Donnerstag, Januar 12, 2012

நிர்மலா என்ற மேய்ப்பரின் கீழ் 71 ஆடுகள்

நிர்மலா என்ற மேய்ப்பரின் கீழ் 71 ஆடுகள் தமிழுரிமைச் செடிகளை மேய்ந்துகொண்டபோது...

71 புத்திசீவிகளது கையெழுத்து,அறிக்கை-கோரிக்கை குறித்து இந்த எதிர்ப்பறிக்கையையும்[ http://inioru.com/?p=25534 ] ,தீபந்தொலைக்காட்சி உரையாடலையும் பார்த்தபின் இதைக் குறித்துச் சொல்வதும்,மக்களுக்கான தோழமை சேர்தலும் நமக்கு அவசியமான பணிகளாகிறது.எமது மக்கள்மீது பழிசுமத்திச் சிங்கள ஆளும் வர்க்கத்தையும்,இந்தியப் பிராந்திய நலத்தையும் காக்கமுனையும் இந்தச் சதிகாரர்களது அணித்திரட்சியும்,அவர்களது கோரிக்கைக்குள்- மொழிகளுக்குள் திணித்துத் தரப்படும் அரசியலானது தமிழ்பேசும் மக்களுக்குத் தரப்படும் உயிர்கொல்லி நச்சு விசம் ஆகும்.

இதை,இன்னொரு இனத்தின்மீதான கரிசனையாக இந்த மேட்டுக்குடிகள் உரைப்பது,அந்தத் துரத்தியடிக்கப்பட்ட மக்களது வாழ்வை நாசமாக்கிய இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின்கயமைமிகு வரலாற்றை மறைப்பதில் மையமுறும்!

இந்தப் பிரச்சனைகுறித்து வெறுமனவே"பொய்-உண்மை"எனக் கருத்தாட முடியாது.அல்லது, நிர்மலாவின் அகங்காரமென்றும்,ஆணவமென்றும் குறித்துக்கொண்டு,மேலே செல்லமுடியாது!நிர்மலா முன்வைப்பதும்,சேனன் முன்வைப்பதும் இரண்டும் வெவ்வேறு அடிப்படையைக்கொண்டது.நிர்மலா ஆளும்வர்க்க நலனுக்கொப்ப-அவர்களது வியூகத்தைத் தனது தலைமையில் நடாத்திக் கொண்டிருக்கும்போது, இவைகளுக்குள் மிரண்டுபிடிக்கும் ஆளும் வர்க்கத்தினது நலன்களுக்கேற்ப, இலங்கை-இந்திய அரச இராஜதந்திரம் புகுந்து நிர்மலா மொழிவுகளாக மேலெழுகிறது. சேனன் மக்களது குரலைப் பதியமிடும்போது இன்னும் விபரமாகச் செய்திருக்கவேண்டியவொரு சூழலைத் தவறவிட்டுள்ளார்.

ஏலவே,புலிப் பாசிசத்தின் மிகக் கெடுதியான போராட்டச் செல்நெறியால் பழிவாங்கப்பட்ட மக்களினங்களை இணைத்து இத்தகையவொரு அரசியல் சூதாட்டத்தைச் செய்யக்கூடிய தகவமைப்பைச் செய்வதில் இந்தியச் சணாக்கியத்தின் வெற்றியை அன்றே பல கட்டுரைகளில் இடதுசாரிகள் பேசியிருக்கிறார்கள்.

புலிவழிப் போராட்டச் செல் நெறியை அந்நிய அடியாட்படைக்குரியதாகவே பேசியும் இருக்கிறோம்.அதன் விளைவுகள் முள்ளிவாய்க்காலில் அறுவடையாகியதும் வரலாறுதாம்.

இதிலிருந்துதாம் இன்றைய இந்த நிர்மலாவின் ஆடுகளது முடிச்சை அவிழ்ப்துப்பார்க்க வேண்டும்.நிர்மலா மேய்ப்பது இந்திய-இலங்கை ஆளும் வர்க்க நலனுக்கான ஆடுகள் என்பதைக் கறாராகச் சொல்லிக்கொண்டு...

இலங்கையில் நடந்தேறிய இனமுரண்பாடுகளானது முற்றிலும் வர்க்க நலன்களது அடிப்படையிலேயான முரண்பாடுகளாகவே மேலெழுந்தன.அந்த முரண்பாடுகளை இங்ஙனம் குறித்துங்கொள்வது சுலபம்:

இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் உருவாகிய மூலதனத்தின் நலம் நோக்கிய முரண்பாடுகள்,சந்தை-வளம் போன்றவற்றைப் பங்கீடு செய்வதில் சிக்கல்களைக்கொணர்ந்தபோது,ஒவ்வொரு இனத்துக்குள்ளும் இருக்கின்ற ஆளும் வர்க்கப் போக்குகள்,ஒன்றையொன்று மொட்டையடிக்க முனையும்போது,அங்கே இனஞ்சார்ந்த முரண்பாடுகளாக அவை மக்களிடத்தில் உயிர்ப்பலிகளைக் கேட்டன.இந்த முரண்பாடுகளாக உயர்ந்த வர்க்க நலன் சார்ந்த இனஞ்சார் மூலதனக் குவிப்புறுதிக்கேற்ற அரசியற் கோசங்கள் மதஞ்சர்hந்த,மொழிசார்ந்தும்,பண்பாட்டுத்தளத்தில் மக்களைப் பிளவுப்படுத்தும் அரசியற் தகவமைப்புகளை மெல்ல முன்னெடுத்துக்கொண்டன.

தமிழ்த் தேசியவாதிகளது-அரசியற் கட்சிகளது கோரிக்கைகளுக்குள் அவர்களது எஜமானர்களது முரண்பாடுகள் மெல்லத்தலை காட்டின.அவ்வண்ணமே,சிங்களப் பாசிச அரசினது கோரிக்கைக்குள் சிங்கள ஆளும் வர்கத்தின் நலன்களும்,அதுசார்ந்த முரண்பாடுகளும் அதிவேகமாகக் கலவரமாகக்கூட மேலெழுந்துகொண்டது.இப்படி ஒவ்வொரு வர்க்கமும் முட்டி மோதும்போது,இனஞ்சார் அரசியலும்,அதுசார்ந்த அரசியல் நடவடிக்கைகளும் மொழுமொத்த இன நலனுக்கானதென்ற போர்வையில் மக்களை வந்தடைந்த சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையில் பாரிய யுத்தமாகவும்-கலவரமாகவும் வெடிக்கிறது.

அன்று,"முஸ்லீம் மக்களை-சிங்கள மக்களைக்கொல்" என்று இந்திய ரோ ஆலோசனை செய்த போது, புலிகள் கொன்றார்கள்-துரத்தியடித்தார்கள்.

மக்களும் அதைத் தமிழர் நலனால் ஆதரிக்காதிருந்தாலும் ஆயுதத்தின் முன் மௌனமாகிக்கிடந்தார்கள்.அப்போது, சொன்னோம்,இது வரலாற்றுத் தவறென.

வன்னியில் யுத்தம் நடந்தபோது,சிங்கள அரச விமானங்கள் 2008 வாக்கில் வன்னிக்குள் குண்டுபோட்டபோது பல தமிழ்த் தாய்மார்கள் தலைதெறித்து மரணித்துக்கிடந்தார்கள்-பாலகர்கள் தாயின் அணைப்பில் துவண்டு கிடக்க நாம் அனைவருமே வருந்திக்கொண்டோம்!இந்த வலியினால் பொருமிய புலி விசுவாசிகள், குறுந்தேசிய வாதச் சிக்கலுக்குள் விடிவைத் தேடிய அப்பாவி மக்கள்கூட அரச வன்கொடுமைக்கு எதிராகக் கொழும்பிலும், தென்னிலங்கையிலும்ச பதிலடியாக மக்கள் மத்தியிலும் பல குண்டுகள் வெடிக்க வேண்டுமெனச் சொன்னார்கள்.அப்போதும் இது தவறென்றோம்.

அதன் இன்னொரு முனையிலிருந்த அவர்களது மடத்தலைவன் அநுராதபுரத்தில் விமானப்படைத் தளத்தைப் பேரங்கொடுத்துத் தாக்கி அழித்போது கூறிக்கொண்டார் : "சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டினோம்" என்று.அதையும் தவறு,இது வரலாற்று வினையை ஊக்குவிக்கும் என்றும் குறிப்பில் உணர்த்திக் கொண்டதுண்டு.இது ஒரு தர்க்கமானது.



ஒரு இனத்தைப்(தமிழ்பேசும் மக்களைப் பலவடிவில் கருவறுக்க) பழிவாங்கச் செய்த சதிகள் இவை.

இந்திய ரோ அன்றே மதிப்பிட்டு விதைத்ததை, இன்று மிக இலாபத்தோடு அறுவடைசெய்கிறது.நிர்மலாவின் குரலூடாக விரியும் இந்தக் கோரிக்கையானது முற்றிலும் இந்திய-இலங்கை ஆளும்வர்க்கத்தின் நலன்சார்ந்த தகவமைப்பாகும்.தமிழ் நிலப்பரப்பெங்கும் சிங்கள இனவாத இராணுவத்தின் சர்வதிகார ஆட்சியின்கீழ் தமிழ் பேசும் மக்கள்மட்டுமல்ல மற்றைய சிறுபான்மை இனங்களும் கட்டுண்டுவாழும்போதும்,பேரினவாதக்கொடுமையினூடாக இதுவரை பல இலட்சம் மக்களைக்கொன்று குவித்த சிங்கள ஆளும் வர்க்கமானது தமிழ்பேசும் மக்களை இன்னும் சுதந்திரமாக வாழ அனுமதிக்காதபோது இந்தக் கோரிக்கை வருகிறது-கவனத்தில் இதை எடுக்கவேண்டும்.

தமிழ் மக்கள் தமது வாழ்வையே செப்பனிட முடியாதவொரு சூழலில் இந்திய ரோவினது ஆலோசனைக்கிணங்கப் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம்களைக் குடியிருத்துவதென்பதும்,அவர்களுக்குத் தமிழ்பேசும் யாழ்ப்பாணப் பிரஜைகள் வசதி வாய்ப்பை நல்குவதும்,தோழமையைக்கொடுக்க வேண்டுமென்பதும்,மன்னிப்பைச் சொல்ல வேண்டும் என்பதும் அரசியல் சதியாகும்.

இந்திய ரோவினது ஆலோசனையுள் திட்டமிட்ட சதி அரசியலைத் தமிழருக்குச் சொந்தமாக்க முனைவதும்,வரலாற்றில் அந்தப்பழியை(முஸ்லீம்களைத் துரத்தியது) யாழ்ப்பாண மக்கள்மீது போடுவதும் இந்தியச் சாணாக்கியத்துக்கு அவசியமானது.இந்த அவசியத்தின் பொருட்டே நிர்மலா வாந்தியெடுக்கிறார்.

பிராந்திய நலன்களுக்கிணைவாகத் தமிழ்பேசும் மக்களது விடுதலைப்போரை நசுக்க என்னென்ன வழி பார்த்தார்களோ, அதையே திட்டமிட்டு ஒரு இனத்தின் மைய முனைக்குச் சொந்தமாக்கிக் காலம் பூராகவும் பழியைச் சுமத்தித் தமிழர்கள் தேசிய விடுதலையைக் கேட்க-போராட உரித்தற்றவர்களென்றும், தமக்குள் இனவொடுக்குமுறையைச் செய்தவர்களென்றும் பட்டங்கட்டித் தொடர்ந்து சிங்க இனவாத ஒடுக்குமுறையை அதனுடன் சமப்படுத்திக்கொள்வதும்,தமிழர்களது சுயநிர்ணயத்தைக் காயடிக்கும் வியூகம்தாம்.

இதற்கு நிர்மலாவோடிணைந்த அந்த 71 ஆடுகளும் கண்டடைந்த மேய்ப்பர்கள், இந்தியச் சாணாக்கியமாகும்.


முஸ்லீம்மகளைத் துரத்திவிட்ட நிகழ்வு இன்றுவரையும் அரசியல் அமுக்கக் குழுவுக்கான தகவமைப்பைச் செய்கிறது.சிங்கள இனத்தைப் பகைப்படுத்திய சந்தர்ப்பத்தில் மகிந்தா பாசிசத்துக்கு அது இசைந்துபோக எத்தனித்தது.சிங்களது உச்சி பிளப்பு,வன்னிக்குள் பிரபாகரன் மண்டையை உயிரோடு பிளந்தது.

இன்றுவரையும் மக்களைப் பிளந்து அரசியல் நடாத்துவதற்கு- யாழ்ப்பாண மக்களுக்குச் சாபமிட ,அன்று இந்திய ரோவினது ஆலோசனைக்கிணங்கிப்புலிகளால்துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களது வாழ்வு ஏதுவாகிறது, இந்திய நலனுக்குப் பேரின வாத அரசுகளுக்கு.

இன்று தமிழ் மக்களை மன்னிப்புக்கோரச் சொல்லும் நிர்மலாவுக்குத் தெரியும், அதே போன்று சிங்கள இனமும்,அதன் அரசும், தமிழ்பேசும் அப்பாவி மக்களிடம் மன்னிப்பும்,நஷ்ட ஈடும் கட்டித் தமிழர்களது பாரம்பரிய பூமியைச் இராணுவச் சர்வதிகாரத்தின்கீழிருந்து விடுதலையாக்கி விடவேண்டும் என்றும்.

ஆனால்,அந்த முக்கியமான கோரிக்கையை "அதிகாரம் என்பது பல தளங்களில் இயங்குவதாகச் சொல்லி " அரச வன்கொடுமை இராணுவஜந்திரத்தையும்,அரச அதிகாரத்தையும்,மக்களது உரிமைக்கானதும்,பேரினவாதவொடுக்குமுறைக்கு முகங்கொடுப்பதுமான மக்களது போராட்ட எதிர்ப்பு நடவடிக்கைக்குள்பொருத்திச் சமனிட முனைவதும் பாரியக் குற்றம்.இது திட்டமிடப்பட்ட சதி.

யாழ்ப்பாணத்திலிருந்து புலியை வெரட்டியடித்த இராணுவம்தாம் இன்று பதினைந்து ஆண்டுகளுக்குமேல் யாழ் வடபுலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.

இந்தப் பதினைந்து ஆண்டுகாலத்துக்குள் ஏன் முஸ்லீம் மக்களை அரசு மீளக் குடியமர்த்தவில்லை?

அப்போது,முஸ்லீம் மக்கள் புத்தளத்தில் வாடியபோது,அரசு என்ன மாங்காய் பறித்திருத்ததா?

அல்லது,இன்று செய்யும் நிர்மலா அரசியலுக்கேற்பத் தகவமைத்துக்கொள்வதற்காகப் "புலிகள் சொன்னாற்றாம் நாம் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியிருப்போம்" என்ற புத்தள முஸ்லீம் மக்களது குரலையும் சந்தேகிக்கவே வேண்டும்.

அந்த வகையில் இந்த 71"புத்திசீவிகளது"கோரிக்கை-கையெழுத்து"அரசியலது ஆணிவேர் , பிரித்தாளும் பிராந்திய மேலாதிக்க இந்திய அரசினது மடியில் ஊன்றுவதைச் சுட்டிக்காட்டுவதற்காகவாவதும் நிர்மலாவின்பின் தமிழர்களை மேயத் துடிக்கும் அந்த ஆடுகளைக் கவனமாகத் துரத்தியடித்தே தீரவேண்டும்.

இல்லையேல், இலங்கை முழுமொத்த மக்களது எதிர்காலப் பயிரையே இந்த ஆடுகள் மேய்து கொழுத்துத்தமது எஜமானர் களுக்கு இறைச்சியாகிவிடும்.

எனவே,இவர்களது சதிக்கு எதிரான இந்த "யாரிந்தப் புத்திசீவிகள்" எனும் எதிர்ப்பறிக்கையை [ http://inioru.com/?p=25534 ]நான் ஆதரிக்கிறேன்-அவசியமெனவும் கருதுகிறேன்!

ப.வி.ஸ்ரீரங்கன்,
12.01.2011
ஜேர்மனி.

Keine Kommentare: