Montag, Juli 23, 2012

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - நூல் விமர்சனம்- 6

தமிழீழக் கோசத்தினது கபட அரசியல் இதுவரை 300.000. மக்களைப் பலிகொண்டுள்ளது,ஒருமில்லியன் மக்களை நாடோடிகளாய் உலகெல்லாம் அலைய விட்டுள்ளது,இலட்சத்திற்கு மேற்பட்ட பெண்களை விதவைகளாகவும்,இவற்றையெல்லாம்விட மோசமாக பல்லாயிரம் இளஞ் சிறார்களை ஊனமாக்கி அனாதைகளாக அலையவிட்டுள்ளது!;சிங்கள அரசின் சிறைகளில் இன்னும் அப்பாவி மக்களது குழந்தைகள் புலியெனத் தண்டனை பெறும்போது புலித் தலைமையானதும், அதன் தத்துவார்த்தவாதிகளும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகளாக இலங்கை மண்ணில் உலாவருகிறார்கள்.இதைக் கேள்விக் குட்படுத்துகிறோமா?புலி வால்களாகவிருந்த இன்றைய இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒரு தலைமுறையே பலியிடப்பட்டு,தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் 60 வீதமான நிலப்பரப்பு சிங்கள இராணுவத்தினது குடியேற்றங்களாக மாற்றப்பட்டுள்ளது.முள்ளி வாய்க்காலோடு சமரசஞ் செய்த தமிழ்த் தேசிய வாதிகள் தமது சொந்த மக்களது உயிர்-உடமை-குருதிகொண்டு சேர்த்த செல்வமானது உலகம் தழுவி ஒரு சில "தமிழ்த் தேசிய" வாதக் குடும்பங்களது தனிச் சொத்தாச்சு. அவற்றின் பெறுமதி அமெரிக்க டொலர்களில் அண்ணளவாக 3. ரில்லயன் [Three Trillion Dollar  ]என்பது இன்றைய பொருளாதாரக் கணக்கு.

இப்படித் தொடர்ந்து, வரலாறு பூராகவும் பொய்மையும்,களவும் நிறைந்த தமிழ்தேசிய வாதமானது வழமைபோலவே தமிழ்பேசும் மக்களது உயிரோடு விளையாடி அவர்களது உயிரை மட்டுமல்ல வாழும் வலயங்களையும்,வாழ்வாதாரத்தையும் சிதைத்து, அதைச் சிங்கள ஆளும் வர்க்கத்திடம் தாரவார்த்துத் தமது நலன்களை அடைந்து கொள்கின்றன. திரு.தமிழரசன்-இது குறித்து - இந்த ஆறாவது பகுதியில் நிறையத் தரவுகளோடு உரையாடுகிறார்.தமிழ்த் தேசியவாதமானது தன்னளவில் நாணயமற்ற பிற்போக்கு வாதமென்பதை அவர் தரவுகளோடு நிறுவுகிறார்.இன்றைய இளைஞர்கள் இதைக் கற்றுக்கொண்டாக வேண்டும்.புலியினது கருத்து வளையத்துள் மாட்டுப்பட்டுக் கிடந்த இந்தத் தலைமுறை, அந்த விலங்கையுடைத்து வெளிவர வேண்டுமென்பதே எமது பாரிய அவா!

தமிழ்ப் பரப்புள் "பாசிசச் சேட்டையின்" பிதாமகனான பெருங் கொடுமுடி பிரபாகரன் அழித்தொழிக்கப்பட்ட பின்பும் அவனது எஜமானர்கள் தத்தமது செல்வத்தை, பதவியை,அரசியல் இருப்பை வைத்துத் இன்றும் தமிழ் தேசியவாதக் கோசம்போட்டு மக்களைத் முட்டாளாக்கி அழிப்பதே தொடர்கதையாகிறது.

கூட்டணியின் முற்றிய வடிவம்,ஆயுதத்தால் பெருத்தூதிப் பாசிசப் புலியாகியபோது அதன் அழிவோடு தமிழ் பேசும் மக்களில் கணிசமானோர் அழிந்து போவரென அன்று இடதுசாரிகள் ஓங்கிக் குரல் கொடுத்தனர்.இந்த விபரீதமான அழிவரசியலை விட்டு மக்கள் நலன்சார்ந்த-பெரும்பகுதி மக்களது நலனோடு பிணைந்த அரசியலை வற்புறத்தியபோது தமிழ் தேசியவாதிகளும்,கள்ளக் கூட்டணியும் வழமைபோலவே அந்நிய ஏகாதிபத்தியத்தின் தயவிலும்,அதன் எடுபிடிகளின் நலனிலும் வாழ முயற்சித்தது.

வந்து தொடரும் இந்த அழிவு அரசியலை நிறுத்தி,வரலாற்றில் தமிழ்பேசும் மக்களை மானத்தோடு வாழ வைத்திருக்கக் கூடிய பாண்டா-செல்வா ஒப்பந்தமானது இத்தகைய ஏகாதிபத்தியக் கைக்கூலிகளாலேயேதாம் காட்டிக்கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அதன் பலாபலனானது இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்து, முழு இலங்கையையும் அந்நியத் தேசங்களுக்கு அடிமையாக்கும் பொறிக்குள் சிக்கியதென்பது இந்தத் தமிழ் தேசியக் கள்ளரது அரசியலோடே சாத்தியமாகிறது.


தொடர்ந்தும் இவர்கள் மேற்குலக ஏகாதிபத்தியங்களது தயவில் இலங்கை மண்ணைக் காட்டிக்கொடுத்துச் சலுகைகள்-வரி விலக்குகளைத் தமது மேற்குலக நிதியீடுகளுக்குப் பெறுவதில் நோக்கமாகவே நாடு கடந்த "தமிழீழ அரசு" அமைத்தியங்குகின்றனர்.

நாம்,இந்த அரசியலைப் பல கோணத்தில் வைத்து உடைத்துப் பார்த்தாகவேண்டும்.அந்நியச் சக்திகள் பலதரப்பட்ட சக்திகளை இப்போது ஊக்குவிக்கிறது.இவைகளது தயவில் இலங்கை மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகப் பல பெருச்சாளிகள் களமிறங்கியுள்ளன.இவைகளைத் தொடர்ந்து , தமிழ்பேசும் மக்கள் மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைத்துச் சிறுபான்மை இனங்களும் ஏமாற்றப்பட்டு, அடிமைகளாக ஏலம் விடப்படுகின்றனர். ஆளும் வர்க்கங்களுக்குக் காட்டிக்கொடுப்பதென்பது தமது நிதிகளுக்கான நலத்தின்பாற்பட்டதென்பதால் இலங்கையின் உழைக்கும் வர்க்கத்தை - மக்களை ஏலம்விட்டே தம்மால் தமிழரை மொட்டையடித்துச் சேர்த்த  செல்வத்தை மேற்குலகில் காத்துக்கொள்கின்றனர்.

இத்தகைய தமிழ்தேசிய அரசியலானது எப்படிப் பண்டா-செல்வ ஒப்பந்தத்தைக் நீர்த்துப்போக வைத்ததென்பதைச் சில விளக்கங்கள்வழி புரிவதும்  அவசியமானதுதாம்.

திரு.பண்டாரநாயக்க இலங்கைத்தேசிய முதலாளியத்தின் அரசியற்றலைவர்,ஏகாதிபத்யத்திற்கெதிரான மூன்றாவது உலக அணியினது ஸ்தாபகர்களிலொருவரான இவர், ஏகாதிபத்ய தாசர்களான தமிழர் தரப்பு செல்வாவுடன் போட்ட ஒப்பந்தம் நமது பிரச்சனைக்குத் தீர்வையன்றே தந்திருக்க நேர்ந்திருக்கும்,ஆனால் சிங்கள ஏகாதிபத்ய தாசர்களான யூ.என்.பி. கட்சியும் ,ஜே.ஆர்.ஜெயவர்தனாவும் அவரது காடைக் கூட்டமும் 1958 இல் போட்ட இவ் ஒப்பந்தத்தை 'பண்டா சிங்களவரையும்,ஸ்ரீலங்காவையும் செல்வாவிடம் விற்றுவிட்டார்'என்ற பொய்யுரைப்போடு எதிர்த்துக் களனியிலருந்து கண்டிக்குப் பாதயாத்திரை செய்து, பண்டாவுக்கு அரசியல் நெருக்கடியைக் கொடுத்தார்.

இந்தச் சூழலில் பண்டாவுக்குப் பக்கப்பலமாக இருக்கவேண்டிய தமிழர் தரப்போ இதற்கு ஆப்பு வைத்துத் தமது ஏகாதிபத்ய எஜமானர்களுக்குச் சேவை செய்தார்கள்.சிங்கள ஏகாதிபத்யக் கைக்கூலி ஜே.ஆர்.செய்த அதே வேலையை தமிழ் தலைமையும் செய்தது(தமிழ்ப் பிரதேசமெங்கும் சிங்கள எழுத்துக்களை தார்பூசியழித்ததும்,அங்கு வாழ்ந்த சிங்களவர்களை வெருட்டியடித்ததும்).இந்த ஈனத்தனத்தால் பண்டா ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.இந்த வெற்றிகரமான நாடகத்தை நடாத்திய அமெரிக்கா சிறிது காலத்தில் பண்டாவையே கொன்று, இலங்கையில் தேசிய முதலாளித்துவ வளர்ச்சிக்கு முடிவுகட்டியது! இந்த நாடகத்தில் பாத்திரங்களாக நடித்த யூ.என்.பி.யும்,தமிழரசுக் கட்சி செல்வா தலைமையும் ஏகாதிபத்யங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளே!

தமிழ்தேசிய அரசியலானது இத்தகைய ஆளும் வர்க்கக் கைக் கூலித் தமிழர் மகாசபை, தமிழரசுக் கட்சி,தமிழர் கூட்டணி,தமிழீழ விடுதலைப் புலிகளென காலத்துக்குக் காலம் வடிவமெடுத்தபோது அவை மக்களது உயிரோடு பேராபத்தான அரசியலை முன்னெடுக்கின்றனவென்று கூறியவர்கள் மக்களது நலன்களோடு பின்னப்பட்ட இடதுசாரிகளே.என்றபோதும், சதிகாரத் தமிழ் தேசியக் கள்வர்களது வரலாறானது மக்களது குருதியால் எழுதப்பட்டு விட்டது.

முள்ளி வாய்க்காலில் அவர்களுக்குச் சமாதி கட்டிய சிங்கள ஆளும் வர்க்கமானது முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் அடிமைகொள்வதற்கு வழியேற்படுத்திய இந்தத் தமிழ் தேசிய அரசியலானது எவ்வளவு கொடுமையானது!

ஆனால்,தமிழ்பேசும் மக்களை அழித்துச் செல்வங்கண்ட புலிப்பினமாமித் தேசியவாதிகளோ இன்று அமெரிக்கா,கனடா,ஐரோப்பாவெனவும்,அவுஸ்ரேலியா வரையும் பல இலட்சம் கோடி டொலர்களை முதலீடு செய்து நடாத்தும் வர்த்தகமானது இந்த அப்பாவித் தமிழர்களது உயிராலும்,குருதியாலும் ஈட்டப்பட்டது. அவர்களது அழிவில்"தமிழீழம்"சொல்லிச் சொத்துச் சேர்த்த தமிழ்த் தேசிய வாதிகள் இன்று தமக்கும் இந்த வரலாற்றுத் துரோகத்துக்கும் எந்தத் தொடர்புமற்றதுபோல் பெரும் கோடீஸ்வரக் குடும்பங்களாக உலகில் வலம் வருகின்றனர்.

புஸ்பராசாவின்"ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்ற பொய்ச் சாட்சியத்தின் மீதான தமிழரசனது விமர்சனமானது தமிழ் தேசிய வாதமானது வரலாற்றில் எத்தகைய பண்போடும்,அரசியல் இலக்கோடும் எவருக்காகச் செயற்பட்டதென்பதைத் தோலுரிக்கிறது.

வரலாற்றில் உண்மைகளைப் புதைக்க முனையும் தமிழ் தேசிய வாதிகள் எப்பவும்போலவே தமது வால்களை வைத்துப் புனைவுகளைக் கட்டவிழ்த்துவிடுகின்றனர்.அத்தகைய புனைவை கூட்டணியினது வாலான புஸ்பராச-புஸ்பராணி குடும்பங்களானது அவிழ்த்துவிடும்போது அதைப்"போராட்ட முன்னோடிகளது "சாட்சியமாகவூதிப் பெருப்பித்துக் காட்டும் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கமானது தமிழ்பேசும் மக்களை இந்த எல்லையில் வைத்து ஒடுக்க விரும்புகிறது.

அவர்களைத் தொடர்ந்து தமிழ்தேசியத்தால் காயடிக்கும் அரசியலானது அதற்கு வெளியில் மக்கள் திரள் போராட்டம் மையங்கொள்வதை அநுமதிப்பதில்லை!. சேர்த்த செல்வத்தைத் தொடர்ந்து பெருப்பிக்க முனையும் அரசியலோடு தமிழ்பேசும் மக்களது அடிமை வாழ்வு பின்னப்பட்டுள்ளது.அதை உடைத்துப் பார்க்கவும்,அதிலிருந்து மீண்டு, நமது தலைவிதியை நாமே தீர்மானிக்கவும் தமிழரசன் தொடர்ந்து பல வரலாற்றுவுண்மைகளோடு பேசுகிறார்.

அன்புடையோரே,உண்மைகளோடு கைகோருங்கள்!,அவை,நம்மைக் குருதியாற்றிலிருந்து மீட்டெடுத்து வரலாற்றில் நீதி, நெறி,உரிமையுடைய மக்களாக வாழவைக்கும்.

இதைத் தவிர வேறு மார்க்கம் இருக்கின்றதெனில் அதைக் கண்டடையும் வழிகளையாவது அந்நியக் கைக்கூலிகளைத் தாண்டி இனம் காண்பிப்பது தமிழ் தேசிய வாதிகளது கடமை.ஆனால்,அவர்களது கூட்டே அந்த எல்லைக்குட்பட்டதென்பதும்,மக்களுக்காகத் தாம்"தியாகம்"செய்தவரென்றும் பொய்யுரைத்தே இலட்சக்கணக்கில் மக்களை அழித்துவிட்டும், குண்டி மண்டைத் தட்டுவதுபோல் தட்டிவிட்டு நகரும், கபோதிகளிடமிருந்து நியாயமா நமக்குக் கிடைக்கும்?

இன்று, இத்தகைய கயவர்கள்,புலிப் பாசிசத்தின் முன் மௌனித்துவிட்டு,சண்முதாசன்புத்தகவெளியீடு ,அந்த வெளீயீடு-இந்த வெளீயீடெனத் தம்மை மெல்ல இணைத்து மீள மக்களை அண்மித்து மொட்டையடிக்க வலம் வருகின்றனரே,அதையும் இனம் கண்டு முறியடிக்க இந்த நூல் விமர்சனம் ஒரு கல்லைத் தூக்கிப்போடுமானால் அது வரலாற்றில் நமது விலங்கையொடிக்கும் முன்னகர்வுக்கு ஒரு சிறு பொறியாகும்.

தொடருங்கள்...

அன்போடு,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.07.2012



ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - நூல் விமர்சனம்- 6

6:

 இட்டாருக்கு இடவும் செத்தாருக்கு அழவும் தெரிந்த வலதுசாரி காரியவாதி புஸ்பராசா:

மற்றெல்லோரையும் விட போராட்டத்தில் தானே அதிகம் பாரம் சுமந்து துன்பப்பட்டவராய் பாவனை காட்டும் புஸ்பராசா, 1981 இல் கீரிமலைக்கு தமது திணைக்களத்திற்கு ஆதரவு தேடி வந்த சந்ததியாரை தான் வெளியேற்றியதை பெரும் விலாசமாக எழுதியுள்ளார். அமிர்தலிங்கத்தின் சீடரால், தமிழரசுத்தந்தையின் மைந்தரால் இதைவிட வேறு எப்படி நடந்து கொள்ள முடியும்?


 இங்கு சந்ததியாரை பகைவராகவே காட்டுகின்றார். அவரைப்பற்றி எதிரியைக் குறித்து எழுவது போலவே எழுதுகின்றார். புஸ்பராசாவைப் பொறுத்து கூட்டணிக்கு எதிராக சிந்திப்பது அமிர்தலிங்கத்திற்கு மாறாக கருத்துக் கொண்டிருப்பது மாபெரும் குற்றமாகும். தனக்கும் சந்ததியாருக்குமான முரண்பாடு அரசியல் சார்ந்தது என்பதை கடைசி வரை அவர் சொல்லவில்லை. சந்ததியாரை அதிகம் பேசுபவராக கொச்சையாகக் காட்டுவதன் மூலம் அரசியல் உள்ளடக்கத்தை, கருத்துக்களை தந்திரமாய்த் தவிர்த்து விடுகிறார். சந்ததியார் பேச்சாற்றல், வாதிடும்திறன் கொண்டவர். அது புஸ்பராசாவின் கூட்டணி மேடைப் பேச்சுக்களைப் போன்ற தேசியவாதத்தின் பழந்திரட்டல்களல்ல. ஐயம்கொள்வது, ஆராய்வது, தன் கருத்திற்காக கலகம் புரிவது, இடதுசாரிகளின் பண்பாகும். ஆனால் புஸ்பராசா போன்றவர்கள் அமிர்தலிங்கங்ளில், பிரபாகரன்களில் கூட தம்மை கரைத்துக் கொள்ளக் கூடியளவிற்கு தனித்துவமான சிந்தனைவளமோ, சுய இயல்போ இல்லாதவர்கள.


சந்ததியார் கொலை செய்யப்படுவற்கு சில நாட்களுக்கு முன்பு தன் அரசியல் நண்பரொருவருடன் விவாதித்தபோது, சந்ததியார் தனது உயிர் பாதுகாப்புக் குறித்த கவனயீனமாக  இருப்பதாக அந்த நண்பர் எச்சரித்தார். அப்போது சந்ததியார் "நான் உயிருடன் இருந்தாலும் PLOT அழியும், என்னை அவர்கள் கொன்றாலும் PLOT அழியும்" என்று அந்த நண்பருக்கு பதில் சொன்னார்.


காந்தியம் அமைப்பினை ஆரம்பிப்பதற்கு முன்பாக KC நித்தியானந்தா போன்ற TRRO வைத் தொடக்கிய இடதுசாரித் தொழிற்சங்கவாதிகளுடனும் சந்ததியாருக்கு தொடர்பு இருந்தது. பின்பு காந்தீயம் ஆரம்பித்த போது டேவிட், டொக்டர் ராஜசுந்தரம், டொக்டர் நந்தினி போன்றவர்களுடன் இணைந்து காந்தீயத்தில் அவர் உழைத்தார். கூட்டுப் பண்ணைகளில் வேலை செய்யத் தொடங்கினார். த.இ.பே சேர்ந்த இளைஞர்களையும், பெண்களையும் இவர் அகதிகள் மத்தியிலான வேலைகளில் ஈடுபடுத்தியதுடன் தானும் இணைந்து வேலை செய்தவர். தமிழ் மகளிர் பேரவையைச் சேர்ந்த கனகராணி, கருணாதேவி போன்றவர்கள் இவற்றில் நீண்ட காலமாக பணி புரிந்தனர். பாலமோட்டை, நெடுங்கேணிக்கு அண்மையில் உள்ள நாவலர்பண்ணை கென்பாம், மணியர்குளம், கல்லாறு, கணேசபுரம, கூழாங்குளம் அகிய இடங்களில் காந்தியத்தின் புனர்வாழ்வுத்திட்டங்கள் இயங்கின.


சந்தியார் மலையகத்தமிழ் அகதிகளுடன் சேர்ந்து காடுகளை வெட்டினார். அகதிகளின் குழந்தைகட்கு பாடம் நடத்தினார். பல மைல் தூரம் பொதிகளைச் சுமந்தபடி நடந்தார். எளிமையும், மனதாபிமானமும் இரக்கமும் கட்டுப்பாடும் கொண்டவராக இருந்தார். புஸ்பராசா போன்றவர்கள் இத்தகைய வாழ்க்கையை ஒருபோதும் அனுபவித்திராதவர்கள. அமிர்தலிங்கம் காந்தியத்தில் இருந்து சந்ததியாரை வெளியேற்ற வேண்டும் என்று அந்த அமைப்புக்கு நெருக்கடிகள் கொடுத்தார். காந்தியம் அமைப்புக்கு வந்த உதவிகளை த JR [ஜெயவர்த்தனா ]  இன் உதவியுடன் அமிர்தலிங்கம் தடுத்து தாமதிக்க வைத்த சம்பவங்களும் நடைபெற்றன. காந்தியத்திற்கு வந்த 'திரிபோசா' மாவைக்கூட அமிர்தலிங்கம் தடுத்தார் என்று சொல்லப்படுகின்றது. யாழ்குடாநாட்டிற்குள் ஆனையிறவுக்கு அப்பால் சுற்றிச் சுழன்ற புஸ்பராசாவிற்கு இவைகளோடு ஒட்டுறவில்லை. அவர் ஒட்டுமொத்தமாய் 'யாழ்ப்பாணியத்தின் புதல்வர்'

இறைகுமாரன் - உமைகுமாரன் கொலை:

இறைகுமாரன் - உமைகுமாரன் கொலைக்கு சந்ததியாரே காரணம் குற்றச்சாட்டை புஸ்பராசா எழுதியுள்ளார். அதுசார்ந்த உண்மைகள் ஆதாரங்கள் குறித்தான கவலை எதுவும் அவரிடம் இல்லை. சந்ததியார் மீதான கூட்டணிக்காலத்துக் கோபங்கள், தமிழர் இளைஞர் பேரவை காலத்தைய பகைமைகளை புஸ்பராசா தீர்த்துக் கொள்கிறார். இறைகுமாரன்- உமைகுமாரன் கொலைக்கு காரணம் சுந்தரம் என அழைக்கப்படும் சிவசண்முகமூர்த்தியின் கொலைபற்றிக் கவனயீனமாகப்  புஸ்பராசா எழுதாமல் விடவில்லை. அதைக் குறிப்பிட்டால் இறைகுமாரன் - உமைகுமாரன் கொலையானது சில அடிப்படை நியாயங்களை பெற்றுவிடும் என்று புஸ்பராசா அஞ்சியிருக்கிறார்.


புஸ்பராசாவின் எழுத்தை வாசிப்பவர்கட்கு சுந்தரத்தின் ஞாபகமும் கூடவே வரும். என்று புஸ்பராசாவிற்கு தென்படவில்லையா? சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பெயரும் அடிபட்டது அல்லது சம்பந்தப்பட்டதை புஸ்பராசா அரங்கம் ஏற விட விரும்பிவில்லை. இங்கு நாம் புஸ்பராசா தணிக்கைக்குட்படுத்திய சுந்தரத்திலிருந்தே இறைகுமாரன் - உமைகுமாரன் கொலையின் நபர்களைத் தேட வேண்டும்.


சுந்தரம் மிகச்சிறந்த இராணுவத்திறன் கொண்டவர் என்பது மட்டுமல்ல முதன் முதலில் தமிழ் தேசிய விடுதலைக்கு இடதுசாரிப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்களில் ஒருவருமாகும். சுந்தரம் இந்தியாவில் பயின்ற காலத்தியே இந்திய நக்சலைட்டுக் குழுக்களுடன் தொடர்பு கொண்டவராக இருந்தார். சோசலிச இலட்சியத்தை நோக்கி வளரும் திசையில் இருந்தார். இவர் அமிர்தலிங்கத்தின் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் சந்ததியாரின் நண்பராகவும் இருந்தார். சுந்தரம் த.இ.பே தொடர்புள்ளவராக இல்லாத போதும் காந்தியத்தின் அகதிகள் குடியேற்றத்துடன் தொடர்புள்ளவராகவும் சந்ததியாரின் அரசியல் கருத்துக்களை பங்கிட்டுக் கொண்டவராகவும் இருந்தபடியால், இவரும் சந்ததியாரைப்போலவே அமிர்தலிங்கத்தால் வெறுக்கபட்டவராகவும் இருந்தார். இருவரையும் கொம்யூனிசத்தை பரப்பும் ஆபத்தான நபர்களாக அமிர்தலிங்கத்தால் எங்கும் அபாய அறிவிப்புச் செய்யப்பட்டு இருந்தனர். இச்சமயத்திலேயே புலிகள் அமைப்புக்குள் குழுக்கள் தோன்றி சுந்தரம் போன்றவர்கள் புதிய இயக்கமொன்றினை அமைக்க முயன்று வந்தனர். அப்போது அண்ணன் அமிர்தலிங்கம், தம்பி பிரபாகரனும் அன்னியோன்யமாக இருந்த காலம்; மங்கயற்கரசி அமிர்தலிங்கம் பிரபாகரனுக்கும் முட்டை பொரித்ததுக் கொடுத்து உபசரித்த காலம்.


சுந்தரம் கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தளபதி அமிர்தலிங்கம் அவர்களினால் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் மாவை சேனாதிராசா, இறைகுமாரன் ஆகியோருடன் ஒரு செய்திப்படி புஸ்பராசாவும் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் "சுந்தரத்தைத் தம்பி பார்த்து கொள்வான் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்" என்று அமிர்தலிங்கம் கூறினார். இறைகுமாரன் பல வருடங்கள் த.இ.பே. [தமிழ் இளைஞர் பேரவை] இலிருந்த காலத்தில், சந்தியாருடன் இணைந்து அமிர்தலிங்கத்தை கடுமையாய் விமர்சித்தவர். பின்பு அமிருடன் இணைந்து உத்தியோகமும் பெற்றுக் கொண்டதுடன் பிரபாகரனின் தீவிர ஆதரவாளராகவும் மாறினார்.


சுந்தரம் 'புதிய பாதை' என்ற பத்திரிகையை நடாத்தி வந்தார். வவுனியா பிரதேசத்தில் சுந்தரம் தலைமறைவு இயக்கத்திற்கு காலூன்ற முயன்று வந்தார். கூட்டணி வவுனியா நகர மண்டபத்தில் தனது பொதுசபைக் கூட்டத்தை கூடிய போது சுந்தரமும் ஏனைய இளைஞர்களும் அதன் முன்பாக கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் ஒருபகுதி இளைஞர்கள் உண்ணாவிரதமும் அதன் முன்பு இருந்தனர். சுந்தரம் அரசியல் ரீதியில் முன்னேறி வந்ததுடன் இலங்கை அரசபடைகட்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளையும் திறம்பட நடத்தியிருந்தார், இச்சமயத்திலேயேதாம் சுந்தரம் கொல்லப்பட்டார்.


சுந்தரம் அணியில் இருந்து கொண்டே வி.பொன்னம்பலத்தின் மகனான மாவலி, சுந்தரம் பற்றிய   தகவல்களைப் புலிகளின் ஆதரவு நபரான இறைகுமாரனுக்கு  வழங்கி வந்துள்ளார். இன்னோர் இயக்கத்தில் தனது உளவுகளை அனுப்பி உளவறியும் தொழிலை புலிகள் அன்றே தொடங்கி விட்டனர்.


சுந்தரம் கொல்லப்பட்ட தினம் காங்கேசன்துறையில் இருந்து சுந்தரத்தைத் தொடர்ந்து வந்த உமைகுமாரனின் நெருங்கிய கூட்டாளியான புராந்தகன் கொக்குவில் புகையிரநிலையத்தில் இறங்கிய போது உமைகுமாரன் தனது மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிச் சென்றுள்ளார். பின்பு அதே உமைகுமாரனின் மோட்டார் சைக்கிளில் வந்த சாள்ஸ் அன்ரனி, சித்திரா அச்சகத்தடியில் வைத்துச் சுந்தரத்தை சுட்டான் என்றே கூறப்படுகின்றது.


இறைகுமாரன், உமைகுமாரன் போன்றோர் சுந்தரம் கொலையினை எப்போதுமே நியாயப்படுத்தி வந்தார்கள். இருவரும் அமிர்தலிங்கம்; பிரபாகரன் இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர்களாக அப்போது இருந்தார்கள். சந்ததியாரும் இந்தியாவில் ஒரு முறை பிரபாகரனால் கடத்தப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு கொல்லப்படும் வேளையில் தப்பினார். அமிர்தலிங்கம் பிரபாகரன் கூட்டுச் சதியால் தான் சுந்தரத்தின் கொலை நிகழ்ந்தது.


1982 மே மாதத்தில் இறைகுமாரன் - உமைகுமாரன் இருவரும், அளவெட்டியில் கொலை செய்யப்பட்டார்கள். PLOT ஐச் சேர்ந்த பெரிய மெண்டிஸ் என அழைக்கப்படும் பாலமோட்டை சிவம் தலைமையில் சென்ற பாபுஜி, கந்தசாமி (சங்கிலி), மூர்த்தி, மன்னா (அற்புதம்), மீரான் வாத்தி (சத்தியதாசன்), செந்தில் ஆகியோரைக் கொண்ட குழுவே இக்கொலையைச் செய்தது.

[சுண்முகதாசனின் நூல் வெளியீட்டை புலிக்குமுன் மௌனித்து ஒப்புதல் கொடுத்த பாசிசக் காதலர் ஆரம்பித்து வைக்க...]

இறைகுமாரனையோ, உமைகுமாரனையோ கொல்லும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை என்றும், ஆட்களை விசாரித்து சுந்தரம் கொலை தொடர்பாகத் தகவல் பெறுவதே நோக்கமாக இருந்தது எனவும் உமைகுமாரன் எதிர்ப்புக் காட்டி திருப்பி தாக்கியதாலேயே கொல்ல வேண்டி வந்ததாயும், கொன்றவர்கள்  பிற்காலத்தில் விளக்கம் சொல்லியுள்ளார்கள். இது பொதுவாக ஏற்கக்கூடியவாதமல்ல. ஏனெனில், சுந்தரத்தின் தீவிர அபிமானியான பெரிய மெண்டிஸ் சுந்தரத்தின் உடல் எரிக்கப்பட்ட சாம்பலை எடுத்து வைத்திருந்தாகவும், மற்றொரு சுந்தரத்தின் நெருக்கமானவரான செந்தில் மிஞ்சிய எலும்பு ஒன்றை தனது கழுத்தில் கட்டியிருந்ததாயும், சுந்தரத்தின் கொலைக்கு காரணமானவர்களைப் பழிவாங்காமல் விடுவதில்லை என்று அவர்கள் சபதம்  பூண்டிருந்ததாகவும் தெரிகிறது. பின்பு, இவர்களே இறைகுமாரன் - உமைகுமாரனை அளவெட்டி "பினாக்கைவெளி" யில் சுட்டுக் கொன்றனர்.


இக்கொலைகளில் சந்தியாருக்கு உண்மையில் எதுவித தொடர்பும் இருக்கவில்லை. அவருக்கு தெரியாமலே இது நடைபெற்றது. இதற்கு பல தொகை ஆதாரங்கள் உண்டு. பழைய இடதுசாரியும், சிறிது காலம் PLOT அமைப்பிலிருந்தவரான சண்முகலிங்கம் இக்கொலைகளோடு சந்ததியாருக்கு எந்தவித சம்பந்தமும் இருக்கவில்லை, இது நடந்த பின்பே இவருக்கு தெரியும், இறைகுமாரனின் கொலைக்காக அவர் மிகவும் வருத்தமடைந்தார் என்று, இன்று நினைவு கூர்கின்றார்.


 PLOT இல் உட்கொலைகள் நடைபெற்ற போது தப்பி வந்தவரான ரஜீன்குமார் இது பற்றிக் கூறுகையில், ஒரு முறை PLOT முகாம் ஒன்றில் இந்தியாவில் சந்ததியாருடன் நடந்த கலந்துரையாடலில் இறைகுமாரன், உமைகுமாரன் கொலை பற்றி சந்ததியாரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது " இது இயக்கத்திற்கு தெரியாமலே நடந்தது. இக்கொலைகட்கு காரணமானவர்கள் இயக்கப் பதவிகள் பறிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்" என்று கூறியதுடன், கூட்டத்தில் இருந்த பெரியமென்டிஸைச் சுட்டிக்காட்டி " இவர்தான் இதில் சம்பந்தப்பட்டவர், அவரிடம் நீங்கள் இதுபற்றிக் கேட்கலாம்" என்று சொன்னதையும் ஞாபகப்படுத்துகின்றார்.


இறைகுமாரன், உமைகுமாரன் கொலை பற்றிய பிரச்சனையை கூட்டத்தில் எழுப்பியமைக்காக ரஜீன்குமார் மீது ஆத்திரமடைந்த பெரிய மென்டிஸ் "உன்னை இலங்கைக்கு போகும்போது பார்த்துக் கொள்கிறேன்" என்று ரஜீன்குமாரை எச்சரித்துள்ளார். ' புதியதோர் உலகம்' நூலில் அளவெட்டி உமைகுமாரன் - இறைகுமாரன் பற்றிய செய்தியும் வருகிறது. அந்தக் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் " நாம் பெரியய்யாவின் ஆட்கள்..இறை, உமைகுமாரனுக்கு நடந்தது தெரியும்தானே ?" என்று PLOT இன் அரசியல் துறையோடு சம்பந்தப்பட்டவர்களை பயமுறுத்தியமை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இறைகுமாரன் - உமைகுமாரன் கொலையில் பங்கேற்ற கந்தசாமி (சங்கிலி) சந்ததியார் கொலையிலும் பங்கெடுத்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஆனால், அமிர்தலிங்கத்தின் நேசரும், தேசியதலைவரைப் பராட்ட பின்னிற் காதவரும், வலதுசாரி தமிழ் தேசியவாதியுமான புஸ்பராசா " சந்ததியார் ஆபத்தான பேர்வழி எல்லோரையும் குழப்பி விட்டு வேடிக்கை பார்ப்பவர், கொலை செய்ய உத்தரவிடுவதில் உமாமகேஸ்வரனுக்கு ஒன்றும் குறையாதவர்" என்று எழுதுகின்றார்.


சந்ததியார் இழைத்த தவறுகள் அரசியல் தவறுகளே தவிர, அவர் கொலைகளோடு சம்பந்தமுடையவர் என்று உமாமகேசுவரானால் கூட குற்றம் சாட்டப்பட்டதில்லை. " ஆட்களை குழப்பிக் கொண்டு திரிபவர்" என்று அமிர்தலிங்கம் சந்ததியாருக்கு முன்பு தந்த ஆசியுரை புஸ்பராசாவும் அதே வார்த்தைகளை வெளியிடுகின்றார். வலதுசாரிகள் அரசியல் ஆழங்களில் இறங்க முடியாதபோது, தம் சொந்த அரசியல் இருப்பு பற்றி சந்தேகங்களால் பீடிக்கப்படும்போது, இடதுசாரிகட்கு பதிலளிக்க முடியாதபோது இப்படித்தான் சத்தமிடுகிறார்கள். அரசியல் நியாயம் பேசுபவர்களை குழப்புபவர்களாக, கலகம் செய்பவர்களாக காண்பிக்கின்றனர்.


சந்ததியார் கொலை பற்றி புஸ்பராசா பேசாமல் விடுவது அதில் அமிர், உமா கூட்டணி செயற்பட்டதையிட்டு மௌனிப்பதும் இறைகுமாரன், உமைகுமாரன் கொலை பற்றி பெரும் இரைச்சலில் சந்ததியார் கொலையை மூழ்கடித்துவிட முயல்கிறார். இறைகுமாரனும் சந்ததியாரும் த.இ.பே இல் நீண்டகாலம் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். இறைகுமாரன் இடதுசாரி அரசியலை தொடமுயன்றவர். தொழிலாளர் பாதை போன்ற இடதுசாரிக்கு குழுக்களுடன் ஒரு காலத்தில் அரசியல் உறவு கொண்டிருந்தவர். ஆனால் சூழவுள்ள தமிழ் தேசியவாதப் போக்குள்ளே அவர் நின்று பிடிக்க முடியாமல் பிரபாகரன் போன்ற பாசிஸ்டுகளின் பின்பு இழுபட்டார். காந்தீயம் தமிழ் பகுதிகளில் 'பாரதி விழாவை' நிகழ்த்திய போது யாழ்ப்பாணம் பகுதியில் அதை ஒழுங்கு செய்யும் பொறுப்பை பல எதிர்ப்புகட்கு மத்தியில் சந்ததியார் இறைகுமாரனுக்கு வழங்கினார். இறைகுமாரனின் கடைசிக்கால அரசியல் ஈழவேந்தன், கோவை மகேசன் போன்ற தமிழ் தேசிய வாதத்தின் இறுதி நிலைக் கழிசடைகளோடு உறவு பூணும் வரை சென்றது.



துரையப்பா:

"துரையப்பா துரோகி!"  என்ற கூட்டணிக்குரல் இன்னமும் புஸ்பராசவிடம் மாறவில்லை. இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக புகலிடத்தில் வாழ்ந்தும், ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகத்தின் மாற்றுக் கருததுச் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டும், இலக்கிய சந்திப்புக்களில் அதிகாரத்துவ எதிர்ப்பு, பன்மைவாதக் கருத்தியல் ஆதரவு பேசிக் கொண்டுமிருக்கும் புஸ்பராசா தமிழ்த்தேசியம், கூட்டணி என்ற தன் இரண்டு கண்களையும் இழக்கத் தயாராக இல்லை.

'துரையப்பாவை துரோகி' என்றும், கூட்டணியின் தமிழ்தேசியத் திருடர்களை தியாகிகள் என்பதும் காலம் கடந்த கூட்டணிக்கால தமிழ்த்தேசியவாத அரசியல், இளம்பருவக் கோளாறு, பிஞ்சுப் புலம்பல் என்று அவருக்கு இன்றும் கூடத் தோன்றவில்லை.


பழைய சக்கேறிய சிந்தனைமுறை மாறவில்லை. கூட்டணி போன்றே துரையாப்பாவும் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதி. தன்வர்க்கம் சார்ந்து நின்றவர். தன் நலன்களை முதன்மைப்படுத்தியவர். இப்படியிருக்க கூட்டணியினர் தியாக சொருபங்களாகவும் துரையப்பா துரோகியாகவும் சித்தரிப்புக்குள்ளானது கூட்டணி ஜனநாயக உணர்வு வரண்ட சர்வாதிகார தமிழ் தேசிய விளக்கப்படிதானே தவிர வேறு எதுவுமல்ல.


கூட்டணியோடு ஒப்பிடுகையில் துரையப்பா யாழ்ப்பாண நகரில் மட்டும் கோலோச்சிய நபர்.ஆனால் ,கூட்டணியோ வடக்குக் கிழக்கில் கட்சி கட்டி நின்ற பெரிய அமைப்பு. ஆள்,அணி பிரச்சாரபலம் அதனிடம் இருந்தது. அகிம்சை பேசிய கூட்டணி ஏன் சாதாரண ஜனநாயக வழி அரசியலில் துரையப்பாவை தோற்கடிக்க முடியவில்லை? ஏன் இளைஞர்களை தமது பேச்சின் மூலம் ஏவி விட்டனர்? மறைமுக ஆதரவு தந்தனர்? துரையப்பாவை துரொகி, துரோகி என்று கூட்டணிதான் இளைஞர்கட்கு திரும்பத் திரும்பக் கற்பித்தது. இன்றைய புலிகளின் துரோகி, தேசத்துரோகி, மாவீரர் என்ற பாசிச நியாயங்கட்கான மூலங்கள் கூட்டணியிடம் இருந்தே தோன்றின என்பது புஸ்பராசவிற்கு ஞாபகம் வருவதில்லை.


துரையப்பா கொலைக்கு தான் மட்டுமல்ல மக்களும் மகிழ்ந்தாக புஸ்பராசா எழுதுகின்றார்:

மாற்றுக்கருத்தியங்களை கொலையூடாக அகற்றும் அதே அரசியல் கலாச்சாரம் தான் புஸ்பராசாவின் தலைவர் அமிர்தலிங்கத்தையும் அவர் நண்பர் சபாலிங்கத்தையும் கூடக் கொன்றொழித்தது.

தமிழ் துரோகிகளைப் பற்றி மேடைதோறும் பேசி வந்த அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மதிமுகராசா, சிவமகாராசா, ஆலாலசுந்தரம், தருமலிங்கம் என்று ஒரு தொகைக்கணக்கு இல்லாத கூட்டணி நபர்கள் துரோகி என்று அழிக்கப்பட்ட வரலாறு இன்றிருக்கிறது. 

துரையப்பாவின் கொலையில் மக்கள் மகிழ்ந்தார்கள் என்று புஸ்பராசா எழுவது உண்மையல்ல. உண்மையில் மக்கள் திகிலடைந்தனர். இது எந்ததிசையில் செல்லுமோ என்று குழம்பினர். யாழ் நடுத்தரவர்க்கத்தின் ஒரு பகுதி இதை கெட்டித்தனமான வேலை என்று கருதியபோதிலும் துரையப்பாவை அறிந்த பெரும் பகுதி யாழ்ப்பாண மனிதர்கள் பெரிதும் வருந்தினர் என்பதே உண்மை.

திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கூட "இவங்கள் தொடங்கி விட்டாங்கள்;இது எங்க போய் முடியுமோ[?] " என்று சொன்னதாய் கூறப்படுகின்றது. எந்த துப்பாக்கிகள் துரையப்பாவைச் சுட்டனவோ அவையே இடதுசாரிகளையும் சுட்டன, கடைசியாக கூட்டணியிரையும் சுட்டன. துரையப்பா கொல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்த கரையூர், பாசையூர் பகுதிகளில் அஞ்சலிக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அநுதாப பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. நல்லூர் அரசடிச்சந்தியில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த இடங்களில் வாகனங்கள் மறிக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன. கூட்டணியோ த.இ.பே. இனரோ அப்பகுதிகளில் எவரும் நுழைய முடியாமல் இருந்தது. துரையப்பா கொல்லப்பட்டு கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்கு பின்பாக கூட்டணியைச் சேர்ந்த ஆலாலசுந்தரம் அரியாலை நெசவு நிலையத்திலிருந்த துரையப்பாவின் படத்தை அகற்ற முயன்ற போது அரியாலை மக்கள் அதனை ஒன்றுகூடி கடுமையாய் எதிர்த்தனர்.

இன்று ,எவ்வாறு புலிக்கு எதிரான போராட்ட வரலாறு குறித்து முன் வைக்கப்படவில்லையோ அவ்வாறே, அன்று கூட்டணிக்கு எதிரான மக்களின் எதிர்ப்புக்களும் புறக்கணிக்கப்பட்டு கூட்டணி சார்பான வரலாறு மட்டுமே எழுதப்பட்டது.


கூட்டணி தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்த போது துரையப்பா விளையாட்டரங்கு, தபாற்கந்தோர், நூல்நிலையம், நவீனசந்தை ஆகியவற்றை அமைத்ததுடன் தமிழ் அறிஞர்கள், சிந்தனையாளர்கட்கு சிலைகளை நிறுவினர். அதன் மூலம் அவரும் தமிழ் தேசிய உணர்வுகளில் பங்கு கொள்ள முயற்சித்தார். சங்கிலியனை கூட்டணி புகழ்ந்து தமிழரின் முதல் எழுச்சியின் வடிவமாய் காண்பித்தபோது, துரையப்பா சங்கிலியனுக்கு சிலை வைத்தார். துரையப்பா யாழ்ப்பாண நகரத்தை அழகுபடுத்தினார்.

கூட்டணியினரோ எமக்கு இத்தகைய சலுகைகள் அல்ல, உரிமைகள் தான் வேண்டும் என்றனர். கூட்டணியின் சிந்தனைச்சிற்பி, கோப்பாய் எம்.பி கதிரவேற்பிள்ளை "சங்கிலியன் கொழும்பைக் கேட்டுக் கொண்டு தெருக்கள் அமைக்கவில்லை" என்று சொன்னார். ஆனால், இன்றோ கூட்டணி, தமிழரசு முதல் புலிகள் வரை சகல தமிழீழவாதிகளும் "அரசு மருந்து, உணவு தரவில்லை, அதைத் திருத்தவில்லை-இதை அமைக்கவில்லை" என்று சலுகை கேட்டு யாசிக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கான சுயபொருளாதார அமைப்பைக் கட்டுவது பற்றிய ஆரமபத் திட்டம் கூட இன்றுவரை இவர்களிடம் கிடையாது. ஒப்பீட்டு ரீதியில் கூட்டணியின் எம்.பி மாரை விட துரையப்பா நேர்மையானவர், எளிமையானவர். மேயராக இருந்த போதும் வெறும் சாரத்துடன் நகரில் நடமாடும் எவரும் எச்சமயத்திலும் கண்டு பேசக் கூடியவராவர். இத்தகைய நிராயுதபாணியான ஒரு நபரைக் கொல்ல பெரும்வீரம் தேவையில்லை.

இங்கு, புஸ்பராசா கூட்டணிக்கு எதிரான மாற்றுக்கருத்துடைய எவருக்கும் உயிர்வாழும் உரிமையில்லை என்று மறுக்கிறார்:

கருத்தை கருத்தால் அல்ல ஆயுத வன்முறையால் அழித்தொழித்தல் நியாயம் என்று ஏற்றுப் பரப்புகின்றார். கருத்து வலியமையற்றவர்களே கொலையை ஏவுகின்றனர். அதன் மூலம் ஏனையோரை அச்சுறுத்துகின்றனர். துரையப்பா கொலையே அமிர்தலிங்கம் கொலைக்கு முன்னோடி என்று புஸ்பராசா புரிந்து கொள்ளவில்லை. தமிழ் மக்கள் சார்ந்த ஒரு கருத்து மட்டுமே நிலவ முடியும் என்பது சமூகமானது எதிர்கருத்துக்கள் இன்றி இயங்க முடியும் என்ற அரசியல் சூனியத்திற்கு புஸ்பராசாவை அழைத்துச் செல்கின்றது. துரையப்பாவை தமிழீழ விரோதி என்ற ஒதுக்கி வைக்கும் புஸ்பராசா, துரையப்பாவின் அதே கட்சியின் தலைவியும் தமிழீழத்தின் மிக முக்கியமான எதிரியாக கூட்டணியினரால் வர்ணிக்கப்பட்ட சிறிமாவோ பண்டாராநாயக்கவுக்கு கூட்டணி கொடுத்த வரவேற்பையும் தானும் சேர்ந்து பாதுகாப்புக் கொடுத்தமையையும் எந்த முரண்பாடான உணர்வுமின்றி எழுதியுள்ளார்.

கூட்டணி துரையப்பாவை துரோகி என்று சாட்டிய போது, துரையப்பாவோ தமிழரசு, கூட்டணிக்கும்பல்கள் சிங்கள அரசாங்களுடன் சேர்ந்து, ஒத்துழைத்த, பதவிபெற்ற, சலுகைகள் பெற்ற சம்பவங்களை வரிசைப்படுத்தினார்;கூட்டணி அரசாங்கத்திடம் இரகசிய உடன்பாடுகள் செய்ததை வெளியிட்டார்.


கூட்டணி துரையப்பாவின் வாயை மூட விரும்பியது.


கூட்டணி தமக்கு எதிர்ப்பற்ற அரசியல் போக்கை உருவாக்க முயன்றது. புஸ்பராசா போன்றவர்கள் இத்தகைய போக்குகளின் பிரச்சாரகர்களாவர். யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சிக்கோ, கூட்டணிக்கோ செல்வாக்கு குறைந்த பிரதேசமாகவே இருந்தது. தமிழரசுக் கட்சியை சேர்ந்த மாட்டின் 56 வாக்குகள் மட்டுமே மேலதிகமாப் பெற்று ஒரு முறை வெற்றி பெற்றார். அவரும் கட்சியில் நீண்டகாலம் நிலைக்கவில்லை. தனது மனசாட்சிப்படி கட்சியைவிட்டு வெளியேறியதாய்க் கூறினார். அதனால் "மனச்சாட்சி மாட்டின்" என்று தமிழரசுக்கட்சியால் பழிக்கப்பட்டார்.


துரையப்பா யாழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். துரையப்பாவை கொல்ல இளைஞர்கள் முயற்சி செய்து வந்தது அமிர்தலிஙகத்திற்கு நன்கு தெரியும். துரையப்பா கொல்லப்பட வேண்டியவர் என்று அமிர்தலிங்கமும் கருதினார்; அதற்கு ஊக்கமளித்தார்.

துரையப்பாவைக் கொல்ல சிவகுமாரன், ஆனந்தகுமார், கிருபாகரன் ஆகியோர் மட்டுமல்ல அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபனும் முயன்று வந்தார். துரையப்பா ஆதரவுப் பத்திரிகையொன்றில் திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கம் ஆங்கிலப்படம் பார்க்க போன செய்தியை நையாண்டி செய்து எழுதப்பட்டிருந்தமைக்காகத் துரையப்பாவைக் கொன்று பழிவாங்க காண்டீபன் முயல்கிறார் என்ற செய்தி அப்போது நிலவி வந்தது.

துரையப்பாவின் கொலைச் செய்தியை அமிர்தலிங்கம் புன்சிரிப்போடு கேட்டார் என்று சொல்லப்படுகின்றது. துரையப்பா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை கைவிட முடியாது என்று கூட்டணிப் பொதுச்சபை முடிவெடுத்தது. அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நவரத்தினம் போன்றவர்கள் வழக்குகளில் வாதாடினர்.




துரையப்பா கொலை வழக்கில் கைதான இளைஞர்களை சிறையில் சந்தித்த ஈழத்துக்காந்தி, அகிம்சாவாதி செல்வநாயகம் "உங்களுக்கு யார் வழக்கறிஞர்களாக வேண்டும், ஜி.ஜி பொன்னம்பலம் தேவை என்றாலும் நான் ஒழுங்கு செய்து தருகிறேன்" என்று அவர்களிடம் சொன்னார்.


தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிசார் கூட்டத்தைக் கலைக்க வானத்தை நோக்கி சுட்டபோது மின்சார ஒழுக்கு ஏற்பட்டு ஒன்பது பேர் இறந்தனர். இது பொலிசாரின் பொறுப்பற்ற செயலாகும். இந்த ஒன்பது பேரின் மரணமும் துரையப்பா, சந்திரசேகரா இருவரும் இணைந்து செய்த கொலை என்று கூட்டணி வாதித்ததின் மூலம் துரையப்பாவை கொல்ல வேண்டும் என்ற இளைஞர்களது தீவிரம் அதிகமாகியது. அமிர்தலிங்கம் முதல் காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராசா வரை துரோகி ஒழிப்புப் பேச்சுக்கள் வேகமாயின. புதிய இரைகள் தேடப்பட்டன. கூட்டணி தன் அரசியலுக்காக துரையப்பாவை துரோகியாக்கி கொலை நடைபெறுவதற்கான சூழலை தோற்றுவித்தது.

யாழ் மேயரான துரையப்பா திட்டமிட்டு தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு அழைக்காமல் புறக்கணிக்கப்ட்டார். இதன் மூலம் துரையப்பா கூட்டணியால் தீவிர எதிர்நிலைக்குத் தள்ளப்பட்டார். துரையப்பாவைக் கொல்ல கிட்டத்தட்ட மூன்று தீவிரவாதக் குழுக்கள் அப்போ முயன்று வந்தன.


தமிழீழ இலட்சியத்தை எதிர்த்தமைக்காக துரையப்பா துரோகி எனப்பட்டார். இன்று கூட்டணி, புலிகள் இருபகுதியும் தமிழீழ இலட்சியத்தை விட்டு ஐக்கிய இலங்கையுள்தீர்வு, சர்வதேச சமூகம், சமாதானத்தீர்வு, உள்ளக சுயாட்சி, பேச்சுவார்த்தை என்ற அரசியல்போக்குள் செல்லத் தொடங்கி விட்டன. இவர்களை புஸ்பராசா துரோகிகள் என்று அழைப்பதில்லை.


கூட்டணி வட்டுக்கோட்டை மாநாட்டில் சகலரையும் விட முன்னேறி விஞ்ஞான சோசலிச தமிழ் ஈழம் என்றது. 1977 இல் கூட்டணி தேர்தலில் வென்றவுடன் தமிழீழத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்படுவோம் சொந்த தமிழீழ அரசியல் சட்டத்தை அமைப்போம் என்றவர்கள் இன்று புலிகளின் கள்ளவோட்டில் வென்று பாராளுமன்றத்தில் வாழ்க்கை நடாத்துகின்றார்கள். சோசலிசத் தமிழீழம் பேசிய புலிகள் உள்ளக தன்னாட்சிபற்றி பேசத் தொடங்கி விட்டனர். தமிழீழத்தை கைவிட்டதுக்காக அமிர்தலிங்கத்தை சுட்ட பிரபாகரனை இன்று யார் சுடுவது? யார் துரோகிப்பட்டியலில் இடம் பெறச் செய்வது? குருக்கள் குசுவினால் குற்றம் இல்லை என்பதுதான் புஸ்பராசாவின் அரசியலாகும். இட்டாருக்கு இடவும் செத்தாருக்கு அழவும் தெரிந்த வலதுசாரி காரியவாதி புஸ்பராசா.


தமிழாராய்ச்சி மாநாடு:


தமிழாராய்ச்சி மாநாடு தனியே இலங்கையரசு மற்றும் துரையப்பா ஆகியேரோலாயே குழப்பட்டதான தமிழர்விடுதலைக் கூட்டணிக் கதை சொல்லலே புஸ்பராசாவிடமும் எந்தவித மாறுதலுமின்றி வெளியிடப்படுகின்றது. அதில் கூட்டணியின் பங்கு குறித்த மீள்பர்வை அவரிடம் இல்லை. அவருடைய அரசியலிருப்பிற்கு அது தேவைப் படவுமில்லை.


1967 இல் பாரிசிலும் பின்பு மலேசியாவிலும் தமிழாராய்ச்சி மகாநாடுகள் நடைபெற்றபோது அது தமிழ் மொழி சார்ந்த ஆய்வாளர்கள் கலந்து கொண்ட மாநாடுளாக இருந்தன. ஆனால், தமிழ் நாட்டில் சென்னையில் தமிழாராய்ச்சி மாநாடு நடாத்தப்பட்ட போது தி.மு.க அதை தன் அரசியல் மாநாடாக்கியது. தனது தமிழின அரசியலுக்கேற்றதாக மாற்றியது. தமிழராய்ச்சி மாநாடு இலங்கையிலும் அதே கதியையே அடைந்தது.


கூட்டணி தமிழ், சிங்கள முரண்பாட்டை தனக்கு சாதகமான அரசியலாக்க முனைந்தது. தமிழாராய்ச்சி மாநாட்டு நிர்வாகம் முதலில் மாநாட்டை கொழும்பில் நடாத்தவே திட்டமிட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. ஒரு சர்வதேச மாநாட்டை நடாத்துவதற்கான வசதிகள் கொழும்பிலேயே இருந்தன. இந்த நிலையில் கூட்டணியினர் இதனுள் தலையிட்டனர். அதை யாழ்ப்பாணத்திலேயே நடத்த வேண்டும் என்று வாதிட்டதுடன் மாநாட்டு ஏற்பாட்டாளர்களையும் இணங்க வைத்தனர். யாழ்ப்பாணத்தில் நடத்தினால் அது கூட்டணியின் அரசியலுக்கு சாதகமாகி விடும் என்றதால் அரசாங்கம் அதை எதிர்த்தது. இருபிரிவுக்கும் நடந்த இழுபறிகளின் பின்பு யாழ்ப்பாணத்தில் நடத்த அரசாங்கம் வேறு மார்க்கமின்றி ஒப்புக் கொண்டது. இதில் கூட்டணி தான் முதன் முதலாவது வெற்றியை ஈட்டியதாக கருதியது.

யாழ்ப்பாணத்து தமிழாராய்ச்சி மாநாடு ஒரு மொழியாய்வு மாநாடு, அறிவியல் ரீதியில் ஆய்வு செய்யும் நிகழ்வு என்பது போய் கூட்டணிப்பிரச்சாரம், தமிழ் தேசிய உணர்வுகளை தூண்டும் மாநாடு என்ற போக்கை எடுத்தது.

மலிவான தமிழ் தேசிய உணர்வுகளை கிளறக்க கூடிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆய்வறிஞர்கட்கும் மொழியாய்வாளர்கட்கும் பதிலாக தமிழ் தேசியவாதிகளும், பழம் பெருமை பேசுபவர்களும் அழைக்கப்பட்டனர்.


கருணாநிதி முதல் சாலை இளந்திரையன் வரை வரவுள்ளதாய் பேரொலி கிளப்பட்டது. சகல தடைகளையும் மீறி தமிழராய்ச்சி மாநாடு தமிழினத்தின் எழுச்சி மநாடாக நடைபெறும் என்று கூட்டணி அறிவித்தது.


ஏட்டிக்குபோட்டியான காரியங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு அப்போபது அதன் மேயராக இருந்த துரையப்பாவிற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. "தமிழ் துரோகிகட்கு தமிழராய்ச்சி மாநாட்டில் இடமில்லை" என்று கூட்டணி பிராச்சாரம் செய்தது. எனவே, துரையப்பாவும் கூட்டணியின் பெயரால் தமிழராய்ச்சி மாநாட்டிற்கு எதிரானார். இடதுசாரி தமிழ் ஆய்வறிஞர்கள், சிந்தனையாளர்கள் போன்றோர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர்.


பாரிஸ், கோலாலம்பூர் போன்ற மாநாடுகளுக்கு அழைக்கப்பட்ட பேராசிரியார் கைலாசபதி உட்பட இடதுசாரி கருத்துக்களை உடையவர்கள் ஒதுக்கப்பட்டனர். தம் சொந்த மண்ணில் நடைபெற்ற தமிழராய்ச்சி மாநாடு அவர்கள் பங்கு கொள்ளவிடாது கூட்டணி தடை விதித்தது. அவமானப்படுத்தியது. மாறாக, பேராசிரியர் வித்தியானந்தன் போன்ற தேசியவாதிகள், பண்டிதர்கள், புலவர்கள், பழம் தமிழரசுக்கட்சி தமிழனவாதிகள் அழைக்கப்பட்டனர்.

ஆனால், புஸ்பராசாவோ அன்று சுதந்திரன் பத்திரிகை குயுக்தியாய் கைலாசபதி போன்றவர்கள் பகிஷ்கரித்தாய் எழுதியது போன்று இவரும் எழுதுகிறன்றார். தமிழ் காங்கிரஸ்,தமிழர் சுயாட்சிக்கழகம், கொம்யூனிஸ்கட்சி தொழிற்சங்கங்கள், சிறுபான்மை தமிழர் அமைப்புக்கள் என்று கூட்டணிக்கு எதிரான எச்சக்திகளையும் கூட்டணி தமிழராய்ச்சி மாநாட்டில் நுழையவிடவில்லை. எல்லோரும் "தமிழ் துரோகிகள்" என்பதே கூட்டணியின் தீர்ப்பாகும். இதை அவதானிப்பவர்கட்கு இன்றைய புலிகளின் தாம் மட்டுமே தனிப் பெரும் இயக்கம் தமிழ் மக்களின் ஏக தலைமை என்ற குரல்கள் அதிசயமளிக்கமாட்டா!.


தமிழராய்ச்சி மாநாட்டிற்கு இலங்கைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டவர்களில் ஒருவரான இரா.ஜனார்த்தனம் இரகசியமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அவர் கூட்டணியின் உதவியுடன் யாழ்ப்பகுதிகளில் சுற்றி வந்தார். முன்பு தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் அறியப்படாத அநாமதேயமாய் இருந்த ஜனார்த்தனம் இந்த தமிழாராய்ச்சி மாநாட்டின் "சாகசம் மிக்க கதாநாயகன்" ஆக்கப்பட்டார். புஸ்பராசாவோ ஜனார்த்தனம் எந்த மேடையிலும் பேசவில்லை என்கிறார். யாழ்ப்பாணத்தில் கூட்டணி நபர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறு சிறு கூட்டங்களில் ஜனார்த்தனம் பேசினார். அத்தோடு மாநாட்டு மேடையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நயினார் முகம்மது பேசிக் கொண்டு இருந்த போது தான் பொலிசார் தாக்கியதாக புஸ்பராசா பொய் சாட்சியமளிக்கிறார். நடந்தது என்னவெனில் நயினார் முகம்மது பேசிக் கொண்டு இருந்த போது தான் கதாநாயகன் ஜனார்த்தனம் மேடையில் தோன்றினார். உடனே மேடைக்கு முன்பு இருந்த சில கூட்டணி இளைஞர்கள் எழுந்து "ஜனார்த்தனம் வாழ்க" என்று சத்தமிட்டனார். உண்மையில் அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஜனார்த்தனம் யார் என்பது தெரியாமல் தான் இருந்தது. " ஜனார்த்தனம் வாழ்க" குரலையடுத்து கூடியிருந்த மக்கள் ஜனார்தனத்தை பார்க்க எழுந்தனர். எனவே கூட்டம் குழப்ப நிலையை அடைந்தது உடனே ஜனார்த்தனம் "எதிர்வரும் தைப்பொங்கல் போல் தமிழின உணர்வு பொங்குவதை இங்கு நான் காண்கிறேன்" என்று மக்களை உணர்ச்சியேற்றனார். இதனை புஸ்பராசா அறியவில்லை என்பதை நம்பமுடியாது. பல பத்தாயிரம் மக்கள் திரண்டுள்ள இடத்தில் பொலிசாரல் கைது செய்யப்படக் கூடிய நிலையில் உள்ள ஜனார்த்தனம் போன்ற ஒருவரை மேடையில் தோன்ற அப்புக்காத்துமாரின் கட்சியான கூட்டணி எப்படி அனுமதித்தனர்?


மாநாட்டின் ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்துமே கூட்டணியினரிடமும், அவர்களின் இளைஞர்களிடமும் தான் இருந்தது. மாநாட்டுக் குழுவில் பெரும் பகுதியை அவர்களே கைப்பற்றியிருந்தனர். எனவே இது தற்செயலாக நிகழவில்லை. கூட்டணி இந்தப் பரபரப்பை ஏற்படுத்த விரும்பியது. தம்மை வீரத்திற்கு எடுத்துக்காட்டாக காட்டிக்கொள்ள விரும்பியது. ஆபத்தான வெளிப்படையான ஆத்திரமூட்டல்கள் மூலம் பொலிசாரை மக்களுக்கு எதிராக இறக்கிவிட்டது. பகைமை நிறைந்த நிலையில் பொலிசார் தமிழ் மக்களுக்கு எதிராக எப்படி செயற்படுவார்கள் என்பது கூட்டணிக்கு நன்கு தெரியும். தெரிந்தே கூட்டணி இத்தகைய விளையாட்டுக்களை அரங்கேற்றியது. இதில் கூட்டணியின் பாத்திரம் ஏதோ அப்பாவிகளின் பாத்திரமல்ல.

ஜனார்த்தனன் மேடையில் தோன்றியதும் பொலிசார் ஜனார்த்தனத்தை கைது செய்யவும் மேடையை நோக்கி செல்லவும் முயன்றனர். இடையில் தடையாக இருந்த மக்களை வானத்தை நோக்கி சுட்டுக் கலைக்க முயற்சி செய்தனர். அதன் போது மின்சாரத் தொடர்புகள் அறுந்து மக்கள் மேல் விழுந்தன. இது எதிர்பாராமல் நடந்த சம்பவமே எனினும் ஒரு இனவாதப்போக்குக் கொண்ட பொலிசார் மக்களிற்கு எதிராக இறங்கியதில் கூடடணிக்கு எப்பங்கும் இல்லையா?


பொலிஸ் பயங்கரவாதம் சிறிது ஆத்திரமூட்டல் ஏற்பட்டாலும் செயலில் இறங்கிவிடும் என்று கூட்டணியினரின் சட்ட மூளைகட்கு தெரியாதா?


பொலிஸ் இறங்குமாயின் அதற்கு எதிராக பொலிசிடம் இருந்து மக்களை பாதுகாக்க கூட்டணியிடம் தயாரிப்புக்கள் ஏதும் இருந்ததா?


ஆனால் கூட்டணியும், சுதந்திரனும் தமிழராய்ச்சி மாநாடு நிகழ்வில் 9 பேர்கள் மரணத்திற்கு அரசாங்கமும் துரையப்பாவுமே காரணமென்றும், பொலிசார் சுட்டு 9 பேர்கள் இறந்ததாயும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.


துரைய்ப்பாவுக்கு யாழ்ப்பாண நகருக்குள் கூட்டணியை விட அதிக செவ்வாக்கு இருந்தது. துரையப்பா நினைத்திருந்தால் அவரால் கூட்டணிக்கு பலத்த எதிர்ப்புக்களை காட்டியிருக்க முடியும். கரையூர், பாசையூர், ஆரியக் குளத்தடி ஆகிய பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உதவியைப் பெற்றுக் கூட்டாக பதிலடி கொடுக்க முடிந்திருக்கும். ஆனால், துரையப்பா அப்படிச் செய்யவில்லை.


தொடரும்...


தமிழரசன்
பெர்லின்




Keine Kommentare: