Freitag, Januar 12, 2007

பேய் ஓட்டுதல்

"ஒரு வாத்தியாரிடம் பாடம் கற்கும் மாணவனுக்கு"உலகம் உன்னில் தொங்குவதில்லை"யென அவரொரு கவிதை சொல்ல,அதை வெட்டருவாள் மாணவன் கிட்டி விளையாடும் வயதில் கிழட்டுக் கதம்பம் -நாய் என்கிறான்.வாத்தியோ வயசான காலத்திலும் வம்புக்காவேனும் வதைபடும் மாணவனைக் கவிழ்த்து விடுவதில் விருப்பின்றி,தன் வினை பணிசெய்து கிடப்பதாகச் சொல்லிக் கொண்டார்.பேதமை வாத்திக்கா அல்லது மாணவனுக்கா?"




பேய் ஓட்டுதல்.



போடுதலும்
கழட்டுதலும்
பின் போடுதலும்
எடுத்தலும்
சிதைத்தலும்
பின்னுவதும் பிரட்டுவதும்
தொடர்கதையாய் காலம் நகர,



அதன்பின் துடைப்பதும்
கழுவுவதும்
புரட்ட முனைவதும்
பேசக் கற்பதும்
எழுதிப் பழகுவதும்
எதற்கெடுத்தாலும்
குருதியேற்றம்
இறக்கம்
அழுத்தம்
எத்தனை
கதைகளும்
எருக்கலம் இலையாக!



கருத்தொடு கதை சொல்.
இல்லையானால் வாய் திறந்து
பேசாதே மற்றவை-மற்றவர்கள்
புராணம்!



போதும்,
பேய்விரட்டல்கள்
புரட்டல்கள்.



பிசாசுகளின்
இருப்பைப்பற்றிக் கதைகாவிக் கொண்டிருப்பதைவிட
கருத்தோடு
எதிர்வினை வை.



அல்லாது போனால்
அவித்த சோற்றை மெல்ல மென்று
அம்மாவிடம்
தோசைக்கு மா அரைப்பதுபற்றிக் கேள்
பின் அந்த வேலையில்
அம்மாவுக்கு உதவு.


எத்தனை முறை
எத்தனை கர்ச்சனை!
எதிலும்
உப்பும் இல்லை
உறைப்பும் இல்லை.


இதுவா
பேய் விரட்டும்
உடுக்கையடி?



உலக்கையெடுத்து
உரலிடிக்குமுன்
உரலில் உமியா நெல்லாவென்று
பார்த்துக் கொண்டால்
இடிப்பது
உணவுக்கு உதவுமா இல்லை
விழலுக்கு இறைத்த நீராகுமா என்பது தெளிவு.


உன்னை
உலகப் புள்ளியின் மையத்தில் ஏற்றி வைத்துவிட்டு
நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும்
உன்னைப் பின்னியே உலகில் வந்து தொலைக்கிறது!


உலகம்
உனது மையப் புள்ளியல்ல-நீ
அதில் மேடை தேடுகிறாய்
ஆடிக் கொள்வதற்கு
அவ்வளவுதான்.



அவசரப்பட்டு
அடுக்கிவிடும்
வார்த்தைக்கு அர்த்தம் இருப்பதில்லை
அதிலும் நீ சொல்லும்
கதைகளெல்லாம்
அலட்டல்-நமைச்சல் உனக்குத்தான்.



அந்தரத்தில்
ஆயுதம் தூக்கி
அடுப்பெரிக்கப் புணங்களை அள்ளிப் போட்ட
கதைகளின் அரிச்சுவட்டில்
நீ
ஆடுகிறாய்
கீச்சு மாச்சுத் தம்பலம்
மாச்சு மாச்சுத் தம்பலம்
இப்ப நீ
மூச்சு!



கவிஞர் சேரனும் சில நினைவுகளும்...

'மீண்டும் கடலுக்கு' தொகுப்பை முன்வைத்து- எப்போதெல்லாம் தூக்கம் வருமெனச் சொல்ல முடியாதபடி உழைப்பு நடக்கின்றது.எப்ப பார்த்தாலும் சனங்களுக்கு ஏதாவதொன்றுக்கு ஆசையாய்த்தான் இருக்கு!
எனக்கும் ஊருக்குப் போய்-சண்டை நடந்தாலும்,சனங்கள் செத்தாலும்,ஆச்சியப்பு மூச்சுவிட்டாலும் பறுவாயில்லை-வடிவாகச் சுத்தித்திரியவேணும்.வன்னிக்குள்ள போய் காட்டுப்பண்டியோட ஒருபோத்தல் நாட்டுச் சரக்கை மூக்கு முட்ட விட்டுட்டு;.பிறகு ஒரு உந்துரளி,பின்னுக்கொரு பஞ்சாபி... சொல்லவா வேணும்!

வன்னிக்குள்ள மச்சாள் புல்லுப் புடுங்கிறாள்.அவளைப் பார்க்கிறத்துக்கும் உது நல்ல வாய்ப்புத்தான்.எண்டாலும் நம்மட நிலைமையில உந்தக் கனவுகளைச் செய்யிறத்துக்காவது நாம கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதெண்டு யோசிச்சுக் கன நாளாச்சு.

ஆரு செத்தால் எனக்கென்ன!

எவனுக்குப் போட்டுத் தள்ளினாலென்ன!

பேசாதே!

ஊரெல்லாம் ஒன்று கூடி அழுதாலும்,நாம பாட்டுக்கு ஆப்பிரக்கப் பழங்குடிகள் பற்றியோ அல்லது அமெரிக்கப் பழங்குடிகள் பற்றியோ பேசுவம்.மிஞ்சிப் போனால் இருக்குது சினிமா.பிறகென்ன நம்மட திருவிழா நல்லா நடக்கும் தானே?

".........................."

கோவிக்காதேங்கோ.நானும் இப்படிப் பண்ணாட்டி நாட்டில போய் மேய முடியாதில்லையோ!பேந்து பேசக்கூடாது! மூச்!!


எனக்குக் கவிதையெண்டால் சரியான விருப்பம்.

முன்பெல்லாம் பாரதியில தொடங்கி இப்ப நம்மட வைரமுத்துவின்ர கவிதையிலும் கொஞ்சம் பற்றுத்தான்.

அவருக்குப் பாட்டெழுத வரும்,படிக்க வரும்,பேச்சும் வரும்!


எனக்கும் கொஞ்சம்...

வேண்டாம் உதுபற்றிச் சொல்லக் கூடாது.


முன்னொரு காலத்தில் முழுமொத்த இலங்கையிலும் நாம கால் பதிச்ச போது,நல்லாத்தான் இவன்களோட நானும் ஒட்டினன்!மறுத்தோடுகிற நானாத்தான் இருந்தனான்.இப்பதான் கொஞ்சம் படிச்சதெண்டும்,பாடம் சொல்லிக் குடுப்பதென்றும் கொஞ்சம் மவுசு வந்திருக்கு...


இப்ப என்னத்துக் உதுகளப் பேசுவான்?

"நான் உன்னை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்..."


"..............................."

"...சேர்ந்ததே நம் ஜீவனே..."

எப்போது சுந்தரி?

சும்மா விடுங்கோ!

"சுந்தரி,சும்மாவொரு செய்தி சொல்லேன் நீ கொஞ்சி!"

ஆசையைப்பார்,ஆசையை!


என்ர மச்சாளுக்கு நல்லாத்தான் நாணத் தெரியும்.கொஞ்சம் தூக்கலான மார்புக்குள்ள மாட்டாத சீவன்கள் எவரோ?

உப்பிடித்தான் எனக்குப் பொண்டுகளெண்டால்.

என்னை பொண்டுகளாலேயே கட்டிப் போட்டிருக்கிறன்.


"மனிதர்கள் புரிந்துகொள்ள
இது மனிதக் காமம் இல்லை
அதையும் தாண்டிப் புண்ணாக்கானது"


காமத்தைப் பற்றி கொட்டாம்பட்டிச் சுப்பு என்னமாக் கவிதை எழுதுகிறார்!
இது மாதிரி உவருக்கு ஒரு சொட்டும் வருகுதில்லை.எண்டாலும் ஏதோ பதினெட்டாம் நூற்றாண்டு மொழியோடு சொல்லுகிறார்.அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையில கையப்போட்டு உவர் நடாத்திய கவிதா நிகழ்வால் மோனத்தைக் கண்டவர்களுள் நானும் ஒருவன்.


அக்காவின்ர கையப் பிடிச்சுக்கொண்டு கிணற்றுக்குள்ள விழுந்த தரணத்தில் அப்பாவோடு தமிழ் நாட்டில் சுத்தக் கொடுத்து வைத்ததில் எப்பவோ வைரமுத்துவோடயும் சேர்ந்தொரு படமும் எடுத்துப் போட்டன்.காவி நிறுத்தில ஒரு கந்திரி.

அடப் பாவி!உதென்ன கதையடா?


சும்மா விடுங்கோ மேலே போங்களேன்!

டி.சொய்சா என்றொரு பத்திரிகையாளர் இலங்கையில வாழ்ந்தார்.நிலவுகின்ற ஒடுக்கு முறைகளை-பிரேமதாசாவின் அட்டகாசங்களை ஆத்திரத்தோடு அவிட்டு விட்டார்.அந்தோ அவரும் போனார்.

டி.சொய்சாவோடு நானும் பத்திரிகையாளானாக இருந்தனான் எண்டார் ஒரு கவிஞர்.

இவர் இப்ப ஒடுக்கு முறையோடு ஒன்றிப் போய் அதன் ஒழுக்கம் தவிர்க்க முடியாதாம்.

இருக்காதா பின்ன?

நான் பாருங்க அப்பப்ப உப்பிடிதான்...


"முன்னே செல்லும் மூன்றடி கருதி,
பின்னே வைக்கும் ஓரடியாலே,
பெரிதாக எந்த இழப்பு இல்லை!"


இப்ப எல்லாரும் இப்படித்தானாம்.

"கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே-இந்த
வேரிற் பழுத்த பலா"

ஓ...பாரதி தாசனோ?

ஆமா!

நாம இப்ப ஆருக்காவது தாசனாக இருப்பதுதான் சரி.நம்மட கனவுகளுக்கு வடிவம் கொடுக்க இதுதான் சரி.


"எழுதப்படாமலேயே
போயிருக்க வேண்டிய
ஒரு கவிதை."

ம்... மேலே சொல்லுங்க!

"சவப் பெட்டிகளைத் திறந்து வையுங்கள்"

இன்னும் மேல போய் மறுத்தோடுங்க சார்!

அப்படியா?

இதோ!

"நெடு மரப் பெரு நிழல்கள்
ஒடுங்கி,
சோகமாகப்
புற்களின் மேல் விழுந்திருகிற
இந்த நிலத்தில்
காற்று எப்போதும் போல
விட்டு விட்டு வீசீக் கொண்டிருக்கிற
நேரத்தில்
இன்னும் நிறைவேறாத ஆசைகளும்
இலட்சியங்களும்(எவன்ர தலையில எவளின்...)
அறுந்து
துயர இழைகளில் ஆடிக்கொண்டிருக்கும்
ஆறடி நீளம்(ச்சீ இவ்வளவு நீளமா?) இரண்டடி அகலம்(இது சரிப்பட்டு வராது)
என ஒரு வெளியில்


அந்த இரு
சவப்பெட்டிகளைத் திறந்து வையுங்கள்
கொஞ்ச நேரமாவது
புதிய ஆடைகள் வேண்டாம்
அகதி முகாம்களில்
மாற்றுடையின்றித்
தோய்த் ஆடை
உலரும் வரைக்கும்
மறைப்பினுள் நிற்கும்
நம் பெண்களை(உவருக்கு உதில பாருங்க சரியான அனுபவம்...) நினைப்போம்


குருதி படிந்த அங்கிகளைச்
சற்றே தளர்த்தி
இரணங்களைத் தெரிய விடுவோம்
மெல்லிய வெய்யில்
இலைகளுக் கூடாகப் ப+க்களாய்
அவற்றின் மேல் உதிரட்டும்
காற்று வந்து
தடவிச்("..........")செல்லட்டும்


தலை சிதறிக்
குருதி நிலம் தெறிக்கக்
கொலை நடந்த இடத்தில்
குருதியில் ஊறிய
சுலோக அட்டை கிடந்ததை
மறுபடியும் அனைவரும் நினைப்போம்

ஒரு வகையில்
இந்த உடல்கள் அதிஸ்டம் உள்ளவை
சவப்பெட்டி
ரப்பர் வாசனையின்றி எரிய
விறகுகள்
சுற்றியழச் சுற்றம்
கண்ணீர் அஞ்சலி
கவிதை வரியில் துண்டுப்
பிரசுரம்


பெட்டியில் அடங்கும்
வாய்ப்பே அற்று
மயான மூலையில்
முகமறியா இருளில்
முகமிழந்து புதைத்த உடல்களை
பாதி எரித்து
மீதி அழித்து
சிதைத் உடல்களைச்
சுதந்திரத்துக்காய்க்
களத்திலிறங்கிக்ச்
சுதந்திரம் இழந்தவர்களை
நாம் நினைத்திருந்தால்
மிகவும் கொடிது
இது எதிரியின் வேலையல்ல
எம்மவர் கொலைக்கரம்
பதித்த சுவடுகள்


கறைபடியாக் கரங்களெனத்
திக்கெட்டும் பறையறைந்து
கவி சொன்ன
என் வாய்குச் செருப்படி


நியாயப் படுத்தத் துண்டுப் பிரசுரம்
போலித் தராசு,
நீலிக் கண்ணீர்

உதவாது தோழரே
நமது
ஒரு தேசத்தின்
அரசியல் தற் கொலை இதுவென அறிக!


கரங்களில் உயரும்
கருவிகளைப் பறிக்கும்
ஒரு மக்கள் குரல்
அராஜகத்தின் வேருக்கு
ஒரு கண்ணீர் வெடி.

-சேரன்(1987)

(ஈழ விடுதலைப் போராட்டத்தின் போர்க்கால இலக்கிய வரலாற்றின் எழிச்சிக் கவிஞனாகிய சேரன்
ஜனநாயகத்துக்காகப் போராடியதால் அதன் எதிரிகளால் மிரட்டப்பட்டவன்.-தி.உமாகாந்தன்)


இன்றைக்கு அண்ணாச்சி"மீண்டும் கடலுக்கு" போனார்.போனபோது அது குருதியால் நிறைந்திருந்தைக் கண்ணுற்றார்.அந்தக் குருதியின் உறவு தன் பிடரிவரை வருவதை அறிந்தார்.

எடுத்துப் போட்ட ஏதோவொன்றுக்காகக் "கண்ணீர்"வெடியென்று பிரகடனப்படுத்தாமல்
"தேசியம்"பாடிப் பல்லுக்காட்டிப் பட்டம் பிடித்தார் புயலில் ஏற்றி விண்கட்டிப் பறப்புக்கு.
இப்ப எனக்கு ஒரு சின்ன மனசு அழுகுது.
என்னங்கடா இது?
"உதவாது தோழரே" என்ற நம்ம "எழிச்சி"க் கவிஞரும் அவரை வாசித்த வாசகரும் பொருந்தி நிற்கும் இடம் இதுதான்:


//அதே சமயம், பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாய் புலம்பெயர்ந்து வாழும் சேரனுக்கு இங்கு நடக்கும் தற்கொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள், நாற்றமடிக்கும் சாதிய அழுக்குகள் எதுவும் சலனமடையச் செய்யவில்லை என்பது ஆச்சரியப்படுத்தும் விடயந்தான். சிலவேளைகளில் வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு மண்ணில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவ்வளவு அக்கறையிருப்பதில்லையோ தெரியவில்லை.//


இங்கே தேசியம் என்றால் தேனாகிக் குருதி சிந்தும் கணங்கள் மறந்து,உலகப் போராட்டம்,விடுதலைக் குரல்கள்-கறுப்பினப் போராளிகள் பற்றிக் கயிறு விடுவதுதான் இவர்களின் நியாயப்பாடு!

இருக்காதா?

என்னைப் போலத்தான்,
வன்னிக்குள்ள போய் நல்ல காட்டுப் பண்டி பிடித்து...


















Donnerstag, Januar 11, 2007

யுத்தமும்,கவிஞர் மேத்தாவும்.






யுத்தமும்,கவிஞர் மேத்தாவும்.


பலருக்கு மேத்தா ஒரு கவிஞர்.உண்மையில் மேத்தா கவிஞர்தானா?
இந்தக் கேள்வி மிகவும் சுவாரஸ்யமானது.ஏனென்றால் மேத்தா எழுதியதெல்லாம் வெறும் வசனங்களே.அவை கவிதைக் குரிய எந்த அழகையும் கொண்டிக்ருக்கவில்லை.ஏனெனில் அவர் யுத்தத்தை எதிர்க்கிற கவிதையெல்லாம் எழுதிப்போட்டார்!

கூடாதே,இது கூடாதே!!


ஒரு நாடு,
ஒரு மக்களினம்
தனது இறைமைக்காகச் செய்யும் யுத்தம் மிகவும் அழகானது.
கொட்டும் குருதியெல்லாம்
வீரத்தின் விளை நிலத்தில்
மறப்பயிர்களை விளைவிக்கும்.


குருதி சிந்துதே,
குழந்தைகள் சாகிறார்களே,
அப்பாவிகள் அழிகிறார்களே என்று பார்த்தால்
யுத்தம் தீர்வைத் தராது.
மாறாய் பின்னடைவைத் தரும்.

மக்கள் அழிவது தவிர்க்க முடியாது!
மக்கள் பசித்திருப்பது சாதரணமானது.
அகதி முகாம் வாழ்வு வந்துவிட்டால் என்ன?

நாளை விடியப் போகும் ஈழத்தில் இருக்கிறது உங்கள் நிம்மதி!

இல்லையா?



எங்கள் தலைவரிடம் மீளவும் போவோம்.


தேசியத் தலைவர் கூறுகிறார்:"..............................."இப்படி.இதன் அர்த்தம்,பேசாதே!என்பதாகும்.எதற்கும் அடிதான் மருந்து.

ஆனால் மேத்தாவின் பலவீனமே வெறும் வசனங்களாக வருகிறது.

பாருங்கள் அவருடைய கவிதைப் போர்மூலாவை:

"புயலை உருவாக்கும்
வல்லமை படைத்தவர்கள்
ஆனால்
தம்முடைய வாழ்வில் ஒரு
காற்று வீசாதா என்றுதான்
காத்திருக்கிறார்கள்.

இமயத்தையும் தாங்கவும்
வலிமை கொண்டவர்கள்
ஆனால் அவர்களுடைய
சொந்த
இதயம் கனப்பதைத்தான்
அவர்களால்
தாங்கிக் கொள்ள
இயலவில்லை...."


இதை இப்படி எழுதினால் என்ன வரும்?


"புயலை உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள் ஆனால் தம்முடைய வாழ்வில் ஒரு காற்று வீசாதா என்றுதான் காத்திருக்கிறார்கள்."


"இமயத்தையும் தாங்கவும் வலிமை கொண்டவர்கள்,ஆனால் அவர்களுடைய சொந்த இதயம் கனப்பதைத்தான் அவர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை."


புதுக்கவிதை என்றொரு பாசாங்கில் மேத்தா எழுதிய வசனங்களையேதான் இன்று நாம் பார்க்கிறோம்.


கவிதையென்பது வாசிக்கும் பொழுது நெத்திப் பொட்டில் அடிக்க வேண்டும்.உணர்வைச் சிதைத்து மீளவும் கலைத்து ஒருங்கு படுத்த வேண்டும்.இஃதில்லாக் கவிதை கவிதைதானா?

இதோ ஒரு கவிதை:

"மண்ணில் எங்கள் மைந்தனாய்
மலர்ந்திட்ட இளையவன்-மலரவன்
அண்ணர் மூவரின் அரும் பெரும்
ஆருயிர்ச் சோதரனாகியவன்.

குலம் விளங்க மலர்ந்தவன்
குடும்பத்தின் ஒளி விளக்கானான்
பாசத்தை உணர்த்திய பாலகன்-இவன்
பண்பினால் பலரைக் கவர்ந்தவன்.

"......................"

இலட்சியப் பயணங்கள் மேற்கொண்டு
பசீலனை இயக்கிடும் பணி செய்தான்

"..................."

இடை வழியில் அவனை இழந்திட்டோம்
இராணுவ வேலியை அழித்திடவே
இளம் வேங்கையவன் வேட்கை கொண்டதனால்
களத்தில் காவியம் படைத்திட்டான்.

"..................."

"????????????????????"
"............................."

-கப்டன் மலரவனின் பெற்றோர்.




இதை எழுதினது எங்கட தேசத்துப் பெற்றோர்!
தங்கட மகன் புலியில இருந்து,
இராணுவ முகாம் தகர்க்கப் புறப்பட்டு இறந்தபோது,
இப்படி மகிழ்வோடு பாடுகிறார்கள்.
யுத்தம் அவர்களுக்கு மகிழ்ச்சியானது.
தாம் பெற்ற மகனே களத்தில் பலியாகியதும்,
போரடிக் கொண்டே ஒரு நாவலையும் எழுதி-"போர் உலா"ப் போன மலரவன் பெற்றோரால்
மகிழ்வோடு பாடையில் அனுப்பப்பட்டபோது,உந்தக் கோதாரிபிடிச்ச மேத்தாவுக்கு யுத்தம் பற்றியென்ன தெரியும்?


ஆனால் மேத்தா நான் வாழும் காலத்துக்குரிய கவிஞனே அல்ல.



மலரவன் யுத்தத்தில் செத்ததால்
ஈழ அன்னையின் கருவில் கிடந்து துடிக்கிறான்!
நாளை மலரப் போகும்
தமிழீழத்தில் அவன் தவழும் பொழுதுகளில்
தமிழ்த் தாய் அகம் மலர்வாள்.
எனவே,
காலத்தில் வாழும் அவன் கவிதையாகி நிற்பது வேறு...


மேத்தாவுக்கு ஏதோ புலம்பத் தெரியுது.


யுத்தம் இல்லாத பொழுதும் ஒரு பொழுதா?
அடிமை வாழ்வுக்கு யுத்தம் அவசியமில்லை.
நாம் ஈழத்தின் விடியலுக்காகப் போராடும் நெருப்பு மனிதர்கள்.

யுத்தம் நாம் ஆடும் விளையாட்டு,
வெடிச் சத்தம் நாம் கேட்கும் தாலாட்டு,
புலிகளின் படை கண்டால் புயலாய் ஓடுவார்கள் உலகத்து இராணுவங்கள்!
நாங்கள் போரிட்டால் அமெரிக்காக நடுங்கிச் சாகும்!,
இந்தியா இடறி விழும்-இடிந்து ஓய்ந்துவிடும்!



இதுகூடத் தெரியாத மேத்தா!-இப்படி எழுதுகிறார்:



போரும் சமாதானமும்:

"சமாதானம்-
வீட்டில் எரியும்
அடுப்பின் நெருப்பு.

யுத்தமோ
கூரையை எரித்துக்
கொளுத்தும் வெறுப்பு.

சமாதானக் காலத்தில்
மங்கை
மலர்களைச் சேகரிப்பாள்-
கொண்டவன் நினைவில்
கூந்தலில் சூட!

யுத்த காலத்தில்
தாய்
தலைகளைத் தேடுவாள்
கூந்தலில் சூடிய
மலர்களைக் கழற்றிட

சமாதான நாட்களில்
மணச் செய்தி
பத்திரிகையாய் வரும்

யுத்த நாட்களிலோ
பத்திரிகைகள் வரும்
மரணச் செய்திகளாய்.

சமாதானக் காலங்களில்
ப+க்களைப் பார்த்து நாம்
புன்னகை புரியலாம்

போர்க் காலங்களிலோ
பிணங்களோடுதான் பேசமுடியும்!"

-மேத்தா.


கிறுக்குத் தனமாக எழுதுவதெல்லாம் ஒரு எழுத்தா?

யுத்தம் இல்லாமல் விடிவு வருமா?


இப்போது ஈழத்தை எடுத்தால் யுத்தம் தவிர்க்க முடியாது.


யுத்தத்தால் தான் தீர்வு வரும்.


தீர்வே யுத்தமாக இருக்கும் போது,மேத்தா யுத்தம் பற்றி அறிந்தது அவ்வளவுதான்.


எங்கட தேசியத் தலைவர் செய்கிற ஒவ்வொரு செயலிலுமே யுத்தத்தின் நெடில் இருந்தே தீரும்!-அது அவரது மிகக் கடுமையான சிந்தனையில இருந்து வரும் அதியுச்ச எண்ணங்களாகும்.

இப்படி யுத்தமே தீர்வாக இருக்கும்போது சமாதானம் என்பது வெறும் பொய்யானது-போலியானது.


தமிழருக்குத் தேசம் வேண்டுவதுபோல எல்லாருக்கும் வேணும்.


மேத்தாவுக்கு யுத்தம் பற்றியே ஒழுங்காகத் தெரியாமல் போலிக்கு எழுதுவது சரியில்லை.
எங்கள் தேசியத் தலைவரிடம் கேட்டு விசாரித்தாவது எழுதியிருக்கலாம்.


யுத்தம் அழகானது!
அற்புதமானது
.யுத்தத்தால் நாடு உருவாகும் ஈழம்போல.
யுத்தத்தால் ஒரு இனமே அழிந்தாலும்
ஒரு தேசம் அவர்களுக்காக மலர்ந்தே தீரும்.



இதுதான் யுத்த்தம் பற்றிய தேசியத் தலைவரின் தீட்சன்யமான பார்வையும் கூட.