Freitag, August 24, 2012

அகாலம்-நூல் விமர்சனம்

"ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்"எழுதிய புய்ப்பராயாவின் தங்கச்சியார் புய்ப்பராணி. இப்போது,இந்தப் புய்ப்பராணியும் தனது "போராட்ட"அநுபவங்களை"அகாலம்" எனும் நூலாகக் கொணர்ந்திருக்கிறார்.

அவரது,ஏமாளித்தனமான அரசியலையும்,பாமரத்தனமான கருத்துக்களையும் ஒரு இனஞ்சார் விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் சக்திகள் மிக இலகுவாகப் பயன்படுத்தியபோது அஃது,மனித விடுதலைக்காகப் போராடும் உள வலிமைக்கெதிராக முன்நிறுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சந்தர்ப்பத்திற்றாம் இவர்கள் தமது தேசியவாத அழிவு அரசியலை முழுமொத்த ஆயுத இயக்கங்களுக்கும் தாரவார்த்துக் கொடுத்துவிட்டுத் தம்மைப் புனிதர்களாகவும்,தேச பக்த சக்திகளாகவும் காட்டியபடி,தமது போராட்த்தின் மூலமான அறுவடைக்குத் தியாகத்தைக் கோரி நிற்கின்றனர்.

அத்தகைய உள விருப்புக்கமைய எவருடனும் கூட்டுச் சேர்ந்து பாமரத்தனமாகக் கருத்துக்கட்டும் இவர்கள், நமது காலத்தில் பல இலட்சம் மக்களது உயிருக்கு உலை வைத்தவர்களென நாம் குற்றஞ் சுமத்துகிறோம்!

பாசிசத்தின் கூறுகளுக்கிசைவாக அரசியல் புரிந்த தமிழ்த் தேசிய வாதப் பேய்கள் எந்தவொரு அரசியலறமுமற்ற "ஈழப்போராட்ட" வரலாற்றுக்குப் பிதா மக்களாக இருக்கின்றனர்.

இவர்களது போராட்ட அநுபவங்கள், தமிழ் பேசும் மக்களது விடிவுக்கான அறிவுரையாக விழுந்து, விழுந்து புலம்பும் ஒரு நரிக் கூட்டத்தின் முன்பு அதை உடைத்துத் தமிழ் மக்களது அழிவுக்கான காரண காரியத்தைப் பேசும் சமூக யதார்த்தத்தை"அகாலம்"நூலுக்கான விமர்சனமாகத் தருகிறோம்.

இது,முதலாவது பகுதி. ஐந்து பகுதிகளாக விரியும் தமிழரசனது இவ் விமர்சனமானது தொடர்ந்து வழமைபோலவே உடைப்பில் பதியப்படும்.

இவ் விமர்சனத்தை உள்வாங்குபவர்கள் தொடர்ந்து அண்மித்துக்கொண்டேயிருங்கள்.

நன்றி.

அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

24.08.2012


அகாலம்-நூல் விமர்சனம்

-தமிழரசன்,பேர்ளின்.


பிரான்சில் வாழும் எழுபதுகளின் போராட்ச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புடையவரான புஷ்பராணியின்"அகாலம்-ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்" என்ற 207 பக்கங்கள்கொண்ட நூலது முன்னுரையைக் கிளிநொச்சியைச் சேர்ந்த கருணாகரன் எழுத, அந்நூல் வெளிவந்திருக்கிறது.

இந் நூலில் புஷ்பராணி தனது 40 வருடகால நினைவுகளைப் பதிவு செய்திருக்கின்றார்.

அக்காலத்தினது அரசியலை அவதானிக்க வாய்புப் பெற்றவர்கட்கும்,அரசியல் ஆழங்களில் சஞ்சரிக்க வாய்த்தவர்கட்கும் இந் நூலில் ஒருசில தகவல்களைத் தவிர வேறெதுவுமில்லை!

புஷபராணியினது பேசு பொருள்கள்"தமிழ்த் தேசியவாதிகளது குரல்வளையிலிருந்து நாம் அடிக்கடி கேட்ட பிரச்சார வகைப்பட்ட"கருத்தியல்தாம்.தோற்றுப் போய்விட்ட "ஈழப் போராட்டம்"தமிழ்ப் பகுதிகளில்அங்குலத்திற்கங்குலம் இராணுவம்,கிறிஸ் பூதம், அகதி முகாங்கங்கள்,புத்த சிலைகள்,விகாரைகள்,சிங்களக் குடியேற்றம்,உழுதழிக்கப்பட்ட புலிகளது கல்லறைகள்அகியவை, குறித்த தமிழினவாத ஊடகங்கள் கட்டியமைத்த கருத்துக்களேதாம் புஷ்பராணியிடமும் நிலவிக்கொள்கிறது.இவை குறித்து,ஒரு தமிழ்த் தேசியவாதியின் பெரும் சோகத்துடன் புஷ்பராணி எழுதிச் செல்கிறார்.

அவரது தமிழீழ இலட்சியத்துக்கேற்பட்ட கதி, தான் செய்துகொண்டதென்ற "தியாகங்கள்-அற்பணிப்புள்",விழலுக்கிறைத்த நீராகிவிட்ட துயரம்,தனிப்பட்ட வாழ்விலேற்பட்ட இழப்புகளுடன் அவரது எழுத்துக்கள் விரக்தியையும்,அவநம்பிக்கையையும் கூடவே எதிர்காலமின்மையையும் சுமந்து வருகிறது!.

அவரது எழுத்து முறையீடுகள்,அவருக்குரிய கடந்த காலத்தை உயர்வாகவும்-சிறப்பாகவும் காண்டுகொண்ட திசையில் பிற்காலத்தைய இயக்கவாதக் காலங்களையேதாம் மீறல்கள் நிறைந்ததாகவும் காண்கிறது. புஷ்பராணிபோன்றோரது தொடக்கங்களேதாம் முள்ளிவாய்க்கால் அவலங்களாக முடிவுற்றன.இவர்களன்றெழுப்பிய அதிதீவிரவாத தமிழீழக் கோரிக்கையானது சுற்றியுள்ள இலங்கையின் உள்நாட்டுச் சூழல் மற்றும் சர்வதேசிய நிலவரங்களுடன் இணைந்தபோது அஃது,பாசிச மனிதவிரோதப் போக்குகளாக வந்தடைந்தது.தனிநாட்டுக் கோரிக்கை சார்ந்த நுணுக்கமான அரசியல்,தத்துவார்த்த மதிப்புகட்கு புஷ்பராணி அருகதையற்றவர். மாறாக,உணர்வுமயமான அதீத தேசியவாத மதிப்புகளால் இவரிதை மாற்றீடு செய்கின்றவராக இருக்கின்றார்.தமிழர்களின் பிரச்சனையென்பது சிங்கள,முஸ்லீம்,மக்களதும் பிரச்சனையுமாகும்-ஏன், முழுமொத்த இலங்கை மக்களின் தேசந் தழுவிய பிரச்சனையுமாகும்.தமிழ்த் தேசியவாத்தத்தின் உச்சியிலிருந்த அமிர்தலிங்கம் முதல் பிரச்சாரர்களான புஷ்பராணி போன்றவர்கள் வரை தமிழ் மக்களை ஏக, இலங்கை அரசியல் பரப்புக்கு வரவிடாமற் பார்த்துக்கொண்டார்கள்.சிங்கள விரோதத்தை அரசியலாக்கி வளர்த்தெடுத்தார்கள்,தமிழ் மக்களை எட்டுத் திசையும் நோக்கவல்ல அரசியலிலிருந்து தடுத்து வைத்தார்கள்.இத்தகைய,ஒரு வழிப்பாதையேவின்று முள்ளி வாய்க்காலில் நிறைவு பெற்றதென்ற வகையில், புஷ்பராணியும் கூட்டுக் குற்றவாளியே-இப்போக்குகட்குப் பதிலுரைக்கவேண்டியவரே.ஆனால்,அத்தகையவெழுத்துத் தடயமெதுவும் இவர்தம் நூலில் காணக்கிட்டவில்லை.
முள்ளிவாய்க்கால் முடிவுகள் கண்டு,ஏனைய தமிழ்த் தேசியவாதிகளைப்போன்று புஷ்பராணியும் குமுறுகிறார்.அவர்,சகல பழிகளையும் இலங்கை அரசுமேல் சுமத்திவிட்டு,காரண காரியங்களை ஆய்ந்தறியும் கடனிலிருந்து தப்பியோடுகிறார்.இந்த அழிவுகளுக்கு முழுமையாகப் புலிப் பாசிசமே பொறுப்பு.

மாவிலாறில் பல்லாயிரம் சிங்கள ஏழை விவசாயிகளின் விவசாயத்துக்கான நீரைப் புலிகள் மறித்து, அம் மக்களை ஆத்திரமூட்டினார்கள்,அவர்களது வாழ்வாதாரத்தின் மீது கை வைத்தனர். திரிகோணமலை, மூதூர், கிண்ணியாவுட்பட பலவிடங்களில் முஸ்லீம் மக்களை-அவர்களது வாழ்விடங்களிலிருந்து- புலிகள் துரத்தியடித்தனர். இத்தோடு,இதே புலிகள், முஸ்லீம் மக்களது வாழ்விடங்கள்,ஊருக்குள்ளிருந்தபடியும் இராணுவத்தை நோக்கிச் செல்லடித்து, அதேயிடத்துக்குத் திருப்பி இராணுவத்தைச் செல்லடிக்க வைத்து முஸ்லீங்களை கொல்ல வழி வகுத்தார்கள்.அத்தோடு,முஸ்லீம் இளைஞர்களைத் தேர்தெடுத்த புலிகள் கூட்டாகக் கொன்றார்கள்.

அன்று,புலிகள்தாம் மாவிலாறில் யுத்தத்தைத் தொடக்கி வைத்தார்கள்.கிழக்கில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லீம் மக்களை,சிங்கள மக்களை அகதிகளாக்கிய புலிகள், அவர்களது சொத்துக்களையும் கொள்ளையிட்டனர்.வியாபார நிலையங்கள்,விவசாய நிலங்கள்,ஆடுகள்,மாடுகள்,வாகனங்களென அனைத்தையும் பறிமுதல் செய்தார்கள்.பல காலமாகக் காடுகளில் வாழ்ந்து, வேட்டையாடல், தேனெடுப்பு,மருந்து,மூலிகைகள் எடுத்துக்கொண்டு சீவித்த குறவர்கள், வேடர்கள்கூடப் புலிகளால் கொலையுண்டனர்.மனிதர்களை மட்டுமல்ல வில்பத்துப் போன்ற வனவிலங்குப் பாதுகாப்புப் பகுதிகளிலும் புகுந்து ஆபூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட மிருகங்களைப் பொழுதுபோக்காகச் சுட்டுக் கொன்றனர்,வேட்டையாடித் தின்றுங்கொண்டனர்.இவ் வலயத்தில் கண்ணி வெடிகளைப் புலிகள் புதைத்து வைத்தமையால் மிருகங்கள் அதில் சிக்கியபொழுதுகளில் காயமுற்றும்,இறந்தும் போயின.தெகிவளை மிருகக்காட்சிச் சலையிற் புகுந்து குண்டு வைத்து மிருகங்களை மட்டுமல்ல மனிதர்களையும் கொன்றார்கள் புலிகள்.தமது அழிவுயுத்த்தைச் சிங்கள மக்களின் பிரதேசங்களான கொழும்பு,கண்டி,காலி உட்பட பலவிடங்கட்கு விரிவுப்படுத்தினார்கள்.

ஆனால்,புஷ்பராணியினது விழிகளுக்குத் தமிழ் மக்களது துன்பம் மட்டுமேதாம் தெரிகிறது.முஸ்லீம்,சிங்கள மக்களது உயிரிழப்புக்காக அவரால் இரங்க முடியவில்லை.மாறாக,மீண்டும் மீண்டும் தமிழர்களது போர்க்காலத் துன்பங்களிற் புகுந்துகொள்கிறார்.தனது தமிழினவாத நிலையை ஈழ விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்துவதில் மறைத்துக்கொள்கிறார். சிங்களக் குடியேற்றமென்ற அவரது வரைதல், வடக்குக் கிழக்கை சிங்கள-முஸ்லீம் மக்களற்ற தூயத் தமிழ்ப் பிரதேசமாக்காணும் கற்பனைக்கு அவரையிட்டுச் செல்கிறது.

வடக்குக் கிழக்குத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசமென்பது கொலனித்துவக் காலத்திய பிரிடிஸ் அரசின் மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலின் தேர்வாகும்.இதனைத் தமிழரசுக்கட்சியினர் தமதாக்கிக் கொண்டனர். இதனால்,"தமிழினத் தூய்மைக் கோட்பாடு வளர்த்தெடுக்கப்பட்டது. "புலிகளைப் பின்னிலிருந்து இயக்கியவர்கள் புகலிட நாடுகளிலுள்ள தமிழர்களே,அவர்கள் நம்பிய மேற்குலக நாடுகளேதாம் முள்ளி வாய்கால் அவலங்களுக்குப் பொறுப்பு. புகலிடத் தமிழ்வூடகங்களில்"கொழும்பில் குண்டுகள் வைக்கவேண்டும்,சிங்களவர்களைக் கொல்லவேண்டும்(இதைத் தமிழ்ப் பிளக்கரில் வசந்தன் என்ற அன்பன் பகிரங்கமாகக் கோரியவன்,அவனைக் கதிர் சயந்தன் போன்றவர்களும் அதரித்தவர்கள்) சிங்களவர்கட்குப் பாடம் புகட்டவேண்டும்"என்று பச்சை இனவாதம் பேசிய தமிழ்ப் பாசிசப் போக்களார்கள் குறித்தெவரும் பேசுவதில்லை! எல்லோரும்,சிங்கள பௌத்தப் பேரினவாதம்,சிங்கள மேலாதிக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். பஷ்பராணி,புலித் தலைமையை விமர்சிப்பவராகத் தோன்றியபோதும், புலிகளைப் போராளிகளென அழைத்தும் கொள்கிறார். இறந்த புலிகளின் கல்லறைகளைப் பெருமைப்படுத்துகிறார்.புலிகள், உச்சந் தலைமுதல் உள்ளங் கால்வரை பாசிச அரசியலொழுக்கத்தால் நிரம்பப் பெற்றவர்கள்.இவர்களிடையே"தீய,நல்ல"சங்கதிகளைத் தேடுவது இயலாத செலாகும்.

மேற்கத்தைய சக்திகளின் இராணுவ அடியாட்க் கூலிப்படையான புலிகள் , ஒருபோதும் ஜனநாயக மற்றும் மனிதப் பண்புகளைக் கொண்டிருக்க முடியாது.புலிகள்,இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல முழு இந்தியத் துணைக் கண்டத்தின் நலன்கட்கும் எதிரான பயங்கரவாத இயக்கமென்பது உலகறிந்தவுண்மை!.புலிகள் மேற்கத்தைய நலன்கட்காகத் தமிழ்பேசும் சிறார்களைக் காயடித்து இரத்தஞ் சிந்த வைத்தனர்.இந்தப் புலிகள் தமிழ் மக்களது நலன்கட்காகப் போராடினார்களென நம்புவது ஒரு அரசியல் மயக்கமாகும்-பிரச்சார வகைப்பட்ட மாயையாகும்.முள்ளி வாய்க்கால் களத்தினது கடைசிக் கட்டத்தில் தம்மைக் காத்துக்கொள்ளப் புலிகள் எங்ஙனம் மக்களைப் பலியாக்கினரென்பதே நல்ல உதாரணமாகும், இந்த பாசிசப் போக்குக்கு.இறந்தவர்களையெல்லாம் தியாகிகளாகவோ,போராளிகளாகவோ கருதமுடியாது.ஒரு,மனிதவிரோதப் பாசிச அமைப்பினது நபர்களது மரணங்கள் அவர்களது சர்வதிகாரத்துக்கான தண்டனையாகும். புலிப் பாசிஸ்ட்டுக்கள் தமிழர்கள் என்பதற்காக,அவர்கட்குப் புஷ்பராணி "போராளிகள்"என்றழைத்துப் பெருமை தருகிறார்.ஜெர்மனிய,இத்தாலியப் பாசிஸ்டுக்களைப் புஷ்பராணி மனித விடுதலையாளர்களாக, வீர மரணத்துக்குரிய போராளிகளாக ஒப்புவாரா?

புலிகளது இராணுவ வாதத்துள் மலைத்துப்போனவர்களும்,அவர்களது தரைப்படை,கடற்படை,விமானப்படை,தற்கொலைப் படைச் சாகசங்களில் தொக்கி நின்ற தமிழ் நடுதரவர்க்கமானது ,கண்மூடித் திறப்பதற்குள் புலிகள் நிர்மூலமாகிப் போனதை நம்ப முடியாதவர்களாகிப் புலி பற்றிய பலிவிதமான கட்டுக்கதைகளை பேணிப் பாதுகாத்தபடித் "தேசியத் தலைவர் ஒரு பொழுதில் தனது தலைமறைவு வாழ்விலிருந்து வெளிவந்து மீண்டும்,தமிழர்களுக்குத் தலைமை தருவாரென" நம்பும் பரிதாபத்துக்குரியவாராகினர். இத்தகையோரே,உண்மையில் புலிகளைப் புழுகிப் பாப்பா மரத்தில் ஏற்றி முள்ளி வாய்க்கால்வரைக் கொணர்ந்துவிட்டவர்கள்;புலிகள் வெல்லப்படவே முடியாத பெரும் சக்தியாகவும் கட்டியமைத்தவர்களும் இவர்களே!. இத்தகையவர்களேயின்று,புகலிவூடகங்கள்முதல் நாடு கடந்த தமிழீழம் வரை இயக்கிக்கொண்டு வருகின்றனர்.இவ்வகைப் போக்குகளோடு சம்பந்தமற்ற விரக்தியாளராகப் புஷ்பராணி தென்பட்டபோதும் அவரும்,இவர்களது அரசியலுக்கு அண்மித்தே வாழ்கிறார்.புலிப் பாசிசவொழுங்கென்பது தமிழரசு அரசியலிலிருந்து தோற்றம் பெற்றவொன்று.இஃது,ஏதோ தனியே பிரபாகரனின் படையலல்ல.யாழ் நடுத்தரவர்க்க சமூக மூலங்கள்தாம் இதைப்படைக்க அடிப்படையாகின.இந்தப் பண்புகள் மேற்கத்தைய நாடுகளின் அரசியல்,இராஜதந்திர ஏவற் பேயாகிவிட்டது.

"ஆயுதங்கள் மேல் கொண்ட அதீத மோகமே,சுத்த இராணுவ வாதமே ஈழப் போராட்டத்தின் தோல்விக்குக் காரணம்"என்று புஷ்பராணியின் எழுத்துக்கள் விளக்கிச் செல்கின்றன.இங்கு,எந்த வர்க்கமானது ஈழப் போராட்டத்தைக் கையிலெடுத்துச் சென்றதென்ற யதார்த்தத்தைவுணர முடியாத புஷ்பராணி,யாழ் நடுத்தர வர்க்கத்தின் வெளிப்பாடுகளை மட்டுமேதாம் காண்கிறார்.தத்துவப் புறக்கணிப்பு,இராணுவக் குணாம்சம்,சிங்கவின வெறுப்பு என்பதற்குத் திட்டவட்டமான தமிழ்த் தேசிய வாதப் பண்புகள் இருந்துகொண்டன.

"தான் எங்குமில்லை,எக் கட்சியிலுமில்லை,இயக்கங்கிளிலும் நம்பிக்கை கிடையாது" என்று புஷ்பராணி சொன்னபோதும் இலங்கையில் தமிழரசுக் கட்சி முதல் புகலிட நாடுகளிலுள்ள பல்வேறு தரத்திலான தமிழ்த் தேசியவாதிகளின் பொதுப் பண்பில் இவரும் இணைகிறார்.தமிழீழக் கனவுகள் சிதைந்தமைக்கு புஷ்பராணி கருதுவதுபோல ஆயுதம் எடுத்த இயக்கங்கள் மட்டுமேதாம் காரணமில்லை.ஆயுத இயக்கங்கட்கு மூலமான தமிழரசு,தமிழர் விடுதலைக் கூட்டணி,தமிழ் இளைஞர் பேரவை போன்றவைகளின் அழிவு அரசியல்தாம் காரணம்.இவர்களே பேரழிவைத் தொடக்கி வைத்தனர்.புஷ்பராணி போன்றவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியலுந்தாம் இந்த ஈழவிடுதலைக் கனவுச் சிதைவுக்குக் காரணமாகியது.

" எவர் கைகளில் ஆயுதம் இருந்தாலும் அஃது,அழிவையே தரும்"என்றின்று ஞானம் போதிக்கும் புஷ்பராணியின் மேடைப் பேச்சுகளும்,சிவகுமாரனைப் புகழ்ந்தேற்றும் பேச்சுக்களும்தாம் அரசியலற்ற ஆயுதங்களை ஆதிக்கம் பெற வைத்தன.இங்கு,ஆயுதங்கள் அல்ல,அதைக் கையாளும் சக்திகளின் அரசியல்தாம் நிர்ணயிக்கும் சக்தியாகும்!.துரையப்பாவும்,அருளம்பலமும்,தியாகராசாவும்,குமாரகுலசிங்கமும் சுடப்பட்ட காலத்தில் அதைப் புஷ்பராணி போன்றவர்கள் மேடைகள் தோறும் ஆதரித்தனர்.தமிழ்த் துரோகிகட்கு "உரிய தண்டனையாக" விளக்கவும் முற்பட்டனர்.இப்போக்குகளின் தொடர் வளர்ச்சியே புலிகளது பாசிசமாகும்.

"தமிழீழத்தை"ப் புஷ்பராணி,"பைபிளில் கூறப்படும் வாக்களிக்கப்பட்ட பூமியாக"க் காண்கிறார்.

இஸ்ரேலியச் சியோனிஸ்டுக்கள்கூட இஸ்ரேலை வாக்களிப்பட்ட பூமியாகவே கண்டனர்.மேற்குலக நாடுகள், இந்தியத் துணைக்கண்டத்தின் இஸ்ரேலாக"தமிழ் ஈழத்தை"மாற்ற முயன்றனர் என்பது, உண்மையே.யாழ்.கிங்ஸ் கவுசில் தன்மீது நடாத்தப்பட்ட சித்திர வதைகளை எழுதும் புஷ்பராணி,புலிகளின் சிறைகள்,சித்திரவதைக் கூடங்களில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மனிதர்களை நினைக்கக்கூட இல்லை. சித்திரவதைகளால் புத்தி பேதலித்து,உள நோயாளிகளாக மாறிய மனித ஜீவன்கள்,சித்திரவதை செய்து கொன்றெரிக்கப்பட்டவர்கள்,நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட இருட்டான பாதாளக் கிடங்குகளில் புலிகளால் போடப்பட்ட பாம்புகளோடு சீவிக்க நேர்ந்தவர்கள்,பாலியலுறுப்புக்களைக் குறடுகளால் நசித்துச் சித்திரவதை செய்த புலிப் பெண்களென எமது நினைவுக்கு வரக் காத்திருக்கும் விடயங்கள் ஏராளம்.

தொடரும்...

தமிழரசன்,
பேர்ளின்

Keine Kommentare: