூலமாக மக்களை அடக்கிவிட நினைத்த ஆட்சியாளர்களுக்கும், இனத்தின் உரிமையை கொடுக்க மறுத்த ஆட்சியாளர்களுக்கும் இன்றைய இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது.


எனவே ஒரு இயக்கம் மக்களின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். மக்களிடத்தில் பயத்தை உண்டு பண்ணுவதன் மூலம் அவர்களை தமதுசித்தத்தின் படி நடக்கக் கோருவது மக்களுக்கான அரசியலாக அமையாது. மாறாக அடக்குமுறையைக் கைக்கொண்டே ஆட்சி செய்யும் நிலைக்கு கொண்டு செல்வதைத் தான் படுகொலைகள் கொண்டுவந்து விடுகின்றன.
மாற்றுக் கருத்து


மக்கள் சக்தி மீது நம்பிக்கை கொள்ளாது, எதிரியின் பலத்தை நம்பியே அரசியல் மேற்கொள்ளும் எந்தச் சக்தியும் மக்கள் முன்னிலையில் இருந்து அகற்றப்படவேண்டியவே. ஆனால் இதில் கூட மாற்றுக் கருத்து இருக்கின்றது. மக்கள் முன்னிலையில் இருந்து அகற்றுவது என்பது மக்கள் சக்தியினால் அகற்றப்பட வேண்டியதேயன்றி ஆயுதங்களினால் அல்ல.

மாற்றுக் கருத்துக்கள் என்கின்ற போது டக்கிளஸ் போன்றோரது கருத்துக்களை இங்கு கூறவில்லை. இவர்கள் தேசியத்தின் கருத்தை மாத்திரம் அல்ல, உழைக்கும் மக்களுக்கான அரசியல் அவர்களிடத்தில் இல்லை. அவ்வாறு உழைக்கும் மக்களைப் பற்றி அவர்கள் கருத்துக் கூறுவார்களாயின் அவர்களின் அரசியல் பாரம்பரியமாக பணம் படைத்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் உழைக்கும் மக்கள் பற்றி அனுதாபம் கொள்ளும் வெற்று வேற்றுத் தனத்திற்கு ஒப்பானதே. எனவே மாற்றுக் கருத்துக்கள் என்னும் பொழுது அவர்கள் கருத்துப் பற்றி இங்கு அறவே கருதவில்லை.

13.11.2004 சனி
புலி எதிர்ப்பில் முதன்மையானவர் யார் என்ற போட்டியில்! சக தமிழ் கட்சிகள்!
14.11.2004 ஞாயிறு

புலிகளிற்கு எதிரான சக்திகளை தனது தலைமைத்துவத்தின் கீழ் இணையுமாறு டக்ளஸ் அறைகூவல்!


குறிப்பாக டக்ளஸ் போன்றவர்கள் மாற்றுக் கருத்துக்களை புலிகளிடம் இருந்து வித்தியாசப்படுவது என்பதில் இருந்து மாற்றுக் கருத்துக்கு சொந்தக் காரணமாக மாறிவிடுகின்றார். இதனால் மாற்றுக் கருத்து என்கின்ற போது இதன் சொந்தக் காரர் டக்கிளஸ் பிரிவினர் என்பது போல புலிகள் இலகுவாக பிரச்சாரம் செய்து, இலகுவாக மக்களிடம் தமது பிரச்சார மேலான்மையின் மூலம் வெற்றி கொள்கின்றனர்.
இந்த நேரத்தில் டக்கிளஸ் தாமே மாற்றுத் தலைமை என பறைசாற்றுவதில் உண்மையான மக்கள் விடுதலைக்கு மாத்திரம் அல்ல, புலிகளின் அரசியலுக்கு மென்மேலும் வலுச் சேர்ப்பவர்களாகவே எதிரிகளுடன் துணைபோகின்ற தந்திரோபாயம் அவர்களும் தமது பங்கிற்கு புலிகளுக்கு உதவிக் கொண்டு இருக்கின்றனர்.


கருணா இன்றைக்கு நிலை மாறியுள்ளார், ஆனால் இவர் கூட தற்பொழுது இந்திய ஆதரவு நிலைப்பாடு தென்படுகின்றது. கருணாவை ஆதரிப்பவர்கள் மார்க்சீயவாதிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். 'இவ் இணையத்தளமானது ஊடக தர்மம், பாசிச நடவடிக்கைகளின் எதிர்ப்புக் குரலாக 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி ஒலிக்கத் தொடங்கியது. மாக்ஸ்;சிசம், ஜனநாயகம் பேசியவர்கள் எல்லாம் புலிகளின் அடி வருடிகளாக மாறியுள்ள நிலையில் தான் இவ் இணையத்தளம் உதித்தது.' (www.neruppu.com) இந்தக் குற்றச்சாட்டு எவ்வகையிலும் உண்மையில்லை. உழைக்கும் வர்க்கத்தின் அரசியலை மறுப்பவர்கள், இனவாதம் அரசியலை ஆதரிப்பவர்கள் எவ்வாறு மார்க்சீயர்களாக அழைக்க முடியும்? முதலில் கொல்லப்பட்டவர்களே மார்க்சீயர்கள் தான் என்பதை வரலாறு அறியும். அவர்களே மக்களிடையே தளம் கொண்டு செயற்பட்டவர்கள். ஏன் இதே கருணாவின் தலைமையில் இவர்கள் துன்பத்திற்கு உள்ளாக்கப்படவில்லையா? அவை வரலாறு என்றாலும் இவற்றை தெரிந்து வைப்பது முக்கியமானதாகும்.


சில விடயங்களை அவதானிக்க வேண்டும். அதாவது இன்று பிரமுகர்களாக வலம் வருகின்ற நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களின் வர்க்க நலன் ஒன்றித்துப் போகையில் எதிர்ப்பு என்பது அவசியம் அவற்றதாகின்றது. இது ஒன்றும் ஆச்சரியமில்லை எனினும் புதிய அணுகுமுறையை விடுதலைப்புலிகள் கடைப்பிடிக்கின்றனர். எனக் கருதிக் கொண்டும், அவர்களின் புதிய தந்திரோபாயத்திற்கு பலியாகும் அறிவுஜீவுகள் இந்தச் சமூகத்தில் அந்தஸ்தை அடையும் நோக்கத்திலோ அல்லது இவர்களாவது போராடுகின்றார்கள் என்ற கருத்துக்குள் இருந்து செயற்படுவர்களும் உண்டு. இவர்கள் மேற் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எவ்வாறு விளக்கம் கொடுப்பார்கள் எனத் தெரியவில்லை. இந்தப் பகுதியினரை பாலகுமார் தம்முள் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். எனவே இவர்களுக்கும் புலிகளுக்கெதிராக அரசுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படும் அரசியலுக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.

அரசுடன் சேர்ந்து வேலை செய்வது இனத்திற்கு எதிரானதும், முழு உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகும்.

அதேபோல புலிகளுடன் சேர்ந்து வேலை செய்வதும் முதலாளித்துவ தேசியத்திற்குத் தான் பலமேயன்றி உழைக்கும் மக்களுக்கல்ல. இது உழைக்கும் மக்களுக்கு எதிரானது மாத்திரம் அல்ல. புதிய சந்ததியினரின் ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கு கொடுக்கும் சாவுமணியுமாகும். ஏனெனில் முதலாளித்துவத்தின் தலைமையில் கீழ் உழைப்பாளிகள் செல்ல முடியாது. மாறாக உழைப்பாளிகளின் தலைமையிலேயே முதலாளிகள் இருக்க முடியும். இந்த நிலை தமிழ் தேசத்தில் முதலாளிகளே தலைமையில் இருக்கின்றனர்.

மாற்றும் கருத்து என்கின்ற போது உள்நாட்டில் இருக்கின்ற அனைத்து ஒடுக்குமுறைகளை எதிர்ப்பவர்களாக இருக்க வேண்டும். சிங்கள மக்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதன் பொருள் சிறிலங்கா அரசாங்கப்படையுடன் சேர்ந்து மக்களை அடக்குதவதற்கல்ல. சிங்கள மக்களிடம் தோழமையை வளர்க்கக் கூடிய அரசியல் இருக்க வேண்டும். தமிழ் பேசும் முஸ்லீம் மக்களின் உரிமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்களிடத்தில் பிராந்திய, சாதி, மத, மொழியின் மூலம் பிரித்து வைத்து ஆளநினைக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக கறாரான நடவடிக்கைகளை துணிந்து எடுக்க வேண்டும். எதிரிகளை அழிப்பது என்ற போர்வையில் மக்களை பயப்பீதியில் வாழ்வதற்கு எப்பவும் இடம் கொடுக்கக் கூடாது. அவர்களிடம் தண்ணீரில் மீன் எவ்வாறு ஒன்றித்திருக்கின்றதோ அவ்வாறே ஒரு அமைப்பு இருந்து கொள்ள வேண்டும்.

இலங்கை முழுவதும் ஏகாதிபத்தியத்தினதும், இந்திய பிராந்திய வல்லரசின் நெருக்குதலுக்கும் உள்ளாகியிருக்கின்ற வேளையில் அவற்றின் பிடியில் இருந்து முழுத்தேசத்தின் விடுதலையை கவனத்தில் கொண்டு செல்லும் அரசியல் இருக்க வேண்டும். இதன் மூலமே மக்களுக்கான விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

இன்றைய நிலையில் தனியே தேசியம் என்ற இனவாத அரசியலில் முத்துக் குழித்துக் கொண்டிருக்கும் நிலையில் பரந்து பட்ட மக்களை நோக்கிய செயற்பாடுகளும், எழுத்துக்களும் என்றில்லாதவாறு அவசியமாகின்றது. ஏனெனில் இன்று தேசியத்தை முன்வைத்து செயற்படும் நிலையில் அதற்கு மாற்றீடான அரசியல் வழிமுறைகளை செயற்படுத்த வேண்டியிருக்கின்றது.
தமிழ் தேசியம் ஒன்றே ஒரு கோட்பாடு எனக் கூறிக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இறந்த போராளிகளின் சவக்குழிகளின் மேல் அரசியல் செய்யும் கல்விமான்கள், உயர் உத்தியோகம் செய்பவர்கள், வியாபாரிகள், செல்வம் சேர்த்தவர்கள் என ஈழத்து நாட்டின் அரசியலை பாதுகாக்கும் உறவுப்பாலமாக செயற்படுகின்றனர். இவர்கள் தம் உயிரை விட தயாராக இல்லாத (உரிமை மீறி வெளியேறிவர்கள் போக) நிலையிலேயே வெளிநாடு வந்தனர். அதே வேளை இவர்களின் சொத்துக்கள் நலனின் இருந்தே ஈழத்தின் அரசியல் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இந்தப் பகுதியினர் ஜனநாயக மாற்றங்களை வரவிடாது தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கின்றனர்.
எங்கள் பலத்தில், எங்கள் நிலத்தில், தங்கியிருப்போம் நாங்கள்.


மாற்றம் வரவேண்டியது எங்கிருந்து?


இந்தச் சமூக அமைப்பு எவ்வாறு அமையப்பெற்றிருக்கின்றது. இந்தச் சமூதாய அமைப்பில எவ்வாறு மனிதர்கள் இயங்குகின்றனர். பற்றி பெரும் அறிஞர் கூறுகின்றார் 'மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டமான உறவுகளில் தவிர்க்கமுடியாத வகையில் ஈடுபடுகின்றார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும் அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாதார சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன.

பொருளாதார வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது.


வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாதார உற்பத்திச் சக்திகள் அன்றைக்கு இருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு- அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு- இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.


பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவே அல்லது சற்றுத் தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கின்ற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகின்ற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், கலைத்துறை அல்லது தத்துவஞானத் துறைகளில்- சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத்துறைகளில்- இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.

ஓரு தனிநபர் தன்னைப் என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாகவே விளக்க முடியும்.


எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்க்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்த பட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.
வரிவான உருவரையில் ஆசிய, பண்டைக்கால, நிலப்பிரபுத்துவ, நவீன முதலாளித்துவ உற்பத்தி முறைகளை சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கின்ற சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம். முதலாளித்துவ உற்பத்தி முறைதான் உற்பத்தியின் சமூக நிகழ்வில் கடைசி முரணியல் வடிவம்- முரணியல் என்பது தனிப்பட்ட முரணியல் என்ற பொருளில் அல்ல, தனிநபர்களின் ஜீவனோபாயத்தின் சமூக நிலைமைகளிலிருந்து தோன்றும் முரணியலே, ஆனால் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகள் இந்த முரணைத் தீர்ப்பதற்குரிய பொருளாதார நிலைகளையும் உருவாக்குகின்றன. எனவே இந்த சமூக அமைப்போடு மனித சமூகத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவடைகிறது.'

புலிகளின் தலைவர் பிரபாகரனின் உரை ஒன்றும் அகநானுறும் இல்லை தொல்காப்பியமும் இல்லை, திருக்குறளும் இல்லை. வரலாற்று தெளிவு, பொருள், அகழ்வாய்வு என்று மற்றும் இலக்கிய அறிவு கொண்டு ஆராய்வதற்கு. இது இன்றைய காலத்தின் பொருளாதார சிந்தனை ஓட்டத்துடன் ஒன்றித்துப் போகின்றவை. இன்றைய காலத்தில் இருக்கின்ற பொருளாதார சிந்தனைக் கேற்ப ஒவ்வொரு மனிதர்களும் செயற்படுகின்றனர். இவ்வாறே இந்த உரையை தெளிவு படுத்திக் கொள்ள முடியும்.


நாம் ஒவ்வொருவரும் வௌ;வேறு வகையாகக் சிந்திக்கின்றோம். சிந்தனைகளை செயற்படுத்த முயற்சிக்கின்றோம். அந்த முயற்சிகள் எவையும் எமது சித்தத்தின் பால் நடைபெறுவதில்லை. மாறாக பொருளாதார வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது.
உலகம் மாறவில்லை மாறாக உலகை பிரிப்பதில் உள்ள கூட்டாளிகள், போட்டியாளர்கள் மாறியிருக்கின்றனர். இன்றைய உலகில் உலகில் ஓரேயொரு பொலீஸாக அமெரிக்காவே இருக்கின்றது. ஆனால் வௌ;வேறு பிராந்தியங்கள் என பிரிந்துள்ள நிலையில் ஏகாதிபத்திய யப்பான், நோர்வே, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என உலகை பங்கு போட்டுக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் இன்றிருக்கும் அதிமுக்கிய பிரச்சனை என்னவெனில் ஒரு நாடு அல்லது அங்கு வாழ்கின்ற மக்கள் தமது இறைமையை எவ்வாறு பாதுகாப்பது என்பதாகும்.


ஒரு நாடு அல்லது மக்கள் சுயநிர்ணய உரிமை உரியவர்கள் அதே வேளை அவர்களின் சுயநிர்ணயம உரிமை என்பது தனது நாட்டின் எல்லைக்குரியதல்ல. மாறாக சர்வதேச அளவிலும் பாதுகாக்க முடிகின்றதா என்பதிலும் அடங்கியிருக்கின்றது. அவ்வாறாயின் விடுதலை வேண்டிநிற்கும் தேசத்து மக்கள் போராடும் தேசம் எவ்வகையான தன்னிறைவுப் பொருளாதாரம், அரசியல் போக்கு, மக்களின் அரசியல் உரிமைகள் என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

'தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு, ஒர் இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை நாம் இன்று எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்புநிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப்பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம்.' (மாவீரர் உரையில்)
'ஆனால் தென்னிலங்கையில் சிங்களவர் சந்தோசமாக வாழுகிறார்கள். தமிழர்களோ அவதிப்பட்டிருகிறார்கள். இப்படியான சூழலில் இந்த நிலை எப்படித் தொடர முடியும் என்று போராளிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.' (பாலா உரை)
இந்தக் கேள்வி கூட நியாயமாகத் தான் இருக்கின்றது. ஏனெனில் இடைக்காலத்தில் கூட இவ்வாறான பிரச்சனை அரசு பக்கமும் இருக்கின்றது. இந்த நிலையை கவனத்தில் கொண்டே இயக்கத்திற்கும், அரசிற்கும் பெரிய தேசங்கள் நிதியைக் கொடுக்கின்றன. பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்றால் இருபக்கமும் படைகள் குறைக்கப்படுவது, ஆயுதம் களைவது போன்றவை நடைபெறுவதலால் வேலையில்லாமை ஏற்படுகின்றது. இந்தக் காலத்தில் ஆயுதத்துடன் பழகியவர்கள் சீரான வாழ்க்கைக்கு வருவது சிரமாக இருக்கும். உலக நாடுகளின் அனுபவத்தை எடுத்துக் கொண்டால் அமைதி ஏற்பட்ட பின்னர் இவ்வாறான பிரச்சனைகள் தோன்றித் தான் இருக்கின்றது.


லத்தீன் அமெரிக்க நாடுகள் இதற்கு சிறந்த உதாரணம். அங்கு பல நாடுகளில் போராட்டம் சிதைக்கப்பட்ட நிலையில் 'ஜனநாயக நீரோட்டம்' என்று கூறிக் கொண்ட சித்தாந்தத்தில் சிதைந்த அமைப்புக்களில் இருந்தவர்கள் சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். சிலர் தமது உரிமைக்கான தொடர்ச்சியாக போராடியிருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய காலத்தில் சிறிலங்காப் படைத்தரப்பில் இருந்துபல சமூக விரோதிகள் உருவாகிவிட்டிருக்கின்றனர்.


ஒரு போராட்ட காலத்தில் அமைதிக் காலம் என்பது போராடும் சக்தி தன்னை மீளவும் வலுவுள்ளதாக மாற்றிக் கொள்கின்றது. ஆனால் இங்கு ஆயுதமயம் படுத்தல் என்பதற்கு அப்பால் மக்களை போராட்டத்திற் அணிதிரட்டுவது என்பது முக்கிய செயற்பாடாகும். இது சொந்த இனத்தை மாத்திரம் அல்ல. இந்தக் காலத்தில் எதிரியின் பக்கம் இருக்கும் மக்களை நோக்கிய அணிதிரட்டல் என்பது முக்கியமாகும். அந்த இனத்தின் மக்களின் நம்பிக்கையீனம், அச்சம் இவைகளை போக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். இவையூடாகவே தேக்க நிலையை தவிர்க்க முடியும். அதேவேளை மக்கள் தம்பக்கம் நிற்பதாக கூறுகின்றனர். அதேவேளை இன்றைய அமைதிநிலை தொடர்ந்தால் போராட்டத்திற்கு பெரும் இழப்பாகும் என கருதுகின்றனர். இங்குதான் மக்கள் அவர்களுடன் நிற்கின்றனரா? மக்கள் பின்னால் நிற்பதற்கும், அமைதி போராட்டத்தை சிதைக்கும் என்பதற்கும் இடையே உள்ள அளவு கோல் முக்கியமானதாகும்.

