அழிவேன்-எப்போது-எங்கே?
என் திருவே!
என்னைக் குலைத்தெறி!
துகளாக்கு-மண்டையைச் சிதறடி.
பக்கங்களாக நான் குவிக்கும்
உணர்வுக்குள் மனிதம் கொலையாகி
புதை குழிக்கு மண் அகழும் "நான்" தொல்லை!
என் திருவே,
குழந்தையாய் இருப்பதுதாம் நீ.
நான் கூன் வீழுந்த துர்க் கனவின் தொடராய்
என்னைப் பாட வை
ஒரு மழலையின் புன் சிரிப்பாய்.
உன்னைக் குறித்து
என்னை அழைக்க வை
"நாங்கள்தாம் நீ" என்று ஓங்கி உரைக்க விடு!

மௌனித்துக்கிடக்கும் என் இதழ் விரித்து
"ஏய்,நீ என்னை நடாற்றில் தவிக்க வைத்து
ஆபத்தின் வீரியமாய் விரிவதில்
என்ன புதுமையை கண்டாய்?" என்று கூவ விடு!
என் ஆரோக்கியத்தின் நிழலில்
கலைத்துப் போடப்பட்ட என் விந்துகளின் வீரியத்தில்
தொடர்ந்து உயிர்த்திருப்பதில்
உன்னை எங்கே விழுங்கி
எங்கே சேர்த்து?
நிரந்தரமானவன் நான்!
தோல்விக்குப் பெயர்
தீருவென்றழைத்தே தேடுதலை
குறைத்துக் கொண்டேன்.
காலைக்குப் பின் மதியம்
என்னை அச்சப்படுத்தி மீளவும்
அதிகாலையாய்த் தேற்றிய போது
நானே நிரந்தரமானேன்-எனக்குத்தாம் திருவென்ற
உன் நிலைப்பும்-நீதியுமென
உருமறுத்துக்கொண்டு அலைவேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
24.03.2013
Keine Kommentare:
Kommentar veröffentlichen