Montag, Juli 30, 2012

சபா நாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 2)

"தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி" என்ற சபா நாவலனது நூலுக்கான விமர்சனத்தின் இரண்டாவதுவது பகுதி இது.

நீண்டவொரு விமர்சனத்தின் எழுத்தோட்டத்துள் பாரிய எழுத்து-வாக்கியப் புணர்வுப் பிழைகளென ஏராளமான தவறுகள் மலிந்துகிடக்க,அவற்றைத் தறுவாக வாசித்துத் திருத்துவதில் பல மணி நேரம் விரையமாச்சு!

வாசிக்க-வாசிக்க, நீண்டுகொண்டே செல்லும் இந்த விமர்சனத்தை எழுதிய தமிழரசன் சுயமாகத் தமிழில் தட்டச்சுச் செய்யவில்லை! இதைத் தட்டச்சேற்றியவர் பல தவறுகளைக் கையெழுத்துப் பிரதியிலில்லாததையெல்லாம் செய்திருக்கிறார்.

வரலாற்று நிகழ்வுகளையும்,சமூக அசைவியகப்பாட்டின் வினைக்கூர்ப்புகளையும் வரலாற்றியங்கியலது புள்ளியில் வைத்து விமர்சனமொன்றைத் தருவது, பாரிய தகவற்றொடுப்புகளுடனேயே சாத்தியமாகமுடியும்.அன்றைய காலத்தரசியற்போக்குகளைத் தீர்மானித்த அதீதமான காலனித்துவ-நவகாலனித்துவப் பொருளாதார-அரசியல் நலன்களது பண்பிலிருந்தே தமிழ்த் தேசியவாதத்தின் தோற்றுவாய்,அதன் வளர்ச்சிக்கு-எழிச்சிக்கான உயிர்ப்பலியீடுகளென ஏராளமான தகவல்களைச் சேகரித்த இந்த விமர்சனம், ஒரு நூலுக்கானதெனச் சுட்டப்பட்டபோதும் இதுவே, ஒரு நூலது பண்புக்கு உட்பட்டு விரிகிறதென்பதை நாம் புரிந்துகொள்வோம் நண்பர்களே!

அதிகாரம்-ஆதிக்கம் என்பது ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு "தனிமனிதரை குழுவை-தேசத்தை"யென பணிவுக்குட்படுத்திச் செல்வதில் அதன் கொள்கையளவிலான பண்புகள்"அதிகாரத்தைச் செலுத்துபவரும்,அதிகாரத்துக்குட்படுபவரும் இருவேறு தளத்திலான நம்பிக்கைக்குட்படுகின்றனர்.வர்க்கச் சமுதாயத்துள் ஒருவர் உடமை வர்க்கத்தவராகவும் மற்றவர் உழைப்பாளராகவும் தேர்ந்து போயினர். இதுள்,ஒருவர் ஆதிக்கத்தைச் சட்ட பூர்வமாக்கவும்,நிறுவனப்படுத்தவும் , அதிகாரத்தை நம்ப வைக்கவும்,அது அதிகாரத்துக்குட்படுபவரின் விமோசனத்துக்கானதெனச் சொல்லியே ஆதிக்கத்தை வியாபிக்க முனைகிறார்.ஆதிக்கமானது இத்தகைய தருணத்தில் நம்பகாமாக ஏற்கப்படும்போது மட்டுமே சட்டரீதியான வெளித் தோற்றத்தைச் சமூகத்துள் நிறுவனப்படுத்துகிறது. அதிகாரமும்-ஆதிக்கமும் வெவ்வேறாகிறது.மக்ஸ் வேப்பரது[ Maxs Weber ]நீண்டவுரையாடலைச் [ Wirtschaft und Gesellschaft-Tübingen 1972 ]செழுமைப்படுத்திய  கைன்றிக் போபிற்சு[ Heinrich Popitz] இதைத் தெளிவாகவே நமக்கு[ Das Konzept Macht] உரைத்திருக்கிறார்.உயர் குடிகளுக்கான வாய்ப்பு மிக இலகுவாகவுள்ளதை அவர் புட்டுவைத்தார்.

தமிழ்த் தேசியமானது தனது சக்திகுட்பட்ட அதிகாரத்தைச் செலுத்துவதற்கான நம்பிக்கைகளை மிக இலாவகமக தமிழ்பேசும் மக்களுக்குள் உருவாக்கியது.அஃது, தொடர்ந்து இன்னொரு மக்கட்டொகுதியை ஆத்திரப்படுத்தலுக்கான வழிமுறைகளைக்கொண்டே[Differentiation of Society-Luhmann,M. In Canadian Journal of Sociology 2.] ஒரு இனத்தின்மீதான இன்னொரு இனத்தின் அத்துமீறிய ஆதிக்கத்தை நிலைப்படுத்த விரும்பியது.இதன்சாரத்துள் மறைக்கப்பட்ட நலனானது தமிழ் மேட்டுக்குடியின் நலன்களைச்சார்ந்தே இயங்கிக்கொண்டது.இதன் உச்சபட்சம் மரபார்ந்த அனைத்து அறங்களையும் நாசமாக்கியது.இனங்களுக்கிடையிலான மூலதனவிருத்தி,போட்டிகளை மலினப்படுத்தியபோது அவை முரண்பாடுகளாகவும்-இனம்,மொழி,மதம்,பண்பாட்டுக்கெதிரான தாக்குதற் கருவூலமாகப் புரிய வைக்கப்பட்ட நம்பிக்கைகளே [Symbolic Power.Critique of Anthropology-Bourdiee,Pierre.1979 ]இறுதியில் சட்டபூர்வமான ஆதிக்கத்துக்கான அரசின் உறுப்பாக மாற்றப்படுகிறது.சில மனிதர்களின் நலன்களது தெரிவு எங்ஙனம் ஒரு இனத்தையே மொட்டையடிக்கும் விதேசிய வாதமாக மாறுகிறதென்பதைத் தமிழரசனது இந்த விமர்சனம் குறித்துரைக்கிறது.இது,அதிகாரம்-ஆதிக்கம் குறித்த கைன்றிக் போபிற்சினது(Heinrich Popitz]"சட்டபூர்வமான-தன்மையிலான அங்கீகாரமின்றி ஆதிக்கம் இல்லை"[Ohne Legitimität keine Herrschaft] என்பதோடு நெருக்கமானது நண்பர்களே!

நீண்ட எழுத்துப் பொதிக்குள்-விமர்சனத்துள் ஆழ்ந்து கிடப்பது வரலாற்றாய்வுசார்ந்தவுண்மைகள்.வரலாற்றியக்கத்துள் முழுமொத்த இலங்கை மக்களது சமூகவசைவியக்கம் தோற்றுவித்த முரண்பாடுகள், எந்தச் சாயமுமின்றிப் பேசப்படுகிறது.அது, நாவலனது நூலை மதிப்பீட்டு எல்லைக்குள் புகுத்தாமல் அந்த நூலது பக்கங்கள் தொட்டிருக்கவேண்டிய விடுபடலைச் சுட்டுகிறது.

இவை, ஈழவிடுதலைக்காகச் செய்யபட்ட போராட்டத் திசையில் உள்வாங்கப்பட்ட ஏராளமான போராட்ட முன்னோடிகளிலொருவரான சபா நாவலன் மீதான விமர்சனமில்லை!அவரது ஆய்வு நூலை வரலாற்றோட்டத்தில் வைத்து விளங்க முற்படுகிறது-அவ்வளவே!

கூடவே,அவரால் முன்தள்ளப்பட்ட அரசியல் ஆய்வின் மீதான இணக்க-இணைப்புக்கு மேலதிகமான வரைவாகும்.இந்த வரைவுகளுக்குள் மண்டிக்கிடக்கும் வரலாற்றுத் தகவல்கள் ஒரு ஆவணமாகவே நிலைத்திருக்கிறது.

இது,இலங்கையின் சமூக-அரசியலை மக்கள்-மண்-இயற்கை-சூழலென அனைத்தையும் பிணைத்து உள்வாங்கியவொரு உரையாடலாக நகர்த்தும்போது இலங்கை மக்கள் அனைவருக்குமானவொரு இலங்கையை நமது வழிமுன் நிறுத்துவதில் வெற்றிகண்டிருக்கிறது.

நாம் உழைப்பின் உறவால் ஒன்றுபட்ட மனிதர்கள்.நமக்கு"இனம்-மதம்-மொழி"என்பவைகள் இரண்டாம் பட்சமானவை.இவைக்கும்,உழைப்பவர்களது,ஒடுக்கப்படுபவர்களது,தாழ்த்தப்படுபவர்களது,இந்த அமைப்பால் விளிம்புக்குத் தள்ளப்பட்ட வலுவற்றவர்களது "சுகவாழ்வுக்கும்-விடுதலைக்கும்" எந்தத் தொடர்புமில்லை!

தமிழ்பேசியவர்கள், தமிழர்களை ஒடுக்கவில்லையா?தாழ்த்தவில்லையா?கொன்று இரயர் போட்டெரிக்கவில்லையா?துரோகி சொல்லிப் பொட்டு வைக்கவில்லையா?இவைக்காகத்"தமிழீழம்"என்ற ஒரு புனைவை முன்தள்ளித்தாமே நியாயம் கூறினர்?அந்தத் "தமிழீழம்" இன்றெவரது கைக்குச் செல்வத்தைக் குவித்து வழங்கியிருக்கிறது-எந்தெந்தக் குடும்பங்களது தலைமையில் அதகாரத்துக்கான திசையமைவுகளைக் கொண்டியக்கி வருகிறது? எவரெவரோடு கூட்டுவைத்து இலங்கையிலும்,மேலைத் தேசங்களிலும் இயங்கிக்கொள்கிறது?

இத்தகைய ஏமாற்றை-வரலாறு விட்டுச் சென்ற பக்கங்களைத் தமிழரசன் இயல்பான அறிவாய்வுப்பண்பாடு தமிழ்த் தேசிய மாயையை விலத்திச்சொல்லும்போது உண்மைகளை நாம் தரிசிக்கவிடாத தேசிய வாதத்தைக் குறித்து மீள் மதிப்பீட்டுக்கு வரமுடியும்.

இதுள்,"இனம்-மொழி-மதம்"கடந்து வர்க்க ஒன்றிப்பில் நிகழும் இயக்கப்பாட்டை நோக்குங்கள் இளையோரே!

இந்த விமர்சனமெனும் மேலதிகத் தேடுதல்-வரைவு இன்னும் மூன்று பகுதிகளாக விரியலாம்.

தொடர்ந்து ஊக்கத்தோடு வாசியுங்கள்!,

நமக்கான உண்மையைக் கண்டடையக் கல்-முள் கொட்டப்பட்டிருக்கும் இந்த வரலாற்றுவுண்மைசார்ந்த ஆய்வுப் பாதைக்குள் நடந்தே தீரவேண்டும்.

நமக்கு இதைவிட வேறு குறுக்குப் பாதையில்லை!

தொடர்வோம் அன்பர்களே.

நிறைந்த நேசத்தோடு,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.
30.07.2012


சபா  நாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 2)


‘ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1960 இல் தமிழரசுக் கட்சியுடன் உடன்பாடு செய்து ஏமாற்றியது என நாவலன் எழுதியுள்ளார்.


இங்கு இவர் தருவது ஒரு பிழையான விபரணையாகும். ‘பண்டா- செல்வா ஒப்பந்தத்தின் பின்பு எந்த ஒரு உடன்பாடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் ஏற்படவில்லை. தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ் இரண்டும் அப்போதும் சரி பின்பும் சரி  UNP உடன்தான் கூடித்திரிந்தன. மந்திரிப் பதவிகள் ஏற்றன. 1960 இல் இரண்டு முறை தேர்தல் நடந்தது; முதல் நடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அரசாங்கத்தை அமைக்குமளவு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள் வெளியில் இருந்து ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருந்தனர். எனவே, தமிழரசுக்கட்சியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்தித்து அம்பத்தெட்டு சேர் போட்டு செல்வநாயகத்திடம் அரசமைக்க ஆதரவு தரும்படி கேட்டது. முதலில்  "ஓம் !" என்று சொல்லி விட்டு பின்பு, செல்வநாயகம் மறுத்துவிட்டார்.

இங்கு, தமிழரசு- யு.என்.பி யின் இரகசியக் கூட்டுக்கள் மட்டுமல்ல இவர்கள் பின்பு இருந்த பிரிட்டிஸ் அரசின் இலங்கைத் தூதரே இவர்களைக் கட்டுப்படுத்தினார். பிரிட்டிஸ் தூதுவராலயம் வெளிப்படையாகவே யுஎன்பி ஆதரவு காட்டியதுடன் எப்பாடுபட்டேனும் இடதுசாரிகள் உதவியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு பதவிக்கு வருவதைத் தடுக்க முயன்றது. 1960 இல் இரண்டாவது முறை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றி பெற்றது. அரசமைத்தவுடன் செல்வநாயகம் அரசுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கினார். 1961இல் சத்தியாக்கிரகம் தொடங்கியது, முத்திரை அடித்து விற்கப்பட்டது. இங்கு யு.என்.பி யுடன் [ The United National Party]சேர்ந்து கொண்டு பிரிட்டிஸ் தூதரக அரசியலுக்குத் தான் தமிழரசுக்கட்சி ஆடியது. இதைத்தமிழ் மக்களுக்கான அரசியல் என்று நாவலன் நிரூபிக்கப் பார்க்கின்றார்.


‘1915 இல் இலங்கையில் முதலாவது இனக்கலவரம் நடந்தது என்று தொடங்கும் நாவலன் எழுத்து ‘ஆங்கிலேயருக்கு சேவை செய்த நிலப்பிரபுக்கள் கலவரத்துக்கு செயல்வடிவம் கொடுத்தனர். மத்தியதர வர்க்கமும் தொழிலாளர்களும் இதில் ஈடுபட்டனர்’ என்று வளர்த்துச் செல்கிறார்.

1915 இல் முஸ்லிம் மக்கள் மேலான தாக்குதலை சிங்கள இனவாதத்தின் விளைவாகக் காட்டுவதென்பது வழக்கமான தமிழ்த்தேசியவாதக் கருத்துருவமாகும்.

நாம் இதன் மூலகாரணிகளை அக்கால அரசியல் மற்றும் சமூக நிலைமைகளில் தேடிப்பார்க்க வேண்டும். 1914 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கி ஏற்றுமதி, இறக்குமதிகள் தடைப்பட்டு உணவுப்பொருட்களும் ,அத்தியாவசியப் பொருட்களும் விலை ஏறின. பிரிட்டிஸ் அரசு புதிய வரிகளை விதித்து யுத்தத்துக்குப் பணம் திரட்டியது.பிரிட்டிஸ் அரசு வெளிநாடுகளில் செய்யும் போருக்கு இலங்கை மக்கள் தண்டப் பணம் கட்ட வேண்டியிருந்தது. மக்களிடையே பசியும்- பட்டினியும் ,வேலையின்மையும் பிரிட்டிஸ் அரசு மீது கோபமும் வளர்ந்து வந்தது. இச் சமயத்திலேயே பிரிட்டிஸ் நபரான டி.எஸ்.சேனநாயக்கா போன்ற சிங்கள இனவாதிகள் பிரிட்டனுக்கு ஆதாரவாக முரண்பாட்டைத்  திருப்பி ஒரு இனத்தின் மீது அதைக் குவித்தனர்.உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு விலையேற்றம் இவைகளுக்கு முஸ்லிம் வியாபாரிகளே காரணம் எனக் கூறினர்.

இக்கலவரம் உண்மையில் யுத்த நிலைமைகளில் ஏற்பட்ட உணவுக்கான கலவரமாகும். இத்தகைய உணவுக்கலவரங்கள் இந்தியா உட்பட முழு ஆசிய நாடுகளிலும் ஏற்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களிலும் கலகங்களிலும் ஈடுபட்டார்கள். ஆகவே, உலக யுத்தம் ஏற்படுத்திய பொருளாதார நிகழ்வுப் போக்கு இலங்கையுள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கையால் பதிலீடு செய்யப்பட்டது. பிரிட்டிஸ் ஆட்சியினர் ,இலங்கை சுதேசிய மக்களின் அரசியல் வளர்ச்சியற்ற நிலைமைகளை தமக்குச் சாதகமாககப் பயன்படுத்தினர். இலங்கை மக்களிடையேயான பிணக்குகளாக ஆக்கினர்.இதையே முஸ்லிம் சிங்களக் கலவரமாக நாவலனும் பார்க்கின்றார்.


யுத்தத்தினால் சமூகத்தின் சகல தட்டுக்களும் பாதிக்கப்பட்டு இருந்த போதும் ஏழைகள், சமூகவிரோதிகள், உதிரித்தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கெடுத்தனர். இதைப் பட்டினிக் கலவரங்களாகவே கொள்ளவேண்டும். இதை நாவலன் வெறும் சிங்கள இனவாத நடவடிக்கையாகப் பார்த்தமையின் மூலம் இந்தக் கலகத்தின் அரசியல், சமூக, பொருளியல் உள்ளடக்கத்தை தவறவிட்டார். ஆங்கிலேயருக்கு சேவை செய்த நிலப்பிரபுக்கள் ,கலவரத்துக்கு செயல்வடிவம் கொடுத்தனர் என்று எழுதிய போதும் இக்கலவரம் பெரிதாக நடைபெறவில்லை. கம்பளையில் முஸ்லிம்களின் மசூதி முன்பு பௌத்தர்களின் மத ஊர்வலம் வழக்கத்துக்கு மாறாக இசைக்கருவிகளை ஒலித்தமையே கலவரம் தொடங்க உடனடிக் காரணமாக இருந்தது. கைது செய்யப்பட்ட டி.எஸ்.சேனநாயக்காவுக்காக வாதாட பொன்னம்பலம் இராமநாதன் பிரிட்டன் சென்று குடியேற்ற நாட்டுக் காரியதரிசியைச்  சந்தித்தார். அவர் அதற்கான ஆவணங்களை தனது பாதணியில் மறைத்து எடுத்துச் சென்றார் என்று தமிழ்த்தேசியவாதிகள் மேடைகளில் பேசியதுண்டு. அக்காலத்தே தமிழ் உயர்வர்க்கங்கள் முஸ்லிம்கட்கு எதிராக சிங்கள தேசியவாதிகளை ஆதரித்தன என்பதை நாவலன் காட்டாது விட்டு விட்டார்.

இதையே தான் தமிழ் உயர்வர்க்க சக்திகள் மலையக மக்களுக்கும் செய்தார்கள். செய்திகள் ஆவணங்களை அப்படியே பயன்படுத்துவதை விட்டு அதை மாக்சிய ஆய்வுமுறைக்குட்படுத்தவேண்டும் என்று நாவலன் எண்ணவில்லை.


"தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியிலிருந்து உருவான அமிர்தலிங் கத்தினது  தலைமையின்போது நிலப்பிரபுத்துவக் கூறுகளும் ,அந்நிய மூலதனத்துக்கு எதிரான கூறுகளும் இருந்தது. நிலப்பிரபுத்துவ தரகு முதலாளிய வர்க்க சார்புகளும் கொண்டிருந்தது என நாவலனின் தத்துவ ஆய்வு கண்டறிந்து சொல்கிறது.

முதலில் ,நாவலன் யாழ்குடாநாட்டுள் நிலப்பிரபுத்துவத்தைத் தேடுவதை நிறுத்தவேண்டும். அங்கு, சிறுநிலவுடமை வர்க்கமே இருந்தது என்பதுடன் பெரிய விவசாயப் பொருளாதாரத்துக்கு ஏற்ற நிலப்பரப்போ, உற்பத்தியோ விவசாயத் தொழிலாளர்களோ அங்கு இருக்கவில்லை.யாழ்.குடாநாட்டின் விவசாயப் பொருளாதார உற்பத்தியானது தனது சொந்த தேவையைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாதளவு சிறியதாகும்.


யாழ்குடாநாட்டுள் புகையிலை,வெங்காயம்,மிளகாய் என்பன பணப்பயிர்களாக பயிரிடப்பட்ட போதும் இது பொருளாதார ரீதியாகப் பெரும் பாத்திரத்தை வகிக்கவில்லை. இது யாழ் குடாநாட்டின் ஒரு சில பரப்புக்களில் கடும் உழைப்பில் முறியும் சிறு விவசாயிகளின் ,குத்தகை விவசாயிகளின் சிறு பொருளாதார நடவடிக்கையாகவே இருந்தது.சிறு நிலவுடமை வடிவமாக பரப்புக்கணக்கான சிறுசிறு நிலத்துண்டுகளில் உழைத்தமையால் கடும் சுரண்டலும் ,"சோத்துக்கையால் காகம் கலையாத" நப்பித்தனமும் நிலவியது. நிலமின்மையும் காணிச் சண்டையும் குடாநாட்டின் பண்பாக இருந்தது.

வன்னியில் நிலப்பிரபுக்கள் இருக்கவில்லை. நிலத்தை சொந்தமாகக் கொண்டாட சுதந்திர விவசாயிகள் இருந்தனர். கிழக்கில் மட்டுமே போடியார்கள் எனப்படும் நிலத்தை அதிகமாய்க் கொண்ட பெரிய விவசாயிகள் இருந்தனர். யாழ்.குடாநாட்டினைப் போல் வன்னியிலும் ,கிழக்கிலும் குத்தகை விவசாயிகள் இருக்கவில்லை. ஆனால் ,தமிழ்தேசியவாத அரசியல் சக்திகள் அது சார்ந்த தலைமை என்பன வன்னியிலோ, கிழக்கிலோ இருந்து தோன்றவில்லை.மாறாக ,யாழ்.குடாநாட்டின் அரச சேவையால் ,ஆங்கிலக் கல்வியால் உருவான சக்திகளிடமிருந்தே தோன்றியது.தமிழ்தேசியவாத அரசியல் என்பது யாழ்.நடுத்தரவர்க்கத்தின் படையலாகும்.அங்குள்ள சிறு நிலவுடமை அமைப்புக்கு தமிழ்த்தேசியத்தை கொண்டியங்கும் நடுத்தர வர்க்கத்தை மிஞ்சிய பலம் இருக்கவில்லை.

ஆக, அமிர்தலிங்கம் நிலப்பிரபுத்துவ,தரகுமுதலாளிய நலன்களைப் பிரதிபலித்தார் என்பது பொருத்தமற்றது. அவர் திட்டவட்டமான தமிழ் நடுத்தரவர்க்க கல்வியாளர்களின் பிரதிநிதிகளாகும்.யாழ்ப்பாணத்திலோ ஏனைய தமிழ்ப் பகுதிகளிலோ தமிழ் முதலாளியச் சக்திகள் அல்லது தரகு முதலாளியச் சக்திகளை வளர்ந்து இருக்கவில்லை. பெரும் வர்த்தக நிலையங்களோ ,தொழிற்சாலைகளோ தமிழ்ப்பகுதிகளில் இல்லை .தமிழ் வர்த்தகர்கள் கொழும்பில் வர்த்தகத் துறையிலேயே பெரும் பகுதியாக இருந்தனர். அவர்கள் தென்னிலங்கையில் உள்ள யு.என்.பி , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போன்ற தேசியக்கட்சிகளையே ஆதரித்தனர்.

இவர்களில் எவரும் தமிழரசுக்கட்சியை ஆதரிக்கவில்லை.

பதவிக்கு மாறி வரும் எல்லாக் கட்சிகளையும் ஆதரித்தனர். அமிர்தலிங்கம் அந்நிய மூலதனத்தை எதிர்த்ததாய் நாவலன் எழுதியுள்ளார்.அமிர்தலிங்கம் ஏனைய தமிழ்த்தேசியவாதிகளைப் போல் சட்டத்தரணி, பொருளாதார அறிவு படைத்திராதவர் !அந்நிய மூலதனத்தை எதிர்த்த இடதுசாரிகளையே எதிர்த்தனர். பிரிட்டிஸ் ஜனநாயகத்தை நம்பியவர் ,சிங்களவர் ஆட்சியை விட பிரிட்டிஸ் ஆட்சி சிறந்தது, கூடியளவு ஜனநாயகமானது என்று கருதியவர் அமிர்தலிங்கம்.இலங்கை குடியரசானதை எதிர்த்தவர்.திருமலைத் துறைமுகத்தை தமிழர் பிரச்னையைத் தீர்க்காமல் இலங்கையிடம் ஒப்படைக்கக்கூடாது என்று பிரிட்டிஸ் மகாராணிக்கு தந்தி அடித்த செல்வநாயகத்தின் கட்சிக்காறர், சின்னஞ் சிறு இஸ்ரேல் 20 க்கும் மேற்பட்ட அரபு நாடுகளை அடக்கி ஆள்வதாக தமிழ் மக்களுக்கு மேடைகளில் அரசியல் பாடமெடுத்த மேற்குலக கருத்தியல் ஆதரவாளர் !

அந்நிய ஆட்சியை ,அந்நிய மூலதனத்தை எதிர்த்தவர்கள் இலங்கை இடதுசாரிகள் !;முக்கியமாக எல்.எஸ்.எஸ்.பி [The Lanka Sama Samaja Party ]யும் இலங்கைத் தொழிலாளர்களுமே தவிர அமிர்தலிங்கம் அல்ல, வலதுசாரியான அமிர்தலிங்கம் எப்படி அந்நிய மூலதனத்தை எதிர்ப்பார். இலங்கையில் அந்நிய சொத்துக்களை தேசிய உடமையாக்குவதை எதிர்த்த கட்சியல்லவா தமிழரசுக்கட்சி!.நிலச்சீர்திருத்தம் முதல் லேக் ஹவுஸ் 'ஐ தேசிய மயமாக்கல் வரை அமிர்தலிங்கம் எதிர்த்த ஆள் !!;இப்படியானவர் எப்படி நாவலனுக்கு அந்நிய மூலதனத்தை எதிர்த்தவரானார். அந்நிய மூலதன எதிர்ப்பு என்றால் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றல்லவா பொருள்.அமிர்தலிங்கம் எந்தக் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளன்?அவர் பிரிட்டிஸ் தூதரகத்தில் விருந்து சாப்பிட்டுப் பழகியவரல்லவா?.


அமிர்தலிங்கத்தின் தமிழரசு வாலிபர் முன்னணி என்பது ஒருபெரும் சேனையல்ல பத்து இருபது பேர் கொண்ட சிறு குழுவாகும்.அதற்குத் தொழில் தமிழரசுக்கட்சிக்கு தேர்தல் காலத்தில் மேடை போட்டு,தோரணம் கட்டித்தூக்குவதாகும்.அமிர்தலிங்கம் தனது பல்கலைக்கழக படிப்புக் காலத்திலேயே இலங்கை- இந்தியா தமிழ்நாடுகளை இணைந்த பெரிய தமிழ்நாடு என்ற இலட்சியத்தைப் பிரச்சாரம் செய்தவர். இது தமிழ்நாட்டின் திராவிட நாடு மற்றும் ம.பொ.சி.,ஆதித்தனார் ஆகியோரின் பிரிவினைவாதக் கருத்துக்களுடன் தொடர்புடையதாகும். இவை யாவும் பிரிட்டிஸ் பிரிவினைவாதக் கருத்துக்களின் விளைச்சலே என்பதைச் சொல்லவேண்டியதில்லை. அமிர்தலிங்கத்திடம் திராவிடர் ,ஆரியர் நோயின் கூறுகள் ஏராளமாக இருந்தன. இலங்கை இடதுசாரி இயக்கங்களை தமிழ், சிங்கள, முஸ்லிம் உழைப்பாளர்கள் ஒன்றிணைந்த தொழிலாளர் எழுச்சியை, நாசமறுத்த அமிர்தலிங்கம் போன்றவர்கள் நாவலனுக்கு அந்நிய மூலதன எதிர்ப்பாளர்களாய் தோன்றுகிறார்கள். இதுவா மாக்சியப் பார்வை?

‘சிங்களப் பேரினவாத நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவம்’ என்ற அரசியல் வரையறை நாவலனால் அடிக்கடி எழுதப்படுகின்றது. இதன் மூலம் தமிழ்,சிங்கள முரண்பாட்டின் ஏகாதிபத்தியத் தாக்கம் வலுக்குறைக்கப்பட்டு விடுகின்றது. "சிங்களப் பேரினவாதம் ,நிலப்பிரபுத்துவ தரகு முதலாளியம் ", போன்ற கருத்தியல்களை நாம் ஆராயவேண்டும்.

1880 இல் இலங்கையில் இருந்த பிரதான பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையான கோப்பியில் [The expansion of Sri Lankan coffee plantations ] 90 வீதம் பிரிட்டிஸ்காரரிடமே இருந்தது. மிகுதி 10வீதத்தில் பெரும்பகுதி இந்திய தோட்ட உடமையாளர்களாக இருந்தபோது, மிகச் சிறு பிரிவு பெரும் தோட்டமே சிங்கள, தமிழ் நிலவுடமையாளர்களிடம் இருந்தது. 1917 இல் 300க்கு மேற்பட்ட இலங்கையில் இருந்த தேயிலைத் தோட்டங்களில் 29 மட்டுமே இலங்கையருக்குச் சொந்தமாக இருந்தது. அதாவது ,500,000 ஏக்கருக்கு மேற்பட்ட தேயிலைத் தோட்டங்களில் 2வீதம் மட்டுமே இலங்கையரிடமிருந்து!.

1934 இல் இலங்கையின் முழு இறப்பர் தோட்டங்களில் 77வீத பிரிட்டிஸ்காரர்களிடம் இருந்தது. ஆக ,முக்கிய ஏற்றுமதிப் பண்டங்களான தேயிலை, இறப்பர், கோப்பி என்பன இலங்கையரிடம் இருக்கவில்லை என்பதுடன் ,முக்கிய ஏற்றுமதிப் பண்டமல்லாத தெங்குப்பொருள் உற்பத்தி மற்றும் இரத்தினக்கல் தோண்டுதல் என்பனவே இலங்கையரிடமிருந்தது. எனினும் ,பெருந்தோட்ட உற்பத்திப் பொருள் சுரங்கத் தொழில் ஏற்றுமதி வர்த்தகம்,முகவர்கள்,கப்பல்சேவை, காப்புறுதி வங்கி யாவும் பிரிட்ஸ்காரர்களிடமே இருந்தது. எனவே, சிங்கள மக்கள் மத்தியில் பெரிய நிலப்பிரபுத்துவ அமைப்பு நிலவியது என்ற நாவலனின் கருத்து தவறானது.

 இலங்கை முழுவதும் ‘சிறு நிலவுடமைச் சமூகமே’ இருந்தது.சுதந்திரமடைந்த பின்பு 1951இல் கூட 70வீத தேயிலைத் தோட்டங்கள், 40வீத இறப்பர் தோட்டங்கள்,10வீத தென்னந்தோட்டங்கள் பிரிட்டிஸ்காரரிடமே இருந்தது. வெளிநாட்டு வர்த்தகத்தில் 90வீதம் அவர்கள் கட்டுப்படுத்தினார்கள். 9 வங்கிகளில் ஒரு வங்கி மட்டுமே இலங்கையரிடமிருந்தது. காப்புறுதிச் சொத்தாகிய 83 மில்லியன் ரூபாயில் 73.7மில்லியன் ரூபாய் அந்நிய நிறுவனங்களிடமிருந்தது. சாராயம், கட்டிடத் தொழில் உணவுப் பொருள் தயாரிப்பு என்பனவே இலங்கையரிடம் இருந்தது.




எனவே, முதலாளித்துவ உருவாக்கத்துக்குத் தேவையான பரந்த நிலப் பிரபுத்துவ முறையிலான பொருளாதாரம் இருக்கவில்லை. 1952 இல் உலக வங்கி இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஐரோப்பாவில் உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் இலங்கையுள் வளர்ந்த சிறு தொழிற்சாலைகளையும் மூடப்பண்ணியது.எனவே உள்நாட்டு சிறு நில உடமையாளர்கள், இடைத்தரகர்கள், உயர்குடும்பங்கள், வர்த்தகர்கள், நிலம் மீது அக்கறை கொண்டவர்கள், அரச சேவையாளர்கள், நடுத்தரவர்க்கம் என்பன பிரிட்டனில் தங்கி வாழும் கட்டாயம் இருந்தது. இவர்கள் பிரிட்டனை எதிர்க்கும் பொருளாதாரச் சக்தி படைத்தவர்களல்ல.

1947இல் யு.என்.பி இவர்களின் கட்சியாகப் பிறந்தது. பிரிட்டிஸ் சார்பு இடதுசாரி எதிர்ப்பு அரசியலையும் நடாத்தியது.[The UNP was founded on 6 September 1946 by amalgamating three right-leaning pro-dominion parties from the majority Sinhalese community and minority Tamil and Muslim communities. It was founded by Don Stephen Senanayake, who was in the forefront in the struggle for independence from the United Kingdom, having resigned from the Ceylon National Congress because he disagreed with its revised aim of 'the achieving of freedom' from the British Empire. The UNP represented the business community and the landed gentry. However, Senanayake also adopted populist policies that made the party accepted in the grassroots level.The UNP campaigned in the 1947 general election on a platform of dominion under the United Kingdom and protecting the traditional way of life and Buddhism, the religion followed by the majority of the people, from alleged communist threats from the left-wing opposition parties (the Lanka Sama Samaja Party and the Communist Party of Ceylon). The UNP failed to win a working majority and cobbled together a coalition with Sinhalese and Tamil elements. Ceylon became a dominion in 1948, with D.S. Senanayake as the first prime minister. He followed a pro-West, anti-Communist foreign policy much to the ire of the Soviet Union. The commanders of the armed forces were all British officers and Britain retained military bases in the country.- http://en.wikipedia.org/wiki/United_National_Party  ] பிரிட்டிஸ் இராஜதந்திர முதிர்ச்சியின் முன்பு இவர்கள் அரசியல் தமிழ், முஸ்லிம் விரோதத்தை உடைமைகளாய்க் கொண்டன. 1950 கட்கு முன்பு இலங்கை அரசியலில் சிங்கள், தமிழ், இனவாத அரசியல் இருக்கவில்லை என்று நாம் சுலபமாக நிறுவிவிடலாம். தொழிற்துறை வளர்ச்சியை யு.என்.பி தடை செய்தது என்பது நாவலனின் மற்றொரு வாதம்.உண்மையில் அதற்கான பொருளாதாரபலமற்ற வர்க்கமாக இருந்தது. அது தொழில்துறையை படைக்க வல்ல மூலதன பலத்தை பெற்றிராத தரகுச் சக்திகளாக இருந்தது.இது யுஎன்பிக்கு மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகளும் அன்றைய கால கட்டத்தினது நிலைமையாக இருந்தது.

இவர்கள் சுயமாக செயற்படமுடியாத ஏகாதிபத்தியத்தை சார்ந்து நின்ற சுய அடையாளம் பேணமுடியாத அரசியலைச் செய்தன. 1956இல் பண்டாரநாயக்கா, மற்றும் பிலிப் குணவர்த்தனா அரசு தான் தனியார் முதலாளித்துவம் வளர்ந்திராத இலங்கையில் ,சுயசார்ப்புப் பொருளாதாரத்தை அரசு வகைப்பட்ட முதலாளித்துவத்தைக் கட்ட முயன்றனர். இந்த சுயசார்பு அரசியல் பொருளாதாரத்தை நிறுத்தவே பண்டாரநாயக்கா கொலை நிகழ்த்தப்பட்டு தீவிர தமிழ், சிங்கள விரோத நிலையை ஏகாதிபத்தியங்கள் கொண்டு வந்தன. யு.என்.பி யின் டி.எஸ்.சேனநாயக்காவை, டட்லியை வெறுக்காத தமிழ் தேசியவாதிகள் பண்டாரநாயக்காவை வெறுத்தமையின் அரசியல் உள்ளுடன் இது தான்.


"1950 தொடக்கம் 1980 கள் வரை நிலவிய சிங்கள இனவாதம் "இன்றும் " நிலவுவதாக, நாவலன் வார்த்தைகளை அணிதிரட்டுகின்றார். "

இன்றுள்ள சிங்கள், முதலாளிய சக்திகள் -"பல பத்து வருடங்கள் "- முன்பிருந்த சிறிய பொருளாதார பலத்தைக் கூட உலக மயமாதலில் இழந்துவிட்டு நிற்கின்றன. உள்ளுரில் தமிழ், சிங்கள,முஸ்லிம் முதலாளித்துவ சக்திகளிடையே பொருளாதாரம் இன்று ,இலங்கையில் இல்லை.முழுமையான ஆசிய மயப்படலுக்கு உள்ளாகியுள்ள நாட்டில் ,தம்முள் முரண்ட பொருளாதாரத் தேவைகள் இல்லை. இவர்கள் ஒன்றிணைந்து உலக மயமாதலின் பொருளாதாரப் பயன்பாட்டில் பங்கு பெற முயல்கின்றனர். மறுபடி, ஆங்கில மொழியின் முக்கியத்துவம் வளர்வதும் ,எதிர்காலத்தில் சீன, ஹிந்தி மொழிகளின் தேவைகள் கூட இலங்கையுள் ஏற்படவுள்ள காலத்தில் தமிழ்,சிங்களச் சண்டைகள் பயன்படமாட்டா ஆக,இலங்கையில் இன்று நிலவுவது முதலாளிய வகைப்பட்ட இலங்கைத் தேசியமாகும்-இலங்கையர் என்ற உணர்வுக்கான போராட்டமாகும்.

சிங்கள மக்களை பெரும்பான்மையாய்க் கொண்ட காரணத்தால் அது, சிங்கள தேசியவாதச்  சாயலை கொண்டிருப்பது இயல்பானதாகும். சிங்கள இனவாதமும் ,இலங்கை தழுவிய தேசபக்த உணர்வு அல்லது தேசியம் இரண்டும் ஒன்றல்ல.

உலக மயமாக்கலுக்கு முந்திய இன முரண்பாடுகள் உலக மயமாதலின் பின்பு எப்படி மாறும் என்ற கேள்வி நாவலனிடம் இல்லை. சமூகம் மாறாத்தன்மை வாய்ந்ததா?அசைவியக்கமற்றதா?


ஏகாதிபத்திய இராணுவப் பாசிசக் கூலிப்படையான புலிகள் தமிழ்,சிங்கள முரண்பாடுகளை உயிருடன் வைத்திருக்க இடைவிடாது போராடி வந்தனர். தமிழ்த்தேசம், சிங்களதேசம், சிங்களப் பேரினவாதம் என்ற சொற்றொடர்களை உருவாக்கி வழக்கில் கொண்டு வந்தனர். இங்கு நாவலனிடம் நிலவும் சிங்களப் பேரினவாதம் என்ற எழுத்து அணி நடை, தமிழினவாதத்தின் சொல்லாடலே !.

இலங்கை தழுவிய தேசியப் போக்கை உருவாக்கவும் ,ஆசிய மயமாதலில் இரண்டறக் கலக்கவும் இலங்கை நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இந்தியா முதல் சீனா வரை பிளவுபடாத இன,மத, முரண்பாடுகள் இல்லாத ஆசியாவை உருவாக்க முயலும் காலமிது. அது ,அவர்களது பொருளாதார வளர்ச்சிக்கு உட்பட்ட ஒன்றாகும். ஆசியா பிளவுபட்ட காலம் போய் ,ஒன்றிணையும் காலமாகும். பெரும்பான்மை இனமென்றால் அது எப்போதும் ஒடுக்கும் இனமாக இருப்பதில்லை. இனமுரண்பாடுகளைத் தோற்றுவித்த புற மற்றும் அக நிபந்தனைகள் மாறும்போது இனமுரண்பாடுகள் மாறாமல் விடாது.

 யூகோஸ்லாவியாவின் பெரும்பான்மை இனமான சேர்பியர்கள் சிறு தேசிய இனங்களான குரோட்டிய, பொஸ்னிய, கொசவோ , அல்பானியர்களால் சிதறடிக்கப்படுவதை நாம் பார்த்தோம். இன்றைய ஈராக்கிய மக்களை ஒரு அமெரிக்கக் கூலியான சிறுபான்மையின குர்திஸ் அரசியல்வாதி ஆளவில்லையா?


இலங்கையின் மொத்த சனத்தொகையில் சிங்கள, முஸ்லிம்,மலையக மக்களை அடுத்து நாலாவது இடத்தை கிட்டத்தட்ட 3.9 வீதம் வகிக்கும் தமிழர்களின் தேசிய விடுதலை என்ற பெயரிலான புலிப்பாசிசம் முழு இலங்கை மக்களுக்கும் மேலான பயங்கரவாதமாகிவிட்டது. அது உலகு தழுவிய பிரச்சாரம், பொருளாதாரம், அமைப்பு வடிவம் ஆகியவற்றைக் கொண்டு ஆசியாவையே பயமூட்ட முயல்கின்றது. இந்தியத் துணைக்கண்டத்தில் எந்த அரசியல் தலைவரையும் கொல்லும் பலம் பெற்றுள்ளது. தமிழர்களை மட்டுமல்ல சிங்கள,முஸ்லிம் மக்களையும் ,தென்னிலங்கையின் பாதாள உலகக் கோஷ்டீகளையும் ,இலங்கை இராணுவம்,பொலிஸ் உளவுத்துறைகளையும் விலைக்கு வாங்குகின்றது. கனடா, அமெரிக்கா வரை தேர்தலில் நிதி தருமளவு அதற்கு தொடர்பும் ,உறவும் உள்ளது.


தமிழ் சிங்கள முரண்பாடானது வரலாற்று ரீதியிலான பகைமையுடையதல்ல என்று நிறுவ நேர்மையாக முயற்சித்த நாவலன் ,இரு இனங்கட்கும் மதம் சார்ந்த முரண்பாடுகள் நிலவின என்பதான நிரூபணங்கட்கு எம்மை இட்டுச் செல்கிறார்.

 6ம் நூற்றாண்டில் எழுந்த மகாவம்சம் தான் சிங்கள அடிப்படைவாதக் கருத்துக்களைப் புகுத்தியதாகவும் ,விகாரைகளை மையமாய்க் கொண்ட பிற்கால சிங்கள இனவாதமாகவும் அவர் வரலாற்றை தமிழ்த் தேசியவாதத்தின் விருப்புக்கேற்ப வழி நடத்திச் செல்கிறார்.

முதலில் இது ,அவரது சொந்த வாதங்களை மறுப்பதில் தொடங்குகின்றது.

 தேசிய உருவாக்கம் என்பது தேசியப் பொருளாதாரம், சந்தைப் பொருளாதார அபிவிருத்தியுடன் சம்பந்தப்பட்டது எனக் கூறி வந்தவர், பிரிட்டிஸ் ஆட்சியில் Madame Bluvatsky போன்றவர்களின் காலத்தை பௌத்த சிங்கள போக்குகளின் தொடக்கம் என்றவர். இப்போ சிங்கள இனவாதத்தின் மூலம் 6ம் நூற்றாண்டில் மகாவம்ச காலத்துக்குரியது என்கிறார்.

பௌத்தம் ,பாலி மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த காலத்தை சிங்கள மொழி தோன்றிக் கொண்டிருந்த காலத்தை அன்றைய சமுதாய உற்பத்தி உறவுகளிலும் இலங்கையை சூழ நிலவிய ஆக்கிரமிப்புச் சூழலிலும் நாவலன் காண முயலவில்லை. சிங்கள இன உருவாக்கத்தை வரலாற்று ரீதியாகவும் ,தொடர்ச்சி விட்டுப் போகாமலும் அவரால் விளக்க முடியவில்லை. மாறாக, ஒன்றை-ஒன்று மறுக்கக்கூடிய நிகழ்வுகளாக எமது பார்வைக்கு விட்டுச் செல்கிறார். என்ன தான் இனவாதம் கடந்தவராகத்  தன்னை நாவலன் காட்ட இடையறாது பிரயத்தனம் செய்தபோதும், சிங்கள இன உணர்வு தமிழர்கட்கு எதிரானது என்ற அவரது ஆழமான மனப்பதிவானது சிங்கள இன உருவாக்கத்தை பௌத்த மதத்துடன் கூடிய குற்றத்தன்மை கொண்டதாக விபரிக்கப் பார்க்கின்றார்.

சிங்கள அரசுகள் ,இலங்கையின் தென்பகுதியை நோக்கி நகர்ந்தமை இடைவிடாத இந்தியப்படையெடுப்புக்களே என்பதை அவர் குறித்துள்ளபோதும் மகாவம்சத்தை பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்கின் தொடக்கம் என்று இட்டுக்கட்டப் பின் நிற்கவில்லை.


மகாவம்சம் தோன்றிய காலத்திய இலங்கை,இந்திய நிலைமைகளை நாம் ஆராய்ந்தோமாயின் வர்ணச்சிர மதம் பௌத்தத்தை அழிக்கத் தொடங்கியிருந்தது. தமிழ்நாட்டில் சைவ சமயம் தீவிரமாக வளரத் தொடங்கியது.சைவம் பரப்பும் நாயன்மார்கள் தோன்றி சிவனின் பெருமை கொண்டாடியபோது வைணவ ஆழ்வார்கள் திருமாலைப் போற்றத் தொடங்கினர்.அந்தணர்,சூத்திரர்,பெண்கள், சாதிகள், கடந்து இந்த மதம்கள் அனைவரையும் ஆட்கொள்ள முயல்வதாகத் தோற்றம் காட்டின.

6ம் ,7ம் நூற்றாண்டு காலப்பகுதி முழுவதும் பௌத்தத்துக்கு எதிராக அனல்வாதம், புனல்வாதம் ஆகிய தர்க்க முறைகள் தோன்றின.

ஆயிரக்கணக்கான பௌத்த விகாரைகளையும் ,பௌத்த மடம்களையும் , சைவர்களும் வைணவர்களும் கைப்பற்றினார்கள்-அழித்தார்கள்.

தமது கோவில்களாக ஆக்கினார்கள். இலட்சக்கணக்கான பௌத்த துறவிகள் கொலை செய்யப்பட்டனர். பௌத்தத் தமிழ்நூல்கள் ஒன்றும் விடாமல் அழிக்கப்பட்டன, தீயிடப்பட்டன. ஆற்றில் இடப்பட்டன.

நாவுக்கரசரின் "நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் " என்ற குரல் அரசனை மட்டும் எதிர்த்ததல்ல பௌத்தத்தையும் எதிர்த்தே பிறந்ததாகும்.

நாயன்மார்கள் பௌத்த துறவிகள் போன்று எளிமையான கோலம் பூண்டனர். மக்களிடம் சென்றனர்.அவர்கள் தருவதை உண்டனர் என்பன பௌத்த மதத்தை வெல்லக் கண்ட உபாயமே.களப்பிரர் ஆட்சிக்காலம் என்பது தமிழ்நாட்டில் பௌத்தம் செழித்த காலம். இது இருண்டகாலம் என்று வர்ணிக்கப்படுவதேன்?இக்காலத்திய பௌத்த நூல்கள், பௌத்த இலக்கியங்கள் அழிக்கப்பட்டு அது, வரலாறு- அடையாளம் காணமுடியாத இருண்ட காலமாக ஆக்கப்பட்டது. கி.பி. 5ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பௌத்தம் உயர்நிலையாய் இருந்தது. 6ம்,7ம் நூற்றாண்டுகளில் அதன் அழிவு தொடங்கிவிட்டது. கி.பி. 788 முதல் 820 வரை வாழ்ந்த ஆதி சங்கரர் பௌத்தத்தின் உள்ளுடன்களைத் திருடி இந்து மதத்துக்கு தத்துவத் தயாரிப்புச் செய்து கொடுத்தார். உழைப்பாளி மக்களை சூத்திரர் என்று இழித்து வர்ணச்சிரமத்துக்குப் பலம் சேர்த்தார்.


தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தமிழ் பௌத்த துறவிகளும் ,தமிழ்பௌத்த நூல்களும் பௌத்த விகாரைகளும் இருந்த காலம் முடிவுக்கு வந்தது.

பெரும் குளங்கள், நீர்ப்பாசன முயற்சிகள் தோன்றி விவசாயம் பெருகியது.வர்த்தகம் பரவத் தொடங்கிப் பெரிய அரசுகள் எழுந்தன. இலங்கை மேலான தென்னிந்தியப் படையெடுப்புக்கள், பாண்டியர்களில் தொடங்கி , பின்பு, சோழர்கள் வரை அதிகரித்தத் தொடங்கியது. சைவசமயம் தமிழ்நாட்டிலும் ,இலங்கையிலும் பரவத் தொடங்கியது.6ம்7ம் நூற்றாண்டுகளிலே தான் திருகோணமலை, திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம்,முன்னேஸ்வரம் போன்ற கோயில்கள் கட்டப்படுகின்றன.

படையெடுப்புக்களுடனும் ,குடியேற்றங்களுடனும் சைவம் இலங்கையுள் நுழைகிறது. புகழ்பெற்ற சைவக் கோவில்கள் யாவும் கடற் கரைப்பகுதியை ஒட்டிய கரையோரம்களில் ஏற்பட்டமை தற்செயலானதன்று. இந்தியாவிலும் இலங்கையிலும் பெருமதமாக இருந்த பௌத்தம் இலங்கையில் மட்டும் அதுவும் இந்தியப்படையெடுப்புக்கு எட்டாத தென்னிலங்கையில் மக்களிடம் மட்டும் எஞ்சியது. படையெடுப்பாளர்கள் பௌத்த விகாரைகளை அழிப்பது கொள்ளையிடல், பௌத்தர்களைக் கொல்வது நடைபெற்றது. இக்காலப் பகுதியில் இலங்கையில் இருந்த தமிழ்பௌத்தர்கள் மதம் மாறியோ அல்லது தென்பகுதிக்கு தப்பியோடியோ தான் அவர்கள் தப்பியிருக்க முடியும். இக்காலகட்டத்தே தான் இலங்கையில் மகாவம்சம் எழுகிறது என்பது பௌத்த மதக்காப்புக்கும் ,அந்நிய படையெடுப்புக்கு எதிரான படைப்பாகவே அது எழுகின்றது. அது தமிழர்களை எதிர்க்கவில்லை. மாறாக ,பௌத்த விரோதிகளையே எதிர்த்தது.

மகாவம்சம் தமிழர்,சிங்களவர் சண்டை என்பது பிற்கால இனவாதப் பார்வையாகும். அது இந்தியப் படையெடுப்புக்கு எதிராக மக்களை அணி திரட்டும் கருத்தாக இருந்தது.இதன் மூலமே பௌத்தம் இலங்கையில் தப்பிப் பிழைத்தது.

மகாவம்சம் இலங்கையில் மட்டுமல்ல ,இந்தியாவிலும் இன்று வரலாற்று ஆய்வாளர்கள் பயன்படுத்தும் ஆகக் கூடிய வரலாற்றுச் செய்திகளை உடைய நூலுமாகும். இந்தியாவில் பௌத்தத்தை ஆதரிக்கும் நாவலன் ,இலங்கையில் பௌத்தத்ததை எதிர்ப்பதற்கு தமிழ்தேசியவாத உணர்வு தான் காரணமாக உள்ளது.

மகாவம்சத்தை பழிக்காத தமிழரசு மேடைகள் கிடையாது.தன்னை இடதுசாரியாகவும் காட்ட ஆசையுறும் நாவலன் இப்படிப்பட்ட தருணங்களில் தமிழ்தேசியவாதத்துள் குப்புறச் சரிந்து விடுகின்றார். இந்த விடயத்தில் அமிர்தலிங்கம் முதல் நாவலன் வரைக்கும் ஒரே தன்மை தான் வெளிப்படுகின்றது.


மகாயான பௌத்தம் தமிழ்மொழியுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்பட்டதால் மகாயான, பௌத்தம் சார்ந்த மொழியாக இலங்கையில் தமிழும் எதிர்க்கப்பட்டது என்று கருத்துருவம்களை நாவலன் உருவாக்குகின்றார். புத்தர் மரணமடைந்து நூறு வருடங்களிலேயே மகாயானம் என்ற பிரிவு பௌத்தத்தில் தோன்றிவிட்டது. வட இந்தியாவில் குசாணர்கள், மொளரியர்கள், மகாயானத்தைப் பின்பற்றியவர்களே.திபேத் முதல் சீனா வரை பௌத்தம் மகாயான வடிவிலேயே பரவிச் சென்றது. இது இந்து மதச்சாயலுடன் அந்தந்த நாட்டு மரபுகளையும் உள்வாங்கியது. மரபான பௌத்தத்திடம் இல்லாத சிற்பம், ஓவியம், இசை நடனம், கலைகள் ஆகியவற்றையும் வளர்த்தது. ஆனால் ,தமிழ்நாட்டு பௌத்த அறிஞர்கள்தாம் பௌத்த இலக்கியம்கள் தமிழில் எழுதிய போதும் மத நூல்களை பாளி மொழியிலேயே எழுதினர். இவர்கள் பாளி மொழி அறிஞர்களாகவும் இருந்தனர்.அது, அக்காலத்தில் அனைத்து பௌத்த அறிஞர்களதும் பொதுப் பண்பாக இருந்தது.

மேலும் ,இலங்கையில் தேரோவாத பௌத்தம் நிலவிய போதும் மகாயான பௌத்தத்தின் பாதிப்பும் அதில் காணப்பட்டது. இரண்டு பௌத்த மதப் பிரிவுகளும் ஒன்றை-ஒன்று நிறுவப் போரிட்டன அல்லது கடும் மோதல் நிகழ்ந்தது என்பதுக்கு ஆதாரமில்லை. இது ,சைவ சமய எழுச்சி போன்று அல்லாமல் பல நூற்றாண்டு கால நிகழ்வாக படிப்படியாகவும் உணரப்படாமலும் நடைபெற்ற மாற்றங்களாகும்.


இலங்கையில் மகாயான பௌத்தத்தின் பாதிக்கப்பட்ட தேரோவாத பௌத்தம் காணப்பட்ட போதும் அது தனக்கேயுரிய இந்து மத மற்றும் ஆதியான தெய்வம்கள் மரபுகளையும் இணைத்துக் கொண்டே காணப்பட்டது.

தமிழர்களும் ,சிங்களவர்களும் ஒரே பண்பாட்டில் இருந்து பிறந்த மக்கள் என்ற அளவில் நாக வணக்கம் இரு பகுதியினரிடையேயும் காணப்பட்டது. இரு பிரிவு மக்களும் நாக என்பதை தம் பெயர்களில் பரவலாகக் கொண்டிருந்தனர். தமிழர்களிடம் எப்படி குருக்கள் அல்லது பிராமணர் ஆகியோர் மேல் வர்க்கத்தோடும் ,கோவில்களுடனும் தொடர்புடையவர்களாகவும் ; கிராமங்களில் ,பூசாரி போன்றவர்கள் இருந்தனரோ அப்படியே பௌத்தர்களின் மேல் தட்டுடன் பௌத்த பிக்குகள் தொடர்பு கொண்டிருக்க அடிமட்ட மக்களிடம் கிராமங்களில் ‘கப்புறாளை" மற்றும் பெண் பூசாரியான ‘பத்தினி காமியும் இருந்தனர். நாவலன் ஏதோ பௌத்த சிங்களமானது தனித்த தூய வடிவில் வாழ்ந்து, தமிழர்களை ஒடுக்கிக் கொண்டிருப்பதாகக் கதை வடிக்கின்றார்.

சிங்களக் கிராமங்கள் மகாவம்சத்தாலும் ,பௌத்த பிக்குகளாலும் நிரம்பி நிற்பதாயும் வழிகாட்டப்படுவதாகவும் அவர் தீவிரமாய்க் கட்டமைக்கின்றார். ஆனால் ,அது உண்மையல்ல.

பலவகையான பேய்,பூதங்கள் வணங்கப்பட்டன. தமிழர்களிடம் உள்ளது போல இரத்தப்பிசாசு, அக்கினிப்பிசாசு, உதிரவைரவர், உதிரமுனி, இரத்தக்காளி, இரத்தக்காட்டேரி போன்று சிங்கள மக்களிடமும் றீறியகா, மகா கோல சந்நியாகா, ஒட்டிகுமார கீணியம்கா, மகா சோறொன், யச, களுகுமாரயகா,றட்டயகா போன்ற பிசாசுகள் சார்ந்த நம்பிக்கைகள் நிலவின. 12 பிசாசுகள் ஒன்று சேர்ந்து ‘கறாயகு’ என்று அழைக்கப்பட்டது. மனித,மிருக இரத்தம் குடிக்கும் பிசாசுகள் போன்ற புராதன பௌத்தத்துக்கு முந்திய நம்பிக்கைகளும் காணப்பட்டன.
தமிழ் மக்களைப் போன்று மோகினி, கண்ணூறு, பில்லி, சூனியம்,நீர்க் கிரிகைகள்,நம்பிக்கைகளும் நோய்களைக் குணமாக்கும் தெய்வங்களான பத்தினித் தெய்வம் கிரியம்மாமார், சத்பத்தினி என்பன அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து என்பனவற்றை குணமாக்கும் தெய்வங்களாக நம்பப்பட்டது. பயிர்கள் வளராவிட்டால் மழை பெய்யாவிட்டால் தெய்வக் கோபம்,தெய்வக்குற்றம் இதற்கான கடவுள்கள், கிரிகைகள் இருந்தன. அறுவடைத் தெய்வ வணக்கம் இருந்தது. ஆறு, குளம், மலை, மரவணக்கங்கள் நிலவின.கண்ணகி வழிபாடு தமிழர்கட்கு சமமாக சிங்கள மக்களிடம் நிலவியது.பத்தினித் தெய்வயோ என்று வணங்கப்பட்டது.


கண்ணகி சிங்கள மக்களிடம் கற்புக்கரசியாகவும் ,தெய்வமாகவும் மதிக்கப்பட்டாள். திருமணச் சடங்குகள், மரணச் சடங்குகள், நீர்க் கடன், குளிர்த்திகொடும்பாவி, வீடுகாவல் செய்யும் கிரிகை, கழிப்புக் கழித்தல் என்பன இந்து, பௌத்த சமய நம்பிக்கைகட்கும் மூத்த புராதன மரபுகட்கு உரியவை என்று நம்பலாம்.

கதிர்காமம் ,சிங்கள கப்புறாளையினால் வாய்கட்டிய நிலையில் மந்திரங்கள் எதுவும் இன்றி பூசை செய்யப்படுவதாகும் .இது, தொன்மையான மரவணக்கத்துடன் தொடர்புடையது. இதே போன்றே செல்வச் சந்நிதியிலும் மரவணக்கத்தில் இருந்து வேல் வணக்கம் இறுதியாகக் உருவணக்கத்துக்கு வந்தடைந்தவையாகும். பௌத்தம் கி.மு.3ம் நூற்றாண்டு தேவநம்பிய தீசன் காலத்தில் இலங்கைக்கு வந்தபோது நாகவழிபாடு, இயக்க மற்றும் பூதவழிபாடு,இயற்கை, ஆவிவழிபாடு என்பன நிலவின. பௌத்த மதம் இந்து நம்பிக்கைகளையும் பகுதியாய்க் கொள்வது தவிர்க்கமுடியாத விதியாகியது.பௌத்தம் சமயக்கிரிகைகளை மறுத்த ஒன்று. கடவுள்,ஆன்மா, அவதாரம்,மறுபிறவி, மோட்சம், நரகம், இறந்தோர் வழிபாடு போன்றவை அதற்கு புறம்பானவையே என்றும் எல்லா பௌத்தர்களையும் மகாயானம், தேரோவாதம் என்ற வித்தியாசமின்றி இலங்கையுள் இவை ஆட்கொண்டது. இலங்கையுள் எல்லா பௌத்தர்களும் இந்து தெய்வம்கள், பூதம்,பிசாசுகள்,யோகம், மந்திரம்களை நம்பினர். இவைகள் எல்லாவற்றையும் புத்தரும் ,போதி சத்துவரும் கட்டுப்படுத்துவார்கள் என்று நம்பினர்.


பௌத்தத்  துறவிகள் கலைகள், நாடகம்கள், நடனம் இவைகளை வெறுத்தனர்.

இவற்றை எதிர்த்து எழுதினர். ஆனால் ,சிங்கள கிராம மக்களிடம் ஏராளமான நாடகங்கள், கூத்துக்கள், நடனவகைகள் நிலவின. மந்திரத்தில் பாடல்கள் நிலவின. இயற்கையை வசப்படுத்தும் மந்திர ஆடல் பாடல்கள் நிலவின. கண்டிய நடனம், மலைநாட்டுச் சிங்கள வழிபாடுகள் என்பன பௌத்தத்துக்கு முரணானவையாகவே கொள்ள வேண்டும்.ஆனால் ,இந்தப் பல்பண்புடைய மதப்போக்குகளை நாவலன் ஒற்றைக் கருத்தியலாக பௌத்த வடிவமாக மட்டுமே புரிந்து கொள்கின்றார். இது நாவலனுடைய மட்டுமல்ல சகல தமிழ்த்தேசியவாதப் போக்காளர்களின் வழிவழியாய் வந்த மதிப்பீடுகளுமாகும்.


போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஸ்காரருக்கு எதிராகப் போராடிய சிங்கள, பௌத்த போக்குகள் உள்ளன. கெப்பிட்டிப்பொல போன்ற கிளர்ச்சியாளர்கள் தமிழ்மன்னன் எனக் கருதப்பட்ட கண்டியின் கடைசி மன்னன் சிறிவிக்கிரம ராஜசிங்கனின் வாரிசுகளைப் பதவியில் இருத்தவும் பௌத்த மதத்தைப் பாதுகாக்கவும் பிரிட்டனுக்கு எதிராகப் போராட சபதம் எடுத்தனர். கண்டி மன்னர் சிறிவிக்கிரம ராஜசிங்கன் காலத்தில் தமிழ்மொழி தான் கண்டியில் அரச மொழியாக இருந்தது. அவன் பௌத்த மதத்தைப் பாதுகாத்தவன் !ஆக, பௌத்தம் தமிழ் எதிர்ப்புக் குணத்தைக் கொண்டிருக்கவில்லை. கண்டி தலதா மாளிகையிலிருந்த புத்தரின் புனித தந்த தாது பிரிட்டிஸ் ஆட்சியை எதிர்த்தவர்களின் பிரதான பலமாக இருந்தது. எனவே, பிரிட்டிஸ் அரசு அந்த புத்தரின் புனித தந்த தாதுவைக் கைப்பற்றி பெரும் விழா எடுத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று மீண்டும் தலதா மாளிகைiயில் வைத்தனர். புனித தந்த தாதுவை யார் வைத்திருக்கின்றார்களோ அவர்களே தம்மை ஆளத்தகுதியுடையவர்கள் என்று கண்டி மக்கள் நம்பினர்.


"இடதுசாரிகள் தாம் சார்ந்த வர்க்கத்தை தேசிய விடுதலை நோக்கில் அணிதிரட்டவில்லை" என்பது நாவலனின் அடுத்த அரசியல் மனக்குறையாகும்.

1970 களில் தமிழ்தேசிய வாதம் ஆயுதமெடுத்த சமயம் ,இலங்கையில் சுயசார்ப்புப் பொருளாதாரத்தைக் கட்டப் போராடிக் கொண்டிருந்த ஒரு இடதுசாரி ஐக்கியமுன்னணி அரசு இருந்தது.

உலகவங்கி,சர்வதேச நாணய வங்கிகளால் கடும் நெருக்கடி தரப்பட்ட  JVP  யின் எழுச்சியால் பலவீனப்பட்ட ஆனால், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகட்கு சார்பான அரசாக அது இருந்தது. இதற்கு எதிராகவே தமிழ் பிரிவினைவாத ஆயுதக் கிளர்ச்சி நாச வேலையைத் தொடங்கியது. இதன் மூலம் இலங்கையின் தொழிலாள வர்க்கம் தமிழ், சிங்கள இனவாதத்தின் புதிய பரிமாணத்தின் முன்பு விடப்பட்டது.

அமெரிக்க மசாசூசெட் மாநிலத்தின் "தமிழ்-ஈழ "ஆதரவுத் தீர்மானம் , பிரிட்டனில் குடியேறியிருந்த  யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தின் தமிழ்தேசிய ஆதரவு நிலை ,இவைகளின் ஆதரவு நிலையில் தமிழ் இராணுவக் குழுக்கள் தோன்றுகின்றது.

இலண்டனை தலைமையகமாகக் கொண்ட தமிழ் தேசியவாதிகளின் குழுக்கள் தமிழ் இராணுவக்குழுக்களை ஆக்கவும் ,இராணுவப் பயிற்சி பெற்றுத் தரவும் முனைந்தனர். எனினும் ,தமிழ் ஆயுதக் குழுக்களின் உதிரிகள் தமிழ்நாட்டில் தலைமறைவு வாழ்வுக்கு சென்றிருந்தபோதும் அவர்கள் இந்திய அரசின் கவனத்தைப் பெற்று இருக்கவில்லை. இலங்கையில் மேற்குலக சார்பு யு.என்.பி வந்த பின்பே இந்திய அரசு ஆதரவு தமிழ் இராணுவக் குழுக்களுக்கு கிடைக்கின்றது.


1977 இல் UNP இலங்கையில் ஆட்சிக்கு வந்த பின்பு தான் பயங்கரவவாதத் தடைச் சட்டடம் பிரிட்டனில் ஐரிஸ் மக்களின் போராட்டத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தையொத்ததாகக் கொண்டு வரப்படுகின்றது.

சர்வ வல்லமை படைத்த ஜனாதிபதி ஆட்சிமுறை, சுதந்திர வர்த்தக வலயம் என்பனவும் வருகின்றது. தேர்தலுக்கு முன்பே ஜே.ஆர்க்கும் அமிர்தலிங்கத்துக்கும் இரகசிய அரசியல் கூட்டு இருந்தது. தேர்தலில் தமிழ் தேசியவாதிகள் தமிழ் மக்களை யு.என்.பி க்கு வாக்களிக்கச் செய்து இருந்தார்கள். எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் வந்தார். 1977 இல் இலங்கையில் முழு இடதுசாரிகளும் தேர்தலில் தோற்றிருந்தார்கள்.

தமிழ்த் தேசியவாதிகளும், சிங்களத் தேசியவாதிகளுமே பாராளுமன்றத்தில் இருந்தார்கள். ஜே.ஆர் பதவிக்கு வந்தவுடன் இடதுசாரித் தொழிற்சங்கங்களை அழித்து, UNP தொழிற்சங்கங்களை உருவாக்கினார். ஒன்றரை இலட்சம் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கினார். இந்தச் சமயத்தில் இடதுசாரிகட்கு எதிராக அமிர்தலிங்கம்  JR உடன் ஒத்துழைத்தார்.

தமிழ், சிங்கள இரு பகுதி இனவாதிகளும் ஒன்றாகப் பவனி வந்தார்கள்.

கொழும்புக்கு அமெரிக்காவின்  போர்க் கப்பல் வந்தபோது அமிர்தலிங்கமும் , பிரேமதாசாவும் ஒன்றாக தம்பதிகளாகப் போனார்கள்.

பின்பு UNP  இனக்கலவரத்தை தமிழ்மக்களுக்கு எதிராய்க் கொண்டு வந்தபோது "போர் என்றால் போர் ,சமாதானம் என்றால் சமாதானம் "என ஜே.ஆர் கேட்டபோது யு.என்.பிக்கு வாக்குப் போட்ட தமிழர்களுக்கே அடியும் கிடைத்தது. அமிர்தலிங்கம் ,"ஜே.ஆர் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டதாக" பேசத் தொடங்கினார்.

தமிழ்தேசியவாதிகள் ,இடதுசாரிகளை ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து அவர்களை உருக் குலைத்தார்கள். தமிழ்,சிங்கள, முஸ்லிம் இனவாதம் கடந்த அரசியலை முன்னெடுக்க முடியாமல் தடுத்தார்கள். தமிழ்தேசியவாதிகள் தமிழ்ப் பகுதிகளில் கொம்யூனிஸ்டுகளை ஒடுக்கப்பட்ட சாதிகளின் மட்டத்துக்கு தள்ளிவைத்தார்கள்.தீவிர இடதுசாரி எதிர்ப்புக் காட்டப்பட்டது.

 1970 களின் இறுதிப் பகுதியில் வல்வெட்டித்துறையில் தொழிலாளர்பாதை பத்திரிகையை வீடு வீடாக விற்ற புரட்சிக் கம்யூனிசக் கட்சித் தோழர்களை தங்கத்துரையின் ஆட்கள் வில்லுக்கத்தியைக் காட்டி விற்ற பத்திரிகையை திருப்பிக்கொடுத்து ,வாங்கிய 15 சதம் காசையும் திருப்பிக் கொடுக்கும்படி வெருட்டினார்கள்.



யு.என்.பி,தமிழர் விடுதலைக்கூட்டணி காலத்தில் இலங்கைத் தொழிலாள வர்க்கம் ,தான் இதுவரை போராடிப் பெற்ற எல்லாவற்றையும் இழந்து இருந்தது. தமிழ்,சிங்கள இருபகுதி இனவாதிகளும் இணைந்து கூட்டாக இடதுசாரிகளைத் தோற்கடித்து இருந்தார்கள்.

அக்காலத்தில் ,ஜே.ஆரின் நெருங்கிய கூட்டாளிகளாக அமெரிக்க நபர்களான நீலன் திருச்செல்வமும் ,ஜே.ஏ வில்சனும் சட்ட மேதைகள் என்ற பெயரில் இருந்தனர். ஜனாதிபதி ஆட்சிமுறை,பயங்கரவாத தடைச் சட்டம் இரண்டுக்கும் சட்ட வரைவுக்கு உதவியவர்கள் இவர்களே. இத்துடன் இவர்கள் அமிர்தலிங்கத்துக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கும் அதே சமயம் நெருக்கமாக இருந்தார்கள்.

அமிர்தலிங்கம் தம்மை UNP ஏமாற்றிவிட்டதாக கூறத் தொடங்கியபோது ,தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர்கள் ,அமிர்தலிங்கம் துரோகம் செய்துவிட்டதாகக் கூறத் தொடங்கினர்.

இடதுசாரி அரசின் காலத்தில் ,வலதுசாரி நிலையெடுத்த தமிழ்த் தேசியவாதம் இப்போ வலதுசாரி யு.என்.பி அரசு காலத்தில் இடதுசாரிப் பக்கம் சாயத் தொடங்கியது. தமிழ் இளைஞர் பேரவையில் இடதுசாரிப் பிரிவுக்கு சந்ததியார் போன்றவர்களும் வலதுசாரிப் பிரிவுக்கு மாவை சேனாதிராசா போன்றவர்களை உள்ளடக்கிய பிரிவுகளும் உடைவுகளும் ஏற்பட்டன. இரத்தினசபாபதி, சந்தததியார், விசுவாந்ததேவன் போன்றவர்களின் இடதுசாரித் தமிழ்த் தேசியவாதப் பிரிவுகள் தோன்றின. அமிர்தலிங்கம் இளைஞர்களிடையே இடதுசாரிகள் ஊடுருவிவிட்டதாய்க் குறை கூறியதுடன் ,தான் கொல்வின், என்.எம். இடம் மாக்சியம் பயின்றதாகப் பேசத் தொடங்கினார்.

இடதுசாரிப் போக்குடையவர்களைப் பலவீனப்படுத்த தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை மாநாட்டில் ‘விஞ்ஞான சோசலிச தமிழ் ஈழம்’ பற்றி தீர்மானம் போடவேண்டி வந்தது.


மேற்குலகச் சார்பு யு.என்.பி யின் காலத்தில் தான் இந்தியா தமிழ் இயக்கங்கட்கு ஆயுதப்பயிற்சியும், ஆயுதங்களும் தந்தது. இதன் நோக்கம் இலங்கை அரசின் மேற்குலக சார்பு நிலையை தடுப்பதும், தமிழ் ஆயுத இயக்கம்களை அதற்கேற்ப பயன்படுத்துவதும் தான்.

அப்போது, சோவியத் யூனியன் இருந்தது.

இந்திய சோவியத் உறவுகள் நிலவின. இந்திய ஸ்டாலினிசக் கட்சிகள் சில இந்திய அரசையும் ,இடதுசாரி அரசாகக் கணித்த காலமது.எனவே, யு.என்.பி வலதுசாரி அரசுக்கு எதிராக தமிழ் இயக்கம்கள் சிவப்புச் சாயத்தை தம்மேல் அப்பிக் கொள்ள முயன்றன. பாலசிங்கம் போன்றவர்கள் சோசலிச நோக்கில் தாம் செயற்படுவதாக எடுத்து, விளக்கம் தந்தனர்.

EPRLF இல் பத்மநாபா, புளொட்டில் சந்ததியார், ஈரோஸ், என்.எல்.எவ்.ரி என்போர் சோசலிசத் தத்துவம்கள் சிங்கள மக்களை இணைப்பது போன்றவற்றையும் பேசத் தொடங்கினர்.

ஆனால் ,தமிழ் இயக்கம்கள் கையில் ஆயுதம் எடுத்தவுடன் சகலதும் மாறத் தொடங்கின. அவர்கள் ,இடதுசாரிப் போக்குடையவர்களையே உள்ளும் ,புறமும் அழிக்கத் தொடங்கினர்.

புளொட் டுடன் வலதுசாரி இராணுவவாதம் பெருத்து ,அமைப்புள் அழிப்புக்கள் ஆரம்பமாகின.

"புளொட் ஒரு சோசலிச இராணுவமா? அல்லது முதலாளிய இராணுவமா? " என்று கேள்வி எழுப்பியவர்கள் முதல் சந்ததியார் வரை அழிக்கப்பட்டனர்.

 ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் பத்மநாபா போன்றவர்கட்குப் பதிலாக வரதராஜப்பெருமாள், டக்ளஸ் போன்ற வலதுசாரிகள் பலம் பெற்றனர். ஈரோஸ் இன் இரத்தினசபாபதி போன்றவர்கள் ஓரம் கட்டி தள்ளப்பட்டனர். இடதுசாரிச் சிந்தனையுடையவர்கள் குழப்பங்களை மூட்டுபவர்களாகவும் ஒற்றுமையைக் குலைப்பவர்களாகவும் தமிழ் வலதுசாரி விளக்கம்கள் தரப்பட்டன.

சந்ததியார், சுந்தரம், விசுவானந்த தேவன் போன்றவர்களும் வியானந்தன், அண்ணாமலை உட்பட பல கொம்யூனிஸ்டுகளும் கொல்லப்பட்டனர்.

சோசலிசம் பேசிய ஈரோஸ் ,அனைத்து மக்களின் அடிமைச் சங்கிலியையும் அறுப்போம் என்று சிங்கள மொழியில் கூட வானொலி நடத்திய புளொட், சிஐஏ [CIA ]உளவாளி என்று அலன் தம்பதிகளைக் கடத்தி உழைப்பாளர்களின் அமைப்புக்ளை உருவாக்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ், மற்றும் என்.எல்.எவ்.ரி என்பன தமிழ் வலதுசாரி அரசியலுக்கும் முதலாளியப் போக்குகட்கும் சரியத் தொடங்கின.


இதன் மூலம் ஆரம்பகாலத்தில் இடதுசாரி அவியல் போக்குகள் முடிந்து ,தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சமமான அரசியல் போக்கு தொடங்கியது.

இதற்கான முக்கிய காரணி யாழ்.நடுத்தரவர்க்க அரசியல் புலமாகும். இலங்கையில் முஸ்லிம், சிங்கள மக்களை விட யாழ்.தமிழர்கள் மத்தியிலேயே நடுத்தரவர்க்கம் பலமாக இருந்தது. இவர்கள் இயற்கையாகவே மேற்குலக சார்பும் ,ஆங்கிலம் படித்தவர்களே கல்வியாளர்கள் என்ற பெருமையும் கொண்டவர்கள். இவர்கள் சிங்களத்தை மட்டுமே எதிர்த்தவர்கள், இவர்கள் அப்புக்காத்து, டாக்குத்தர், எக்கவுண்டன், என்ஜினியர், உத்தியோகம் பெறப் படித்தவர்கள் இதனால் சிங்கள மக்களை விட வெளிநாடுகளில் வாழக் கொடுத்துவைத்தவர்கள், பிரிட்டனில் வீட்டில் கூட ஆங்கிலம் பேசிக் கொண்டே தமிழ் மொழி உரிமைக்குப் போராடியவர்கள்.தமிழ் தேசியவாதிகளை இலங்கையில் வளர்த்து வழிகாட்டியதில் இவர்களே பெரும் பங்கு கொண்டிருந்தனர். உண்மையில் தமிழ்தேசியவாத அரசியல் என்பது சாதாரண தமிழ்மக்களின் அரசியலாகத் தொடங்கவில்லை.


நாவலன் ஏனைய தமிழ்தேசியவாதிகளைப் போல் அவர்கள் வழியில் இடதுசாரிகளைக் குற்றம் சொல்கிறார். ஏகாதிபத்தியத்தின் பிளவுவாத அரசியலில் இருந்து புறப்பட்ட பிரிவினைப் போக்கை இடதுசாரிகள் ஆதரித்து இருக்க வேண்டுமா? இடதுசாரிகள் தலைமை தரத்தக்க அகமற்றும் புறவயமான சூழல்கள் இருந்ததா? தமிழ் யாழ்ப்பாண நடுத்தரவர்க்க அரசியலின் தமிழ்ஈழம் வர்க்க அடிப்படையில் இடதுசாரிகளை எப்படி ஏற்கும்?

ஜே.ஆர் ஆட்சியின் தீவிர வலதுசாரி அரசியல் நிலைமையில் அதற்கு எதிராக தமிழ்த்தேசியம் தற்காலிக முற்போக்கு முகம் காட்டியபோதும் அது ,எந்த நேரத்திலும் கழுத்தறுத்து விடும் போக்கிலேயே இருந்தது.

 தமிழ்த்தேசியவாதத்தின் பின்னால் போனவர்களின் பெரும்பகுதி மாவோவாதிகளாக இருந்தனர். மாவோவாதம் என்பது ஒரு விவசாயக் கோட்பாடு என்ற அளவில் தேசியவாதத்துக்கும் நெருக்கமாக இருந்தது. இன்று புதுவை இரத்தினதுரை பாலகுமார் வரையிலான மாவோவாதிகள் புலிப்பாசிஸ்டுகளாக பரிணாமம் பெற்றதில் இவை முடிவடைந்தன.

இடதுசாரிகள்,தொழிற்சங்கம்கள் தமிழ்பரப்பில் அழிக்கப்பட்டது என்பது புலிப்பாசிசம் சார்பான வலதுசாரிப் போக்குகட்கு பலம் சேர்த்து வெறும் இராணுவாதக் குழுக்களாக இவை வளர இடம் விட்டது. அரசியலின் இடத்தை ஆயுதம்கள் கைப்பற்றிக் கொண்டன. நாவலன் தனது கட்டுரையில் இடதுசாரிகள் பற்றிய எந்தத் தெளிவான விளக்கத்தையும் வைக்கவில்லை , எதையும் வரையறுத்துச் சொல்லவுமில்லை. எல்லாம் போகிற போக்கில் அவசர கோலத்திலான விளக்கங்களாகவேயிருந்தன. தமிழ்த்தேசிய விடுதலை, தென்னிலங்கை இடதுசாரிகளுடன் போயிருக்கவேண்டுமா? இலங்கை தழுவிய புரட்சிக்கு அவர்களுடன் கூட இணைந்து ஆயத்தம் செய்திருக்கவேண்டுமா? வர்க்கப் போராட்டத்தையும் இனவாதிகளின் ஆயுதமேந்துதலையும் ஒன்று சேரப் போட்டு நாவலன் குழப்பியிருக்கின்றார்.


தமிழ்ப்பாசிசம் வந்து வடக்கு கிழக்கில் இருந்த 50 வருடத்துக்கும் மேற்பட்ட இடதுசாரிகளையும் தொழிற்சங்கங்களையும் ஒன்றுவிடாமல் அழித்தார்கள். இலங்கையில் தொழிலாளர் இயக்கம் இல்லாத பகுதிகளாக இவை ஆக்கப்பட்டன. கொல்லப்பட்ட இடதுசாரிகள் தவிர மிச்சமானவர்கள் தென்னிலங்கைக்கும் ,வெளிநாடுகட்கும் தப்பியோடினார்கள்.

தமிழ்ப் பகுதிகளில் தொழிலாளர்கட்கு வேலை நிறுத்தம் செய்ய சுதந்திரமான தொழிற்சங்க இயக்கம் கட்டக் கூட உரிமை இல்லை. இலங்கையில் கிட்டத்தட்ட 100 வருடம் கொண்டாடிய மே தினத்தைக் கூட இடதுசாரிகளால் தமிழ்ப்பகுதிகளில் நடாத்தமுடியவில்லை. தமிழ்ப்பகுதிகளில் இயங்கிய ஒருசில தொழிற்சாலைகள் முதல் கூட்டுறவுத்துறை வரை புலிகளால் சூறையாடி அழிக்கப்பட்டதால் பல பத்தாயிரம் தொழிலாளர்கள் வாழ்விழந்தனர்.

தேசிய இனச் சுயநிர்ணய உரிமை பேசும் நாவலன் ,ஏன் தொழிலாளர்களின் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசவில்லை. தமிழ் பாசிசத்தால் அழிக்கப்பட்ட இடதுசாரிகளை ,தமிழ்தேசிய வாதத்தால் இல்லாமல் செய்யப்பட்ட சோசலிசப் போக்குகளை நாவலன் குற்றவாளியாய்க் காட்ட முயல்கின்றார்.

கொலையாளியை விட்டு விட்டு ,கொலையுண்டவரை குற்றம் சொல்கிறார்.

 தமிழ் ஜனநாயக சக்திகளை ,சகோதர இயக்கம்களை, புலிப்பாசிஸ்டுகள் அழித்தமைக்கு இடதுசாரிகளா பொறுப்பு?

 தென்னிலங்கையில் குண்டு வெடிப்புக்கள் நிகழ்த்தி ,பல ஆயிரம் சிங்களப் பொதுமக்களைக் கொன்றமைக்கு இடதுசாரிகளா காரணம்?

கிழக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களைப் புலிகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றார்களே அதற்கு இடதுசாரிகளா பொறுப்பு எடுக்கவேண்டும்?

தமிழ்தேசியவாதிகள் இன்று சர்வதேச சமூகம் என்று ஏகாதிபத்தியத்தின் பின்னால் அலைகிறார்களே அதற்கு சோசலிஸ்டுகளா சொல்லிக் கொடுத்தார்கள்?

நாவலன் தேசியத்துக்காக இடதுசாரிச் சிந்தனையை பலி தரும் மனிதராகவே எங்கும் உலாவுகிறார். தேசியத்தை எதிர்த்தே சோசலிசம் பிறந்தது என்பதை அவர் மறவாதிருப்பது நல்லது.


தமிழ்தேசியப் பிரச்னையில் ‘இடதுசாரிகள் தவறிழைத்தார்கள் என்ற முறைப்பாட்டை நாவலனும் வைக்கத் தவறவில்லை. ஒரே சமயத்தில் தமிழ்த்தேசியவாதத்தின் அனுதாபியாகவும் ,அதே சமயம் இடதுசாரியாகவும் இருக்க முடியும் என்று நாவலன் நம்புகின்றார்.

தேசியவாதத்தை எதிர்த்தே சோசலிசம் பிறந்தது என்பது அவரது கவனத்துக்கு எட்டாமல் போயிருக்கலாம். இலங்கையில் தொழிலாளர்களையும் ,இடதுசாரி இயக்கங்களையும் வளரவிடாமல் தடுக்கவே சிங்கள தேசியவாதம் போல் தமிழ் தேசியவாதமும் எழுப்பப்பட்டது.

இடதுசாரிப் போக்குகளைப் பலவீனப்படுத்திய முக்கிய காரணிகளில் ஒன்றாக தமிழினவாதம் நாவலனுக்குப் படவில்லை. மாறாக தமிழ், சிங்களத் தேசியவாதப் போக்குகளால் பாதிப்புற்ற இடதுசாரிகளையே எதிரிகளாக்கும் அரசியலுக்கு அவரும் போகிறார். இடதுசாரிகளான பிலிப் குணவர்த்தனா அதன் பின்பு 1970 களில் இடதுசாரி ஐக்கிய முன்னணி என்பன சோசலிசத்துக்கு முந்திய சமுதாய நிலைமைகளைப் படைக்கும் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டும் போராட்டத்தை நடத்தியவர்கள் என்பதையும் அவர் கண்டாரில்லை.

 தமிழினவாதம் மேல் சந்தேகமற்றவராக நாவலன் இயக்கப்படுகின்றார்.

ரஸ்ய,சீன ஜே.வி.பி என்று ஸ்டாலினிச, மாவோயிச இயக்கங்களை ஒன்று கலந்தடித்த அவர் ,இலங்கையில் முதன் முதலில் தோன்றிய மாக்சிய இயக்கமான எல்.எஸ்.எஸ்.பி யை பிலிப் குணவர்த்தனாவை கொல்வின் ஆர்.டி சில்வாவைப் பற்றிய ஒரு சிறு ஞாபகமூட்டலுக்கு கூட வரமுடியாதளவு இடதுசாரி இயக்கங்கள் பற்றிய தகவல் தட்டுப்பாட்டால் ,வரலாற்றுணர்வுப் போதாமையால் நாவலன்  ஆட்கொள்ளப்பட்டுள்ளார்.

 நாவலன் தான் வாசித்தறியாத,கேட்டறிந்திராத தத்துவப் பிரதேசங்களில் வழி தவறி அலைகிறார். பொருளறியாமலே வார்த்தைகளில் சண்டையிடக்கூடாது. சொற்களின் வரலாற்று பின்புலத்தை அது உருவான அவசியக் காரணிகளை விளங்கி மாக்சியச் , சொற்பதம்களை உணர்ந்து, பொருள் முதல்வாதத்தால் ஊடுருவிப் பார்த்து எழுதவேண்டும்.

நாவலன் மாக்சியச் சொற்பிரயோகம்களை தாராளமாக வீணடித்து இருக்கின்றார்.

தொடரும்...


தமிழரசன்,
பெர்லின் .


 



Samstag, Juli 28, 2012

நாவலனின் தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி[1] !

சபா நாவலனின் தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி[1] !

-நூல் விமர்சனம்-பகுதி:1

மீளவும், ஒரு நூல் விமர்சனத்தை நீங்கள் வாசிக்க முன் வைப்பதில் பண்டுதொட்டு நடாத்தப்படும் "தமிழ்த் தேசிய"த் திருவிளையாடல்களைப் புரிந்துகொள்ள வைக்கும் முயற்சியாகவே குறித்துக்கொள்ளலாம்.

சமீபத்தில் இனியொரு இணையத்தை நடாத்தும் திரு.சபா நாவலன் அவர்கள் எழுதிய"தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி " எனும் நூலைப் பலரும் வாசித்திருப்பீர்கள்.அந்த நூலுக்கான புரிதலைச் சரிசெய்யும் மாற்றுக் கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்படவில்லை.வந்த ஓரிரு விமர்சனங்களும்"ஆகா-ஓகா!" என்ற பாணியில் எழுத்தப்பட்டிருந்தன. இத்தகைய விமர்சனங்களது வார்ப்பில் ஒரு நூல் தனது குறைகளைக் கரைத்துக்கொள்வது வரலாற்றில் ஆபத்துக்களையே திணித்துக்கொண்டு, நகருமென்பதால் அந்த நூலுக்கானவொரு "எடிட்டர்" வகைப்பட்ட மாற்றுக் கருத்தும்,வரலாற்றுண்மைகளைச் சுட்டும் எழுத்தும் அவசியமாகவும்-வெற்றிடமாகவும் இருந்தது.அத்தகைய மாற்று உரையாடலை-வரலாற்றுண்மைகள் சார்ந்து நகர்த்தும் திறனும்,வரலாற்று அநுபவமும் ஒருங்கப் பெற்றவர்களாலேயேதாம் இத்தகையவொரு விமர்சன வெளியை உருவாக்கிக் கருத்துக்களை வரலாற்றுண்மைகளோடு பொருத்திப் பொதுசன மட்டத்தில் உண்மைகளை இனம் காட்ட முடியும்.

திரு.தமிழரசன் அத்தகைய ஆற்றலுடைய புலம் பெயர் தமிழரில் ஒருவர்.அவரது விமர்சனமானது நாவலனின் நூலுக்கானவொரு சிறப்பணியாகவே அமையக்கூடியது.


திரு.சபா நாவலன் அவர்கள் இலங்கையைவிட்டுப் புலம் பெயர்ந்து வாழும் இடதுசாரிகளில் மார்சியத்தைத் திறன்படக் கற்றவர்களில் ஒருவர்.போராட்ட இயக்கத்தில் ஆரம்ப நிலைக் கால அமைப்பு வேலைகளில் இருந்தவர்,யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெறக் கற்றபடி போராட்டத்தில் தன்னாலானவரை இணைந்து செயற்பட்டவர்-புலம்பெயர் தேசத்தில் பட்டப்பின் கற்கைகளையும் கற்றுத் தேர்ந்தவர்.கடந்த 25 ஆண்டுகளாகப் புலிப் பாசிசத்துக்கெதிரான கருத்துக்களை மக்கள் நலனிலிருந்து நாம் தொடர்ந்து எழுதிவருகிறோம்.இந்த எழுத்துக்கெதிராகப் புலிப் பாசிசம் தொடுத்த கருத்தில்-உளவியல் அராஜகமானது நம்மை "எட்டப்பன்" என எச்சரிக்கையும் செய்து, இறுதியில் நாம் சொன்னதை நிரூபித்துத் தமிழ்பேசும் மக்களைக் கொன்று குவித்துச் செல்வம் சேர்த்த தமது அரசியல் தலைமையை மீளவும்,அந்நியச் சேவைக்கு அடியாளாக முன் தள்ளித் தொலைந்து போனது.முள்ளி வாய்க்கால் அழிவானது புலிப் பாசிசத்துக்கான சாவுமணியானதென்பதை நான் ஒருநாளும் ஏற்கமாட்டேன்.

புலிகள் என்ற இராணுவப் பாசிச வன்முறை ஜந்திரம் தோற்கடிக்கப்பட்டாலும் அதன் கருத்தியல் வடிவமானது "தமிழ்த் தேசிய"வாத விசச் சக்திகளிடம் வலுவான நிதி-ஊடக வலுக்களது ஆதாரத்தில் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படுகிறது. இது, தமிழர்களது கடந்த காலத்துப் "பொற்காலம்" என்று கூறும்" ஆண்ட பரம்பரை ஆளத் துடிக்கிறது" என்ற பாசிசக் கருத்தாடலின் வழி தொடர்ந்து கொலையரசியலைச் செய்து, தமது இருப்பை உறுதிப்படுத்தும் இந்தச் சந்தர்ப்பத்தில் இவற்றுக்குத் தோதான கருத்துக்களை "இடதுசாரிகள்"என்று அழைக்கப்படவும்-அழைக்கவும் முனையும் நாம் நூற்களாகவும்-ஆய்வாகவும் முன்வைத்துவிடுவதில் எமது அநுபவம்-அறிவைப் பொறுத்து இந்த விஷமப் பரீட்சை தொடங்கவும்-முடியவும் ஏலுமாகிறது.

இது,மக்களைக் கொன்று தள்ளிய புலிப் பாசிசச் சேட்டையின் அடுத்த வொரு வடிவத்தைப் புலம் பெயர்ந்து வாழும் நம்மிடம் கோரும் இன்றைய சந்தர்ப்பத்தில், நிலத்தில் வாழும்பல இலட்சக்கணக்கான தமிழ்பேசும் மக்களது வாயில் மண்ணை அள்ளிப் போடுவதாகவும் இருக்கிறது.அங்கே,புலி-பயங்கரவாதம்,மீளத் தலையெடுப்பதில் புலம் பெயர்ந்த தமிழர்கள் காரணமாகவே இருப்பார்களென்ற "பூச்சாண்டிகளின்வழியே" சிங்களவரசு தொடர்ந்து தமிழ்பேசும் மக்களது சுயாதீனச் செயற்பாட்டை மறுத்து,இராணுவ வன்முறை ஜந்திரத்துக்குத் தமிழ்பேசும் மக்களது சுதந்திரத்தைத் தாரவார்த்துக்கொண்டிருக்கிறது.இதையே விரும்பும் புலிப் பினாமி முதலாளிகள், தமது அருமையான சந்தர்ப்பம் மீளக் கருக்கொள்வதற்கு "இடதுசாரிகளது" சுயநிர்ணயம்சார்ந்த பார்வைகளும் துணை நிற்பதால் அதைத் தொடர்ந்து தமக்குள் உள்வாங்குவதில் முனைப்புடன் செயலாற்றுகின்றனர்.

இந்தப் புள்ளியில் சபா நாவலனது நூலை இந்தத் தளத்தில் மூழ்க விடாது அதைத் தொடர்ந்து திறனாய்வு செய்து முழுமைப்படுத்தியாக வேண்டும். இவை, நாளைய வரலாற்றில் ஒடுக்கப்படும் மக்கள்சார்பாகப் பேசின-விடுதலைக்கு உந்துதலாகவிருந்தனவென நமது அடுத்த தலைமுறை வாசித்தாகவேண்டும்.

இந்த நோக்கோடு, இவ் விமர்சனமானது நாவலானால் தொகுப்பட்ட நூலது விளைவுக்கான அறுவடையாகிறது.இதன்வழி தேசியவாதக் கயவர்களால் வரலாற்றில் மறைக்கப்படும் மக்களது சமூக அசைவியக்கவுண்மைகளைப் புரிந்துகொள்வதற்கு இதுவொரு அவசியமான மாற்று விமர்சனமாகவே வரலாற்றில் எழ முயற்சிக்கிறது.