மக்கள் தம்பின்னால் நிற்கின்றனர் எனில், வர்க்க முரண்பாடுகள் அற்ற நிலையில், சமூக ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையில் இருக்கவேண்டும். தனியே தேசியம் என்ற கருதுகோள் அடிப்படையில் மக்கள் தம்முடன் ஒன்றித்திருக்கின்றனர் எனக்கூறுவது போராட்டத்தின் திசையில் மாற்றம் இருப்பததையே காட்டுகின்றது. ஏனெனில் போராட்டத்திற்கு போனதற்குக் காரணம் சமூகத்தின் ஏற்றத்தாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சிப் போக்கேயாகும். முதலாளிய பொருளாதாரத்தின் தோற்றத்தினால் மக்களின் ஒருபிரிவினர் சலுகைகளை அனுபவிக்க மற்றைய பிரிவினரைக் காட்டி உண்மை நிலையை திசைதிருப்பியதால் இனங்களுக்கிடையே கசப்புணர்வு வளர்ந்தது, முதலாளித்துவப் பொருளாதாரத்;தினால் மக்களின் சுயசார்புப் பொருளாதாரம் உடைந்து மக்கள் தமது பொருளாதார நடவடிக்கையில் இருந்து மாற்றம் பெற்று வருகின்றதினால் உழைப்பை விற்று பிழைக்கும் நிலைக்கு வந்தனர். ஆனால் தேசிய நிலைப்பாடு என்பதை கீழே பார்ப்போம்.

ஷஷசந்தைப்பிரச்சினை என்பது புதிதாகத் தோன்றிய முதலாளிகளுக்கு மிக முக்கிய பிரச்சினையாக இருந்தது. அவர்களுக்கு தங்கள் பொருள்கள் விற்கவேண்டும் என்பதும், மற்ற தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளுடன் நடக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்பதும், நோக்கமாயிருந்தது. எனவே அவர்கள் தங்களுக்கென்று ஒரு சொந்த உள்நாட்டு சந்தை வைத்துக் கொள்ள விரும்பினர். சந்தை என்கின்ற இந்த ஆரம்பப் பள்ளியில் தான் முதன் முதலில் முதலாளிகள் தேசிய வாதத்தைக் கற்றறிந்தனர்.
ஆனால் பிரச்சினை என்பது பொதுவாக சந்தையோடு மட்டும் நிற்கவில்லை. ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனங்களைச் சொந்த அரைநிலப்பிரபுத்துவ மற்றம் அரை முதலாளித்துவ அதிகார வர்க்கத்தினர் இதைத் தடுத்து நிறுத்த தம் சொந்த முறைகளைக் கையாண்டு போராட்டத்தில் தலையிட்டனர். ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தைச் செர்ந்த முதலாளிகள் மிக அதிகமானவர்கள் ஆயினும், குறைவானவர்கள் ஆயினும், மிகவும் வேகமாகவும் தீர்க்கமாகவும் தங்களின் போட்டியாளர்களை எதிர்த்து செயல்பட்டனர். அன்னிய முதலாளிகளுக்கு எதிராக சக்திகள் ஒன்று திரட்டப்பட்டு தொடர்ச்சியான கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை ஒடுக்குமுறை நடவடிக்கைகளாகவே உருமாறின. இவ்வாறு நடந்த போராட்டம் பொருளாதாரத் தளத்தில் இருந்து அரசியல் தளத்திற்கு பரவியது. அதாவது இடம் விட்டு இடம் பெயரும் உரிமை கட்டுப்பாடு, மொழி ஒடுக்குமுறை வாக்குரிமைக் கட்டுப்பாடு, பள்ளிகள் மூடப்படுதல், மதஉணர்வு மீது கட்டுப்பாடு போன்ற இன்னும் பல நடவடிக்கைகள் போட்டியாளரின் தலைக்கு மேலே குவிந்து கொண்டே போயிற்று. இதுபோன்ற நடைவடிக்கைகள், ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தைச் சார்ந்த முதலாளிகளின் நலனுக்கு மட்டும் நடத்தப்படவில்லை. இன்னும் செல்லப்போனால் குறிப்பாக ஆளும் அதிகார வர்க்கத்தின் சாதியக் குறிக்கோளை விரிவுபடுத்துப்பட வேண்டும் என்பதற்காகவும் நடத்தப்பட்டன.


ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்த முதலாளிகள் ஒவ்வொரு முறையும் அடக்கி ஒடுக்கப்பட்டனர். இதன் காரணமாக இயற்கையாகவே அவர்கள் ஒரு இயக்கமாகக் கிளர்ந்தனர். அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்தனர். தங்கள் தாய் நாட்டின் நலனுக்கு கூப்பாடு போட்டனர். தம் நலனே தேசத்தின் மொத்த நலன் என்றும் உரிமை கொண்டாடினர். தங்கள் தாய்நாட்டின் நலனுக்காக கிராமப்புற மக்களிடம் இருந்து ஒரு படையைத் திரட்டினர் மக்களும் இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்காமல் இல்லை இவர்களின் பதாகையின் கீழ் அணிதிரண்டனர். அதுவரை அனுபவித்து வந்த அடக்குமுறை காரணமாக மக்கள் தங்களுடைய மனக் குமுறலை வெளிப்படுத்தினர். இவ்வாறாக தேசிய இயக்கம் துவங்கியது. எந்த அளவிற்கு பாட்டாளிகளும் விவசாயிகளும் தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே தேசிய இயக்கத்தின் வலிமை தீர்மானமாகியது.'
தேசியத்தின் நிலைப்பாட்டில் உழைப்பாளிகள் ஒன்றிணைக்காவிடின் தேசியம் வலுவிழக்கும் என்பதைத் தான் தலைவரின் உரை காட்டி நிற்கின்றது. கடந்த காலத்தில் உழைப்பாளர்களின் நலனைப் பேணும் இயக்கங்கள் தமிழர் பிரதேசத்தில் இல்லை. தாமே முழுமக்களின் நலனைப் பேணுபவர்கள் என்று கூறினர். ஆனால் இந்த நிலை யதார்த்தத்திற்கு புறப்பானது என்பதைத் தான் தலைவர் பிரபா உரையில் கூறுகின்றது.


அத்துடன் சொந்த மக்களின் ஜனநாயக உரிமையை அங்கரிப்பது முக்கியமானதாகும். இங்கு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம் என்கின்ற போது மக்கள் தமக்கான அரசியல் இலக்கை கொண்டவர்களாக இல்லை என்பதே பொருள்படுகின்றது. ஒரு மக்கள் கூட்டம் தனது வர்க்க தேவையை சரியாக உணர்ந்து அணிதிரளப்பட்டிருக்கின்ற வேளை இவ்வாறான அச்சத்திற்கு உள்ளாகத் தேவையில்லை. இதில் குறிப்பாக வெளிநாட்டில் வாழும் மக்கள் தமது தலைவர் சொன்னது சரியென விளக்கம் கொடுக்கின்றனர். இவைகூட உண்மையே, அதாவது அன்றாடம் கஸ்டத்திற்கும் துன்பத்திற்கும் மத்தியில் வாழ்பவர்களிடம் இருந்து தான் விரக்தியுள்ள இளைஞர்களை திரட்ட முடியும். சமாதான காலத்தில் அவர்கள் வர்க்க நிலையை உணர்வார்களாயின் மேட்டுக்குடிகளின் வர்க்கத்திற்காக, அவர்களின் முதலீடுகளை தமது பிரதேசத்தில் முதலிடுவதற்கு ஒரு தளம் இல்லாது போகும் என்ற காரணத்தினால் அச்சம் கொள்கின்றனர்.

மக்கள் அரசியல் மயப்படுத்தப்படுதல் என்கின்ற போது மக்களுக்கான ஜனநாயக உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும், அவர்கள் முடிவெடுக்கும் உரிமையை அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும், அவர்களின் பொருளாதார வாழ்வியலுக்கு ஏற்ற மாற்று நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக செயற்படுத்த வேண்டும். இவைகள் இடம்பெறுகின்றனவா? மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்குவதன் மூலமே துரோகத்தனத்தை இல்லாதொழிக்க முடியும். எழுச்சி இல்லையாயின் அவற்றை இல்லாதொழிக்க முடியாது. துரோகத்தின் செயற்பாடு ஒரு அடக்கு முறையின் வெளிப்பாடாகவே தோற்றம் பெறுகின்றது. இவைகளை மாற்ற ஒரு தேசிய இயக்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. மக்கள் இயக்கம் நடைபெறுமாயின் யுத்த நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் 100 மேற்பட்டோர் கொலை செய்யப்பட தேவையில்லை அல்லா? இது எதனை நிரூபிக்கின்றது?

விடுதலை வேண்டி நிற்கும் தேசத்து மக்கள் போராடும் தேசம் எவ்வகையான தன்னிறைவுப் பொருளாதாரம், அரசியல் போக்கு, மக்களின் அரசியல் உரிமைகள் என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும். அறிந்திருப்பது என்பது மட்டுமல்ல, அவை சம்பந்தமாக முழு அறிவு பெற்றிருக்க வேண்டும். தற்காலத்தில் மேற்கு நாடுகளை எடுத்துக் கொண்டால் அவர்களின் பொருளாதார நலனுக்கு ஏற்ப மக்களை கல்வியறிவு ஊட்டுகின்றனர், நிறுவனமயப்படுத்துவதற்கு ஏற்ப மக்களையும் மறுவுற்பத்தி செய்கின்றனர். அவ்வாறாயின் தமிழ் மக்களுக்கான அரசியல் பங்குதான் என்ன? அரசியல் மயப்படுத்தலில் பாட்டாளிகளும் விவசாயிகளும் தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே தேசிய இயக்கத்தின் வலிமை தீர்மானமாகியது எனின் இதற்கான வெளிப்படையான திட்டம் தான் என்ன? திட்டங்களை வெளியில் வைப்பது எப்பவும் இரகசியமாக இருப்பதில்லை. மாறாக செயப்பாட்டிற்கான செயல் தந்திரங்கள் இரகசியமாக இருப்பது வேறு விடயம். ஆனால் மக்களிடத்தில் முன்வைத்து செயற்பட வில்லை. மாறாக தமது பிழையாப் பெருமையை வலியுறுத்தும் வகையான செயற்பாடுகளையும், எல்லாம் தலைவர் செய்வார் என்ற குருட்டு வழிப்போக்கையுமே தொடர்கின்றனர்.
'நோர்வே நாட்டை நடுநிலையாளராக ஏற்று, அந் நாட்டின் அனுசரணையுடன் உலக நாடுகள் சிலவற்றின் தலைநகர்களில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்களில் எமது விடுதலை இயக்கம் பங்குபற்றியது. ஆறு மாதங்கள்வரை நீடித்த ஆறு சுற்றுப் பேச்சுக்களும் அர்த்தமற்றதாகப் பயனற்றுப் போயின.'

ஓரு தேசிய இனத்தின் மைந்தர்கள் தேசத் துரோகி என்று கொலை செய்யப்படுகின்றனர். கண்ணாடி பத்மநாதன், பற்றிக் எனும் பற்குணம், குலசேகரன் (கழுகுப்படை 1978) மட்டுநகர் மைக்கேல் தொடங்கி பின்னர் செட்டி, சுந்தரம், தேவன், ஜெகன், மனோமாஸ்ரர், றீகன், அமீர் (நுPசுடுகு) ஆலாலசுந்தரம், தர்மலிங்கம், போன்றவர்கள் பின்னர் இயக்கங்கள் தடை செய்யப்படுகின்றது. பின்னர் இயக்கத் தலைவர்கள் கொல்லப்படுகின்றனர், அமீர், யோகேஸ்வரன் போன்றோர் கொல்லப்படுகின்றனர்.

இவ்வாறெல்லாம் கொல்லப்படுகின்ற வேளையில் ஒரு மனிதன் மாத்திரம் பிழையாப் பெருமை கொண்டுள்ளார் என்றால் அவை எவ்வகையில் யதார்த்தத்திற்கு பொருத்தமாக இருக்கின்றது. எல்லாம் செய்வதும் சரி, கூறுபவை புனிதமானது, சத்தியமானது, உண்மையானது எனின் அவன் அதிதீவிர புத்திசாலி இல்லையா? இவ்வாறாயின் ஏன் முன்றாம் நபர் தேவை?
இதற்கும் பின்னால் ஒரு வர்க்கம் இருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றது. வர்க்கத்தின் தேவையின் அடிப்படையில் இயங்குகின்றனர் என்பதை அறியாமல் வைத்திருப்பதற்கு காரணம் என்ன? ஈழநாட்டில் வாழுகின்ற மக்களின் தேவைகளுக்கும் விடுதலைப்புலிகளின் தேவைக்கும் இடையே நிச்சயம் முரண்பாடுகள் கொண்டுதான் இருக்கின்றது.

இது நிச்சயம் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் மக்களின் நலத்துடன் ஒன்றுபட்டிருந்தாலும், இலங்கையில் வாழ்ந்து வருகின்ற மக்களின் தேவைகளுக்கும், அபிலாசைகளுக்கும் நேரே வித்தியாசம் கொண்டதாகத் தான் இருக்கும்.

இன்று மத்தியத்துவம் செய்துவரும் நாடு ஒரு ஆபீரிக்கக் கண்டத்தில் வறிய நாடுஅல்ல, ஆசியக் கண்டத்தில் உள்ள வறியநாடு அல்ல, லத்தீன் அமெரிக்காவில் இருக்கும் வறிய நாடுமல்ல. நோர்வே என்பது ஒரு ஏகாதிபத்தியம், பெரும்நிதி மூலதனத்தைக் கொண்ட ஒரு நாடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து தனித்தே இயங்கும் ஒரு நாடு, அமெரி;க்காவின் அரசியல் நலனை பாதுகாக்கும் நாடு. இவை பனிப்போர் நடைபெற்ற காலத்திலும் சரி, அல்லது தற்காலத்திலும் சரி அமெரிக்க நலனை பாதுகாக்கும் நாடு. 1990 முதல் ஈராக் யுத்தத்திலும் சரி, யூக்கோ மீதான யுத்தத்திலும் (சூழ்கெயும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது, ஆனால் அவர் சார்ந்த கட்சி இந்த யுத்தத்தை எதிர்த்தது) ஆப்கான், 2003ல் ஈராக் மீதான யுத்தத்திலும் சரி ஆதரவை வழங்கிவரும் நாடு.


இவ்வாறிருக்கையில் அவர்களை முழுமையான ஒரு நட்புசக்தியாக அவர்களை எவ்வாறு உழைக்கும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு என்ன உரிமை இருக்கின்றது.

ஏகாதிபத்தியம் இவ்வாறு தூய்மையானது என எந்த ஒடுக்கப்படும் வர்க்கத்தை சேர்ந்த எவரும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள், அதற்கு சான்றிதழ் கொடுக்கவும் மாட்டார்கள். அப்படியாயின் முழுமையாக ஏகாதிபத்தியவாதிகளை நம்பிச் செயற்படும் இவர்களை எவ்வாறு அழைத்துக் கொள்வது?
பிழையாப் பெருமையை பின்வருமாறு செயற்படுத்துகின்றனர்
தலைவர் பாதையில் செல்வோம்,
தலைவருக்கு விசுவாசமாக இருப்போம்,
தலைவரின் கரத்தைப் பலப்படுத்துவோம்,
தலைவர் தான் எல்லாவற்றையும் முன்னின்று நடத்துவார் (உதாரணமா எல்லாத் தாக்குதல்களும் அவர் வழிகாட்டலின் கீழ் நடைபெறுகின்றது.


தலைவர் எப்பவும் சரியாக இருப்பார் (அப்படியாயின் ஆலோசகர்கள் எதற்கு, அதற்கான பொறுப்பாளர்கள் தான் எதற்கு?)
தற்பொழுது மேதகு என்ற சொல்லாட்சியை எவ்வகையில் புகுத்த வேண்டுமோ அந்தந்த இடத்தில் ஊரோடு ஒத்துப்போ என்ற சித்தத்திற்கு ஏற்ப அனைத்து ஊடகங்களும் இதனையே தொடர்கின்றன.
இதேவேளை நடுநிலையாளராக இந்தியா வரும் என்றால் விடுதலைப்புலிகளின் நிலை என்னவாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. புலிகளின் இந்தியா மீதான நிலைப்பாடு சரியானதே. ஆனால் அதேவேளை புவியியல் ரீதியாக வேறு கண்டத்தில் இருந்து மூன்றாம் நபர் உள்நுழைவதால் அந்தச் சக்தி தூய்மையானதாக மாறிவிடுகின்றது என்பதை விடுதலைப்புலிகளே தெரிவிக்க வேண்டும்.


'இவை ஒருபுறமிருக்க, சிறீலங்கா அரசானது எமது விடுதலை இயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு வாஷிங்டனில் நிகழ்ந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற் பங்குபற்றியது. இதனால், சமநிலைப் பங்காளி என்ற தகைமையிலிருந்து நாம் ஒதுக்கப்பட்டோம்.'
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் சமபங்காளி என்பது என்ன விடயத்தில் என்பது முக்கியமான விடயமாகும். அமெரிக்க தேசம் என்பது எமது மக்களின் உரிமையை அங்கீகரிக்கும் அரசியலை கொண்டிருக்கின்றதா? அல்லது தனது வல்லாதிக்க அரசியலை முதன்மையாகக் கொண்டிருக்கின்றதா? இங்கு அமெரிக்காவில் நடைபெற இருந்த பேச்சுக்கு தாம் பங்குபற்றாமையை எண்ணிக் கவலை கொள்வது என்பது உலக மக்களின் உரிமைய நசுக்கும் ஒருவரின் தயவை பெற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதைத் தான் ஆதங்கத்துடன் தெரிவிக்கப்படுகின்றது.


இங்கு நிதிமூலதனத்தின் செல்வாக்கைக் கொண்ட பிரித்தானிய ஒற்றையாட்சியின் கீழ் தாம் இருந்து கொள்ளாமல் ஐரோப்பிய சமபங்காளிகளில் ஒருவராக தம்மை இணைத்துக் கொள்ள தனிநாடு கோரும் ஸ்கொட்லாந்து (Scotland)> வட இத்தாலி ((Liga Nord) இனர் தனியாக பிரிந்து செல்வ முற்படுகின்றனர். இவ்வாறே இலங்கையில் இனத்துடன் ஒன்றித்து வாழ முடியாது. ஆனால் உள்ளக சுயநிர்ணயம் என்ற நிலையில் தனது சந்தையை தானே தீர்மானித்துக் கொள்வது, ஆனால் இறைமையை மேற்கத்தைய சந்தைக்கு இழப்பது என்ற நிலைக்கு விடுதலைப் புலிகள் வந்திருக்கின்றனர். இங்கு இறைமையை இழப்பதற்கு தயாராக இருக்கின்றனர். ஆக இவர்கள் சுயநிர்ணயத்திற்காக போராடுகின்றார்கள் என கூறுவதில் உண்மையான தர்க்க நியாயம் இல்லை. மாறாக இந்தப் பொருளாதார அமைப்பில் சரணடைவதையே இவர்களின் அரசியல் இலக்காக கொண்டுள்ளது.


தமிழ் மக்களின் போராட்டம் என்பது உண்மையில் சொந்த அடக்குமுறைக்கும், ஏகாதிபத்தியத்தின் சந்தைக்கான போட்டிக்கு சாவுமணி அடிப்பதைக் இலக்காக கொண்டதாக அமைய வேண்டும். ஆனால் இங்கே தலைவர் தமது சமஅந்தஸ்து என சுட்டி நிற்பது நாட்டை விற்பதற்கு தயாராக இருப்பதையே.

'சர்வதேச நாடுகள் பல, எமது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வரவேற்கத் தவறவில்லை'
இதனை எந்தனை நாடுகள் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டது என்பது பற்றி புலிகளின் உள் இரகசியம் வெளியில் வருவதற்கு வசதியில்லை. இவை ஒரு புறமிருக்க இடைக்கால நிர்வாகம் என்ற கருத்தின் பிறப்பிடம் எவை என்பதை அலசிப்பார்ப்பது அவசியமாகும். முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின உட்கட்டுமானம் (; (infrastructure) என்பது முக்கியமானதாகும். அரச திணைக்களங்கள் (சீரான ( Institution) நிறுவன அமைப்பு) ஒழுங்காக இயங்க வேண்டும், கிராமங்களுக்கும் நகரத்துக்குமான போக்குவரத்து தடையின்றி இருக்க வேண்டும், நிறுவன மயப்பட்ட சட்டதிட்டங்கள் அமைந்திருக்க வேண்டும். முதலாளித்துவத்துக்கு அவசியமானதாகும்.

யூக்கோஸ்லாவியாவின், ஈராக், ஆப்கான் போன்ற நாடுகள் மீது தாக்குதல்கள் தொடங்கப்பட்ட போது தாக்குதல் தொடங்கப்பட்ட உட்கட்டுமானத்தை தகர்ப்பேயாகும். உட்கட்டுமானத்தை (infrastructure) தகர்த்துக் கொள்வதனால் ஏற்படும், பொருளாதார வளர்ச்சியில் தடங்கள் ஏற்படும் என்பதை அறிந்து வைத்துள்ள ஏகாதிபத்தியங்கள் சிறப்பாகவே செயற்படுகின்றன. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டுமானம் எவ்வளவு அவசியம் என்ன என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

உள்கட்டுமான ( infrastructure)வளர்ச்சி, சுதந்திரமான தொழிலாளர்களை உருவாக்குவதும் முதலாளித்துவத்திற்கு முக்கியமானதாகும்.
இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக நாடுகள் தவிர்க்கின்றன. இவை ஒப்பிட்ட ரீதியில் சீனாவை விட சந்தை பாதுகாப்பு இல்லை என்று கருதுகின்றனர். குறிப்பாக லஞ்ச, ஊழல் பெரும் பிரச்சனையாக இருப்பதையும் பெரு நிறுவனங்கள் கவனத்தின் கொண்டதும் ஒரு காரணமாகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் முதலீடு செய்வதில் அதிக ஊக்கம் கொடுக்க வில்லை. இதனால் பா.ஜ.க அரசு தீவிரமாக உட்கட்டுமானத்தை சீரமைப்பதில் அதிக கவனம் செலுத்தியது இதுவே காரணமாகும்.


கடந்த காலத்தில் பலஸ்தீனத்தில் சர்வதேச சமூகம் எனப்படுகின்றன மேற்கு தேசங்கள் ஊழல் அற்ற நிர்வாகம் இருக்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் நிதி ஒழுங்காக பயன்படுத்தப்பட வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றனர். இதன் மூலம் உட்கட்டுமானத்தில் வளர்ச்சி ஏற்படும் என்பதால் ஆகும். அப்போதுதான் நிதி நிறுவனங்கள் அப்பிரதேசத்தின் தமது மூலதனத்தை முதலீடு செய்ய முடியும்.

'பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களை தோற்றுவிக்கும் படியான உயர்ந்த கட்டத்திற்கு உற்பத்தியின் மூலதனத்தின் ஒன்று குவிப்பு வளர்ந்து விடுதல்.
வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த ஷநிதி மூலதனத்தின்' அடிப்படையில் நிதியாதிக்க கும்பல் உருவாதலும்.

பண்ட ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தபட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல்.
சர்வதேச ஏகபோக முதலாளித்துவ கூட்டுக்கள் உருவாகி, உலகையே இவைகள் தமக்கிடையே பங்கு போட்டுக் கொள்ளுதல்
மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப்பரப்பும் பங்கிடப்பட்டுக் கொள்ளுதல் நிறைவு பெறுகிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக் கட்டத்தில் ஏகபோகங்கள் நிதிமூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலை நாட்டப்படுகிறதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியதத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச டிரஸ்டுக்களிடையே உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்று விட்டதோ, அக்கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியமாகும்.'

இன்றைய காலத்தில் நிர்வாக கட்டமைப்பை யார் முன்னிறுத்துவார்கள் என்பதை பொது மக்களாகிய நீங்களே மேற்கூறிய தரவுகளில் இருந்து ஒரு முடிவிற்கு வர முடியும். அதாவது ஒரு அனுபவப்பாடத்தில் இருந்து மற்றயவை எவ்வாறு அமைந்து கொள்ள வேண்டும் என்பதில் மூன்றாம் நபராக செயற்படுபவர்கள் வெகு அவதானமாகச் செயற்படுத்துகின்றனர். ஆனால் நிபந்தனைகள் அற்ற விதத்தில் மூலதனம் வந்து குவியும் என்று எதிர்பார்ப்பது புலிகளின் அரசியல் வறுமையைத் தான் காட்டி நிற்கின்றது.
ஆகவே இடைக்கால தன்னாட்சி என்பது பெரும் தேசங்களின் கட்டட்ட மூலதனத்தின் முதலீடுகளை வரவேற்றுக் கொள்ளவேயாகும். இதனால் தாம் உங்கள் மூலதனம் உள்வருவதற்கு உறுதியான கட்டமைப்பு இருக்கின்றது என்பதை விளப்பரம் செய்துள்ளனர். இதுதான் புலிகள் தமக்குத் தானே போட்டுக் கொண்ட சாவுமணி. அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் தனிமனிதர்களை சுதந்திர அடிமைகளாகக் கோருகின்றது. இதற்கு சம்மதித்தேயாக வேண்டும்.

யுத்த நிறுத்த மீறல்களை கண்டும் காணாது இருக்கின்றனர்.

நிறுவன வடிவம் எவ்வாறு இயக்குகின்றது என கற்பித்தல் (இராணுவ முகாமிற்கு புலிகள் விஜயம் செய்தனர்)

தொலைத் தொடர்பு சாதனம் கிடைக்கப்பெற்றமை
கருணா மீதான தாக்குதலுக்கு பச்சைக் கொடி காட்டியமை
'என்ன பாலா அண்ணை? உப குழுக்கள், பேச்;சுகள் என்று உருப்படியான செயல்பாடு இல்லை என்றார். தொடர்ந்து மக்கள் அவதிப்படுகிறார்கள். நிதி உதவி எதுவும் இல்லை என்றார். மேலும் பில்லியன் டாலர் உதவி என்றெல்லாம் சொல்கிறார்கள். 10 ரூபாய் கூட இல்லையே என்ன விளையாட்டு இது என்றார்.'

இவைகள் எல்லாம் ஆடும் மாட்டை ஆடிக் கறப்பது என்ற அணுகுமுறையைக் நோர்வே கடைப்பிடிக்கின்றது. அமெரிக்காவின் நேரடி இராணுவவாத நடவடிக்கை போன்ற ஆக்கிரமிப்பு (அவசர நோக்கும் கொண்டது வேறு விடயம்) நடவடிக்கை போன்று இல்லாமல் மெதுவாக ஆழுமையைச் செலுத்தும் தந்திரத்தை செயற்படுத்துகின்றனர்.

1993களில் கிட்டு ஒரு தீர்வுப் பொதியுடன் சென்றார். அன்றைய வேளையில் கிட்டு தற்கொலை செய்யத் தூண்டப்பட்டார். (குறிப்பாக தற்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ள புலிகள் தமிழ் நாட்டில் கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பொழுதிலும் சரி, வி.பு தலைவர் ராஜீவினால் கட்டாயமாக டில்லிக்கு அழைத்துத் செல்லப்பட்ட வேளையிலும் தற்கொலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.) அப்பொழுது கிட்டு லண்டனில் வாழ்ததினால் மேற்கு தேசங்களின் அழுத்தத்திற்கு உள்ளாகினார். ஆனால் அவர் இறந்த பின்னால் அழுத்தம் தரக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய கிட்டு இல்லாமையினால் மேற்கு நாடுகளின் அழுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கவில்லை. அதேவேளை வெளித் தொடர்பில் இருந்து மூடிய நிலையில் இருந்த நிலை காரணமாக வெளித்தொடர்புகள் நேரடியாக இருக்கவில்லை.

இன்றையக் காலத்தில் பல வெளிப்பயணங்கள், தேவையான சலுகைகளை நேரடியாகவே பெறும் நிலையில் இருக்கின்றனர். இதன் காரணமாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர்.


'நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் நிராகரிக்கவில்லை'
ரணில் மீதான நம்பிக்கை என்பது அரசியல் சார்ந்தது. இவை இனத்துவத்திற்கு அப்பால் உள்ள வர்க்க உறவாகும். புலிகள் 2000 ஆண்டு தேர்தலின் போது ரணிலை மறைமுகமாக ஆதரித்தனர். அவர் வந்தால் புலிகளின் போர்நிலையை சமநிலைப்படுத்தும் நோக்கில் அவர்கள் எண்ணிச் செயற்பட்டனர். ஆட்சி மாற்றத்திற்கான காலத்தில் தம்மை பலப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்தினர்.
இன்று மற்றைய பகுதி முதலாளித்துவம் சமத்துவமாக தத்தம் மக்களின் சந்தையை பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு உடன்பாடு இவர்களிடையே தோன்றியத் காரணத்தினால் இவர்களுக்கான புரிந்துணர்வு என்பது சந்தர்ப்பவாத 'தேசிய'த்தை முன்வைக்கும் JVPயினருடன் ஒத்துழைத்துக் கொள்வதிலும் பார்க்க சந்தையை பகிர்ந்து கொள்ள சம்மதம் செய்யும் நிலையில் உள்ள வர்க்கத்தின் தேவை என்பது பிரதானமானதாகும். ஆனால் உள்ள பிரச்சனை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படாமல் செய்ய எல்லாப்பகுதியினரும், குழப்பல்வாத அரசியலைக் கைக்கொள்வதால் மக்களிடத்தில் ஒரு முழுமையான ஆதரவை பெற முடியாதுள்ளது.
தேசியம் எப்பொழும் முதலாளித்துவ வர்க்கக் கோரிக்கை என்பதை இவர்களின் செயற்பாட்டின் மூலமே அறிய முடிகின்றது. மார்க்சீய வாதிகள் அவ்வாறு கூறுகின்ற போது தமிழ் மக்களின் விரோதிகளாக சித்தரிக்கின்றனர். முதலாளித்துவ வர்க்கத்தின் நிலை என்பது எப்பொழுதும் ஒரே பகைமையானதாக இருப்பதில்லை. மாறாக அவை காலத்துக் காலம் சந்தையின் பொருட்டு ஏற்படுகின்ற சில மோதல்கள் அடங்கி விடும். பின்னர் கூட்டுத் தொடரும் புதிய எஜமானர்களுக்காக நாம் மீண்டும் செத்து மடியவேண்டியது தான். தேசியவாதிகளின் இலட்சியம் அரைவழியில் நின்றுவிடுவதினால் போராட்டம் தொடராது.


ரணில் அரசாங்கம் இடைக்கால தீர்வு பற்றி அவர்களுக்கு ஒரு பார்வை ஆறு சுற்று நடைபெற்ற வேளை உருவாகியிருக்கும். ஏனெனில் இவர்களும் ஏகாதிபத்தியத்தின் நலன் காக்கும் சக்திகள் என்பதினால் ஆகும். தெரிந்திருந்த வேளையில் வர்க்க சமரசம் கொண்ட காரணத்தினால் சாதகமான நிலையில் அவர்கள் இருந்தனர். ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இவர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினர் என்றே சொல்ல வேண்டும். இதற்கு இனவாதம் என்றதற்கு அப்பால் சிவில் நிர்வாக முறையில் மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையே இருந்து வருகின்ற ஏற்றத்தாழ்வான அரசியல் முதிர்ச்சியே காரணமாகும்.

இனவாதம்

இனவாதம் என்பது சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரம் அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இல்லாது போக்க வேண்டும். சிங்கள பெருந்தேசியவாதத்திற்கு எதிராக தமிழ் தேசியம் உருவெடுத்துள்ளது. இவர்களும் இனவெறி கொண்டு தான் இருக்கின்றனர். இனவெறிப்பேச்சுக்களை முன்னர் கூட்டணியினரிடம் இருந்தும் அவர்கள் வழிவந்த இன்றைய இயக்கங்கள் வரை தொடர்ச்சியாக வளர்த்து வந்துள்ளனர். தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள் அரசியல்வாதிகளை வெறு இனத்துவேசம் கொண்டுதான் விமர்சிக்கின்றனர். நாம் இனவாதிகள் என்ற காரணத்தினால் தான் அப்பாவிகளை எம்மால் கொல்ல முடிந்தது.
தமிழ் தேசியம் சிறுபான்மை இனதேசியமாகிய முஸ்லீம் மக்கள் மீது கொடுத்த தாக்குதல்கள் தொடுத்தனர். நாம் இவர்கள் மீது தொடுத்த தாக்குதலை என்னவென்று அழைப்பது. கிழக்கில் வௌ;வேறு இடங்களில் அவர்களை கொலை செய்தோம், யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்களை வெளியேற்றினோம். இதன் பொருள் தேசியமா? இல்லை, இதுவும் இனவாதமே!

1986களில் முஸ்லீம் பிரதிநிதிகள் செய்து கொண்ட ஒப்பந்தம் என்வாகியது?

ஹக்கீம் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்னவாகியது?

1985 சித்திரை 10 அன்று செய்து கொண்ட (ENLF) கூட்டு ஒப்பந்தம் என்னவாகியது?

ஒப்பந்தங்கள் எவையும் வர்க்கங்களின் சக்திகள் பரஸ்பரம் சமாதானமாக சந்தையை பிரிந்துக் கொள்ளும் வரை அவைகள் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொண்டேதான் இருப்பர்.

இதில் புதிய கண்டுபிடிப்பு என்னவெனில் ஐ.தே.க எப்போ இனவாத பாவங்களைப் போக்கி புனிதராக மாற்றப்பெற்றது என்பதுதான். இவர்களும் இனவாத அரசியல் இருந்து குளிர் காய்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.


தமிழர்கள், சிங்களவர், முஸ்லீம்களாக இருந்தால் என்ன இனவாத அரசியிலில் தான் பயணம் செய்கின்றனர். இவற்றில் இருந்து மனித விழுமியங்களை மதித்து, இனத்துவ ஒற்றுமைக்காக குரல் கொடுக்கும் சக்திகள் தான் மற்றைய எதிர்நிலைச் சக்திகள் மீது விமர்சிப்பதற்கு முழு உரிமையும் கொண்டிருக்கின்றனர். மாறான ஒரு அணி இன்னொரு அணியை இனவாதிகள் என கூறுவதற்கு எந்தவொரு தகுதியும் இல்லை.

இன்று மனித நேயத்தை விரும்புபவர்களின் தலையான பணி இனங்களுக்கிடையேயான காழ்புணர்வை, நம்பிக்கையீனத்தை, பகையுணர்வை தீர்ப்பதேயாகும்.
'சமாதான முகமூடி அணிந்து நடிக்கும் சந்திரிகா அரசின் உண்மையான முகத்தைச் சர்வதேச சமூகம் அடையாளம் கண்டுகொள்ளும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.'

மாவீரர் தினத்திற்கு முன்னர் '(21.11.2004) அமெரிக்காவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் ர்pச்சர்ட் ஆர்மிடேஜ் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவுடனும் எதிர்கட்சி தலைவருடனும் தொலை பேசியில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக பேசியதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் துணைப் பேச்சாளர் அடம் ஹெலி தெரிவித்துள்ளார்.

சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்துக்களை வரவேற்ற ரிச்சர்ட் ஆர்மிடேஜ் ஜனாதிபதி சமாதானம் தொடபாக உறுதியுடனும், தெளிவுடனும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்கால புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தின் சமாதான முயற்சிகளை குழப்புகின்றன. புலிகள் வார்த்தையளவில் பயங்கரவாதத்தை கைவிட்டுள்ளதாக சொல்லாமல் உண்மையாகவே பயங்கரவாதத்தை கைவிட்டு புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.' இவைகூட வி.பு தலைவரின் பேச்சில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இவர் பேச்சில் பெரும் அழுத்தமிருப்பதாக தெரியவில்லை. 'போராடுவோம்' என்பது மீண்டும் தொடக்கமாக கூறுவது கூட மக்களை திசைதிருப்பும் ஒரு யுக்தி என்பதே உண்மை. இவர்களால் இன்று பேச்சுவார்த்தையைக் குழப்பக் கூடிய நிலையில் இவர்கள் புறஉலகத்துடன் தொடர் இல்லாமல் இருக்கவில்லை. மாறான 11 புரட்டாசிக்குப் பின்னர் ஏற்பட்ட மாறுதலால் ஏற்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் ஐரோப்பாவில் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் முகவர்கள் (ஏதுமற்ற தொழிலாளர்களைத் தவிர) தொடர்ந்து புலிகளுக்காக செயற்பட துணிவார்களா என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது. மார்கழி மாதம் கனடாவில் நடைபெற்ற சிறுவர் உரிமைகள் பற்றிய மாநாட்டில் சிலர் கலந்து கொண்டு குழப்பம் விழைவித்தனர். இந்தக் கூட்டத்தில் புலிகள் சார்பாக பங்கு கொண்டவர்கள் சாதாரண தரத்தில் உள்ள கீழ்மட்ட ஆதரவாளர்களே என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாநாடு முக்கியம் அற்றதாக இருந்தாலும், அங்கு சென்று மாற்றுக் கருத்து வைக்கக்கூடிய நபர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விட்டதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.
இங்குள்ள தமிழர்கள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், கெடுபிடிகளுக்கு ஈடுகொடுப்பார்களா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் பொருளாதார பலத்தில் இல்லாதவர்கள் புலிகளின் கடும் உழைப்பாளர்களாகவும், பொருளாதார, கல்வி, அந்தஸ்து பலத்தை உடையவர்களே புலிகளின் பொறுப்புக்களில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


சர்வதேச சமூகம் என்பது விடுதலைப் போராட்டத்தை எவ்வகையாக கணிப்பிடுகின்றது என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும். மேற்கு நாடுகள் தத்தம் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வர் என்பது தெரிந்ததே. சர்வதேச சமூகம் என்பது நிதிநிறுவனங்களின் நலன்பால் கொண்டது என்பது சாதாரண மக்களுக்கு மறைக்கப்பட்டு வருவது மிகுந்த ஆபத்தைக் கொடுக்கக்கூடியது. இதில் விடுதலை இயக்கம் கவனம் எடுப்பதில்லை என்பதும் ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல.
ஐ.நா சாசன விதி என்பதும் கூட ஒரு வர்க்க நிலை சார்ந்தான் இருக்கின்றது. இன்று உலகமயமாதலை விரைவு படுத்துவதே நோக்கமாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனம் என்பது, அதேவேளை முதலாளித்துவ அரசாங்கங்கள் என்ற நிலைக்கு வருகின்ற போது முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை சட்டரீதியாக கோருவதே இவர்களின் ஆகக்கூடிய ஒரு கடமையாக இருக்க முடியும். இதனை விடுத்து மேற்கு தேசங்களின், குறிப்பாக அமெரிக்காவினை மீறி எதுவும் செய்து விடவும் முடியாது. ஆக ஐ.நா என்ற நிறுவனம் மீதான ஒரு மயக்க நிலையையும் மக்கள் மத்தியில் கூட்டுகின்றனர்.

ஆக சர்வதேசம் ஜனதிபதி சந்திரிக்காவின் முகமூடியை தெரிந்து கொள்ளும் என்பது வெறும் மொழியில் சொல்லாட்சியை தவிர வேறொன்றில்லை. அதேவேளை சர்தேச சமூகம் என்பது தனிமனித படுகொலைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. குறிப்பாக ஒரு இடைத்தரகர்களுக்கு தமது உழைப்புச் சக்தி அடிமைப்பட்டு இருப்பதை அங்கீகரிக்கப் போவதில்லை. இதற்காக நிறுவனங்களை வைத்து குரல் எழுப்பாமல் விடப் போவதும் இல்லை. ஆக இன்று புலிகளுக்கு உள்ள முக்கிய பிரச்சனையே எதிரிகளை மென்மேலும் உருவாக்காமல் தடுப்பதாகும்.


ஏனெனில் துரோகிகளை அன்று தொடக்கம் இன்றுவரை உருவாக்கி வருவது விடுதலைப்புலிகளின் அரசியலே. முதலில் இந்தியாவின் பின்னால் நின்று பின்னர் சக்தியை பெருக்கிக் கொண்டு மற்றவர்களை இந்தியக் கைககூலிகள் என்று அவர்களை இல்லாது ஒழித்தனர். பின்னர் தமது உறுப்பினர்களையே கொண்று குவித்தனர். இன்று ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் தமது விசுவாசிகளை பாதுகாக்க துரோகியென கருணா வெளியேற்றப்பட்டது வரை விடுதலைப்புலிகளின் தனிமனித சுதந்திரம், தனியமைப்பாக இயங்கும் சுதந்திரம், அரசியல் பன்முகத்தன்மையின்மை போன்ற மக்கள் விரோத கொள்கைகளே காரணம்.
மக்களிடத்தில் முதலில் துரோகிகள் தானே கொல்லப்படுகின்றனர் என்ற கருத்து பரப்பப்பட்டிருக்கின்றது. மக்களும் இன்று பெரும் எதிர்ப்புக்களை தெரிவிக்காமல் விட்டு விடுகின்றனர். ஆனால் அவர்களின் வர்க்கத் தேவை என்கின்ற போது நிச்சயம் தெருவிற்கு வருவார்கள் என்பதைத் தான் குருநகர் கடல்தொழிலாளர், வடக்கு போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் என்பது காட்டி நிற்கின்றது.
ஆக சர்வதேச சமூகத்தின் மீதான நம்பிக்கை என்பது நிச்சயம் பொருளாதார நலன் சார்ந்தது. ஆனால் சர்வதேசத்திலும் வாழும் மக்களிடத்தில் ஆதரவு கேட்டும் அரசியல் நடத்தவில்லை. அந்த மக்களிடத்தில் போகக் கூடிய அரசியல் என்பது இல்லாமை முக்கிய பற்றாக்குறையாகும். இன்று மற்றைய போராட்டங்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவினை தமிழ் மக்களின் போராட்டத்திற்கு வளர்த்தெடுக்காமை புலிகளின் அரசியல் வறுமையே காரணம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


'நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.'
நிபந்தனை விதிக்கக் கூடாது என்று விடுதலைப்புலிகள் கடந்த காலத்தில் கூறினர். இதனை தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க வேண்டும் என விரும்பியவர்கள் எல்லோரும் ஏற்றும் கொண்டனர். அன்று அரசு ஆயுதத்தை போடும் படி கோரியது. இதனை விடுதலைப் புலிகள் உட்பட எல்லோரும் எதிர்த்தனர். ஆனால் இன்று விடுதலைப் புலிகள் நிபந்தனை போடுவது பிரச்சனைக்;கு தீPர்வு காணும் அணுகுமுறையல்ல. மாறாக குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நிலைதான் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாகும். எப்பவும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து பொதுவான முடிவிற்கு வருவது இலகுவானதல்ல. மாறாக ஒரு பொது முடிவில் இருந்து குறிப்பிட்ட நிலைக்கு வருவது நடைமுறைச் சாத்தியமான ஒரு அம்சமாகும்.
இதன் பொருள் ஓரு தீர்வுடன் அமைப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளக் கூடாது என்பதல்ல. அவைகள் பேச்சுவார்த்தை மேசையில் வெளிப்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் புலிகள் தமது அதிகார வரம்பை மீளவும் கட்டிக்காக்கக் கூடிய வகையில் செயற்படுகின்றனர். இதற்கு ஏகம் என்ற நிலைப்பாடும் காரணமாகின்றது.


'எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் களமாடி வீழ்ந்த எமது மாவீரர்களை இப்புனிதநாளில்..'
'எங்கள் தேசத்திற்காக
இறந்தவர்கெல்லாம்
விளம்பரம் கொடுத்தாயிற்று
ஏனெனில்
நடைமுறைப் பிரச்சனை
கூர்மையடையும் கால்
தியாகியைக் காட்டியே
திசை திருப்பும் - இந்த
வர்க்கத்திற்குத் தேவை
தியாகிகள் ... .. '


'அந்த விடியலுக்கு' (1986) இளங்கோவின் கவிதைகளின் சமர்பணத்தில் இருந்து சில வரிகள்)
புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை என்பதே யதார்த்தம். ஆனால் எமது சமுதாயத்தில் எந்த நிறுவனங்களும் (சாதி, ஆணாதிக்க குடும்ப உறவு, மத, சம்பிரதாயங்கள்) சிதைந்து விடவில்லை. மாறாக அனைத்து பிற்போக்கு மூலத்தில் இருந்து பிறந்தது தான் எமது இயக்கங்கள் அனைத்தும் ஆகும். ஆனால் இவைகள் தமது பாதையில் தவறு விடுவதற்கு அதன் இந்தச் சமூகத்தின் மேற்தளத்தின் மேல் கட்டப்பட்ட இயக்கங்கள் அவை பிற்போக்கானவையாகவே இருக்கின்றது. புதிய சிந்தனை, செயற்பாடுகள் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் பழைய உற்பத்திக்கு அத்திவாரமாக இருக்கும் அனைத்தும் இல்லாதது ஒழிக்கப்பட வேண்டும்.


குலச்சமுதாயத்தின் எச்சமும் அதன் மீது தமது வர்க்க நலனைப் பாதுகாக்கும் நிலையில் தான் மாவீரர் விழா நடைபெறுகின்றது. இது பிரபாகரன் பிறந்தநாள் விழா என்பது ஒரு புறமிருக்க, இறந்த தியாகிகளின் பெயரில் மக்களின் மூடப்பழக்கத்தை தொடர்ச்சியாக விதைப்பதைத் தான் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும்.
இறந்தவர்களை நினைவு கொள்வது என்பது வேறு, ஆனால் புனித நாள் என்பதிலும் முன்னோர் தெய்வ வழிபாட்டையும் புதுப்பிக்கும் நிலை என்பதும் வேறானது. மக்கள் மதங்கள் கூறுகின்ற மூடப்பழக்க வழக்கத்திலும், வர்ணாசிரமக் கோட்பாட்டிற்குள்ளும் தொடர்ச்சியாக ஆட்பட்டுக் கொண்டு வருகின்றனர். இதற்காக விடுதலை அமைப்பு என்ற நிலையில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியான செயற்பாடுகளை மேற்கொள்ள வில்லை. மாறாக தொடர்ந்தும் அவ்வாறான கருத்தியலுக்கு அழைத்துச் செல்வது ஆரோக்கியமான நிலையல்ல.

இறந்தவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மறப்பது என்பது மனித வாழ்க்கையில் இயல்பானது. இறந்தவர்களை எப்பொழுதும் நினைத்துக் கொண்டு இருப்பது மனிதனின் உளவியலில் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியதாகும். வருடாவருடம் கவலையை மீளப்படுத்துவது வெறுக் வக்கிரத்தைக் காட்டுவதாகவே அமைந்து விடுகின்றது. இதில் குறிப்பாக தொலைக்காட்சி என்பது இன்னும் அதிகமாக மக்களை தாக்கும் ஒன்றாக இருக்கின்றது. இதன் காட்சியமைப்பு (visual effect)என்பது இரங்கி அழுவதைப் பார்த்து எந்தச் கல்நெஞ்சும் கரையும். ஆனால் இந்த இரக்க உணர்வு என்ன தேவைக்கு பயன்படுத்தப் படுகின்றது. போராளின் இலட்சிய உணர்வினை விதைப்பது இவ்வாறல்ல. மாறாக ஒரு சரியான அரசியல் பாதையும், தெளிந்த பாதை கொண்ட அரசியல் தலைமைத்துவத்தின் மூலமேயாகும்.


போராளிகளின் மீதான பாகுபாடு நிச்சயம் நிறைவே இந்த நாளில் ஊடகங்களின் மூலம் காணமுடிகின்றது. 2001 நினைவு தினத்தில் ஒரு தாயினை ( TTN)பேட்டி கண்டார்கள். அப்போ அந்தத்தாய் தன்நிலையைக் கூறி அழுதார். அந்தத்தாய் 5 பிள்ளைகளை விடுதலைக்காக உருவாக்கிய வீரத்தாய்தான். இருவர் தொடர்ந்தும் அமைப்பில் இருக்கின்றனர், மூன்று பிள்ளைகள் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அதில் ஒருவர் மாத்திரம் தனது பதவியிறக்கம் செய்த காரணத்தினால் தற்கொலை செய்யப்பட்டார். இவ்வாறு கூறிய பின்னர் 5 போராளிகள் என்ற கணக்கு பின்னர் 4 போராளிகளாக மாறியது. அந்தத் தாயிடம் அவர்களின் வீரம் பற்றிக் கேட்ட போது அந்தத்தாயோ தன்னுடைய வாழ்க்கையின் சோகத்தைத் தான் கூறினார். இதனால் பேட்டி கண்டவர் வேறு தாயிடம் பேட்டியைத் தொடர்ந்தனர்.
ஏன் இவ்வாறு போராளிகளின் தியாகத்தில் கூட தொடர்ச்சியாக பாரபட்சம் காட்டுகின்றனர். இவை பற்றி பொது மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அதேவேளை பொதுவான நினைவு நாள் தேவை என்ற கருத்து இன்றைக்கு சாத்தியப்படாவிட்டாலும் வரலாற்றில் ஒரு நாள் உருவாகாமல் போகாது.

புதிய சிந்தனை கொண்ட ஒரு சமூகத்தைப் படைப்பதே ஒரு சமூக மாற்றத்தை வேண்டி நிற்கும் அமைப்பிற்கான கடமையாகும். ஆனால் மாவீரர் நாள் மூலமாக பழைய சமுதாய விழுமங்களை தொடர்ந்து பாதுகாப்பதன் மூலமாக பழைய வகை சமூக பொருளாதார அமைப்பை பேணுவதே குறிக்கோளாக சுருக்கப்பட்டுவிட்டதை தான் இவற்றில் இருந்து வெளிப்படுத்தப்படுகின்றது.


'இனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப்பெற்று மூன்றாவது பிரதான அரசியற் கட்சியாக வெற்றிபெற்றது.'


மக்களுக்கு தேவையானது உண்மையான விடுதலை. விடுதலை என்பது சொந்த தேசத்தின் சுரண்டிக் கொழுக்கும் ஒரு வர்க்கத்தை இல்லாது ஒழிக்க வேண்டும். நாம் போராடத் தொடங்கியது சுரண்டல் இல்லாத சமுதாயத்தைப் படைப்பதற்கே. ஆனால் இந்த இலச்சியக் கனவுகள் வளர்ச்சியடையாதவாறு எதிர்ச் சிந்தனை மூலமும், ஆயுதக் கவர்ச்சி மூலமும் சிதைக்கப்பட்டது. இந்தச் சிதைவை மீள்சீரமைக்கும் தேவை இன்று உள்ளது. அவ்வாறான தேவையே இன்றுள்ளது.

1985 களில்
'மரணத்தைக் கண்டு
நாம் அஞ்சவில்லை
ஒரு அனாதைப் பிணமாய்
ஒரு அடிமையாய்
புதிய எஜமானர்களுக்காக
தெருக்களில் மரணிப்பதை
நாம் வெறுக்கின்றோம். ' (செழியன் 'மரணத்துள் வாழ்வோம'; கவிதைத் தொகுதியில் இருந்து)

இவ்வகையான எழுச்சிகள், கவிதைகள், சித்தாந்தப் போராட்டங்கள் நிறைந்த காலத்தை தாண்டி இன்று நீங்கள் எல்லோரும் தமிழ் எஜமானர்களுக்காக சாகுங்கள் என்ற நிலைக்கு எம் சமூகம் வந்துள்ளது. அரசியல் பன்புமுகத்தன்மை 1983களில் அன்று இருந்து மக்களிடையே அரசியல் அறிவு பெற்ற பகுதியினர் 1966 களில் ஏற்பட்ட அரசியல் இயக்கத்தின் பின்னரான காலத்தில் ஏற்பட்டது.


இந்த எதிரிகள் தமிழ் மக்களிடம் இருந்து அல்லது கூட்டாட்சி வரும் பட்சத்தில் சிங்கள, தமிழ் என பணம்படைத்தவர்களின் அல்லது மக்களின் இயலாமையை பயன்படுத்தி அவர்களின் மேல் சவாரி செய்யும் கூட்டத்தவர்களாவர். அவர்களின் நலனைப் பாதுகாக்க வெளி நாடுகளில் இருந்து உள்நாட்டு அரசியலை, பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்திகளாக சர்வதேச நாணய (IMF) நிதியம், உலக ( WB) வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வர்த்தக ஒப்பந்தக் (WTO) கூட்டு என பெரும் சர்வதேச நிறுவனங்களோயாகும்.
இந்த நிறுவனங்களின் ஆதிக்கவலையில் உலகை கொண்டு வருவதும் இவர்களின் மூலதனத்தை முதலிடவும், இதன் மக்களின் உழைப்பை, நாட்டின் கனிப்பொருட்களை மலிந்த விலையில் சுரண்டவும், கடன் கொடுத்து வட்டியைப் பெற்றுக் கொள்ளவும் வசதியான பொருளாதார பாதுகாப்புச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிலைவேற்றி பெரும் நிதிநிறுவனங்களின் தரகர்களாக வேலை செய்பவர்களே இன்றைய நாடாளுமன்ற அரசியல்வாதிகள்.


இதில் ஒரு அங்கமாகவே இன்றைய நிலையில் எமது விடுதலை இயக்கமும், மக்களின் விடுதலை என்ற போர்வையில் உள்ளக சுயநிர்ணயம் என்ற போர்வையில் ஈழத்து மக்களை சுரண்ட உரிமை கேட்கின்றது. உள்ளக சுயநிர்ணம் என்பதில் மாத்திரம் கவனம் கொள்வதன் மூலம் அன்னிய நிதிகளை பாதுகாக்கும் திட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஒரு அத்தாட்சி உரையே வி.பு தலைவரின் பொதுவுடமை மீதான வெறுப்பு உரை. மேற்கு தேசத்தின் தரகு வர்க்கமாக தம்மை அடையாளம் காட்டிக் கொள்கின்றனர். இதன் மூலம் மேற்கு தேசங்கள் போடும் சட்டதிட்டங்களை எமது மக்கள் மத்தில் அழுல்படுத்துவதும், அவர்களுக்கு தேவையான மலிந்த உழைப்பாளிகளை உருவாக்குவதே தற்பொழுதைய அரசியல் பாதை சென்று கொண்டிருக்கின்றது. அத்துடன் இந்த உரையுடன் புலிகளின் தாகம் சோசலிச தமிழீழம் என்ற இலக்கை உத்தியோகபூர்வமாக கைவிட்டதை அறிவித்துள்ளார்.
இங்கு பிரபாகரனுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஏன்னென்றால், அடல் பாலசிங்கம் தாம் இடதுசாரி வாய்வீச்சாளர்களின் அவல நிலையைப் போக்காட்ட அவதரித்த வீரப்புதல்வர்கள் என தமது புத்தகத்தில் எழுதுகின்றனர். இதனை தலைவதே பொய் என தெரிவித்தமைக்கு. அத்துடன் தாம் சோசலிச பாதையை தொடரவில்லை, தாம் அவ்வாறான கொள்கையை கொண்டவர்கள் இல்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு அறிவித்திருக்கின்றார்.

>>>ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் வைத்தான் வெள்ளரிக்காய்
காசுக்கு இரண்டு விற்கச் சொல்லி
காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்.

வெள்ளைக்காரன் பணம்
சின்னப்பணம்
வேடிக்கை காட்டுது வெள்ளப்பணம்
வெள்ளிப்பணத்திற்கு ஆசைப்பட்டு
வேசம் களைச்சாளாம் வீராயி.
என தமிழ் நாட்டுப் போராளிகள் பாடுகின்றனர். <<<