Mittwoch, Januar 25, 2006

உடைப்பும்...

உடைப்பின் உருவாக்கம் இன்றைய வலைப்பதிவினது கருத்துப் பரிமாற்ற வலுவுக்கு உந்தப்பட்டே.இதுவரை நாங்கள் பல பதிவுகளைப் பார்வையிட்டுப் படித்து வந்தோம்.எந்தப் பதிவினிலும் கருத்துக்களைச் சொல்லி விவாதிக்காது மௌனித்து வருவதும், மனதுக்கு இருப்புக் கொள்ள முடியாது போய்- வலை பதிவோமே என்ற ஆதங்கத்தோடு வந்தோம்.இங்கு நடை பெறுவது உண்மையில் விவாதங்களில்லை.இவைகளெல்லாவற்றையும் தொகுத்துச் சொன்னால்-இவை கூட்டம் கட்டியாடும் அல்லது கோஷ்டி கட்டியாடும் அவதூறகளே!

உலகத்தில் சுமார் ஆறுகோடித் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.அவர்களின் பண்பாட்டு வளர்ச்சி வெறுமனவே உணர்ச்சி வழிப்பட்ட கருத்தியல்களால் தேம்பிக் கிடக்கிறது.நல்ல முறையில் வளரவேண்டிய தமிழினத்தின் பொருண்மிய மேம்பாடு எந்த முன்னெடுப்புகளுமற்று வெறும் நுகர்வுக்குள் முடங்கி கிடக்கிறது.காலகாலமாக விருத்தியுறவேண்டிய சமூக வளர்ச்சி நிலை வெறும் கலாச்சார,நுகர்வடிமைச் சூழலுக்குள் சிக்குண்டுள்ளது. இதிலிருந்து விடுபடுவதற்கான முன்னெடுப்புகளாகத் தேசிய கல்விக் கொள்கை,பொருளாதார மற்றும் அபிவிருத்திகளும் எந்தக் கட்சிகளாலும்,இயக்கங்களாலும் முன்னெடுப்பதாகவில்லை.சமுதாயத்தின் இருப்பு மெல்லச் சாகும் நிலையாகிறது.

தமிழ் தனது இருப்புக்கான போராட்டத்தைப் பொருள் வாழ்வோடு இணைப்பதும்,அதன் உள்ளார்ந்த தேவைகளை நிலைப்படுத்தும் கல்வியாளர்களை உருவாக்குவதற்குமான வர்த்தகச் சூழல், நமது இனத்திடமில்லை.நாம் எமது வாழ்வையும் மொழியையும் மெல்லப் பறி கொடுக்கிறோம்.இதை மேம்படுத்தும் நிலைமைகளுக்குள் இந்த வலைப்பதிவாளர்கள் இன்னும் செல்வதாகவில்லை.இதைவிட்டுத் தத்தமது நேரத்தை வீணாக்கும்-அரட்டையரங்காகத் தமிழ் மணத்தை ஆக்குவது வருந்தத் தக்கது!தனி நபர்களாக இருந்து வலை பதிபவர்கள் தமக்குள் முரண்படும்போதுகளில் தனிநபர் சுதந்திரத்தில் தலைபோட்டுத் தமது நேரத்தை விரையம் செய்வது உசிதமில்லை.

வெறும் காழ்ப்புணர்வுகள் எதையும் தரப்போவதில்லை.நமது சமூகத்தில் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கேற்ற அறிவு வளர்சியும்,அபிவிருத்தியான சமூகப் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படவேண்டும்.இதுபற்றிய நோக்கை முன்னெடுப்பதே அவசியமான பணி.

Keine Kommentare: