Dienstag, November 22, 2011

பிரபாகரனுக்கு அஞ்சலிப்பது மட்டுமல்ல...

கொல்லபட்ட பிரபாகரனுக்கு இந்த மாவீரர் தினத்திலாவது தமிழ்ச் சனம் வீர வணக்கம் செலுத்துமா?


தமிழ் இளையோரே,
வெளியே வாருங்கள்!
வஞ்சகத்தால் வீழ்ந்த புலித்தலைமைக்கு
இந்த மாவீரர் தினத்திலாவது நேரடியாக
அஞ்சலியைச் செய்யுங்கள்!!!

இப்போது தலைமையை அழித்த
புலிக்குள் இருக்கும் நயவங்சகக் கூட்டையும்
அதன் பின் அணிவகுத்து
மக்கள் சொத்தை-நிதியைக் கொள்ளையடிக்க முனையும்
பணப் புலிப் பினாமிகளையும் கண்காணியுங்கள்;
உங்களால் இது முடியும்.


பிரபாகரன் இந்த 2011 இலும் ,உயிரோடிருப்பதாகக் கட்டுரை எழுதிப் புதிய நயவஞ்சகர்களைக் காப்பதற்கு முனையாதீர்கள்!இதுவரையான வெளித் துரோகங்களை இனம் காணும் நீங்கள், உட்துரோக அரசியலது தலைமையை இனங்காண்பதில் தவறிழைத்துள்ளீர்கள்!

இந்நிலையில்,புலித்தலைமை எங்ஙனம் காட்டிக்கொடுக்கப்பட்டதென்பதை முதலில் புரிவதற்கு,அவரது மரணத்தை மறைக்க முனையும் அரசியலைக் கேள்விக்குட்படுத்துங்கள்.இனிமேலும் மறைப்பு அரசியலில் மறைந்திருந்து துரோகத்தைத் தியாகமாக்க முனைவது, எமது மக்களது முற்றுமுழுதான அடிமைத்தனத்தை உறுதிப்படுத்தும் அரசியலாகவே மாறும் அபாயம் உண்டு.இதைக் கணக்கிலெடுங்கள்.

தலைமையை நயவஞ்சகமாகக் காட்டிக்கொடுத்து, அழித்த புதிய புலித்தலைமையின் அரசியல், மக்களின் அபிலாசைகளின் வாயிலாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களிடம் திரட்டப்பட்ட செல்வங்களைக் கைகயகப்படுத்தியபடி புதியஅதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் பாரிய அதிகாரச் சுவையை, நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.இத்தகைய சூழலில்தாம் இன்று , குத்துவெட்டுக்களும்,கோவில் தேர் எரிப்பும் உச்சம் பெறுகிறது.இத்தகையவர்களா நமது தேசபக்த இளைஞர்களுக்குக் கௌரவம் அழிக்கும் விழா எடுப்பது?;அவர்களைச் சொல்லி மீளவும், சேர்த்த சொத்துக்களைத் தமது செல்வமாக்கும் அரசியலுக்கு அத்திவாரமிடும் இத்தகைய புலிப் பினாமிகளை இனங் காணுங்கள்!வருகிறது, நவம்பர் 27!


இந்த நாளுக்குத் தீபம் ஏந்தும் உங்கள் கரங்கள் ,புலிப்பினாமிகளுக்காக உண்டியலும் ஏந்தாமல் உள்ளத்தின் நியாயத்துக்கமைய பிரபாகரன்பற்றிய உண்மைக்காகவும் ,இயங்கட்டும் உங்கள் வாய்கள்!


"என் இனத்தின் அழிவில் நின்று
களிநடனமிடும் சிங்களத்து விருப்பு இருக்கும்வரை
நீ தமிழ்த் தேசியத்தின் குறியீடே பிரபா!

என் மக்களுக்கும்,
உன் சேனைகளுக்கும்,
உனக்கும் அஞ்சலிப்பது மட்டுமல்ல
எம்மை வீழ்த்திய
உனக்குள் மறைந்திருந்த நயவஞ்சகத் தலைமையையும்
இனங் காண்பதும் எனக்கும்
என் அடுத்த தலைமுறைக்கும் அவசியமானதே!" என்று,இந்த மாவீரர் தினத்திலாவது போர்க் கொடி உயரட்டும்.

உங்கள் தலைவன் பிரபாகரனுக்காகவும்,அவன் போராட்ட உணர்வுக்காவும் அவனை நெஞ்சார வழிபட்டே ஆகவேண்டும்.தமிழ் மக்களது அடிமை வாழ்வை தனக்கெட்டியவரை வீரமுடைய வாழ்வாக்கிய அந்தப் போராளித் தலைவனுக்குச் செய்ய வேண்டிய புரட்சி வணக்கத்தைத் தட்டிக் கழிப்பது கடைந்தெடுத்த கள்ளத் தனமாகும்.பிரபாகரனது மரணத்தைப் பகிரங்கமாக அறிவித்து ,அவனைத் தொழாத "மாவீரர்"தினம் மகத்தானதல்ல என்று அறை கூவலிடும் உரிமை கூட உக்களுக்கு இல்லையா செம்மறித் தமிழர்களே?

இன்று, இலங்கையில் நம்மை இன்னொரு இனத்தின் ஆளும் வர்க்கம் அடிமை கொண்டுள்ளது.நாமும் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்தக் காரணத்தால் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.வன்னியில் புலிகளை அழித்த கையோடு எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான் இப்போது.நமது மக்கள் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.உழைத்துண்ட மக்கள் ஒரு குவளை சோற்றுக்காக வரிசையில் வெயிற் காய்கிறார்கள் இன்று.புலம்பெயர் மக்கள் வாழும் மேற்குலகிலோ "மாவீரர்"தினக் கொண்டாட்டத்துக் காகப் புலிப் பினாமிகள் தமக்குள்ளே அடிப்பட்டுக் கோயிற்றேரை எரிப்பதுவரை அவர்களது பாசிசம் கோலாச்சுகிறது.

இது,எதற்காக?

மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் உரிமை எவருக்கென்பதில்தானே தமக்குள் பல் வேறு அணிகளாகப் பிரிந்து பணவேட்டைக்கான உரிமம் கோருகிறார்கள்?


செத்த தலைவனுக்கே செருப்படி கொடுத்த இந்தக் கூட்டம்"மாவீரர்"தினக் கொண்டாட்டம் செய்வதென்பதன் பொருள் என்ன?

இதுவரை,தனது சக்தி உட்பட்டவரை போராடிய பிரபாகரனுக்கு ,சேறு பூசியது சிங்களத் திமிர்மட்டுமல்ல புலப் பணப் புலிப் பினாமிகளும்தாம்.செத்தவனை அம்போவென விட்டுவிட்டு,அவனது கீழ்மட்டப் போராளிகளுக்கு "மாவீரர்"கௌரவஞ் செய்கிறார்களாம்-கேடுகெட்ட வேடதாரிகள்!

இப்படியாக,பங்கீட்டுச் சண்டை மக்களது பணத்தின் பொருட்டுத் தொடர்கிறது.
 
மக்களைத் தொடர்ந்து அந்நியமாக்கிய "தமிழீழப் போராட்டம்"சாரம்சத்தில் தவறானவர்களால் தவறான நோக்கத்துக்கமைய நடாத்தப்பட்டு அழிந்துபோனது.இதன் தொடரில், இப்போதும் பேராசை,பதவி வெறி பிடித்த புலம்பெயர் புலிப்பினாமிகள் தமது அற்ப வருவாய்க் காகவும்,பதவிச் சுகத்துக்காவும் மக்களையும் அவர்களது ஆன்ம விருப்பையும் அடியோடு மறுத்தொதுக்குவது என்றைக்கும் மகத்தான செயலாக இருக்கமுடியாது.

இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு வெளிவிவகாரப் புலித்தலைமை தாம்கொண்டுள்ள மக்களது நிதிக்களைத் தமதாக்கும் முயற்சியில் நம்மை ஏமாற்றச் செய்யும் கபட அரசியலுள், பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாகக் கருத்துரைத்து நமது மக்களை அந்நியச் சக்திகளுக்கு முற்றுமுழுதாக அடிமைப்படுத்திவிடத் துடிக்கிறது.இது கடைந்தெடுத்த துரோகம்!இதுவரை போராடிய தலைவனுக்கே ஒரு அஞ்சலி செய்ய முனையாத கயவர்களைத் தண்டித்தே ஆகவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
22.11.2011