Sonntag, August 14, 2011

பிளந்த சிரம் மறுத்த துயில்

வஞ்சகக் கள்வர்.

றிவு-ஆய்வு பிறிதாகியது அழி புலித் தேசமென
செவிஅகம் புகூச் சென்ற புலிப் பாசிசமும்
தனி ஊழ் வினைகொள் விடிவெனப் பகிர்ந்து
சூரியதேவன் ஆம் எனச் சொல்லி
துன்னலன் தூபி எழத் துவண்ட கூட்டம்!

பிளந்த சிரம் மறுத்துத் துயில் விரித்து
போற்றிப் புகழ்ந்த நாவு அகழ் குழியுள் அடை காக்க
அழிந்தவன் அவித்த ஜனக்கூட்டம் போரிடை
முள்தரிக் கம்பியும் இடை இருள் யாமத்து இருந்தார்,
மங்கோல் காட்டி மடியவிட்டார் என் ஜாதியை!-தூ...



"செய் வினை-சூனியம் கில்லி யாழ்ப்பாணியச்
சாபம் கொல்லோ?திப்பிய ஊழியம் கொல்லோ?
எய்யா இழவு கண்டு மையலேன் யான்!"-இன்றும்!
ஊழிக் கூத்தன் முள் எயிற்று சன்னம்
அருந்த ஏமாந்த ஆர் திராவிடவுயிர் உதிர்ந்து.

பால்குடி,பெண்டிர் முதலெனக் காவு கொள்
தேசியம் சீண்ட எல்லாளப் புரட்டல் போனது
இடம் மறுத்து எங்கோ ஏதோவென.
இலட்சம் இரண்டா மூன்றோவெனக் கணக்கற்ற
சிரசுகள் தெறிக்கத் துவண்டனர் என் கூட்டத்துக் குழாம்!

ஆடலும் பாடலும் ஆயுதமும் காட்டி
கறந்த பொன் கோடி கோடி கொண்டோர்
புலிக் கோவேந்தர் ஆனகதை யாரறிவார் அச்சோவே?
பண்ணிசைச் செம் மொழி உயிரெனச் சொல்ல
பாடினர் பண்டிதர் ஊழ்வினை மறுத்து உயர்வென

புலித் தேசம் "ஈழம்" பொய்யாகிக் கொல்வினை கூட வரவே
திராவிடத்தார் கல் தோன்றி மன் தோன்றிய பின்னும்
பல்மன் பல்தேசச் சரிவில் ஏதிலி பூண்டு சாவலி கொண்டார்
தலித்தென்றும்,பைபிள்-கூர் ஆன் காவி கோவணத்தையும் கொடுத்தார்
பாத்திரம் ஏந்திய பண்டய கர்ண தேசப் பாவையைக் கண்டு!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
13.08.2011

Keine Kommentare: