Freitag, Januar 01, 2016

இசுரேலிய நாலாசிரியை இராபின்யனின் "எல்லைவாழ்வு" .

எல்லை வாழ்வு:இன ஐக்கியம் (Rabinyan’s novel Borderlife )

இசுரேலிய நாலாசிரியை இராபின்யனின் நாவலான "எல்லைவாழ்வு" நாவற் (Rabinyan’s novel Borderlife) தொகுதியும் ; இன ஐக்கியமும் -மொழியும்: சிறு குறிப்பு!


"யாதும் ஊரே யாவரும் கேளீர்" இரண்டாயிரம் வருடத்துக்குமுன் தமிழன்." Edel,sei der Mensch,hilfreich und Gut"-Goethe [மனிதன் மேன்மையானவன்,கருணையும் சிறப்பும் நிறைந்தவன்!]

பதினோழாம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த கோத்தே முதல் இன்றுஞ் சொல்லப்படும் மனிதமாண்பு மகா கேவலமாச்சு. இந்த மொழிவுகளுக்குப் பின்னால் நிகழ்ந்தவைகளுக்கும் இவ்வறைகூவல்களுக்கும் என்ன சம்பந்தம் உண்டு? ; எதனால் இவ்வறைகூவல்கள் எழுந்தன?மனிதநடாத்தையின் பாதகங்கண்டு மாற்றுத் தேடிய பொழுதுகள் ஏராளம்!

இலக்கியம் ; தத்துவம் ;கலைகள்-எண்ணங்கள்... முட்கம்பிகளுக்குப் பின்னே ஊசலாடும் காலவர்த்தமானம் தொடரும் இந் நூற்றாண்டு மக்கள்சார்ந்து இலக்கியப் பிரதிகளைத் தொடர்ந்து அழிப்பதில் ஆதிக்க வர்க்கம் மூர்க்கமாகவே இருக்கிறது.சியோனிச இசுரேல் பாலித்தீனிய மக்களோடு ஒட்டியுறவாடும் கருத்தியலைத் தொடர்ந்து அழிப்பதில் இலக்கியத்தைத் தடை செய்வதன் காரணமென்ன?[ A novel about a love affair between a Jewish woman and a Palestinian man has been barred from Israel’s high school curriculum, reportedly over concerns that it could encourage intermarriage between Jews and non-Jews.The rejection of Dorit Rabinyan’s novel Borderlife, which was published in 2014, created an uproar in Israel, with critics accusing the government of censorship. http://www.theguardian.com/world/20… ] சண்டையும் சச்சரவுமிக்க முரண்பாடுகள்தாம் ஆளும் வர்க்கங்களது கயமையைப் புரியாதிருப்பதற்கான திசைதிருப்பும் மூல வேர்.இங்கே நமது முரண்பாடுகளை எடுத்துக்கொண்டால் ,தமிழர்களுக்கும் -சிங்களவர்களுக்கும் தொடர்ந்து இனப் பகமை மூட்டப்பட்டுக் கொதி நிலையிலிருக்கும்போதுதாம் இலங்கைப் பாராளுமன்றம் இயக்கம் பெறும்.இத்தகைய இனவாத அரசியலைப் புரிவதற்குச் சமீபத்து நல்ல உதாரணம் இந்த இராபின்யனது நாவலான எல்லைவாழ்வு நாவற்(Rabinyan’s novel Borderlife) தடையாகும்!


இன ஐக்கியம் ;ஒருமைப்பாடு ;இணைந்து -கலப்படைதல் யாவும் இனவாத -பிளவுவாத ஆளும் வர்க்ககங்களது அடித் தளத்தையே அசைக்கும் உந்து சக்திகள்.இதை தமிழ்க் குறுந்தேசிய வாதிகளிடம் முசிலீம் மக்களைத் துரத்தியடித்தலிருந்தும் ; சிங்கள மக்களோடு இணைவது -கலப்பது ;உறவாடுவதெல்லாம் மகாப் பெரும் குற்றம்.துரோகிகள் என்று கொல்லப்பட்டவர்கள் ஏராளம்!முள்ளி வாய்க்கால் முடிவுவரை -தற்போது முகநூலில் முகங்காட்டும் 90 வீதாமான தமிழர்கள் ;சிறார்கள் - இந்த இனவாத வாந்தியை நன்றாகப் பருகிப் புலிகளது குறுந்தேசியவாத மனிதவிரோத முகத்துக்கு நியாயம் கற்பித்தவர்கள்தாம்.அவர்களில் பலர் இன்று பெரும் இலக்கியப் படைப்பாளிகள்!அவர்களது மொழி இப்போது எப்படி இருக்கிறது?