தமிழரசன் இந்தவுண்மைகளைப் பேசுவதில் பெரும் பகுதி மக்களை அண்மித்தியங்குபவரென்பதை நாம் ஏலவே அறிவோம்.

நீங்கள் வாசித்துத் தெரிந்துகொள்ள முனையும் உண்மைகள் உங்களையும் தமிழ்த் தேசிய வாதிகளது கயமையிலிருந்து விடுவிக்கும் தறுவாயில், வரலாற்றின் முக்கியமான கட்டத்தைப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை எமது சமுதாயத்துக்குள்  நிலைப்படுத்திவிட முடியும்.

நண்பர்களே,சபா நாவலனது நூலுக்கான இவ் விமர்சனமானது மூன்று நீண்ட தொடர்களுடையது.அதன் முதற்றொடரை இப்போது வாசிக்கின்றீர்கள்.

இரண்டாம்,மூன்றாம் பகுதியும் வரலாற்றுண்மைகளை நெம்புகோலாகக்கொண்டு மேலெழுபவை-அவற்றையும் தொடருங்கள்!

நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்,
ஜேர்மனி.
28.07.2012


நாவலனின் தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி[1] !
-நூல் விமர்சனம்-பகுதி:1
1:


"இலண்டனைச் சேர்ந்த சபாநாவலனின் தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி என்ற நூல் 104 பக்கங்களில் தேசம் இணையத்தளம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது."


புலிப்பாசிசமானது இராணுவரீதியில் இனி எழுமுடியாதபடி நிர்மூலமாகிக்கொண்டிருக்கும் அரசியல் பொழுதில் இந்த நூல் வெளிவந்துள்ளது. இதற்கான முன்னுரையை தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.மாக்ஸ் எழுதியிருக்கிறார். புகலிடத்தமிழ் பரப்பில் தமிழ்தேசியவாதத்துக்கு அரசியல் ரீதியில் சமமான மாக்சியமல்லாத பல்வேறு உதிரிப் போக்குகளையும் தன்னைத்தானே தேடியவையும் ,பலவித தனிமனிதவாதக் கருத்தோட்டங்களையும் உருவாக்கி உலாவவிட்டதில் அ.மாக்ஸ் பங்கு முக்கியமானது.

தமிழ்த்தேசியவாத அரசியலின் ஆயுதப் பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புக்காட்டிய பலர் இப்போக்குகளில் இளைப்பாறச் சென்றார்கள்.இவை அ.மாக்ஸ் நீண்டகாலமாக ஸ்டாலினிசத் தத்துவத்துக் குறைபாட்டால் துன்புற்று வருபவர் என்றவகையில் மட்டும் நிகழவில்லை. மாறாக ,1990 களில் உலக மயமாக்கலில் இந்தியாவானது நுழைந்து கொண்டிருந்தபோது அதற்கு இசைவான இந்திய நடுத்தரவர்க்க உணர்வுகளின் வெளிப்பாடாகவே அ.மாக்ஸ் விளங்கினார்.முதலாளித்துவ ஜனநாயகப் பிரச்சாரம் வர்க்கம்களையும், தத்துவத்தையும் தாண்டிக் கடந்த அரூவமான மனிதாபிமானம் மற்றும் புதிய நுகர்வுக் கலாச்சாரப் பண்புகளையும் இவரைப்போன்றவர்கள் கொண்டு வந்தனர்.இவர்கள் சோசலிசம் இனி திரும்பி வரப்போவதில்லை எனவும் நேற்றுப் போல் இன்றும் நாளையும் வரலாறும் பொருளாதார வாழ்வும் மாற்றமின்றி தொடரப்போவதாக நம்பியவர்கள். உலக மயமாதல் இந்தியா உட்பட ஆசிய, லத்தீன்அமெரிக்கா,ஆபிரிக்க நாடுகளில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரப்போகின்றது என்ற எதிர்வு கூறலும் மதிப்பீடுகட்கும் இவர்கள் சக்தியற்றுக் கிடந்ததுடன், சுயம்கள், அடையாளங்கள், தனித்துவம்களைத் தேடும் முதலாளித்துவ தனிமனிதவாதப் போக்குகளை நோக்கி நகர்ந்தனர்.இத்தகைய போக்குகளின் பிரச்சாரகரும் தத்துவவாதியுமான அ.மாக்ஸ் இங்கு நாவலனின் நூலுக்கு மிகவும் பின்தங்கிய சோம்பலான ஒரு முன்னுரையை எழுதியிருக்கின்றார்.

நாவலனை ஒரு செவ்வியல் மாக்சியப் பார்வையுடையவராகவும் கோட்பாட்டு நூல்கட்கே உரித்தான மேற்கோள்கள் திணிப்புக்கள் இல்லாமல் எழுதுபவராகவும் அ.மாக்ஸ் காண்கிறார்.அ.மாக்ஸ் ஸ்டாலினிச மாவோயிச அரசியலில் வளர்ந்து, ஆளானவர்.மாக்சின் மூலநூல்களில் கற்பதற்குப் பதிலாக ஸ்டாலினிச தத்துவார்த்த எழுதல் முறைக்கும் அதன் மாக்சிய இயங்கவியலுக்குப் புறம்பான மாறாநிலை வாதப் போக்குகட்கும் மாவோவின் மேற்கோள்கள் அடங்கிய சிறுகையடக்க நூல்களிற்கும் இத்தகயவர்கள் கடன்பட்டவர்களாகவே இருந்தனர்.

இந்திய இடதுசாரிஇயக்கங்கள் இந்தியாவின் எந்தவரலாற்றுச் சூழலில் பொருளாதார வளர்ச்சித் தருணத்தில் பிறந்தன, செயற்பட்டன என்ற ஆய்வுகட்குப் பதில் அவர்கள் தத்துவரீதியில் சிதைந்தமைக்கான காரணங்களை அவரால் தேடி நிறுவமுடியாமையால் மாக்சில் இளம் மாக்ஸ், முதிய மாக்ஸ்.மாக்சியத்தில் மரபு, செவ்வியல், நவ, என்றுபலவித போக்குகள் இருப்பதாக மேற்குலக சீர்திருத்தவாத இடதுசாரிக் கருத்துக்களின் துணையுடன் நம்பத் தொடங்கினர். ஒரு புரட்சி எத்தகைய வரலாற்றுக்கட்டத்தில் உள் – வெளி நிபந்தனைகளில் வாழ முயன்றது என்ற பகுப்பாய்வுகட்கு அவர் முயலாமலே தவறுகளை மாக்சிய சித்தாந்தத்தில் தேடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டார்.

ஸ்டாலினிசம் என்றகருத்து நிலையை கடைசிவரை அ.மாக்ஸ் உள்வாங்கவில்லை .சோவியத் புரட்சியில் லெனினுக்கு அடுத்த பாத்திரம் வகித்த ரொட்ஸ்கியை கற்கவில்லை. ஆனால், எஸ்.வி.இராசதுரை இவரை விட முன்னே நின்றார். அதற்கு இலங்கையைச் சேர்ந்த ரொட்ஸ்கியின் கருத்துக்களில் பழக்கமுடைய ரெஜி சிறிவர்த்தனா காரணமாக இருந்தார் எனலாம்.இங்கு நாவலனின் எழுத்தை செவவியல்மாக்சிய வகைப்படுத்தலுக்குள் அ.மாக்ஸ்கொண்டு வந்தமை என்பது அது ஒரு பழைய பார்வை என்பதைக் குறிப்பால் உணர்த்தவே என்பதை நாம் கவனிக்கலாம்.

அ.மாக்ஸ் எழுதுவதுபோல் ஒரு தத்துவார்த்தக்கட்டுரை மாக்சிய மேற்கோள்கள் இன்றி எழுதமுடியுமா? 

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைப் பற்றி எழுதும்போது டார்வினையும் சார்பியல் கொள்கை பற்றி எழுதும்போது அயன்ஸ்டைனையும் உளவியலைப் பற்றிப் பேசும்போது சீங்மென்ட் புறைட்டையும் விட்டுப் பேச இயலுமா?

வானவியலின் ஆரம்பத்தை கோப்பர் நிக்கலசை விட்டு விட்டுத் தொடங்கமுடியுமா?மாக்சியத்தை விட்டு எவராவது மூலதனச் செயற்பாட்டை வர்க்க சமூக இயக்கத்தை விளங்க இயலுமா?

 பௌதீகத்திலோ பொருளாதாரத்திலோ மேற்கோள்கள், பரிசோதனை முடிவுகள் இல்லாமல் விளக்கமுடியுமா?

ஸ்டாலினிசம் மாக்சியத்தை இயக்கமற்ற சுலோகமாக்கியது என்பதால் மாக்சிய மேற்கோள்கள் கருத்துக்கள் தத்துவத்தை எழுதும்போது அந்நியமாகி விடுமா?

அ.மாக்ஸ் எழுத்துக்களில் பொருளாதாரம் மேலான கரிசனை இராது. புள்ளிவிபரங்கள்,மேற்கோள்களால்ஆதாரம்காட்டி நிருவும் பகுப்பாய்வுகட்கு அவர்பழகியவருமல்ல அ.மாக்ஸ் தன்னைச் சுற்றி மனம் போன போக்கில் சிந்திப்பவர்களையும் வர்க்கமறியாத அரசியலுக்குரியவர்களையும் படைக்கக் காரணமானார். இதனால் தான் இன்றைய காலகட்ட அரசியலுக்கு பொருத்தமற்றவர்களாக சமூக இயங்கியல் போக்கின் வெட்ப தட்பமறியாதவர்களாகவும் ஆகிப்போயினர்.

நாவலனின் எழுத்தானது அ.மாக்ஸ் சித்தரிப்புப் போல் செவ்வியல் மாக்சியவாதியாக அல்ல. செவ்வியல் தமிழ்தேசியவாதியாகவே தென்படுகின்றார்.

இடதுசாரிச் சிந்தனையில் தொடங்கிய நாவலன் கருத்துக்கள் தமிழ்த்தேசியவாதத்தில் தான் முடிவுறுகின்றன.

பாலசிங்கம் போன்றவர்கள் இப்படித்தான் இடதுசாரிச் சொற்களை வைத்துக் கொண்டு புலிப்பாசிசத்துக்கு தத்துவ நியாயம் தேட முயன்றனர். லண்டனைச் சேர்ந்த தொழிலாளர் பாதை’ அமைப்பைச் சேர்ந்த கெலி பண்டா போன்றவர்களின் தேசிய இனம்களின் சுயநிர்ணயம் என்ற கருத்தை பாலசிங்கம் தன் சொந்தக் கருத்தாக சோசலிச தமிழீழத்தை நோக்கி’ என்ற நூலில் எழுதினார்.

நாவலனுக்கு முன்பே புகலிடத் தமிழ்ப் பரப்பில் தமிழ்த் தேசிய உருவாக்கம் ஏகாதிபத்தியத்தின் அரசியலுக்கு புலிப்பாசிசம் கருவியாவது பற்றிய மாக்சிய பார்வையிலான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொண்டே நாவலனை நாம் வாசிக்கவேண்டும்.

கோட்பாடுகள் மேற்கோள்கள் இல்லாமல் எழுதுவதென்பதை ஆதரிக்கும் அ.மாக்ஸ் இப்போக்குகள் முதலாளிய அரசியல் சொற்களிலான சீர்திருத்தவாத அரசியல் விளக்கங்களாகவே முடியும் என்பதை எண்ணவில்லை. மாக்சிய கருத்துக்களோடு எந்தவொரு அற்பமான தொடர்பு கூட இல்லாதவர்கள் தம்மை இடதுசாரிக் கருத்துக்கள் நிறைந்தவர்கள் என்று உரிமை கோரும் காலமிது.

தமிழ்நாட்டிலிருந்து பெரியார் அம்பேத்கார் பற்றி எழுதுவோர் அ.மாக்ஸ் உட்படசகலருமே அவர்களின் மேற்கோள்கள், உதாரணங்கள், பக்கத்துக்குப் பக்கம் பந்திகளால் நிரம்பிய கட்டுரைகளை எழுதுகின்றார்கள். மாக்சிய தத்துவ கலைச் சொற்களை அறியாமல் பேசுபொருளை உரியமுறையில் விளங்கத்தக்க வார்த்தைகளைத் தேர்ந்தெடாமல் எப்படி கட்டுரை எழுத முடியும்?

ஆரியர், திராவிடர் சண்டை சச்சரவுகளிலும் அதன் துணைத்தத்துவமாக எழுந்த அரசியல் அடித்தளமற்ற தனிப் பிராமணிய எதிர்ப்பிலும் நீண்டகாலம் சீவியம் நடத்திவந்த மாக்ஸ் இந்த நூல் முன்னுரையில் முதல்முறையாக ஆரியர், திராவிடர் இரண்டும் வேறுவேறான இனப்பிரிவினர் அல்ல மாறாக, மொழிப் பிரிவினரே என்று ஒப்புக் கொள்ளக் கட்டாயப் படுத்தப் பட்டுள்ளார் .  இதனால் இவர் இதுவரை பேசியும் எழுதியும் வந்த விடயங்கள் அடிப்படையிழந்து போகின்றன. எனினும் அ.மாக்ஸ்கடைசி முயற்சியாக ஆரியத் திராவிடர் கருத்தாக்கங்கள் பிரிட்டிஸ் வருகைக்கு முன்பே இருந்தது. ஆதி சங்கரர் , 8ம் நூற்றாண்டில்  (கி.பி) திருஞானசம்பந்தரை திராவிடச் சிசு’ என்று கூறியதாய் பலவீனமான சான்று ஒன்றைக் காண்பிக்கின்றார். திருஞானசம்பந்தர் 7ம் நூற்றாண்டில்(கி.பி) அதாவது இவர்கள் கூறும் ஆரியர் – திராவிடப் போராட்டங்கள் நடந்ததாகக் கூறும் கி.மு. 1500 அல்லது 2000 ஆண்டுகட்கு மிக மிகப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் என்பதுடன் திருஞானசம்பந்தர் ஒரு பிராமணர். அவர் ஆரியர், திராவிடர் பிரச்னையை அறியாதவர், எதிர்கொள்ளாதவர், தேவார திருவாசகங்கள், ஆழ்வார் பாடல்கள் பழந்தமிழ் இலக்கியங்களிலோ மூத்த நூலான தொல்காப்பியத்திலோ இந்தச் செய்திகள் கிடையாது. மேலும் ஆதிசங்கரர் பௌத்தத்தின் மேலான இறுதித் தாக்குதலை தொடுத்தவரே தவிர அவருக்கு ஆரியர், திராவிடர் பிரச்னை தெரியாது. அவர் மானுடவியல் அறிஞரோ மொழியியல் அறிஞரோ அல்ல.எனவே ,இங்கு திராவிடச்  சிசு என்ற சொற்பிரயோகம் எப்பொருளில் பயன்படுத்தப்பட்டது என்பதை எண்பிக்கவேண்டும் என்று அ.மாக்ஸ் முயலவில்லை; கி.பி.8ம் நூற்றாண்டில் கொள்ளப்பட்ட பொருள் இன்றும் அதேபோல் கருத்தைக் கொண்டுள்ளதா?

தன்னாலேயே விளக்கமுடியாத ஒன்றை ஊகத்தை மட்டும் நம்பி தன் கடந்தகாலக் கருத்தாக்கங்களைப் பாதுகாக்கப் போரிடுகின்றார். தமிழ்நாட்டில் ஆரிய,திராவிட பிளவுகள், பாகுபாடுகள் ,ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு அறியப்படாத ஒன்று.

வீரமாமுனிவரின் திராவிட மொழியாய்வு நூலுக்கு பின்னரே இது மேற்கத்திய கல்வி அறிவு படைத்தவர்களிடம் திராவிடமொழி, இனம்பற்றி கருதுகோள்கள் உருவாகின.கென்றிமோர்கனின் திராவிட உறவுமுறைகள் பற்றிய நூலும் மானுடவியயல் மொழியியல் துறைகளின்தொடக்ககாலத்துக்குரியவை.இந்த தெளிவற்றபோக்கே திராவிடஇனம் என்ற கருத்தாக்கத்தை ஆரிய இனத்துக்கு எதிராக நிறுத்தியது,இவை இனவாதக் கற்பனைகளே.

தமிழ் இலக்கியங்களில் ஆரியர் என்ற சொல் ஒரு போதும் இனம் அல்லது மக்கள் பிரிவு என்ற பொருளில் பயன்படுத்தப் படவில்லை.  ஆரியர் என்றால் குரு அறிவுடையோன், மருத்துவன், மேலாளன், ஆசிரியன், தலைவன், சிவன், புத்தன்,அரசன் ஆகியோரைக் குறிக்கவே பயன்பட்டது.சகல மதங்களின் மதகுருக்களும் இந்திரனை வழிபட்ட மதகுருக்களும் ஆரியர் என்று அழைக்கப்பட்டனர். எனவே, திராவிடர் என்ற பதம் தமிழ் இலக்கியத்தில் பிரயோகிக்கப்பட்டு இருந்தாலும் அது ஆரியர் திராவிடர் முரண்பாட்டின் எதிர்வினையான இனம், இனக்குழு, மக்கள் பிரிவு என்ற பொருளில் கட்டாயமாகப் பயன்படுத்தப்பட்டிருக்க முடியாது என்பதுடன் தமிழ் இலக்கியத்தில் திராவிடர் என்ற சொல் பாவனையில் இருந்ததாய் ஒரு தடயமும் இல்லை. அதே போல் வேதம்களிலும் திராவிட என்ற சொல் பயன்பட்டதாக ஆதாரமில்லை. ரிக்வேதம் ஆரிய திராவிட மோதல் என்ற கதைக்கு இன்று எந்த வரலாற்று ஆதாரமுமற்ற கட்டியமைக்கப்பட்ட பொய் என்பது நிருபணமாகிவிட்டது.

ரிக்வேதம் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 1ம் அல்லது 2ம் நூற்றாண்டு ஆகும். வேதங்களில் உள்ள 1,52,972 சொற்களில் "ஷ ஷ ஆர்ய’ என்ற சொல் வெறும் 3 தடவை மட்டுமே வருவதாக ஒரு ஆய்வு குறிக்கின்றது. வேத நூல்கள் ஆரியக் குடியேற்றத்துடன் எழுந்த ஆரியர்களின் இலக்கியம் என்பது வலு இழந்து விட்ட பழைய காலங்கடந்த கருத்தாகிவிட்டது."ஷஷஆர்யா’ என்ற சொல்லுக்கு வேதம்களில் நல்குடிப் பிறப்பு வேற்றாள் என்ற பொருள்கள் மட்டுமே கொள்ளப்பட்டன. பிராமணியத்தை பெரியாரும் பூலேயும் எதிர்த்தனர் என்று அ.மாக்ஸ் எழுதுகின்றார்.

இந்த இருவரும் ஆரியர் – திராவிடர்களின் போராட்டம் நிரம்பிய ஒன்றாக இந்திய வரலாற்றைப் பார்த்தவர்கள் பெரியாரின் பிராமணிய எதிர்ப்பு என்பது ஆரிய எதிர்ப்பு வடிவம்களில் ஒன்றே. பிராமனியத்தை அவர் ஆரியச் சதி என்றே பிரச்சாரம் செய்தவர். எனவே ஆரிய திராவிட சித்தாந்தம்கள் இன்று நவீன மானுடவியல், மொழியியல்,புதைபொருள் ஆய்வுகள் முன்பு பெறுமதி இழக்கும்போது பெரியார், பூலே, அம்பேத்கார் வரிசைகளும் சேர்ந்தே பெறுமதி இழக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

பிராமணர்கட்கு உரியதாய் கருதப்பட்ட பசுவணக்கம், காளை வழிபாடு, உருவவழிபாடு, மலர், பழம் இலை, நீர் இவைகளைக் கொண்டு செய்யப்படும் பூசைகள் சடங்குமுறைகள் ஆரிய மொழி பேசியவர்கட்கும் முந்திய திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் பிரிவுக்குரியது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆரியம், திராவிடம், பிராமணியம் போன்ற கருத்துக்கள் இன்று முழுமையான மறு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியவைகளாகும். பாரதியைக் கூடத் தேடிப்பிடித்து அவரின் பிராமணியக் கூறுகளை ஆய்வு கூடத்தில் வைத்துக் கட்டுடைத்தவர்கள் ஏன் அங்கு பெரியார், பூலே,அம்பேத்கர் போன்றவர்களை கொண்டு சென்று அவர்களது பிரிட்டிஸ் தொடர்புகளை ஏகாதிபத்திய பிரிவினைக் கருத்துக்களை ஆராய்வதில்லை.

"பிராமணனையும் பாம்பையும் கண்டால் முதலில் பிராமணனை அடி " என்ற பெரியார் வெள்ளையனையும் பாம்பையும் கண்டால் முதலில் வெள்ளையனை அடி என்று கூறக்கூடியவரல்ல. அம்பேத்கரின் பிரிட்டிஸ் சார்பு பற்றி பல தொகுதிகள் எழுதலாம்.

பூலே பரிசுத்தமான பிரிட்டிஸ் ஆதரவு நபர், பிராமணிய ஆதிக்கக் கருத்தை எதிர்க்கும் ஜனநாயக உரிமையானது சொந்த தேசத்தின் ஒரு பிரிவு மக்களை எதிரியாய்க் காண்பதும் பிரிட்டிஸ் ஆட்சியை ஆதரிப்பதுமான அரசியல் எல்லைகளைக் கொண்டிருக்கமுடியாது.

ஆரியர், திராவிடர், பிராமணியம்,தலித்துக்கள்,தமிழன், மராட்டியன், தெலுங்கன் என்ற பிரிவினைப் போக்குகளுக்கு எதிராக இவர்களை மனிதர்களாக ஒன்றிணைக்கும் சிந்தனை வேண்டாமா?

 பிறப்புச் சார்ந்து மனிதர்களை வகுப்பதும் பிரிப்பதும் பாசிசம் தான். பெரியாரை விமர்சித்தால் மாக்சைப் பற்ற எழுதுவோம் என்று பயமுறுத்தல்கள் புகலிடத்தில் உண்டு. இதுவும் தாய்த் தமிழகத்திலிருந்து பிரதியெடுத்த குணம் தான்.பெரியார் ஆரியரை பிராமணியத்தை மனிதவிரோதமட்டம் வரை எதிர்த்தவர். ஆனால் பிரிட்டிஸ்காரர்களை அப்படி எதிர்த்ததில்லை ,மேற்கத்தை பகுத்தறிவைப் போற்றி இந்தியப் பிற்போக்கு தனம்களை இழிவை அவர் ஏளனம் செய்தபோது அதை ஆரியர்களின் குற்றமாய்க் காண்பித்தார்.

இந்தியாவின் சாதியம் மனித இழிவுகளுக்கு இந்திய சமூக அமைப்புக் காரணமில்லையா?

அதை, புதிய இந்திய தழுவிய சமுதாய மாற்றத்தாலும் உற்பத்தி வடிவங்களாலும் தான் மாற்றமுடியுமே தவிர ஆரியரைத் திட்டி பழித்து அல்ல, பெரியார் வெள்ளை நாகரீகத்தின் பிரச்சார்கர், அவர் வட இந்தியக் கறுப்பு ஆரியரை எதிர்ப்பவரே தவிர பிரிட்டிஷ் வெள்ளை மனிதர்களும் ஆரியர்கள் தானே என்று ஒரு போதும் எண்ண முயலாதவர்.

திராவிடர்களை, ஆரியர்கள் அடிமைப்படுத்தியதாகப் பிரச்சாரம் செய்தவர்கள் அவர்கட்கு முன்புவந்த திராவிடர்கள் இந்திய ஆதிக்குடிகளை ஆக்கிரமித்திருக்கமுடியாதா?

ஆரியர்களை எதிர்க்க வேண்டும் என்பது ஜெர்மனிய நாசிகளின் எல்லா யூதர்களையும் செமிட்டிக் இனம்களையும் எதிர்க்கவேண்டும் அழிக்கவேண்டும் என்ற போதனைக்கு நெருக்கமானது தான்.

பிராமணர்கள் தலித்து மக்களை ஒடுக்குவதென்பது தனியே பிராமணர்களின் குணமல்ல பிரமாணர்களை படைத்து நிர்வகித்து வரும் இந்தியாவின் பழைய சமூக அமைப்பின் பிரச்னையாகும்.

சமூக அமைப்பை மாற்றாமல் பிராமணர்கள் மாறமாட்டார். தமது விசேட உரிமைகளை விடச் சம்மதிக்கமாட்டார்கள். இதை தனியே மனித வெறுப்பாலும் மக்களில் ஒரு பிரிவை எதிர்ப்பதாலும் சாதிக்கமுடியாது.உலக மயமாதல் என்பது காந்தியையும் , அம்பேத்காரையும் ,பெரியாரையும் தேவையற்றதாக்கும் முதலாளிய ஜனநாயகக் கருத்து வளர்ச்சியானது இவர்களை விட வலிமையானது.இவர்களின் போதனைகளை விட நிர்ப்பந்தங்களைத் தரும் சாதிகள்,இனம்கள், மதம்கள், பிரதேசங்கள், மொழிகள் கலப்பது தொடங்கும் இவர்கள் இந்தியர்களாக, ஆசியர்களாக உலகமனிதர்களாக மாறுவார்கள்.

அ.மாக்ஸ் போன்றவர்கள் இந்து மதம், பிராமணியம் இவைகளை பாசிசமாய்க் கண்டறிந்தார்களே தவிர இவை பிரிட்டிஸ் அரசியலின் படைப்பு என்பதை நெருங்குவதில்லை. 1920 களில் ஆர்.எஸ்.எஸ். முதல் சர்வாக்கர் வரை பிரிட்டிஷ் அரசியல்மற்றும் நிதிகளால் வளர்க்கப்பட்டவர்களே.இவை நாடு தழுவிய பிரிவினை அரசியலின் கூறாக இருந்தன. ஆரிய அநீதிக்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்த திராவிடமும் ,பிரிட்டிஸ் படையலே.

 ஆரியம் போலவே திராவிடக் கருத்தியலும் பாசிச மனித விரோதப் பண்புகளை உள்ளடக்கியதே. அ.மாக்ஸ் இந்தியா ஒரு தேசம் என்று கருதுவதைப் பாதகமாகக் கருதுபவர். பிரிவினையை மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலை, பன்மைத்ன்மை தனித்துவ அடையாளங்கள் என்று மொழி பெயர்த்து வருபவர் .இந்து மதவாத அமைப்புக்கள் மட்டுமல்ல தலித்திய அமைப்புக்களும் ஏகாதிபத்தியங்களின் சம்பளப்பட்டியலில் உள்ளவையே. இந்தியா ஒரு தேசமாக உருவாகி வருவதை ஒப்பாத அ.மாக்ஸ் , கொம்யூனிஸ்டுகளான சிங்காரவேலனார். ஜீவாவை எம்.என்.பெரேராவை எங்காதாவது ஆய்வு செய்ய முயன்றதில்லை. புத்தாக்கம் செய்ததில்லை.

இன்று ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய தன்னார்வக் குழுக்கள் இந்திய சமூகவிடுதலை இயக்கங்கள், கொரில்லா இயக்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள் இவைகளின் இடத்தை ஆக்கிரமித்துள்ளதுடன் அரசியலை முக்கியமற்றதாக ஆக்குகின்றன. புதிய புதிய மத,இன. சாதிய அமைப்புக்கள் சிறு கட்சிகள் உருவாக்கப்படுகின்றன.இவைகளை எந்த தமிழ்நாட்டு பல தள பார்வையாளர்களும் ஏன் ஆய்வதில்லை?

அ.மாக்ஸ் போன்றவர்கட்கு ஏகாதிபத்தியங்கள் விடப் பிராமணியமே பெரும் எதிரி.அவ்வாறே நாவலனுக்கும் ஏகாதிபத்தியங்களை விட சிங்களப் பேரினவாதம் பிரமாண்டமாய் தெரிகின்றது.

தேசிய இன உருவாக்கத்தில் சாதிகளைப் பற்றிப் பேசவில்லை என்பது அ.மாக்சின் பிரதான அவதானிப்புக்களில் ஒன்று. மேலும் புலம்பெயர்ந்த சூழலில் தலித்தியம் குறித்த விவாதங்கள் முழு மூச்சுடன் மேலெழுவதாகவும் அவர் தொடர்கிறார்.

முதலில் அ.மாக்சுக்கு இலங்கையின் சாதியப் போராட்டங்கள் இந்தியத் தலித்திய இயக்கத்தின் பிரிவாகவே தெரிகின்றது. வடக்கில் மாவோயிஸ்டுகள் நடத்திய சாதிய ஒழிப்பு இயக்கம் பற்றிய தூரத்துச் செய்திகளே அவரது சிந்தனைச் சேமிப்பில் இருந்ததே தவிர  LSSP யின் தர்மகுலசிங்கம் முதல் எம்.சி.சுப்பிரமணியம் வரை தனக்கேயுரிய வரலாற்றையுடையது. இவை இந்திய தலித்தியம் போல் சாதிக்கொரு சங்கமாக தம்மிடையே மோதிக் கொள்ளும் அமைப்புக்களாக இராமல் அனைத்து ஒடுக்கப்பட்ட சாதிமக்களதும் அரசியல் மற்றும் சமுதாய இயக்கமாக இருந்தது.

1960,1970 களிலே வடக்கின் பெரிய பணக்காரக் கோயிலான நல்லூர் முதல் மாவட்டபுரம் வரை கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினார்கள். யாழில் சுபாஸ் கபே போன்ற பிரபல உணவு விடுதிகள் முதல் சகல இடங்களிலும் நுழைந்தார்கள். இலங்கையில் ஜே.வி.பி க்கும் தமிழ் இயக்கங்கட்கும் முன்னரே ஆயுதமெடுத்தார்கள். அடிக்கு அடி கொடுத்தார்கள். திருப்பித் தாக்கினார்கள். இலங்கையின் சாதிய இயக்கம் இடதுசாரிகளால் அணி வகுக்கப்பட்டவை.இந்திய தலித்திய இயக்கம் போல் பாராளுமன்றவாதத்துக்கும் இந்துமத வெறி அமைப்புக்களுடனும் கூட்டுக்குப் போகவில்லை. அரசியல் கட்சிகளிடம் சூட்கேஸ் வாங்கவில்லை. அவர்கள் நேர்மையான கொம்யூனிஸ்டுகளால் வழி நடத்தப்பட்டார்கள்.

மேற்குலக நிதியில் இயங்கிய கிறீஸ்தவ அமைப்புக்களை கண்டு, கடந்து போராடினார்கள்.

தம் சொந்த மக்களின் சக்தியிலும் ,நிதியிலும் இலங்கை தழுவிய இடதுசாரிகள், தமிழ், சிங்கள,முஸ்லிம் மக்களின் ஜனநாயகப் பிரிவின் துணையுடன் இயக்கங்களை நடத்தினார்கள். இலங்கை சாதி ஒழிப்பு இயக்கமானது தீவிரமான தமிழ்த்தேசிய எதிர்ப்புப் பண்புடையதாகவும் ,சிங்கள மக்களின் ஆதரவுக்கும் இலங்கை தழுவிய அரசியலுடன் இணைந்து இருந்தது.

ஆனால் ,தமிழ்நாட்டு தலித்தியவாதி திருமாவளவன் தமிழின வெறி கக்குகின்றார். புலிப்பாசிஸ்டுகளின் பிரச்சாரக் கருவியாக நோர்வேயினதும் ,புலிகளதும் நிதியில் கூலிப்படை அரசியல் நடக்கின்றது.

ஜனவரி 2009 இல் திருமாவளவன் நடத்திய தனது கட்சியின் தமிழீழத்தை அங்கீகரிக்கும் மாநாட்டில் இலங்கையில் அரசு 1,50,000 தமிழர்களைக் கொன்றுவிட்டதாகச் சொன்ன பொய்யை விட்டாலும் ,தமிழினம் 50,000 வருடம் பழமைவாய்ந்த இனம் சிங்களவர் 1200 வருடம்கள்மட்டுமே என்ற வரலாற்று மானுடவியல் அறிவுகளோடு சம்பந்தமற்ற தமிழ்பாசிச பேச்சுக்களை நிகழ்த்துகின்றார்.

இவர்கள் தலித்துகட்கு போராடுவதை விட்டு இலங்கைத் தமிழர்களை தொடர்ந்து புலிக்கொடுமையுடன் கிடந்து அழுந்தச் செய்யும் சதியாகும்.

தலித்தியம் கூலி அரசியல் இயக்கமாக ஆகிவிட்டது.

 ஆனால் ,இலங்கையின் சாதி ஒழிப்பு இயக்கம் தான் தமிழ்த்தேசிய வாதத்தின் முதன்மை எதிரிகளாக சைவசமயக் கட்டுமானங்களை தகர்ப்பவர்களாக இருந்தனர். பிரிவினைகட்கு எதிர்ப்புக் காட்டினர். சோலிச உணர்வு கொண்டவர்களாக வாழ்ந்தார்கள். ஆனால் , தமிழ்நாட்டு சாதிய அமைப்புக்களின் ஆரிய எதிர்ப்பு இந்துமத எதிர்ப்பு சகலதும் முடிந்து ,தமிழின வெறி அமைப்புக்களாக அந்நிய நாட்டில் தலையிடும் ஆக்கிரமிப்புக் குணமாக வளர்ந்துள்ளது. ரவிக்குமார், திருமாவளவன், ராமதாஸ் கும்பல்கள் பற்றி தனது சகபாடிகள் பற்றி அ.மாக்சுக்கு எந்த எண்ணக் கருவும் இல்லை. ஆனால் புகலிட நாடுகளிலும் இலங்கையிலும் இந்திய தலித்தியத்தை திணித்துவிட முடியாது.

இலங்கையின் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்தியாவை விட முன்னேறிய சமூக, அரசியல் பலத்தையுடையவர்களாகவும் அமைப்பு வடிவம் உடையவர்களாகவும் தம் சொந்தப் போராட்ட இலக்கியங்களைப் படைத்துக் கொண்டவர்களாகவுமிருந்தனர்.

இத்தகைய இம்மக்கள் தலித்தியத்தை ஏற்பதென்பது பின்னோக்கிச் செல்வதாகவும் அம்பேத்கர், பெரியார் போன்ற இந்திய பிராமணியச் சூழலின் கருத்துக்களை இலங்கையின் சைவசமயப் போக்கு பிரயோகிப்பதுமாகும்.புலிப் பாசிசத்திடம் சிக்கி படாதபாடுபட்டு தப்பிப் பிழைத்துள்ள மக்கள் தலித்தியம் போன்ற தனிச்சாதியக் கோட்பாடுகளை சமூக, பொருளாதார உணர்வற்ற போக்குகளை ஏற்கமாட்டார்கள்.


உலகமயமாதல் என்பது ,அவர்களை எதிர்காலத்தில் சாதி,தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று கடந்து செல்லும் மனித இருப்புக்கான அரசியலையே வேண்டி நிற்கும். வடபகுதி சாதிய ஒழிப்பு இயக்கம் வர்க்க உணர்வு படைத்ததாக இருந்தது. இன்றைய சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது பாட்டன், பாட்டியினதும் தாய் தந்தைகளினதும் போராட்டத்தின் பெறுபேறுகளை இன்றும் அனுவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தர்மகுலசிங்கம், பொன்.கந்தையா போன்ற போராட்டத் தலைவர்களின் பெயர்களை தமது பிள்ளைகட்குச் சூட்டியது மட்டுமல்ல அவர்களை முன்னுதாரணமாய்க் கொண்டு பேராடிய மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டைப் போல் ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் மத்தியில் மேல்- இடை-நடு என்ற பிளவுகளும் பிரித்து ஆக்கப்பட்ட அமைப்புக்களும் கிடையாது. பிராமணியம் என்பது அவர்கள் அறியாத ஒன்று.

புலம் பெயர் தமிழர்கள் ,யாழ்.குடாநாட்டின் சைவ வேளாளச் சமூகக் கட்டமைப்பிலிருந்து வந்தவர்கள் .பிராமணியம் சார்ந்த சமூக உயர்நிலையும் ,ஆதிக்கமும் இலங்கையில் கிடையாது.

பிராமணர்கள் மிகமிகச் சிறுபிரிவாகத்  தனித்து இருந்தனர். "கள்ளப் பிராமணி" என்ற நையாண்டியுடன் அவர்கள் அழைக்கப்பட்டனர். சைவவேளாள கருத்துகட்கும் ,சமூக நிகழ்வுக்கும் அவர்கள் அடங்கி நடந்தனர். பகவத்கீதையையோ, உபநிடதம்களையோ அறிந்த அல்லது கௌரவிக்கும் ஒருவர் கிடையாது. மாறாக, தேவார, திருவாசகம்கள் தான் இலங்கைத் தமிழ்ச் சமூகப் பண்பாக இருந்தது.நாட்டுப் புறத் தெய்வம்கள் ,சிறு தெய்வம்கள் ,சந்திக்குச் சந்தி மரத்தடிக்கு மரத்தடி இருந்தது.ஆனால் ,அ.மாக்சின் பேச்சைக் கேட்டுக்கொண்டு புகலிட நாடுகளில் தலித்தியம் கட்ட வெளிக்கிடுபவர்கள்  இலங்கை – இந்திய விவசாயக் கட்டமைப்பில் வாழவில்லை. சாதித் தொழில் புரிய நிர்ப்பந்திக்கப்படும் சூழலில் இல்லை. சாதி நிலவத் தக்க சமூக அடிப்படைகளைக் கொண்டதாக மேற்குலகம் இருக்கவுமில்லை.

 மாறாக ,இலங்கையிலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்த தமிழ் சைவம் பற்றிய மனப்பதிவுகளே இருந்தன.புகலிட நாடுகளில் உள்ள முதல் தலைமுறையிடம் மட்டுமே இவை காணப்பட்டன. இங்கு பிறந்து வளர்ந்த இரண்டாவது தலைமுறையிடம் யாழ்நடுத்தர வர்க்க தமிழ்த்தேசிய வெறியோ சைவமதம், சாதி என்பன சார்ந்த போக்குகளோ நிலவவில்லை. அவர்கள் தாம் வாழும் நாட்டின் பண்புகளால் பாதிக்கப்பட்டவர்களாக, நுகர்வுக்கலாச்சாரமும் பல்லினத்தன்மைக்கு சம்மதம் தெரிவிப்பவர்களுமாக இருந்தனர்.

புகலிட நாடுகளில் இரண்டாம் தலைமுறையிடம் சாதி, பிரதேசம், கடந்து காதல் திருமணங்கள் இடம் பெற்றன. திருமணங்கள் பிறந்தநாட் கொண்டாட்டங்கள், சாமத்திய வீட்டுக் கொண்டாட்டங்கள், கோவில்கள் திருவிழாக்களில் தீண்டாமை இல்லை. சம இடம் இருந்தது. கோவில்கள்,இயக்கம்கள், கல்வி நிலையம்கள், வர்த்தக நிலையங்கள் இவைகளில் ஒடுக்கப்பட்ட சாதிமக்கள் இடம் பெறுவதைத் தடுக்குமளவுக்கு வேளாளர்கட்கு பலமோ மேற்கு நாட்டு சமூக மற்றும் சட்டரீதியிலான வாய்ப்புக்களும் இல்லை.சாதி என்பது இரகசியமாக அனுட்டிக்கப்படும் முதலாவது தலைமுறையின் ஒரு பகுதியின் பிரச்னையாக மட்டுமே இருந்தது.

 ஆபிரிக்கர்கள், கிழக்கு ஐரோப்பியர்கள், அரபு நாட்டவர்கள், ஆரியர், லத்தீன் அமெரிக்கர் என்று பலவகை மக்களுடன் வாழும் சமுதாயச் சூழலில் சாதி பலம் பெறத்தக்க சமுதாயக் காரணிகள் இல்லை .மாறாக ,சாதிய, பிரதேச அடையாளம் இழக்கும் போக்குகளே வளர்ந்தன. ஆரம்பத்தில் இவர்களிடம் காணப்பட்ட யாழ்ப்பாணம் , தீவார் சண்டைகள் வடக்கு, கிழக்கு வித்தியாசங்கள் இன்று அருகத் தொடங்கிவிட்டன.

இங்குள்ள முதலாளிய ஜனநாயகம் தனிமனித சுதந்திரம், சமூகப் பாதுகாப்புக்கள் ஒரு இந்திய இலங்கையின் விவசாய சமூக நிலமைகளை விட முன்னேறியவை என்பதுடன் இந்திய நிலப்பிரபுத்துவ அமைப்பில் இருந்து உதித்த பெரியார்,அம்பேத்கார் சிந்தனைகள் ஒரு வளராத சமூகமொன்றின் போக்காகவேஅதற்குரியதாகமட்டுமே இருக்கும்.

மேற்குலக நாட்டில் வாழும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு தலித்தியத்தைப் பரிந்துரை செய்வதென்பது நவீன உழவு இயந்திரத்துக்குப் பதிலாக, மாட்டையும் கலப்பையையும் கையேற்கக் கோருவதாகும். இங்கு ,தலித்திய பிரயோக முயற்சி என்பது செயற்கையானதாகவும் தனித்திருக்கக் கேட்கும் கருத்தாக்கமாகவும் தான் இருக்கும். இங்குள்ள சொற்ப எண்ணிக்கையிலான ஒடுக்கப்பட்ட சாதியமக்களுக்கு ஏனைய தமிழர்களை விட ஐரோப்பிய மக்களுடனேயே தொடர்பும் பொருளாதார உறவும் உள்ளது.

எனவே ,சாதி செயற்படுவதற்கான சூழல் இல்லை.மேலும் புகலிடத்தில் தலித்தியம் பேசுபவர்கள் தாம் வாழும் நாட்டின் சோசலிச அமைப்புக்கள் தொழிற்சங்கங்களுடன் கலக்கத்தக்க நிலைக்கு வளராமல் இருப்பதும் ,தலித்தியம் என்பது குறிப்பிட்ட சில தனிநபர்களின் அரசியல் அடையாளமாக மட்டும் குறுகியுள்ளது.

இவர்கள் இலங்கையின் சாதியப்பிரச்னைக்கு தலித்தியத்தை பிரயோகிக்க பல வருடங்களாக முயன்றனர். அது ஒரு சென்றி மீற்றரும் நகர முடியாது போனது.

இலங்கையின் யுத்தச் சூழல் மட்டுமல்ல இலங்கையின் ஒடுக்கப்பட்ட சாதிமக்கள் வேறு அரசியல் பரிமாணத்துக்குச் செய்வதற்கான சமூகச் சூழலுமாகும். புகலிடத் தலித்தியவாதிகளின் சிந்தனையானது யாழ்.குடாநாட்டுப் புவியியல் எல்லையுள் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று என்பது இவர்களது எழுத்துக்களையும் பேச்சுக்களையும் அவதானித்தவர்களுக்குத் தான் தெரியும்.

இவர்கள் ,தலித்துக்களில் இலங்கையின் வேடர்கள், குறவர்கள், பறங்கியர், ஜாவா மக்கள், மலையக மக்களை உள்ளடக்குவது பற்றிக் கனவிலும் எண்ண முடியாதவர்கள். சிங்கள மக்களில் உள்ள 30 க்கு மேற்பட்ட சாதிகளை இதில் இணைப்பார்களா?

கொழும்பிலும் கண்டியிலும் உள்ள இந்தியத் தொடர்புள்ள நகர சுத்தித் தொழிலாளர்களைச் சேர்க்கவேண்டும் என எண்ணியிருப்பார்களா?

எனவே ,இவர்களது தலித்தியமும் தமிழ்நாட்டிலிருந்து கடனெடுக்கப்பட்ட யாழ்.குடாநாட்டினை மனதுள் வைத்துக்கட்டப்பட்ட குறுங்குழுவாத தமிழ்தேசியவாத வகைப்பட்ட  தலித்தியமே.

 அ.மாக்ஸ் இவைகளை எண்ணிப் பாராமல் யதார்த்தத்தில் சாத்தியமற்ற அதீதமான விளம்பரத்தன்மை படைத்த ஒன்றைப் பேசுவதை உணரவில்லை. தனது செயற்கையான முயற்சியை அகவிருப்பம்கட்கான சாத்தியப்பாடுகள் இல்லை என்பதை அவர் பிடிவாதமாக மறுக்கின்றார். மேற்குலகில் இப்போ ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகள், வங்கிகள் பொறிந்து, தொழிற்சாலைகள் உற்பத்திக் குறைப்பும், மூடப்படலும், வேலை இழப்பும் தமிழ்த்தேசியம், தலித்தியம் போன்றவைகளை அரசியல் கால நேரப் பொருத்தமற்றவையாக்கிவிடும்.

மாக்ஸ், ரோசாலுக்சம்பேர்க், ரொட்ஸ்கி இவர்கள் பிறந்த யூதச் சமூகம் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட சமூகமாகும்.கத்தோலிக்கம், மரபுவழிக் கிறீஸ்தவம், புரட்டஸ்தாந்து என்று மாறி மாறி யூதர்களை அழித்தார்கள். மத்திய காலத்தில் யூதர்கள் ஐரோப்பாவில் கூட்டம் கூட்டமாக பல பத்தாயிரக் கணக்கில் கொல்லப்பட்டார்கள். கொள்ளை நோய்கள் வந்து மக்கள் தொற்றுநோயால் மாண்டபோது கூட யூதர்களே காரணம் என்று முதலில் யூதர்களைக் கொன்றார்கள்.

கத்தோலிக்கம் யூதர்களுடன் ஒன்றாக இருந்து உண்பதைக் கூடத்தடை செய்தது.

திருமணம் உட்பட சமூக உறவுத் தடை இருந்தது. வீடு, நிலம் உட்படச் சொத்துக்கள் வாங்கத்தடை இருந்தது. அவர்கள் தனித்த பகுதிகளில் குடியிருத்தப்பட்டனர். யூதர்கள் ஒட்டுண்ணிகளாக இழிந்தவர்களாக கடவுளால் சபிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். மாக்ஸ், ரோசாலுக்சம்பேர்க்கை அவர்களது யூதப்பிறப்புக்காக வாழ்நாள் முழுவதும் முதலாளித்துவவாதிகள் பழித்தபோது அவர்கள் தம்மை யூத அடையாளங்களில் சிறைப்படுத்தி தனிமைப்படுத்தும் சகல முயற்சிகளையும் தோற்கடித்தார்கள். தாம் தனிமைப்படாமல் இருக்கப் போராடினார்கள் . பரந்து விரிந்த தொழிலாளர்களின் இலட்சியத்துடன் கலந்தனர்.ஆரியச் சிந்தனைகள் ,உலக யூதத்தின் புரட்சியாக போல்சுவிஸ் எழுச்சியைக் கட்டியபோது ,ரொட்ஸ்கி அதற்குப் பதில் தரவில்லை. அவர் சோவியத் செம்படையைக் கட்டியபோது அது முழு ஐரோப்பாவையும் ஆக்கிரமிக்கும் யூதச்சதி என்றார்கள். அப்போதெல்லாம் ரொட்ஸ்கி தன் பிறப்பைத் தேடி வரலாற்றில் பின்னோக்கிச் சென்றதில்லை. தலித்தியம் பேசுபவர்களில் இடதுசாரிச் சாயல் உள்ளவர்கள் இதை எண்ணிப் பார்ப்பார்களா?

அ.மாக்ஸ் பேசுவது சாதி அரசியலே ; முதலாளிய குறுங்குழுவாத அரசியலின் தொடர்ச்சியே. இவர்களின் தீவிரவாதக் கோலம்கள் விரைவாக அம்பலப்பட்டு மதிப்பிழந்து போனமையின் காரணம் இது தான். தேசியமோ, சாதியமோ வர்க்க ரீதியிலான அடையாளம் காணப்படாமல் விட்டால் அவை தமது வலதுசாரி அரசியல் புத்தியைக் காட்டாமல் விடாது.

தமிழ்ச் சமூகத்தில் சாதியை மட்டுமல்ல வடக்கு, கிழக்கு,மக்களிடையேயுள்ள பிளவுகள் யாழ்ப்பாணத்தார், வன்னியார், மட்டக்களப்பார், மன்னார் என்று பிரிந்து கிடந்தனர்.

வேதக்காரர், சைவக்காரர் என்று பேதம் நிலவியது. யாழ்.குடாநாட்டுக்குள் வடமராட்சியார், தென்மராட்சியார்,தீவார் என்ற பிளவுகள் இருந்தன. இவர்களிடையே திருமண உறவுகள் கூட நடைபெறாத நிலைமைகள் இருந்தன. பஞ்சாங்கம் பார்த்து நாளும் கோளும் கணித்து ,ஊருக்குள், சொந்தத்துள்,மச்சான், மச்சாள்மாரிடையே திருமணங்கள் நடந்தன.அரச சேவையில் உள்ளவர்கள் அரச சேவையில் உள்ளவர்களிடையே பொம்பிளை, மாப்பிளை எடுத்தார்கள். இவைகளையும் நாவலன் பேசவில்லை.

தேசிய இனப்பிரச்னையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலனின் நூலில் சாதிப்பிரச்னை பேசப்படவில்லை என்பது மட்டுமே அ.மாக்சுக்கு தெரிகிறது.

இறுதியாக புகலிடத் தலித்தியம் பேசுவோர் மேற்கு நாடுகளில் இயங்கும் ஏகாதிபத்திய தமிழ் தன்னார்வக் குழு ஒன்றுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதையும் நாம் கவனத்திலிருத்தவேண்டும்.

‘இலங்கையில் முறையான சந்தைவளர்ச்சி ஏற்பட்டு இருந்தால் இலங்கை முழுவதும் ஒரே இனமாக சிங்கள மயமாக மாறியிலுக்கும்’ என்ற நாவலன் கருத்தையே அ.மாக்சும் ஏற்று எழுதுகிறார்.

எப்படி நாவலனிடம் மறைவான தமிழ்த்தேசியவாதமும் ,சிங்களப் பேரினவாதம் சிறிலங்கா பாசிச அரசு என்ற கருத்தாக்கங்கள் உள்ளனவோ அப்படியே அ.மாக்சிடமும் இந்தியப் பிரிவினைவாதக் கருத்தியல்களும் வட இந்திய எதிர்ப்பும் உள்ளது.

 இந்தியா ஒரு நாடல்ல என்ற கருத்துக்களும் உள்ளதால் இருவரும் ஒரே முடிவையே எட்டுகின்றார்கள். இருவரும் தமிழர்களும் , முஸ்லிம்களும் ,சிங்களவர்களும் இணைந்து ஒருபுதிய மக்களாக இலங்கையராக ஒரு தேசத்தவர்களாக பல்லினப் பண்பு படைத்தவர்களாக உருவாவர் என்று எண்ணாமல் போயினர். இந்தியாவில் எல்லா மக்களும் இணைந்து இந்தியராக அடையாளம் பெறுவது போல் சீனா, பர்மா, இந்தோனேசியா,மலேசியராக உருவாக்கம் நடைபெற்றது போல் நடந்திருக்கும் என எண்ண முடியாமை சிங்களப் பேரினவாதம் என்ற மிகை எண்ணமே காரணம்..

தமிழ்த்தேசியவாதம் என்பது எப்போதும் மேற்குலக சார்பானதாகவும் சிங்களத்தேசியவாதம் என்பது சுதேசியம் சார்ந்ததாகவும் தான் நிலவி வந்துள்ளது.

சந்தை வளர்ச்சி வந்திருந்தால் எல்லா மக்களும் குறிப்பிடத்தக்க முதலாளிய ஜனநாயக உரிமைகளும் ,தனிமனித சுதந்திரம், பெண்கள், குழந்தைகட்கான உரிமைகள் என்பன ஒரு மட்டத்திலாவது எட்டப்பட்டு இருக்கும். வேடர், பறங்கியர், ஜாவா போன்ற மக்கள் பிரிவினர் ஏனைய இனம்களில் முழுமையாக அடையாளம் தெரியாத படிக்கு கலந்து இருப்பர். ஆனால் ,தமிழ்,முஸ்லிம் மக்கள் ,சிங்களவராகமாட்டார்கள். மாறாக, சிங்கள மக்களின் பொதுப் பண்புகளை பெரும்பகுதியாய் உள் வாங்கிய சிங்களவரும் ,தமிழரும், முஸ்லிமெல்லோருமாக இலங்கையராக மாறியிருப்பர் என்பதே உண்மை.

தேசிய இனவிடுதலைக்கான தனித்த போராட்டங்கள் இருந்திராது.அமெரிக்கர்கள் என்போர் எப்படி பல இன,நிற, மதப்பண்புடையவர்களாகவுள்ளனரோ அப்படி மாறியிருப்பர். அமெரிக்காவில் நிற, இன பிரச்னைகள். 1950 இலோ 1960 இலோ இருந்ததை விட இன்று கடுமையும் தீவிரமும் குறைந்தே உள்ளது என்றால் அமெரிக்க மயமாதல் என்பது முதலாளித்து வழியில் நடைபெறுகிறது என்பதும் ,சோசலிசம் வரும் வரை இவை முழுமையாக ஒழிக்கப்படல் தொடங்காது,தேச உருவாக்கம் என்பது இனத்தை இனம் ஆக்கிரமித்து சிறு இனம்களை அழித்து உருவாதல்ல.

இது, சமூக வளர்ச்சிக்கான தேவையாக மாறும்.மனித நாகரீகம் வளர வளர பல மக்கள் பிரிவுகள் மொழிகள் இரண்டறக் கலக்கும் புதிய மனித அடையாளங்களைப் பெறும்.இது வரலாற்றில் மிகவும் சாதாரண நிகழ்வாகும். மேற்கத்திய முதலாளித்துவ தேச உருவாக்கத்தை சரியாக விளங்கி வந்த நாவலன் இலங்கையுள் காலடி எடுத்து வைத்ததும் தமிழினவாதத்துக்கு சலுகை தரும் காரியங்கட்கு முயல்கின்றார்.

புலிப்பாசிசம் என்பதை மறுக்கமுடியாது என்பதால் சுலபமாக இலங்கை அரசையும் பாசிசம் என்கிறார். பாசிசம் என்றால் தென்னிலங்கையில் எப்படி 1500 க்கும் மேற்பட்ட கட்சிகள், தொழிற்சங்கங்கள், இயக்கம்கள் , பொது அமைப்புக்கள் இருக்க முடியும்? புலிகளை ஆதரிக்கும் ஊடகங்கள் உட்பட எப்படி பல நூறு ஊடகங்கள் நிலவமுடியும். பாசிசம் என்றால் முதலில் தொழிலாளர்களின் அமைப்புக்கள், இடது சாரிக்கட்சி களையல்லவா முதலில் ஒழிக்கும். ஆக, புலிகளே பாசிச அமைப்பு ஆகும்.

இலங்கையானது, ஒரு முதலாளிய அரசு என்றே நாம் வரையறை செய்யமுடியும். பாசிசம் என்பது எப்போதும் சட்டம் கடந்தே செயற்படுவது. பாசிசம் என்ற மாக்சியக் கலைச் சொல் எப்படி பொருளறியாமல் உருத்திரிந்த வடிவில் தமிழ்ப் பரப்பில் பாவனையில் உள்ளது என்பதற்கு நாவலன் சிறந்த உதாரணமாகும்.

சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களில் ஐரோப்பிய, இந்திய ஆசியப் பண்புகள் அதிகம் ஒரு தொகை ஏற்கப்பட்டு, அன்றாடச் சொந்த வாழ்வனுபவமாச்சு!போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரிட்டிஸ் மொழிப் பிரயோகங்கள், மதநம்பிக்கைகள், ஆடைகள், உணவுவகைகள், அரசுவடிவம், கட்டிடக்கலை, நீதி மற்றும் சட்டம் என்பன எல்லோருக்கும் பொதுவாக இருந்தன. இந்தியப் பண்புகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. தமிழ், சிங்கள, முஸ்லிம் உயர் வர்க்கங்களின் பேச்சு மொழியாகவும் வீட்டு மொழியாகவும் ஆங்கிலம் இருக்கின்றது. யாழ்.குடாநாட்டு மத்திய தர வர்க்கத்தின் தமிழ் மொழி வழக்கத்தில் ஒரு தொகை ஆங்கிலச் சொற்கள் உள்ளன. ஆனால் ,ஒரு சில சிங்கள மொழிச் சொற்கள் தமிழில் இயல்பாக வந்தாலும் உடனே சிங்கள மொழி ,தமிழில் ஊடுருவுகின்றது.தமிழ் அழிகிறது என்று தமிழ்த்தேசியம் கதறுகின்றது.

தமிழ்த்தேசியமானது பாசாங்குத்தன்மை வாய்ந்தது, சுதேசிய உணர்வற்றது.

இன்றைய உலக மயமாதல் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை இலங்கையராக மாறும்படியான பொருளாதாரக் கட்டளையை விடுக்கின்றது. சிங்கள, தமிழ் மொழிகளை மீறி இலங்கையுள் ஆங்கில மொழிக் கல்வியும் ,அறிவும் தீவிரமாக வளர்கிறது. எதிர்காலத்தில் சீன,இந்தி மொழிகள் கூட முக்கியத்துவம் பெறலாம்.உலகார்ந்த ஒரு நவீன மொழியைத் தேடத் தொடங்கும் காலம் இது!

 தமிழ்தேசியவாதிகள் மேற்குலகத்தின் துணையுடன் வரலாற்று வளர்ச்சிக்கு குறுக்கே நிற்க முயல்கிறார்கள். தமிழ்-ஈழம் -தனிநாடு , சமஸ்டி என்ற காலம் நிராகரித்த வடிவங்களில் கிடந்து அழுந்துகிறார்கள் .பண்டாரநாயக்கா, பிலிப் குணவர்த்தனா கால அரசும் பின்பு, 1970 இல் இடதுசாரி ஐக்கிய முன்னணியும் ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தை கட்ட முயன்றார்கள்.இது ஏகாதிபத்தியங்களால் குழப்பப்படாமல் இருந்திருந்தால் ஜேவிபி கிளர்ச்சியும் ,தமிழ்பிரிவினையும் வராமல் இருந்தால் நாடு இலங்கையர் மயமாவது நிகழ்ந்திருக்கும். தொழிலாள வர்க்கம் இனம், மொழி, பிரதேசம்,சாதி,மதம் கடந்து ஒன்று திரண்டு இருக்கும்.  அந்த அரசியல் பொழுதை அழிக்கவே தமிழ்-ஈழப் பிரிவினை வாதம் மேற்குலகின் துணையுடன் எழுந்தது.

கல்வியைத் தேசியமயமாக்கியதை ,நிலச்சீர்திருத்தம் கொண்டு வந்ததை ஏழைகட்கு நிலம் வழங்கியதை ,இலங்கையின் அந்நிய நிறுவனங்களை தேசியமயமாக்கியதை இலங்கையைக் குடியரசாக்கியதை என்று ,சகலதையும் தமிழ்தேசியவாதிகள் எதிர்த்தவர்கள் .பெரும்பான்மை மக்களின் மொழியான சிங்களத்தை இலங்கையின் சமூக பொருளாதாரச் செயற்பாட்டுடன் தொடர்புள்ள மொழியை அரச மயமாக்காமல்ல எப்படி முதலாளிய வளர்ச்சி நடைபெறும்?

நாவலன் கூட தரப்படுத்தல் என்ற தமிழினவாதிகளின் சொல்லையே பாவிக்கின்றார். அதை மாவட்டக் கோட்டா முறை அல்லது பின் தங்கிய மாவட்டங்கட்கான கல்விக்கோட்டா முறை என்பதே பொருத்தமானது.

மாவட்டக் கல்விக் கோட்டா முறையால் யாழ்.குடாநாடு மட்டுமல்ல அதிக கல்வி நிறுவனங்களை யாழ்.குடாநாட்டைப் போல் கொண்டிருந்த கொழும்பு, கம்பகா பகுதிகள் கூடப் பாதிக்கப்பட்டன. அங்குள்ள சிங்களவர்களும் முதன்மை வாய்ப்பை இழந்தனர். இந்தக் கல்விக்கோட்டா முறை வந்திராவிட்டால் வன்னி, கிழக்கு,மன்னார், மலையகத்தைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம் மாணவ, மாணவியர்கள் பல்கலைக்கழகம் புக வாய்த்திருக்காது. இதன் பின்பே , அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் முதன் முறையாக மேற்படிப்புக்கும் அரசாங்க உத்தியோகங்கட்குப் போனார்கள்.

ஏராளமான சிங்கள கிராமங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் பல்கலைக்கழகத்துள் நுழைந்தனர்.உத்தியோகத்தர்கள் படித்தவர்கள் அல்லாதவர்களின் பிள்ளைகள் விவசாயிகள்,ஏழைகளின் புதல்வர், புதல்வியர் படிக்க வாய்ப்புப் பெற்றார்கள். இந்த உண்மைகளை நாவலன் கைவிட்டு விட்டதுடன் தமிழனவாதப் பொய்யர்களின் தரப்படுத்தல் பற்றிய வழக்கமான கீர்த்தனையை அவரும் இசைக்கின்றார். இத்தகைய மறுத்தான் போடாத கேள்வி எழுப்பப்படாத தமிழினவாத அரசியலின் விளைவாகவே புலிப்பாசிசம் வந்தது ,பிரபாகரனும் பொட்டம்மானும் தமிழர்களின் தலைவர்களாக ஆயினர்.

தனிச் சிங்களச் சட்டம், சிங்களக் குடியேற்றம், தரப்படுத்தல், பௌத்த , சிங்கள இனவாதம் என்ற தமிழினவாதிகளிடமிருந்து கொள்முதல் செய்த சொற்கள் இதுவரைகால ஆய்வு ,தேய்வு இல்லாமல் நாவலனால் மறுவிநியோகம் செய்யப்படுகின்றது. தமிழ்தேசிய வாதத்தின் கருத்தாக்கம்களை பரிசோதனை செய்யவேண்டும். நிகழ்காலத்தில் மீண்டும் நிரூபிக்கப்படல் வேண்டும் என்று அவரது வழக்கம் மாறாச் சிந்தனை எண்ணத் தலைப்படவில்லை.

முதலாவதாக, தமிழரசுக்கட்சியின் கண்டு பிடிப்பான தனிச் சிங்களச் சட்டத்தை அவர் தனது பிரதான நியாயங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளார். சிங்கள அரச கருமமொழிச் சட்டம் என்பது இலங்கையின் 73 வீத சிங்கள மொழி பேசும் மக்களின் இயற்கையான கோரலாகும். சுதந்திரம் பெற்ற இந்தியா, பர்மா, சீனா, வியட்நாம், கம்பூச்சியா, மலேசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் எங்கும் பெரும்பான்மை மக்களது மொழியே அரச மொழியாகியது. இது ஏனைய சிறுபான்மை இனம்களை ஒடுக்கவும் அவர்களது மொழிகளை அழிக்கவுமே இவ்வாறு செய்யப்பட்டது என்பது முதலாளியப் பொருளாதார வளர்ச்சிப் பண்புகளை கணக்கெடாமல் விடுவதாகும். பெரும்பான்மை மக்களின் பொருளாதார அரசியல் சமூக செயற்பாடுகட்கு இலகுவான மொழியைத் தேர்ந்தெடுக்காமல் அந்த நாடு இயங்க முடியாது. அது சமுதாயவிதிகளாகும். ஆனால் , தமிழினவாதிகள் 1786 முதல் இலங்கையின் முழு மக்களதும் அரச கரும மொழியாக இருந்த அந்நியரின் மொழியான ஆங்கிலத்தை ‘தனி ஆங்கிலச் சட்டம்’ என்று எப்போதாவது எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்து இருக்கின்றார்களா?

சிங்களத்தைத் தார்பூசி அழித்தது போல் ஆங்கிலத்தை பூசி அழித்து இருக்கின்றார்களா?

"ஆங்கிலத்தைப் படியோம் " என்று உத்தியோகம்களை விட்டெறிந்து இருக்கின்றார்களா?

சிறீ எதிர்ப்பு மாதிரி, ஆங்கில எழுத்தை எதிர்த்துக் கலகம் செய்து இருக்கின்றார்களா?

அப்படியெனில் ஏன் இல்லை?

ஒரு சில சிங்களச் சொற்கள் தமிழ்மொழி வழக்குக்கு வந்ததை எதிர்த்துப் போராடியவர்கள் ,தமிழ் மொழியில் வந்து கலந்துள்ள ஒரு தொகை ஆங்கிலச் சொற்களை எதிர்த்ததுண்டா ?;அவற்றைத் தவிர்த்துப் பேசியதுண்டா?

இலங்கையில் பேசப்படும் தமிழ் மொழியில் ஆகக்கூடிய ஆங்கில மொழிச் சொற்கள் கலந்த தமிழ் பேச்சு மொழி யாழ்.குடாநாட்டுள் தான் பேசப்பட்டது. அது, பெருமையாகக் கருதப்பட்டது.

ஆங்கிலத்தை யாழ்.நடுத்தரவர்க்கம் ஒரு போதும் அந்நிய மொழியாய் கருதியதில்லை. இவர்கள் யாழ்.குடாநாட்டில் உள்ள இலங்கையின் ஆகச் சிறந்த ஆங்கிலப் பள்ளிகளில் படித்தவர்கள். இவர்கள் சிங்கள மொழியை மட்டுமல்ல சொந்த தமிழ் மொழியையும் இளக்காரமாய்க் கருதியவர்கள். ஒரு முறை (தி.மு.க) திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு அமைப்பை வண்ணை ஆனந்தன் உருவாக்கி யாழ்.நகரில் உள்ள கடைகள், பெரும் வர்த்தக அமைப்புக்கள், தியேட்டர்களின் பெயர்களை தனித் தமிழில் மாற்றவேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். கடை கடையாய் ஏறி இறங்கிப் பார்த்தார். எவரும் வண்ணை ஆனந்தனையும் அவரின் திமுக வையும் கணக்கெடுக்கவில்லை.

 யாழ்.நகரில் உள்ள வெலிங்டன்,வின்சர், றீகல் என்ற பிரிட்டிஸ் தளபதிகள், ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்கள் எப்படி சினிமாத் தியேட்டருக்கு சூடினார்கள்?

பிரிட்டிஸ் ஆட்சிக்கு எதிராய்ப் போராடிய ‘கெப்பிட்டிப்பொல’, ‘புரான் அப்பு’ போன்ற -சிங்கள வீரர்கள் வேண்டாம் -இவர்கள் ஏன் , குறைந்தது சங்கிலியன், பண்டாரவன்னியன், கைலை வன்னியன் பெயர்களையாவது சினிமாத் தியேட்டர்கட்கு இடவில்லை. ஒரு புறம் ஆங்கில மொழியும் ,மேற்கத்தைய கலாச்சாரமும் சமூக வளர்ச்சியின் கட்டளையாகவும் மறுபுறம் ,யாழ்.நடுத்தரவர்க்கத்தின் வாழ்வுக்குரியதாகவும் இருந்தது என்பதே யதார்த்தமாகும்.

இதே போல் சிங்கள அரச கரும மொழி என்பது இலங்கை தழுவிய தேசியத்தின் தொடக்கமாகவும் ,சுதேசியத்தின் தேவையாகவும் இருந்தது. ஆங்கில மொழியின் இடத்தை சிங்கள மொழிக்கு வழங்காமல் இதைச் செய்யமுடியாது.

1786 முதல் 1956 வரை ஆங்கில மொழியால் இலங்கை ஆளப்பட்டது. அரச சேவையில் இருந்த ‘தமிழ் மாத்தையாமார்’ ஆங்கில மொழியை வைத்து ஏழைச் சிங்கள மக்களை வெருட்டி வாழ்ந்தார்கள். சிங்கள, மக்கள் மத்தியில் வேலை செய்யும் அரச சேவையாளர்கள் ஆங்கில மொழிக்குப் பதிலாக சிங்கள மக்களின் மொழியைத் தெரிந்திருக்கவேண்டும் என்றால் என்ன பிழை?

சுதந்திரத்தின் பின்பு சுதேசிய மொழிகளில் ஆட்சி நடக்க வேண்டும் என்பது என்ன தவறு?

அக்கால வடபகுதி ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ்பேசக்கூடாது தப்பித்தவறிப் பேசினால் ‘பிரம்படி கிடைக்கும்’ எந்தத் தமிழ்த் தேசியவாதியும் ‘தமிழ் மொழி பேசியதற்குப் பிரம்படியா?’ என்று கொதித்து எழுந்தது கிடையாது. ஆனால் ,ஒரே நாட்டின் சகோதர மொழியை அடுத்தவன் பாசை என்று லண்டன் பிரிவுக் கவுன்சில் வரை சென்று வழக்காடினார்கள். இங்கு தமிழினவாதிகளின் பிரிட்டிஸ் விசுவாசம் நாவலனுக்கு தென்படவில்ல?.

அடுத்து ,சிங்களக் குடியேற்றம் என்ற தமிழரசு காலத்தில் தொடங்கி இன்றைய புலிப்பாசிஸ்டுகளின் பிரச்சாரத்தை நாவலனும் ஏற்றுப் பிரச்சாரம் செய்கிறார். 1946 இல் திருமலையில்20.07வீத சிங்களவர் தொகையானது 1981 இல் 33.6வீதம் என்று உயர்ந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் காட்டுகிறார். அதே சமயம் 1946 இல் கொழும்பில் இருபது முப்பதாயிரம் தொகை கூட இல்லாத தமிழர் தொகை இன்று 7 லட்சத்துக்கும் மேலாகிவிட்டதே !.சிங்கள மக்களின் தலைநகரம் தமிழன் பெரும்பான்மையில் நிரம்பி வழிகின்றது என்று சிங்கள மக்கள் கேட்கத் தொடங்கினால் என்ன ஆகும்?கொழம்பில் உருத்திரா என்ற தமிழர் நகர மேயராகஇருந்தது போல் யாழ்ப்பாணத்தில் ஓருசிங்களவர் நகரமேயராகவர யாழ் நடுத்தர வர்க்கஅரசியல்விடுமா? சிங்களவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் எம்.பி யாகவர நினைத்துப் பார்க்கமுடியுமா?

மலையக மக்கள் குடியேறிய பிரதேசங்கள் அனைத்தும் சிங்கள மக்களின் பாரம்பரிய பூமி என்று சிங்கள மக்கள் உரிமை கோர முடியாதா? ஒரு பல்லின மக்களின் தேசமாக இலங்கையை ஏன் நாவலனால் பார்க்க முடியவில்லை?

"நாம் இலங்கையர் " என்று சிந்திப்பது என்ன ,அத்தனை பெரிய துரோகமா?;தமிழர்,முஸ்லிம், சிங்களவர், பறங்கியர், வேடர் என்று எல்லா மக்களும் இலங்கையர் என்ற கூட்டுள் ஐக்கியப்படாமல் எப்படி சோசலிசம் வரும்?

அடுத்து,கிழக்கு மாகாணம் ,முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாய்க் கொண்டது என்பதை ஏனைய தமிழ் தேசியவாதிகளைப் போலவே நாவலனும் திட்டமிட்டே பொருட்படுத்தாமல் விடுகின்றார்.

தமிழரோ, சிங்களவரோ,முஸ்லிமோ, பறங்கியரோ, ஜாவா மக்களோ, மலையக மக்களோ எவராயினும் நிலமற்ற எல்லா மக்களும் கிழக்கில் குடியேற உரிமையுடையவர்கள். காணி வழங்கப்படல் வேண்டும் என்று கேட்க நாவலனால் முடியாது, ஏனெனில்,அவர் தமிழின வாதத்துக்குள் கட்டுண்டு போன மனிதர்,எந்தச் சிங்களவர்களும் தமிழரை அழிக்கவேண்டும் ,அவர்களது நிலத்தைப் பறிக்கவேண்டும் என்று கிழக்கு மாகாணத்துக்குத் திமிரெடுத்து வரவில்லை;நிலமற்ற எழைகளும் ,விவசாயிகளுமே வந்தனர். தென்னிலங்கை முழுவதும் தமிழ் மக்கள் வாழ உரிமை பெற்றுள்ளபோது, வடக்கு கிழக்கை விட அதிகமாக வாழும் போது, கிழக்கிலங்கையைச் சிங்கள மக்களற்ற பிரதேசமாக நாவலன் வைத்திருக்க ஆசைப்படுகின்றார்.

மலையகத்தில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விடம் சிங்கள மக்களின் பாரம்பரிய பூமி என்று சிங்கள மக்கள் வாதாட வெளிக்கிட்டால் என்னாவது?

இதை எப்பவாவது ,ஒரு தமிழ்தேசியவாதி நினைத்துப் பார்த்ததுண்டா? ;இவை எல்லாவற்றையும் விட, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சிங்கள மக்களின் குடியேற்றுதலை எதிர்க்காதபோது, ஒரு பல்லின வாழ்வுக்கு தயாராகவுள்ள போது, இதை மறுக்க யாழ்.நடுத்தரவர்க்க தமிழினவாதிகட்கு என்ன உரிமையிருக்கின்றது?

கிழக்கு மாகாணம் என்பது தமிழ் மக்களைப் போல் சிங்கள மக்களுக்கும் பாரம்பரியமான வாழ்விடம் தான் !;கிழக்கின் பெரும்பகுதி கண்டி இராச்சியத்தின் பகுதியாகவே இருந்தது. திருமலையில் தேவாரம் பாடல் பெற்ற தலம் இருந்தது என்றால் சேருவாவில உட்ப பல இடங்களில் மிகவும் தொன்மையான பௌத்த விகாரைகளும் இருந்தன. தமிழர், சிங்களவர் சேர்ந்து வாழ்ந்த அடையாளங்கள் நிலவின. அது தனித் தமிழ்ப் பகுதியாக இருந்தது என்பது தமிழரசுப் பொய்!.

கல்வி, சுகாதார அறிவு பெருகுதல், வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் என்பன மக்களின் ஆயுளை நீடிக்கச் செய்யாதா? இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு இருக்காதா? தமிழர்கள் உலகமெல்லாம் குடியேற உரிமை வேண்டும். ஜெர்மன், பிரான்ஸ், சுவிஸ், பிரிட்டிஸ், கனடிய பிரசையாக எல்லாம் அவர்கள் ஆவார்கள்.ஆனால் ,சிங்கள மக்கள் தம் சொந்தநாட்டின் பகுதியில் குடியேறக்கூடாதா?

அவுஸ்திரேலியப் பழங்குடி மக்கள், செவ்விந்தியர், பலஸ்தீனியர்கள், ஆபிரிக்கர்கள்  ஆகியோருக்கு நடந்ததையொத்த இனக்கொலை, நிலப்பறிப்பு, குடியேற்றம் என்பன தமிழர்கட்கு எதிராகவும் நடந்ததாகத்  தமிழினவாதிகள் எப்போதும் விபரிக்க முயன்றுள்ளார்கள்.  தென்னாபிரிக்க நிறவாத அரசை ஒத்த இனவாத அரசு இலங்கையில் உள்ளதாக அன்று தமிழரசு மேடைகளில் முறையிடப்பட்டது. தமிழர்களின் நிலம்களை சிங்களவர் ஆக்கிரமிக்கின்றனர் என்ற வாதம் கொலனிக்கால அந்நிய ஆக்கிரமிப்புக்குச்  சமமாக நிலமற்ற சிங்கள ஏழை விவசாயிகளின் கிழக்குக் குடியேற்றலை  சமப்படுத்த முயல்வதாகும்.

இந்தியாவால் எப்படி கேரளாவில் தமிழரும் ,கர்நாடகத்தில் கேரளரும் -தமிழரும் குடியேறுகிறார்களோ இவை இயல்பாக நடைபெற்ற மக்களின் குடிபெயரலாகும்.

நிலத்தேவை இல்லாவிட்டால் என்னதான் முயன்றாலும் மக்கள் புதிய இடத்துக்கு குடிபெயரமாட்டார்கள். தென்னிலங்கை என்பது சன அடர்த்தி மிக்கதும் ,பெரிய விவசாய முயற்சிகட்கு தடையான மலைப்பிரதேசங்களையும் உடையதாகும். ஆனால் ,அனுராதபுரம் கிழக்கு மாகாணப் பகுதிகளிலேயே பரந்த காடுகளும் வளமான மண் மற்றும் நீர்ப்பாசன வசதிகளும் இருந்தன. கிழக்கை விட அனுராதபுரம் ,மிகிந்தலை போன்ற இடங்கட்கு அதிக நிலமற்ற சிங்கள மக்கள் குடியேறினார்கள்.

1948 ,சுதந்திரம் அடையுமுன்பு தமிழர்கள் பிரிட்டிஸ் ஆட்சியில் ஒடுக்கப்பட்டதாக நிலப்பறிப்பு நடந்ததாக தமிழ்த்தேசியவாதிகள் ஒருபோதும் கூறுவதில்லை. கிழக்கு நீர்ப்பாசனத்திட்டங்களின் பெரும்பகுதி பிரிட்டிஸ் காலத்தில் தொடங்கப்பட்டவை. ஆனால் , பிரிட்டிஸ்காறரை இதற்கு இவர்கள் பொறுப்பாக்குவதில்லை.

கொலனிக் காலத்திலய பிரச்சனைகட்கு சிங்கள மக்களை மட்டும் பொறுப்பாக்கினார்கள். இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா முதல் மேற்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் குடியேறிகளாகச் சென்ற தமிழ்தேசியவாதிகள் ,அந்த நாட்டுப் "பிரசைகளாக" ஆகிவிட்ட கொழுப்பெடுத்த யாழ்.மத்தியதர வர்க்கத் தமிழர்கள் ,சோத்துக்கு வழி தேடக் கிழக்கில் குடியேறிய ஏழைச் சிங்கள மக்களை தமிழர்களின் நிலத்தைப் பறிக்க வந்தவர்களாகக் கற்பித்தனர். புகலிடத் தமிழர்கள் தாம் குடியேறிய நாடுகளில் ஐரோப்பியர், ஆபிரிக்கர், ஆசியர், லத்தீன் அமெரிக்கர் என்று உலகெல்லாம் உள்ள முன் பின் கேட்டுக் கண்டறியாத மக்களுடன் எல்லாம் வாழ்வார்கள். பல்லினக் கலாச்சாரத்துக்கு ஆட்படுவார்கள் ஆனால் ,இலங்கையுள் சொந்த நாட்டுக்குள் மட்டும் சிங்களவர்களுடன் வாழ மறுக்கின்றார்கள். தொட்டால் ,பட்டால் தீட்டு என்கிறார்கள். இந்த அநாகரீகர்களை மனித நாகரீகம் திருத்தியெடுக்க இன்னமும் எத்தனை சகாப்தங்கள் தேவை?

முதல் உலக யுத்தத்தில் அரிசி இறக்குமதி தடைப்பட்டது. அரிசிக்கு பெரும் தட்டுப்பாடும் ,விலை உயர்வும் ஏற்பட்டது. எங்கும் பட்டினி நிலவியது. இச்சமயம் களனிப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிலங்கள் தோட்டத் தொழிலாளர்களிடம் நெற்செய்கைக்காகத் தரப்பட்டது. அது சிங்களவரின் நிலம் என்று எந்த சிங்கள மக்களும் ஆட்சேபிக்கவில்லை. கிழக்கு உட்பட இலங்கையின் வரண்ட பகுதிகளில் மலையக மக்களைக் குடியேற்றி நெற்செய்கையில் ஈடுபடுத்துவது பற்றி உத்தேசிக்கப்பட்டதாயினும் உலக யுத்தம் முடிந்தமையால் இது கைவிடப்பட்டது.

பண்டாரநாயக்கா அரசில் இருந்த இடதுசாரியான பிலிப் குணவர்த்தனா கிழக்கில் பிரமாண்டமாக விவசாயக் கூட்டுப் பண்ணைகளை அமைக்கத் திட்டமிட்டார். ஏனெனில் , தென்னிலங்கையில் பெரிய விவசாயக் கூட்டுப் பண்ணைகளை அமைக்கவல்ல நிலப்பரப்போ சமதரையான பூமியோ இருக்கவில்லை .பின்பு, அவர் பதவியை விட்டு விலக்கப்பட்டதால் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. விவசாயத்தைப் பெருக்கவும் உள்ளுர் உற்பத்தியில் தங்கிய பொருளாதாரத்தை உருவாக்கவுமே இவை திட்டமிடப்பட்டனவே தவிர தமிழன் நிலத்தைப் பறிக்கவல்ல.அரைநூற்றாண்டு காலம் தமிழரசுவாதிகளால் தமிழ் மக்கள் மத்தியில் வலுவாக ஊன்றப்பட்ட சிங்களக் குடியேற்றம் என்ற கருத்தியல் வன்னிப் பகுதியிலோ, கிழக்கிலோ யாழ் குடாநாட்டைப் போல் பலமாக இருக்கவில்லை. ஏனெனில் ,அவர்கள் சிங்கள மக்களுடன் அக்கம் பக்கமாய்க் கூடி வாழ்ந்த அனுபவம் இருந்தது.

‘தமிழ் சிங்கள முரண்பாடு வரலாற்றில் நிலவவில்லை என்று காட்ட நாவலன் முயன்றபோதும் மறுபுறம் தமிழ்த்தேசியவாதம் சிங்கள இன ஒடுக்குமுறையின் விளைவு எனக் கருதும் சராசரி தமிழினவாத மதிப்பீடுகளிலிருந்து அவரால் தப்பிக்கமுடியவில்லை.தமிழ், சிங்கள இனவாதம் இரண்டுமே ஏகாதிபத்திய அரசியலின் படையல் .தமிழ்ப் பிரிவினை வாதம் அவர்களின் தூண்டுதல் என்று அவர் கருதவில்லை.

தமிழினவாதத்துக்கு அவர் விசேட சலுகை தருவதுடன் "புலிகள் பிழை-தமிழ்த்தேசியம் சரி " என்று இரண்டையும் பிரித்துப் பார்க்கின்றார். புலிகளின் தவறுகளுடன் நியாயம்களும் இருப்பதாக கற்பிக்க இடம் தருகின்றார். யாழ்.நடுத்தரவர்க்கம் கிளப்பிய தமிழ்த்தேசியப் பயணிப்பின் இறுதி முடிவே தமிழ்ப் பாசிசம் என்று அவர் விளங்கவில்லை.

 புலிப்பாசிசம் திடீரென பிரபாகரன் போன்ற கொடிய பாசிஸ்டுகளால் படைக்கப்படவில்லை. அதற்கான அகவயமான சூழல்கள் தமிழ்ச் சமூகத்தில் யாழ்ப்பாண நடுத்தரவர்க்க மேற்குலக சார்பு சமுதாய நிலையில் இருந்தன. இவர்கள் தமிழீழம் கேட்டுவிட்டு மேற்குலக நாடுகட்கு ஓடித்தப்ப வன்னி மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளின் பிள்ளைகள் போராட்டத்தில் செத்தார்கள்.மலையகத் தமிழர்களிடமும்  கடைசியாக ஆள்பிடிப்பு நடந்தது.

கட்டாயப் பிள்ளை பிடிப்பாகக் கடைசியில் இது மாறியது. புகலிட நாடுகளில் குடியேறிய யாழ்.குடாநாட்டு தமிழர்கள் புலிப்பாசிசத்தை வளர்த்தெடுத்ததுடன் ,வடக்கு கிழக்குத்  தமிழர்களின் தலைமீது தமிழ் ஈழத்தை பலவந்தப்படுத்தி சுமத்திவிட்டனர்.அவர்களின் சமாதான வாழ்வுக்கான ஏக்கங்களைத் தமிழ் ஈழம் பற்றிய கனாக்களின்மேலான நிராகரிப்பை இவர்கள் பொருட்படுத்தவில்லை.

 புகலிடத் தமிழர்கள் ஏகாதிபத்திய அரசியலின் பிரதிநிதிகளாக இருந்தார்கள். புலிப் பாசிசத்தின் மனிதப் பண்பாடறியாத அரசியல் மூர்க்கம் இவர்கட்கு வெது வெதுப்பாக இருந்தது. நிதி, பிரச்சார, அமைப்பு ரீதியிலான ஆதரவை இவர்கள் புலிப் பாசிஸ்டுகட்கு வழங்கியதன் மூலம் தமிழ் மக்கள்மேல் புலிகளின் தொடர் அடிமைப்படுத்தலுக்குக் காரணமாயினர்.

நாவலன் போன்றவர்கள் கூட தமிழ் மக்களின் தரப்பில் இருந்து சிந்திக்கத் தலைப்படவில்லை என்பதுடன் ,புலிகளின் சிங்கள முஸ்லிம் மக்கள் மேலான பயங்கரவாதம் குறித்து எந்த ஓரு சிறு உணர்வுமற்றவர்களாக இருந்தனர்.

சிங்களத் தேசியவாதம் என்பது வரலாற்றில் பல சமயங்களில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த அரசியலைச் செய்துள்ளது. தமிழ்தேசியவாதிகளின் ஏகாதிபத்திய கைக்கூலித் தலைமைகட்கு எதிராகச் சிங்களத் தேசிய உணர்வானது முற்போக்கான இலங்கைத் தேசபக்த சக்தியாகவும் இருந்தது. தமிழினவாத வேலி வாய்க் கால்களில் மட்டுப்பட்டவர்கட்கு இதைக்காண முடியாது.இதை அவர்கள் "சிங்களச் சார்பு, தமிழ்த்துரோகம் "என்றே அரசியல் மொழி பெயர்ப்புச் செய்வார்கள். மாக்சியவாதிகள் மட்டுமே இதன் அரசியல் பரிமாணத்தையும் ,சோசலிசப் புரட்சியின் எதிர்கால நலன்களையும் இதனூடு கவனத்தில் கொள்வர்.

"சிங்கள மக்களின் உருவாக்கம் "என்பது தென்னிந்தியர், மலாயர்,போர்த்துக்கேயர்,ஒல்லாந்தர் கலப்பு ஊடாக நடந்தது என்று நாவலன் எழுதும்போது ,சிங்கள மக்களை விட தமிழர்களில் ஏற்பட்ட இத்தகைய இனக்கலப்புக்கள் அதிகம் என்ற வரலாற்றுண்மையை அவர் குறிக்கவில்லை. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கலப்பு என்பது தமிழ் சிங்கள இருபகுதிக்கும் பொதுவானது. ஐரோப்பியர்கள் தமிழ்,சிங்களப் பெண்களை திருமண உறவுக்கு வெளியே கொண்டிருந்தனர் என்பதுடன் ,ஐரோப்பியப் படைகளில் இருந்த அங்கோலா, இந்தோனேசியா, ஜாவா, நாட்டுப்படைகளில் பெரும்பகுதி இங்கு தங்கித் தமிழ் , சிங்களவரில் கலந்தனர். இதை கொலனிக்காலத்துக்கு முன்பு இந்தியாவின் பல்லின மக்கள் தாய்லாந்து, ஜாவா உட்படப் பலவித மக்களின் கலப்புக்களில் இருந்து தப்பவில்லை. அப்படியிருக்க சிங்கள இனத்தை மட்டும் கலப்பு இனமாகக் காணும் அவசியம் நாவலனுக்கு ஏன் ஏற்பட்டது?

இதற்குத்  தமிழ்தேசியவாதக் காரணியைத் தவிர வேறு எதுவும் இருக்கமுடியாது. தூய இனம், தூயமொழி என்ற நிரூபித்தல்கள் இனவாதிகட்கு உரித்தான விடயமாகும். வரலாற்று மற்றும் மானுடவியல் உண்மைகட்கு இவற்றோடு எந்த ஒட்டுறவுமில்லை.

அனுராதபுரத்தில் 17ம் நூற்றாண்டில் தமிழ்மொழி இருந்தது என்று கண்டியில் இருந்து தப்பி வந்த ஐரோப்பியரின் குறிப்பை நாவலன் ஆதாரமாய்க் காட்டுகிறார். அனுராதபுரத்தை தமிழர் நிலம் எனக் காட்டும் அவரது பிரயத்தனமாகவே இதைக் கொள்ளவேண்டும்.17ம் நூற்றாண்டில் அனுராதபுரம் ஒரு பாழடைந்த மக்கள் மிக மிக குறைவாக வாழ்ந்த பிரதேசமாக ஆகிவிட்டது. தென்னிந்தியப் படையெடுப்புகட்கு அஞ்சி சிங்கள மக்களது குடியேற்றம் தென்னிலங்கைக்கும் ,பகைவர் எளிதில் புகமுடியாத மலைப் பிரதேசங்கட்கும் நகர்ந்தது. ஆனால் ,அனுராதபுர நாகரீகம் என்பது முதன்மையாக, சிங்கள மக்களின் பௌத்த மதவளர்ச்சியுடன் முக்கிய இடமாகும் என்பதை வரலாற்று நேர்மை இல்லாதவர்கள் மட்டுமே சந்தேகிக்க முடியும்.

தமிழர்களும் அனுராதபுரத்தில் வாழ்ந்திருப்பர் என்பதை நாம் சந்தேகப்பட முடியாது என்ற உண்மை அது அவர்களின் பிரதான வாழ்விடமாக இருந்தது என்ற கருத்துக்கு இட்டுச் செல்லாது.

போர்த்துக்கேயர் காலத்துக்கு முன்னே கொழும்பிலும் ,கண்டியிலும் இந்துக் கோவில்கள் இருந்தது என்பதால் அந்த இடங்களை நாம் தமிழர்களின் பிரதேசம் என்று உரிமை கோர முடியுமா?

பொலநறுவையில் சிவாலயம் உள்ளது என்பதால் அப்பகுதி தமிழர்களின் பூமியா?

வன்னிச் சிற்றரசனான பண்டார வன்னியன் பெயரின் முன்பு வரும் ‘நுகரகளாவி’ என்ற பட்டப் பெயர் அனுராதபுரப் பகுதியின் அக்காலப் பெயராக இருப்பதால் ,அவனை நாம் சிங்களச் சிற்றரசன் எனக் கொள்வதில்லை. கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் தமிழன் எனக் கருதப்பட்ட  மதுரைநாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த தெலுங்கன் என்பதால் அவனால் ஆளப்பட்ட கண்டி மக்கள் தமிழர்களா?

வரலாற்று ஆய்வுக்குத் துணிந்தால் அங்கு இனத்தை நிறுவ வெளிக்கிடக்கூடாது. இலங்கையின் தமிழ், சிங்கள வரலாற்று எழுதல்கள் இப்படித்தான் இனவாதச் சரித்திரமாக மாறின. ஈழவேந்தன் ,"இலங்கை முழுவதுமே இராவணனின் தமிழ் மண் " என்கின்றபோது, காசி ஆனந்தனோ " இராஜ இராஜசோழன் போன்ற சோழ மன்னர்கள் ஏன் இலங்கை முழுவதையும் தமிழ் மயமாக்கவில்லை " என்று இப்போது கவலைப்படுகின்றார்கள். அனுராதபுரத்தில் தமிழ் பேசப்பட்டது என்ற நாவலனின் வாதம் இது சிங்கள மக்களின் வரலாற்று உரிமையில் அத்துமீறி நுழைந்து அடாத்துப் பண்ணும் செயலாக அவருக்குப்படவில்லை. சிங்கள, தமிழ் மக்களின் கலாச்சாரங்கள் ஒருவர் மீது மற்றவரின் தாக்கத்துக்கு உட்பட்டு இருந்தது கூட எண்ணமுடியாதவராக அவர் உள்ளார்.

கி.பி.6ம் நூற்றாண்டுக்கும் ,12ம் நூற்றாண்டுக்கும் இடையில் சிங்கள மொழி முக்கியத்துவம் பெற்றதாக நாவலன் எழுதுவது சிங்களமொழி தமிழ்மொழிக்கு இளையது என்று காட்டத் தான். இதன் மூலம் தமிழர்கட்கு தொன்மை தேடித்தர முயல்கின்றார்.

சிங்கள மொழியானது தமிழ் மொழிக்கு மிகவும் பிந்தியதாக இருப்பதில் என்ன வெட்கம்?

 சிங்கள மொழிக்கும் மிகவும் பிந்திய பிரான்ஸ், ஜெர்மன் ஆங்கில மொழிகள் சிங்கள மொழியை மட்டுமல்ல சீனம், லத்தீன், கிறீஸ் உச்சரிப்புக்களையும் எழுத்துக்களையும் ஏனைய சிறப்புக்களையும் பெற்று அவற்றை முந்தி வளரவில்லையா?

பழைய மொழிகளில் உள்ள இல்லாமைகள் ,புதிதாய்ச் சொல்லும் திறனற்ற தன்மைகளை உணர்ந்தே, புதிய மொழிகள் வருகின்றன.

சிங்கள மொழியானது பாலி, சமஸ்கிருதம், ஒலு,தமிழ், ஒஸ்ரோயிட் ஆகிய மொழிகளை உள்வாங்கிச் செரித்தே வளர்ந்தது. சிங்கள மொழி பைலாப் பாடல்கள் மொழி தெரியாத வரிகளைக் கூட ஆட தாளம் போட வைப்பவை.

தமிழ்தேசியத்தின் தனித்தீவு அரசியலுக்கு வரம் வாங்கியுள்ள நாவலன் ,மொழிகளில் "மூத்தது -இளையது" தேடிப் பொருமையுறுகின்றார்.
தொடரும்...

தமிழரசன் ,
பேர்ளின்.