இந்த இலக்கியப் பிரதிகள் எந்த மொழிவுகளோடு வருகிறது?

ஏதோவொரு தேவைக்காகப் பலவுயிர்களைப் பலியெடுத்துவிட்டு,மீளத் தகவமைக்கும் இனக் குரோதம் ;பகமை சார்ந்த "துரோகி"ப் பட்டங்களுக்காக இனங்களை - அக் குழுமங்களுக்குள் இருக்கும் தனிமனிதர்களை - நபர்களைக் குறிவைக்கும் திசை இனவுயர்வை -மேன்மையைக் குறித்துக் கனவு காண்கிறதாம்.

மனித மொழிகள்அவனது -அவளது -அவனவளது( மூன்றாவது பால்) எண்ணங்களைத் தெளிவாகச் சொல்வதற்குச் சேவிக்கிறது.எண்ணங்களைத்தானேதவிர எந்த உணர்வுகளையும் அது வெளிப்படுத்தும் ஊடகமில்லை!என்றபோதும்,அதன்வழியே தொடர்பாடலுஞ் செயலுக்குமான விளக்கும் பிறக்க வேண்டியுமிருக்கிறது.சமுதாயத்தின்-குழுமத்தின் நோக்கம் உலகைத் தொடர்புபடுத்திச் சொல்வதில் வார்த்தைகளே உடுத்திப் போர்க்கிறது.இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் தன்மைகளில் முழுமொத்த மொழியும் இனவாதத்துக்கும் -குருரத்துக்கும் ; இனமேன்மைக்கும் ;பகமைக்கும் -எதேச்சதிகாரத்துக்கிசைவாக மாற்றப்படுஞ் சந்தர்ப்பமே எனது விழிகள்முன் காண் செயலூக்கமாக விரிகிறது.

இயற்கைக்கும் மனிதர்களுக்குமான இடைச் செயலில் மனிதப் படைப்பைச் சுமக்கவேண்டிய இந்த மொழியை அன்றைய சிலுவையுத்தம் முதல் சமீப நாசிகள் வரை உதாசீனப்படுத்தியது ஓரளவு வரலாறாக நாம் காணும்போதும், நமது வரலாறு சொல்லப்படும் மொழி எத்தகைய முறைமைகளில் துஷ் பிரயோகப்பட்டுள்ளதென்பதைக் குறித்துப் பார்ப்பனியத்தை வைத்து வியாபாரப்படுத்திய நாம், நமது "தேசிய விடுதலை"ப் போரில் புலிப் பாசிசம் எங்ஙனம் மொழியைத் துஷ்பிரயோகித்து மனிதத்தைக் குதறியதென்பதையொட்டி மௌனிக்கிறோம்.

"விடுதலைப் புலிகள்"மொழியையும்,வார்த்தைகளையும் மட்டுமல்ல அதன்வழியான அனைத்துக் கலைவடிவங்களையும் இசையையும்-ஒலியையும் தமக்கான இருப்புக்கும்,தம்மை எதிர்த்த-எதிர்க்கும் மக்களுக்குமான கொலைக் கருவிகளாக்கியிருக்கின்றார்கள்.அதன் தொடர்ச்சியே இப்போது ஆங்காங்கே காணும் புலி-தமிழ்மக்கள் ஆதரவுக் கருத்தாகப் பொதுவரங்கில் களையெடுப்பு ; போடுதல் என்ற மனிதவிரோத மொழிவுகள் கொட்டப்பட்டுவருகிறது.இந்த மொழிவுகளுக்குள் இருக்கும் வரலாற்று மோசடியானது ஏலவே கட்டயமைக்கப்பட்ட மொழித் துஷ்பிரயோகத்திலிருந்து நியாயமுறுகிறது.

கிட்லர் தனது எஜமானர்களுக்காக 32 இனக் குழுமங்களை இதன்வழி கொன்று நியாயப்படுத்தினான்.பதினொரு மில்லியன்கள் மக்களது( இரண்டாவது மகாயுத்தத்தில் மொத்த மனித அழிவு 60 மில்லியன்கள்) உயிரைப்பறித்தபோது உலகத்துக்கு மொழியப்பட்ட உரைகளுக்குள் ஒதுக்கப்பட்ட நியாயம் இன்றும் பேசுபொருளாகப் புரட்டி எடுக்கப்படும் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நாமும் வாழ்ந்து சாகிறோம்.எனினும்,எமது மக்களுக்கு "ஈழஞ்" சொல்லி உயிர்க் கொள்ளையிட்டவர்களோ தம்மீதான அனைத்துக் கிரிமினல் எத்தனங்களையும் அப்பாவிகள்மீது ஏவிவிட்டு வர்த்தகஞ் செய்யும் இந்தக் கொடுமையை எதிர்கொள்வதும்-புரிந்துகொள்ள முனைவதும் அவசியமில்லையா?

விடுதலைப் போராளிகள் சீருடையில் தம்மை எதிர்த்தவர்களையும்,தமக்கு ஆதரவு தரமறுத்தவர்களையும் வேட்டையாடிய ஒரு பயங்கரவாத அமைப்பின் அழிவில் அனைத்தும் முடிந்துவிடப் போவதில்லை!மீளவும்,அவர்களது மொழியைத் தூக்கியபடி அலையும் அவதூறாளர்கள் அதை மக்களுக்கான புரட்சி உரையாடலாக மாற்றுகிறார்கள்.இது ஆபத்தானது-அழிவுக்குள் நிரந்தரமாக நம்மைக் கட்டிப்போடவல்லதில்லையா?

மக்களது சுதந்திரத்தையும்,ஆன்ம இருப்பையும் மறுதலித்து அவர்களது அனைத்து வளங்களையும் கொள்ளையடித்த காட்டுமிராண்டி யுத்தம்-கொலைகள் முள்ளிவாய்க்காலில் கைமாறுவதில் அதே மொழி, மீளத் தகவமைக்கப்பட்டு மக்களை மீள அடிமைமைச் சேவகத்துக்குத் தயார்ப்படுத்துகிறதே!இது,எந்த நியாயத்தை மக்கள்மீது பொழிகிறதோ அதே நியாயம் தமது தலைக்கே திரும்புமென்பதை இலங்கைப் பாசிச அரசு புரிந்துகொண்டிருப்பினும் அதன் இருப்புக்கு இந்த அழிவுவாத அடக்குமுறை மொழிவுகள் அவசியமாக மேலெழுகிறது.அவ்வண்ணமே நமது "புரட்சி"க்காரர்களுக்கும் இது அவசியமாக இருக்கிறது!இங்கு இனவாதம் ;இனக் குரோதம் மிக அவசியமானது இவர்களுக்கு!

இங்குதாம் கலையும்-எண்ணங்களும் இதற்கெதிரான கூரிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்றப்பட்டு, அந்த மொழியை முதலில் விடுவித்தாகவேண்டும். தமிழ்ச் சூழலுக்குள் இத்தகைய எந்த உரையாடலும் இதுவரை மக்களது நலனிலிருந்து எழவே இல்லை! பாலித்தீனிய -இசுரேலிய இனத்துள் இராபின்சனது நாவலான எல்லை வாழ்வு நாவற்(Rabinyan’s novel Borderlife) தொகுதி இதை செவ்வனவே செய்ய முனைகிறதாம்.யூத யுத்தவெறிக்கு -இனவாதத்துக்கு எதிரானவொரு கூரிய இலக்கியமாக இந்த "எல்லை வாழ்வு" நாவல் வரலாற்றில் இயங்க முடியுமெனக்கண்ட இனவாதிகள் அதைத் தடை செய்கின்றனர்.


கலையும்-எண்ணமும் ஏதொவொரு அதிகாரத்துக்கிசைவாகக் கட்டியமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாம் கூறுகிற அனைத்து எதிர்க் கருத்தாடலும்-கதையாடலும் அதே பாணியில் மொழியைத் துஷ்பிரோயாகஞ் செய்கிறது. இது சமீப காலமாகத் தமிழுக்குள் எழுந்த அனைத்து ஆக்க இலக்கியத்துக்கும் பொருந்திப் போகிறது.ஒன்று புலிச்சார்பு அல்லது உலக-இலங்கை அரச ஆதிக்கத்துக்குச் சேவையாற்றும் பிரயத்தனத்தில் ஈடுபாடுகொள்கிறது.

இனிவரும் பொழுதேனும்,இத்தகைய குறுகிய நோக்ககங்களைக்கடந்து,புலிப்பாசசத்தின் இருண்ட பக்கங்களையும்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தினது உலகளாவிய கூட்டோடிணைந்த மக்கள் விரோத அனைத்து முகங்களையும் பெறுமதிமிக்க மொழியைக் கூரிய ஆயுதமாக்கி எதிர்த்தெழுவேண்டியுள்ளது.

இதுவரை எந்தவொரு தமிழ் நூலும் மக்கள் பக்கத்தின் சாட்சியமாக இருக்கும் அருகதையையும் பெறவே இல்லை!மக்களது வலியைப் பேசுவதாகச் சொல்லப்படும் உரையாடல்கள்,கதைகளெல்லாம் தமது எஜமான விருப்புக்கிசைவாகவே மொழியைத் துஷ்பிரயோகஞ் செய்துகொண்டிருக்கிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்

Keine Kommentare: